பதிவுகள் விவாதம்: ஸைபர் வெளியும் மனித உடல்களும்!
– யமுனா ராஜேந்திரன் –
முதலில் ஸைபர் வெளி ஜனநாயக வெளி என்பதை திட்டவட்டமாக தெளிவபடுத்தி விட வேண்டியிருக்கிறது. தணிக்கை என்பதைத் தகர்த்திருக்கிற வெளி இது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவும் இந்தியாவும் கூட ஸைபர் வெளியைத் தம் நிலப்பிரப்பில் கட்டப்படுத்த பற்பல சட்டதிட்டங்களை வகுத்துவருவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய அறிவுஜீவி என்பவன் யார் எனும் பிரம்மாண்டமான கேள்வியையும் ஸைபர் வெளி எழுப்பியிருக்கிறது. கல்வித்துறைசார் பல்கலைக் கழக அறிவுஜீவிகள், வாய்ப்புப் பெற்ற மரபுசார் அறிவாளிகள் மேட்டுக்குடியினர் ஆர்வமுள்ள தேடித் திரியம் சாதாரண மனிதன் போன்றவர்களுக்கிடையிலான அறிவதிகார எல்லைகளை இவ்வெளி உடைத்திருக்கிறது. முக்கியமான ஆதார நூல்கள், சிந்தனையாளர்களின் தொகுப்பு நூல்கள், சிறப்புத்தறைசார் கட்டுரைகள் அனைத்தையும தேடலுள்ள வாசகன் இன்று எந்த அதிகார எல்லைகளையும் தாண்டாமல் ஸைபர் வெளியில் நேரடியாகப் பெற்றுவிட முடியும்.
அச்சு எந்திரம் தேவாலயத்தின் செல்வாக்கை உடைத்ததைப் போல ஸைபர் வெளி அரசுகளினதும் கலாச்சார அதிகாரிகளினதும் செல்வாக்கை உடைத்திருக்கிறது.
ஸைபர் வெளி பற்பலருக்கு ஒளிந்து விள¨யாடும் இடமாகவும் தத்தமது போக்கிரித்தனங்களைக் கொட்டும் இடமாகவும் இருக்கிறது என்பதனை தமிழ் ஸைபர் வெளியிணை நுண்தளத்தில் அனுமானித்து வந்திருப்பவர்கள் அவதானிக்க முடியும். சோவியத மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸமீட்சாட் வகை முகத்திரைகளோடு தமிழ்ச்சூழலில் பலர் ஸைபர் வெளியில் நடமாடி வருகிறார்கள்.
தமது அடையாளங்களை புனைபெயரிலும் போலி மின்னஞ்சல் முகவரியிலும் பரிபாலித்துவரும் இவர்கள் தமக்கு எதிர்வினை புரிபவர்களை துட்பமான வகையில் பெயர் குறிப்பிட்டு விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.
ஸைபர் வெளி நிழல் மனிதர்களை அணுகுவதில் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு மிகுந்த சிக்கல்கள் இருக்கிறது.
