1.
பதிவுகள் செப்டம்பர் 2003 இதழ் 45
மனசு!
சூனிய வெளிக்குள்…….
மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.
உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.
நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ……….
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.
உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.
நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி…….
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு
நாமெல்லோரும்
– நேரமில்லை – யென்றும்
– தூரமாகிப் போச்சு – என்றும்
இயலாமைகளுக்குப் போர்வை போர்த்திப்
பழகி விட்டோம்.
இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல் என்றைக்கோ
அறுந்து போயிருக்கும்
எமது ஒரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.
நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.
2. புயலடித்துச் சாய்ந்த மரம்
காற்றே!
உனக்கும் இரண்டு முகமா……..?
தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளமையைச் சுகித்து விட்டு
எனதிந்த தள்ளாத வயதில்
உன் சுயத்தைக் காட்டி விட்டாயே!
கனிதரும் காலம் போய்விட்டாலும்
நீ களைப்பாக வரும்போதெல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!
வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நிஜமான
புயல்முகம் கண்டதில்தான்
பலமான அதிர்ச்சி.
வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி.
3.
பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46
இரணம்!
சந்திரவதனா (யேர்மனி)
உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதுமென்று நினைக்கிறேன்.
உனக்கு
உன் வாழ்தலின் மீது
பற்றுதல்.
அதற்காக
இன்னும் எத்தனை முறைதான்
இரணமான என் மனதின் மேல்
திரும்பத் திரும்ப
பிறாண்டுவாய்…!!!
உன்
ஆசைகளின் வடிவங்களாய்
நீண்டிருக்கும்
கோரப் பற்களையும்
கூ¡¢ய நகங்களையும்
நீயுன்
ஆசை தீர்க்க முயலும் கணங்களில்
விரித்த போலித் திரைகளுக்குள்
மூடி மறைத்து வைத்தாலும்
மீண்டும் மீண்டும் அவை
கோரமாக எனை நோக்கி
போதும்………!
இனியும் பிறாண்டாதே!
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை.