துவாரகன், – கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள்
தீராக்காதலியின் வினாக்கள
-துவாரகன்
என் உதட்டுச்சாயம் பற்றியும்
கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும்
கூந்தல்அழகு பற்றியும்
நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை
என் அன்பும்
தீராக்காதலும்
ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன
என் நகப்பூச்சுக்கே
நாளும் புகழ்ந்து தள்ளும் நீ
நான் பேசும்போதெல்லாம்
வானத்தையும் பூமியையும் பார்த்து
ஏதேதோ பிதற்றுகிறாய்
தீராக்காதலி
அடுக்கடுக்காக
மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள்.
ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும்
அழகுடன் கூடிய
பரிசுப்பொருளுடன்
பேச முடிவுசெய்துவிட்டேன்.
அவளின் கேள்விக் கணைகள்
முழுதாக என்னை மூடும்முன்னே!
சபிக்கப்பட்ட உலகு
-துவாரகன்
வார்த்தைகளை மண் மூடுகிறது
முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது
பூதத்தீவுப் புதிர்போல
ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது
கணங்கள்தோறும்
மெளனமே இலகுவாயிற்று
நினைவு குமட்டுகிறது
எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க
இயலாமை… மரணம்…
உயிரின் மோகம்…
ததும்பி வழிய
முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன்
நினைவு துரத்துகிறது.
மறதியே!
என் இருளறையை உனக்குக்
காணிக்கையாக்குகிறேன்
நீ வாழ்க
இப்போது மட்டும்
எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது
ஒரு சுருக்குக்கயிறு.
06/2011
தெரியாது
– கே.சித்ரா –
தெரியாது ..
உண்மையிலேயே தெரியாது ..
வினை விதைத்தவன் வினை அறுப்பான் , தெரியுமா ?
வினை விதைக்காதவன் வினை அறுப்பதாலும்,
விதைத்தவன் அறுக்காமலேயே சேர்ந்து விட்டதாலும் –
தெரியாது …
அலுவலகத்தில் அடுத்த ராஜினாமா ,யார் ?
இராணுவ ரகசியம் ஒன்று – முன்பே
தெரியுமென்ற பிரமையை ஏற்படுத்தலாம் என்றபோதும் –
தெரியாது …
கடவுளென்று தனிநபர் இருக்கிறாரா ?
பிரார்த்திக்கும் போது
பாதுகாப்பும், நிம்மதியும் உணர்ந்த போதிலும் –
தெரியாது …
தெரிந்திருப்பதாக நினைத்து ஏற்படும் ச்ங்கடங்கள் … ?
‘தெரியாது’ என சொல்ல முடிவதால்
உண்மையிலேயே தெரியாது …
விரத பேதம்
– கே.சித்ரா –
கண்ணுக்கெட்டிய
கைக்கெட்டிய தூரத்தில்
உணவு இருந்தும்
உண்ணாமல் இருந்தால் – விரதம்
அது புண்ணியம்
அதுவே போராட்டம்.
கண்ணுக்கெட்டியவரை
கைக்கு கிட்டிய தூரத்தில்
உணவை காட்டாமல் இருந்தால் !! – பட்டினி
அது விதி
போராடி முன்னேற ஆலோசனை.
செய்தித்தாளில் வர வேண்டுமெனில்
இறப்பு – குறைந்தபட்ச தகுதி
பட்டினியில் தள்ள பட்டவனுக்கு..
வயிறு காய்வதிலும்
இருக்க பட்டவனென்றும்
இல்லாத பட்டவனென்றும் உண்டோ ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் …
மனிதநேயம்
–மன்னார் அமுதன் –
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
தரிசனம்
– ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) –
உடலென்னும் கூண்டுக்குள்
உயிர்ப்பறவை சிறை இருக்க
சிறகிருந்தும் பறக்க விழையவில்லை
சிறு நெல் மணிகளுக்கு ஆசைப்பட்டு
பிறவாமல் பிறப்போம்
இறவாமல் இறப்போம்
கண்ணீர்க் கோடுகளால
காவியங்கள் பல படைப்போம்
ஜாதகக் கட்டங்களில்
என்ன இருக்கிறது
ஒரு அடி எடுத்து வைத்தால்
இமயமலை கூட
இரண்டாய்ப் பிளக்கிறது
நதி போகும் போக்கிலேயே
போனால்
கடல் போய்ச் சேர்வாய்
எதிர் நீச்சல் போடு
ஊர் வந்துச் சேர்வாய்
மழைக்கு மேகமா முகவரி
வந்து விழும் இடத்தில்
தன்னைத் தொலைத்தழும் மழை
வானத்து வெண்ணிலா
சேதி பேசும்
நாணத்தை விட்டொழித்து
தென்றல் வீசும்
விழிகள் நான்கும் ஒன்றுகலக்கும்
காதல் விதை முளைக்க
சமயம் பார்க்கும்
ராஜவீதியில் தேர் வலம் வரும்
நீ வடம் பிடித்தால்
தெய்வம் உயிர் பெறும்.
தீர்த்தக்கரை
– ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) –
காற்றுக்கு தலைவணங்காத மரம்
முறிந்து விழும்
ஆற்றுப்படுத்த அம்மா இல்லாததால்
குழந்தை அழும்
கார்மேகம் முழக்கமிடும்
மழை தானே நிலத்தின் வரம்
வெண்மேகம் காற்றிலாடும்
அலை வந்து கரையில் மோதும்
சித்திரையில் வெயில் கொளுத்தும்
தென்றல் வந்து சாந்தப்படுத்தும்
திருவிழாவில் தேவதைகள் கூட்டம்
காளையர்களின் ஏக்கப் பார்வை
கண்டு சிரிக்கும்
எத்தனையோ பூக்கள் பூக்கும்
சில மட்டுமே உதிராமல் காய்க்கும்
அதிகாலையில் கிழக்கு வெளுக்கும்
மூடுபனி மெல்ல விலகும்
குயில்கள் பாடும் அமுத கானம்
கேட்பதற்கோ இணையைக் காணோம்
நதிவெள்ளம் கடலைத் தேடும்
பூக்கள் தேவகானம் பாடும்
கண்ணில் உந்தன் பிம்பம் நிழலாடும்
காதல் வந்தால்
காலம் பறந்தோடும்.
உதிரச் சுவடுகள்
– ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) –
குருதி கலந்த நீரைத்தான்
குடிக்க வேண்டியிருக்கிறது
இரத்தம் தோய்ந்த உடைகளைத்தான்
உடுத்த வேண்டியிருக்கிறது
ஈழத்து தாய்மார்களின் கண்ணீரில்தான்
குளிக்க வேண்டியிருக்கிறது
இரத்த வாடையை முகர்ந்து கொண்டே
உண்ண வேண்டியிருக்கிறது
போரில் இறந்து போனவர்களின்
கல்லறை அருகே
உறங்க வேண்டியிருக்கிறது
யுத்தத்தில் கண்களை இழந்த
தமிழர்களின் முகங்கள்
கண்ணை விட்டு அகல மறுக்கிறது
ஈழத்தமிழர்களின் கனவுகள்
புதைக்கப்பட்டு
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறது
தமிழினத்தை வேரறுக்க முயலும்
கூட்டத்தை
ஒன்றும் செய்யாமல்
உலகம் கைகட்டி வேடிக்கைப்
பார்க்கிறது
அடிபட்ட பாம்பு தான்
படமெடுக்கிறது
ஒடுக்கப்பட்ட இனம் தான்
விஸ்வரூபம் எடுக்கிறது
நாளை நமது நாளாகும்
என்ற நம்பிக்கை
இன்னும் எம்மிடையே
இருக்கிறது.
பாக்கியவதிகள்
– கிண்ணியா எஸ். பாயிஸா அலி –
ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்கள் விட்டும்
ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது
ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.
பலவேளைகளில்
பாதப் பெருவிரல் சுரண்டுகிற
செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்
மிகச்சில பொழுதுகளில்
அதுவோர் அடிமைக்கான அதிகாரக் குரலாயுங் கூட.
திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற
கூர்நகங்களிடையேயான தொடர் பயணங்களுக்குள்
எப்படித் திறப்பேன் முகத்திரை.
அரங்கும் தளமும் அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களூடே
மெல்லமாய் உணர்கிறேன் ….
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உம்மம்மாக்கள்தான் பாக்கியவதிகள்.
