பதிவுகள் விவாதம்: ‘படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல… ‘

பதிவுகள் மே 2005; இதழ் 65!
பாண்டிச்சேரி!
எதிர்வினை 3: சு.ரா.வின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ பற்றி…..  – ரவிக்குமார்

ரவிகுமார்சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல. அது எவரையும் இழிவு படுத்தவுமில்லை. தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை, ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண் என இரண்டு கதை சொல்லிகள் வருகின்றனர். தங்கக்கண் கொஞ்சம் ‘கூட்டிச் சொல்கிறவன்’ அவனிடம் ‘கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு’. ‘பொட்டையா? போடாதே மேல் சீலை’ என்று ஒடுக்கப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிலிருந்து வருபவள் தாயம்மா.ஒரு ஜெர்மன் பாதிரியாரின் உதவியால் ‘ஐரோப்பாவில் மிகப்பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராகக்’ கல்வி பெறுகிறாள். மனசுக்குள் ஆங்கிலம் பேசி; யாருமில்லாத நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளை வாய்விட்டுச் சொல்லிப்பார்த்து, தனது திறமையைப் புரிந்துகொள்ள அந்த ஊரில் ஒருவருமில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த தாயம்மா ‘காலத்தின் கூத்தால்’ ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்கப்படுகிறாள். 1950களில் அவளுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம். தினமும் மீன் சாப்பிட்டு, நாளுக்கொரு சேலை உடுத்தி,பார்க்கிற பெண்களும் பொறாமை கொள்கிற அளவுக்கு அழகோடு இருக்கும் தாயம்மாவை தேர்தலில் நிற்கச் சொல்லிஅரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள். இப்படி பேரும் புகழுமாக இருக்கும் அவளை ஒரு நாள் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் ரகஸியமாகக் கூடி சதி செய்து பழி சுமத்தி அடித்து விரட்டுகிறார்கள்.

ஐம்பத்துமூன்று வருடங்கள் தாயம்மாள் போன இடம் தெரியவில்லை. எண்பது வயதைத் தண்டிவிட்ட நிலையில் மீண்டும் அவள் அந்த ஊருக்கு வருகிறாள். அப்போதும் அவள் பகலில் வெளியே தலை காட்டக் கூடாது என அந்த ஊர் கட்டுப்பாடு போடுகிறது. “நாம் ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு “அவளை நல்ல முறையில் காப்பாற்றலாம் என தங்கக்கண்ணிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தவர்கள் முன்வரும் வேளையில் தாயம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லி கதையை முடிக்கிறான் தங்கக்கண்.

‘கல்மனசையும் உருகச் செய்யும்’ இந்தக்கதை ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் தங்கக்கண்ணால்தான் சொல்லப்படுகிறது. அது அவன் சொன்ன கட்டுக்கதையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவன் கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு என முன்பே ஒரு குறிப்பு தரப்பட்டுள்ளது. தாயம்மாமீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதைப் புரிந்துகொள்ள சுந்தரராமசாமி கதையில் பல தடயங்களை விட்டுச் செல்கிறார். தாயம்மாவின் அழகு மட்டுமின்றி அவளது செல்வச் செழிப்பும் அவள்மீது பொறாமை உண்டாகக் காரணமாகியிருக்கலாம். அவளுக்கு அபவாதம் வந்துசேரக் காரணமாக இருந்த மாணவன் மணிகண்டன் வசதியான ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகன். கணக்கில் ஓட்டையான அவனுக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு தனியே பாடம் சொல்லித் தருகிறாள் தாயம்மா. மணிகண்டன் வீட்டுக்கு வரும்போது அவன் முகம் வீங்கி இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. அவனை கன்னத்தில் அடித்து தாயம்மா பாடம் சொல்லித் தந்ததால் அப்படி முகம் வீங்கிப் போயிருக்கலாம்.அதனால் கோபம் கொண்ட அந்தப் பையனின் தாய் ஊரெல்லாம் தாயம்மாமீது கோபப்படுகிறமாதிரி ஒரு பொய்க் கதையைக் கிளப்பி விட்டிருக்கலாம். இப்படி பார்ப்பதற்கான தடயங்களே அந்தக் கதையில் உள்ளன. தாயம்மாவின் ஒழுக்கம்பற்றி சந்தேகம் கொள்கிறமாதிரி கதைக்குள் ஒரு குறிப்புமே இல்லை. ஊர்ப் பிரமாணிகளும், சக ஆசிரியர்களும் பதுங்கியிருந்து அவளை அடித்துத் துன்புறுத்தும் காட்சியின் வர்ணனை மட்டுமின்றி மிகவும் துயரார்ந்த முறையில் சொல்லப்பட்டுள்ள அவளது மரணமும் அவள்மீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன.

மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(sign system) என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். ‘விளை’ என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை

‘தாழ்ந்தஜாதிப் பிள்ளை’ என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.

மாடக்குழியை ஓரிடத்தில் மாங்குளம் எனத் தவறாகக் குறித்திருப்பது, உள்ளூர் தினசரியின் தலைமை நிருபருக்கு இப்போது 40 ரூபாய் சம்பளம் எனச் சொல்வது போன்ற சிறு பிழைகள் இருந்த போதிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக வைப்பதற்கு தகுதிபெற்றது இந்தக்கதை. இது தலித்துகளுக்கு எதிரானதென்றும்,இதை எழுதியவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்குபோடுவோம் என்றும் சொல்லுவது, “தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது,அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக்கூடியவர்கள்” என்பதுபோன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்ச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.

adheedhan@rediffmail.com
21.4.2005
நன்றி: பதிவுகள் மே 2005; இதழ் 65!