முதலாவதாக இவர்கள் தமது அடையாளங்களை முற்றிலுமாக மறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஆழந்த நுண்அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. இவர்களுக்கு எதிர்விணை செய்பவரின் குறிப்பான சாதிய,மத,பால்,இன,கருத்தியல் அடையாளங்களை முன்னிறுத்தி விவாதங்களைச் மேற்கொள்கிற இவர்கள் தமது அடையாளத்தை முற்றிலும்; மறைத்துக் கொள்கிற நிலையில் எதிர்வினையாற்றுபவர் ஒரு கட்டத்திற்கு மேல் இத்தகைய நிழல மனிதர்களோடு தொடர்ந்து உடையாடுவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
இரண்டாவதாக இத்தகைய நிழல் மனிதர்கள் முன்வைக்கும் விவாதங்களை ஆதரித்து எழதுகிறவர்களும் நிழல் மனிதர்களாக இருக்கும் போது எதிர்வினையாற்றுபவரின் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. ஒரே பிரச்சினையை முன்வைக்கிற நிழல் மனிதனும், அதனைச் சார்ந்தும் ஆதரித்தும், ஒரு கட்டத்தில் அவதூற்று மொழியைப் பிரயோகிப்பவரும் ஒரே நிழல் மனிதரின் பல்வேறு நடமாடும் நிழல்களா எனும் சந்தேகமும் நியாயமாகவே தோன்றுகிறது. ஆதாரமான நிழல்மனிதனும் ஆதரித்து எழுதும் நிழல் மனிதர்களும் சஞ்சரிக்கும் சிந்தனைத் தளம் ஒன்றே என ஆகுமானால் ஆதாரமான நிழல் மனிதனின் பின்னிருக்கும் நிஜமனிதன் ஓரு புதைந்த திட்டத்தினடிப்ப¨யில் செயல்படும் மனிதன் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிழல் மனிதர்களைக் கண்டடைவதற்கு சில சூசங்கங்ளதை தொடர்ந்து சென்றே தேட வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தத் துப்பறிகிற வேலை என்கிற சோர்வு கூடச் சில வேளைகளில் தோன்;றுகிறது. இரண்டு காரணங்களுக்காக இந்தக் காரியத்தைச் செய்யத் வேண்டியிருக்கிறது. முதலாவதாக இவர்கள் எதிர்விணையாற்றுபவர்களை மறைந்த நின்றுகொண்டு கபடமான மொழியில் அவதூறு செய்கிறார்கள். இரண்டாவதாக இவர்களது மறைந்த நிலையிலான சமூகக் கலாச்சாரத் திட்டங்கள் மனித உடல்கள் மரணமுற்றுச் சரிகிற வெறிச்செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதாக இருக்கிறது.
நீண்ட நாட்களாகவே இவ்வகைக் கட்டுரை எழதுவதைத் தீர்மானிப்பதில் இருந்த சிக்கல் ஜெயேந்திரர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திலிருந்து வந்த சுரா, காலச்சுவடு, ஞாநி போன்றவர்களின் அபிப்பிராயங்களால் விலகியது என்றே சொல்ல வேண்டும்.
ஜெயந்திரர் பிரச்சினையும் அவர் செய்ததாகச் சொல்லப்படும் கொலை, பாலியல் சுரண்டல், மோசடி போன்றவற்றில் அவர் ஈடுபட்டது மெய்யா பொய்யா என்பதனை நீதிமன்ற நடைமுறைகள் தீர்மானிக்கட்டும். ஆனால் ஜெயேந்திரர் போன்று சட்டங்கள் இந்திய யாப்பு போன்றவற்றுக்கு அப்பால் பெற்றிருக்கும் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு முன்னுதாரணமாக இருப்பதால் ஜெயேந்திரர் மீதான நடவடிக்கை வரவேற்க்கப்படவேண்டும் என இந்த அபிப்பிராயங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த அடிப்படையிலிருந்தே இக்கட்டுரையின் அணுகுமுறையும் எழுகிறது. இந்தக் கட்டுரை முன்வைக்கும் கேள்விகளுக்கான திறவுகோல் கட்டுரை குறிப்பிடும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் நிழல் மனிதர்களிடமே இருக்கிறது.
நீதிமன்றம் ஜெயேந்திரரை திரைவிலக்கி நிஜமுகத்தடன் முன்வைப்பதற்கான சாத்தியம் போல எனது அவதானங்கள் பொய் மெய்;கள் சம்பந்தப்பட்டவர்கள் திரைகளை விலக்கி வெளிவருவதிலேயே இருக்கிறது. ஜெயேந்திரர் விவகாரத்தில் எழுத்தாளர்கள் மெளனம் கலைத்து தமது அபிப்பிராயங்;களை முன்வைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் இந்துத்துவம் நுழைந்தவிட்டது என கலாப்ரியா முன்னொருபொழுது கூறியதாக ஞாபகம். கருணாநிதி, ஜெயலலிதா, அரசு ஊழியர் வேலை நிறுத்தம், திகசி, ரெஜி சிறிவர்த்தனா, சுனாமி என அனைத்து குறித்தும் அபிப்பிராயம் தெரிவிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயேந்திரர் குறித்து ஏதும் அபிப்பிராயங்கள் இல்லை என எவரும் நம்ப முடியாது.
