எதிர்வினை 1: ஒரு ஸ்டாலினிஸ்டின் அவதூறு! – ஜெயமோகன் –
யமுனா ராஜேந்திரனின் கட்டுரை கண்டேன். நான் யமுனா ராஜேந்திரன் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற ஆழமற்ற, உள்நோக்கம் கொண்ட கட்டுரையாளர்களை பொருட்படுத்த விரும்பவில்லை.ஆனால் இது அவதூறு என்பதனால் மறுப்பு . நான் என்பெயரில் மட்டுமே எழுதுகிறேன். என் கருத்துக்களுக்கு முற்றாகப் பொறுப்பேற்று எழுதுகிறேன். கடந்த வருடங்களில் இம்மாதிரி வெளிப்படையாகக் கருத்துக்களைச் சொல்லி தக்குதல்களை எதிர்கொண்டவர்கள் அதிகம்பேர் இல்லை. எனக்கு மறைக்க மழுப்ப ஏதும் எப்போதும் இல்லை.
முற்போக்கு பிம்பத்தைக் கட்டமைக்க எப்போதும் நான் விழைந்தது இல்லை. சுபமங்களா வந்தபோது கோமல் கேட்டுக் கொண்டதற்கேற்ப ராஜன், கெ விஸ்வநாதன் என்ற பெயர்களில் எழுதியதுண்டு. சொல் புதிதில் அதேபோல சில சமயம் கட்டுரைகளை எழுதியதுண்டு.
இணையம் ஒருவர் தன் பெயரை அடையாளத்தை மறைத்து எழுத வசதி அளிக்கிறது. இதில் எழுதுபவர்களில் கணிசமானவர்கள் அவ்வசதிக்காகவே எழுதுபவர்கள். இன்றைய நவீன தொழிற்சூழலில் இம்மாதிரி புறச்செயற்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. விதிவிலக்காக இருப்பவை அரசுத்துறைகள். கடந்த 5 வருடங்களாக அரசுத்துறைகளிலும் இலக்கியம் அரசியல் போன்ற ஈடுபாடுகள் கடுமையாக தடுக்கப் படுகின்றன. பல எழுத்தாளர்கள் விருப்ப ஓய்வை நோக்கிச் செல்வது இதனாலேயே எனது துறை தனியார்மயமாகுந்தோறும் எனக்கே கடுமையான சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கருணாநிதி விவகாரத்துக்குப் பின். என் படைப்புகளை காலச்சுவடு நிறுவனமும் காவ்யா பதிப்பகமும் எனக்கு தெரிவிக்காமல் அச்சிட்டு நூலாக்கும்போதுகூட எதிர்வினையாற்றமுடியாத சூழல்.
சென்ற வருடம் ஜெயலலிதா உருவாக்கிய சட்டத்திருத்தம் மூலம் தமிழக அரசு ஊழியர்கள் கடுமையான கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இதுதான் இன்றைய நிலை.
இன்னொருபக்கம் இலக்கிய விவாதங்களை சட்டப்போர்களாக மாற்றுவது, வேலைசெய்யும் நிறுவனத்துக்கு புகார்கள் அனுப்புவது என்று இலக்கியச்சூழலில் நிலைமை மிகச்சிக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது. இச்சூழலில் ஓர் எழுத்தாளனின் அடையாளத்தைக் கோருவதும் கட்டாயப்படுத்துவதும் மிக அபாயகரமான உள்நோக்கம் கொண்ட செயல்கள்.
ஆகவே இனி இணையத்தில் எழுதும் புனைபெயர்கள் மேலும் அதிகமாகலாம். இன்று இணையத்தில் எழுதுபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுபவர்கள் என்பதை எவரும் அறிவர்.
நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் அரவிந்தன், சூத்ரதாரி முதலிய பெயர்களில் எழுதுவது நானே என்று குற்றம்சாட்டியுள்ளனர். பிறகு இணையத்தில் எழுதியபோது ஜீவா, குமாரபாரதி, விஷ்னுதாசன், பிரியதரிசன், சூர்யா, ஆசாரகீனன், சின்னக்கருப்பன், பல்லவன், நேசகுமார் ஆகியபெயர்களில் எழுதுவது நான்தான் என்று அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை நானும் சம்பந்தப்பட்டவர்களும் மறுத்தாலும் வேறுவேறுபெயர்களில் இக்குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இது என் ஆளுமையையும் நேர்மையையும் கறைப்படுத்திக் காட்டச் செய்யப்படும் முயற்சி . மீண்டும் நான் மறுத்தாகவேண்டியுள்ளது. அவ்வளவுதான் செய்ய முடியும்.
என் கருத்துக்களை இலக்கியம் இலக்கியத்துடன் இணைந்த கருத்துவிவாதம் சார்ந்து மட்டுமே வெளிப்படுத்தி வருகிறேன். அரசியல் சார்ந்து நான் பேச விரும்புவதில்லை. நான் அதில் நிபுணன் அல்ல. எனக்குத் தெரிந்தவை எல்லாம் செய்திஇதழ்கள் வழியாகத் தெரிந்தவையே . ஓர் அளவுக்குமேல் கூர்ந்து அவற்றைப் அடிக்கும் வழக்கௌம் எனக்கு இல்லை. என் அக்கறைகளும் மனநிலைகளும் வேறு. மேலும் எனக்கு திடமான அரசியலும் எப்போதும் இல்லை.
அதேசமயம் தத்துவ, சமய நோக்கில் சங்கர மடம் குறித்து இந்த விவாதங்கள் வருவதற்கு முன்பே பல வருடங்களாக நான் எத்தகைய கடுமையான கருத்துக்களை பதிவுசெய்துள்ளேன் என என் நூல்களை, இணைய எழுத்துக்களை படிப்பவர் அறிவார்கள்.
ஒருவர் தன்னை எப்படி முன்வைக்கிறாரோ அப்படித்தான் அவரை எதிர்கொண்டாகவேண்டும். அதுவே சாத்தியம். யமுனா ராஜேந்திரன் ரவி சீனிவாஸ் போன்றவர்கள் தங்களை மார்க்ஸியப் போராளிகள் போல முன்வைக்கிறார்கள். இதை நாம் விவாதம் என்ற அளவில் ஏற்றுக் கொண்டுதான் பேசமுடியும். இவர்களைப்பற்றி நான் தனிப்பட்டமுறையில் அறிந்தவரை இப்பிம்பங்கள் முற்றிலும் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையே. ஆனால் அதை எப்படி நாம் நிரூபிக்க முடியும்?
ஒன்றுசெய்யலாம். முற்றாக புறக்கணிக்கலாம். கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நாஞ்சில்நாடன் ஞானி சூத்ரதாரி போன்ற பல நண்பர்கள் முன்னிலையில் யமுனா ராஜேந்திரன் [பின் தொடரும் நிழலின் குரலை எழுதியமைக்காக] என்னை ‘bastard ‘ ‘son of a bitch ‘ போன்ற சொற்களைப் பயன்படுத்தி திட்டினார் என்று கேள்விப்பட்ட பிறகு அதையே செய்துவருகிறேன். காரணம் அவருக்கு ஒருவகை சுயபிம்பக் கட்டமைப்பு அது சார்ந்த குரோதம் தவிர கருத்துவிவாதம் சார்ந்த நோக்கம் ஏதும் இல்லை. இவர்களால் மேய்ந்த தகவல்களை கக்குவது தவிர ஒருவரிகூட சுயமாகச் சிந்திக்கவும் முடிவதில்லை.
தமிழில் எழுதவரும் எவரும் இம்மாதிரி தாக்குதல்களை தாண்டித்தான் எழுதவேண்டியுள்ளது. நேற்றும் இன்றும்