பச்சைப்பசும் புல்வெளி
– கிண்ணியா எஸ். பாயிஸா அலி –
சின்னக் குருகுகளின் கீச்சொலிகளில்
திளைக்கிறது கூடு.
அசைவிலும் நகர்விலும் திசையொன்றாகியே
ஈருயிர் ஓருயிராகினோம்
பச்சைக் கணுக்களில்
புதிதாய் மேலுமீருயிர் துளிர்த்திட
சிலிர்;க்கிறது நந்தவனம்.
மிரளுகிற வாழ்வில்
சுழலும் பெரும்புதிர்
மெதுமெதுவாய் புரிபடத் தொடங்குகையில்
நிறைகிற பாற்குடம்
கன்றுகளைச் சுற்றுகிற
கறுப்புவெள்ளைப் பசுவாக
சூழவிரியுது
பச்சைப்பசும் புல்வெளி.
போதுமோ நம் தோப்பினுள் பட்டாம் பூச்சிகள்
காற்றாய் கதிராய் கடலாய்
சிறகடிக்கையிலே
வாராதோ
உயிர்க்;கரையை உரசிக் கடக்கிற
ஓவியக்குழந்தையாயும்..
ஆசிரியர் பணி – ஆசிரியம்
வேதா. இலங்காதிலகம் ( ஓகுஸ், டென்மார்க்)
சீலாச்சாரமான எம் தமிழ்
கலாச்சார மரபின் வேர்.
விலாசம் தரும் வானவில்
விற்பன்ன விதைப்பு ஆசிரியப்பணி.
அகக்கண் திறக்கும் திறவுகோல்.
அறிவின் அட்சய பாத்திரம்.
அற்புத அறிவுப்படை ஆசிரியம்.
கற்பக விருட்சம் ஆசிரியப் பணி.
மொழித் தடங்களைச் சிறந்த
மைத் தடங்களாக்கும் ஆசிரியரதை
நல் வழித்தடங்களாக்குகிறார் அறிவாற்றலால்.
நல்லெண்ணத் தடங்களோடு வாழ்வை
வண்ணத்தடங்களாக்குகிறார் சிற்பியாகி.
காலடித் தடம் சிறப்பாயூன்றுவோன்
கல்வியால் சிகரத்தில் தடம் பதிக்கிறான்.
நல்ல பிரம்மவித்தைக்காரன் ஆசிரியன்.
குறிக்கோள் வாழ்விற்குக் கோடிழுப்போன்.
குறிப்பான முகவரியைச் சுட்டுவோன்;.
ஆற்றலின் சக்தியால் நல்ல
அறிவிற்குத் தீனி தருபவன்.
அறத் தேரின் அச்சாணியானவர்.
திறமையாளனை ஏற்றும் ஏணி.
சிக்கலற்ற சமுதாயம் ஆக்கும்.
மக்களின் முன்னோடி ஆசிரியன்.
8-5-2011.
தேசப் புகழைப் பாடுங்கள்
புலவர் சா இராமாநுசம் ( சென்னை )
முத்துக் குமாரை பின்பற்றி-கிருட்டின
மூர்த்தியும் பெட்ரோல் தனைஊற்றி
வைத்துக் கொண்டார் தீயென்றே-இங்கே
வந்தசெய்தி பொய் யென்றே
செத்துப் போனது எதற்காக-என
செய்கிறார் வாதம் அதற்காக
எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
எரிக்க வேண்டாம் சுடுகாடே
ஒற்றுமை நம்மிடை வேண்டாமா-கூடி
ஒன்றாய் உறுதி பூண்டோமா
பெற்றவர் அங்கே அழுதிடவும்-அவர்
பிள்ளையை பலவாய் எழுதிடவும்
கற்றவர் செய்யும் செயலல்ல-வீண்
கதைகள் சொல்வதும் பயனல்ல
மற்றது உண்மை எதுவென்றே-யாரும்
மறைக்க இயலா வரும்நன்றே
மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
முள்ளி வாய்க்கால முடியவில்லை
கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
கேட்க அங்கே நாதியிலே
வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
வாழ்வார் துயரை ஏடுகளே
தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
தேசப் புகழைப் பாடுங்கள்