ஸைபர் வெளியை அறிந்தருக்கும் வாசகன் எனும் அளவிலும், ஜெயமோகனது இலக்கிய எழுத்துக்கள், அவரது கருத்தியல் குறித்த எழுத்துக்கள, அவரது அரசியல் சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் அளவிலும் ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து திண்ணையில் நேசகுமார் எனும் பெயரில் வந்த ஆதங்கக் கட்டுரை, அதனைத் தொடரந்து வந்த இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் ஜெயமோகனுடையதுதான் என நம்புவதற்கு இடமுண்டு. இதுமட்டுமன்று சூர்யா எனும் பெயரிலும் பிற்பாடு சூரியா எனும் பெயரிலும் எழதுகிறவரும் ஜெயமோகன்தான் என்றும் தர்க்க அளவில் நான் நம்புகிறேன்.
இதனைத் தெளிவபடுத்துவதன் மூலம் என்ன பயன்? இதைச் சொல்வதற்கான தர்க்கம் என்ன? நியாயமான கேள்விகள். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு சிலர் தவிரவும் பெரும்பாலுமான எழுத்தாளர்கள் தொடர்ந்து ஸைபர் ஸ்பேசில் நடமாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. சூர்யா அல்லது சூரியா, நேசகுமார் போன்றவர்கள் ஸைபர் ஸ்பேசில் மட்டுமே நடமாடும் எழத்தாளர்கள். அவர்கள் சிறுபத்திரிக்கை சார்ந்து தெரிந்த எழுத்தாளர்கள் அல்ல. மேலாக ஜெயமோகனின் ஸைபர் ஸ்பேஸ் எழுத்தக்களின் கருத்தியல் சார்பாளர்களும் விசுவாசிகளும் இவர்கள் தான்.
ஜெயமோகனது பிரதிகளை விதந்தோதி வழிபடுபவர், எதிர்விணையாற்றுபவர்களை நக்கல் செய்பவர் வன்சொல் வீசுகிறவர் சூரியா எனும் நிழல் மனிதர். இவரது இதுவரைத்திய எழுத்துக்கள் அனைத்துமே ஸைபர் ஸ்பேஸ் சார்ந்தவைதான். தமிழகத்தில் அரைநூற்றாண்டுகாளக நடந்த அனைத்து இலக்கிய அரசியல் கருத்தியல் விவாதங்களை அறிந்த இவரை தமிழகத்திலுள்ள எழத்தாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். இவர்; இதுவரை எழுதிய எழுத்துக்கள் தொண்ணாறு சதம் ஜெயமோகனது எழுத்துக்கள் எப்படிப் பாரக்கப்பட வேண்டும் என ஜெயமோகன் சொல்கிறாரோ அப்படியே பார்த்து அதை நிலைநாட்ட எழதும் எழத்துக்கள்தான். இவர் ஒன்று ஜெயமோகனது மூளையின் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனது குளோனிங் ஆக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனிடம் அன்றாட குறிப்புகள் எடுத்துக்கொண்டு எழுதும் பிரச்சார எழுத்தாளராக இருக்க வேண்டும்.
வ.ஐ.ச.ஜெயபாலன் பிரச்சினை தொடங்கி, காடு நாவல் வாசிப்பு வரை ஜெயமோகனது சிந்தனா உலகத்தின் கூறாக நடமாடும் நிழலின் பெயர்தான் சூரியா.
விஷ்ணுபுரத்திலும் பின்தொடரும் நிழலின் குரலிலும் பன்முக மனிதர்களாகப் பரிமாணம் பெறுகிற பாத்திரங்கள் அவ்வப்போது ஜெயமோகனது குரலினை ஏற்பதை நாம் அழகியல் புனைவு என்று கொள்வதில் பிரச்சினையில்லை. படைப்பில் படைப்பாளியின் பிளவுன்ட ஆளுமை நடமாடுவதென்பது ஜெயகாந்தன் முதல் பேசப்பட்ட வரும் படைப்பின் சிக்கலை விடுவிக்கும் பிரச்சினைகள் சார்ந்தவை. நடைமுறை வாழ்வில் ஒரு மனிதனின் பிளவுன்ட ஆளுமை வேறு வேறு பெயர்களில் கருத்தியல் விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் சிக்கலானதாகும். நிஜ வாழ்வில அனாமதேயக் கடிதங்கள் போல ஸைபர் பேஸ் உருவாக்கியிருக்கம் தர்மசங்கடங்களில் இதுவொன்று.
ஜெயமோகனது எழுததுக்களை எழுத்து வன்முறை மூலம் பாதுகாத்து நிற்க சூரியா. இஸ்லாம் தொடர்பான அவரது இந்துத்துவ நேசத்தை முன்வைக்க நேசகுமார், அந்த நேசகுமாரின் எழத்துக்களை தொகுத்துவிட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்கிற சூர்யா இவர்களெல்லாம் ஒரே ஆளுமையின் பகுதிகள் என்ற கொள்வதில் என்ன பிரச்சினையிருக்க முடியும்?
விவாதங்கள் அபிப்பிராயங்கள், அது வலைத்தள விவாதங்கள் உள்பட தொகுத்துவிடுவதென்பது ஜெயமோகனது சிந்தனையைமப்பின் ஒரு பகுதி. தன்னை மதச்சார்பற்ற தாராளவாதி எனக் காண்பித்துக்கொள்ள நினைக்கிற ஜெயமோகனுக்கு அவரது ஜெயேந்திரர் சார்புக் கட்டுரையும் இஸ்லாம் தொடர்பான விவாதக் கட்டுரைகளையும் எப்படி தன் சொந்தப் பெயரில் கொண்டுவர முடியும்? ஆனால் கட்டுரைகளைத் தொகுத்து அதனை மதம் சார்ந்த விவாதமாக்கிவிட வேண்டும் என நினைப்பது ஒரு சமூக – அரசியல்- கலாச்சாரத் திட்டத்தின் பகுதி அல்லாமல் பிறிதொன்றில்லை.
இஸ்லாம் தொடர்பான நேசகுமாரின் கட்டுரைகளை சொந்தப்பெயரில் எழுத முடியாது என்கிறார் சூரியா. அரவிந்தன் நீலகண்டன் இதை விடவுமான இஸ்லாமிய எதிர்ப்புக் கட்டுரைகளை தனது சொந்த அடையாளத்தடன் எழுதுகிறார். இந்திய அளவில் நிறைய இந்துத்துவ எழுத்தாளர்கள் தமது சொந்;தப் பெயரில்தான் இம்மாதிரி கட்டுரைகளை எழதி வருகின்றனர். நேசகுமாரின் பிரச்சினை தன் சொந்த தாராளவாத முகமூடி கலைந்துவிடக் கூடாது என்பதுதானேயொழிய உயிராபத்து அல்ல. மேலாக ஜெயேந்திரர் தொடர்பான நேசகமாரின் கட்டுரை அவரது சிந்தனையமைப்பு செயல்படும் தளத்தைக் காண்பித்துவிடுகிறது.
ஜெயேந்தரர் கைது ஜெயகாந்தனுக்கு மிகுந்த மனச்சங்கடத்தை அளித்திருக்கிறது. நிச்சயமாக நேசகுமார் போல ஜெயேந்திரர் கைது கோவை ஞானிக்கு சங்கடத்தை அளித்திருக்காது என்று சொல்லமுடியும். மதத்தையும் அது உருவாக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஞானிக்குத் தெரியும். நேசகுமாரும் ஜெயமோகனும் கால்வைக்கத் தயங்கும் வெளியும் விவாதிக்கத் தயங்கும் வெளியும்; இதுதான். துரதிருஷ்டவசமாக அதுதான் ஜெயேந்திரரின் அரசியல் பின்னனியாகவிருக்கும் பிஜேபி சஞ்சரிக்கும்; வெளி. அடிமுதல் முடிவரை அரசியல் அபிப்பிராயங்களும் அஞ்சலிகளும் தெரிவிக்கும் ஜெயமோகன் இதுவரைக்கம் பிஜேபி குறித்தோ அதனது பிண அரசியல் குறித்தோ அல்லது இந்தியாவையே உலுக்கியிருக்கும் அரசியல்-கலாச்சார-ஆன்மீகப் பிரச்சினையான ஜெயேந்திரர் குறித்தோ தன் பெயரில் அபிப்பிராயங்கள் தெரிவிக்காமல் தன் நிழல் பெயரில் விளையாடும் விளையாட்டே நேசகுமார் சூரியா பெயரிலான வி¨யாட்டுக்கள் என நம்பமுடிகிறது. சூரியாவுக்கு நிச்சயம் நேசமாரைத் தெரியும். அவர் எழுதுவது புனைபெயரில்தான் என அறிந்திருக்கும் சூர்யா அவரது நிஜப்பெயரை முன்வைத்தலும், சூர்யாவுக்கு ஜெயபாலன் தொடர்பான தனது தனிக்கடித்ததை அனுப்பிய ஜெயமோகன் சூர்யாவின் அடையாளத்தை முன்வைத்தலும், பல புதிர்களை விடுவிக்கும். இந்த புதிர் ஜெயமோகனது அரசியல்- ஆன்மீகம்-இலக்கியம் தொடர்பான பல பதிர்களை விடுவிக்கும். ஜெயமோகனது கருத்துலகம் அவரது நாவல்கள் இந்து சிந்தனை தொடர்பான அவரது நூல் என விரிந்து கிடக்கிறது. அவரது அன்மீக அரசியலின் நீட்சியாக ஞானியின் சிந்தனையூடே, நடைமுறை மாரக்சிய இயக்கங்களை நிராகரித்த இந்து வாழ்முறையொன்றை அவர் முன்வைக்கிறார். ஆன்மீக மதம், அரசியல் மதம், சூபி நம்பிக்கை, இலக்கியத்தின் ஆன்மீகக் கூறு போன்றன குறித்த அவரது கருத்தாக்கங்களைத் தொகுத்துக் கொள்கிறவர்களுக்கு, அவருக்கும் சூரியா நேசகுமார் போன்ற நிழல் ஆளமைகளுக்கும் இருக்கும் மையப் புள்ளியைப் புரிந்து கொள்வதில் பிரச்சினையிருக்கப் போவதில்லை.
தனது தாராளவாதி மதச்சார்பற்ற முன்னிறுத்தலை நிறுத்திவிட்டு ஜெயமோகன் தனது அசல் முகத்துடன் வெளிவரும்போது எதிரிநிலையிலிருந்த கருத்தாடல் மேற்கொள்பவர்கள் இலக்கியம்-அரசியல்-ஆன்மீகம் சார்ந்து நுண்தளத்தில் அவரை எதிர்கொள்ள அவர் உதவமுடியும்.
திண்ணையில் நடந்து கொண்டிருக்கும் இந்துத்துவம்-.இஸ்லாம் தொடர்பான விவாதம் அடிப்படைவாதங்களுக்கு இடையிலான விவாதமேயல்லாது, இஸ்லாம் குறித்து இன்று தாராளவாத நோக்கிலும் ஜனநாயகவாத நோக்கிலும் எழுத்திக் குவித்திருக்கும் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத விவாதமாகும். ஜியாவுதின் சர்தார், இக்பால் அகமது, ஸமிர் அமின், தாரிக் அலி, அய்ஜஸ் அகமது போன்றவர்கள் இஸ்லாம் குறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள்.
தாரிக் அலியை முட்டாள் என அழைத்து நாகூர் ரூமி முன்வைத்திருக்கும் இஸ்லாம் அடிப்படைவாத இஸ்லாம் என்பதில் சந்தேகமில்லை. நேசகுமார் நாகூர் ரூமியை மையப்படுத்தி உருவாக்க விரும்பும் அல்லது ஜெயேந்திரர் கைதை ஆதங்கத்தினால் திசை திருப்பி உருவாக்க விரும்பம் விவாதக்களமும் இந்துத்தவ அடிப்படைவாதம் நோக்கிய சிந்தனைக் கட்டமைப்புத்தான் என்பதிலும்; சந்தேகமில்லை.