பதிவுகள் விவாதம்: ஸைபர் வெளியும் மனித உடல்களும்!

எதிர்வினை 3: எதிர்வினை: சைபர் வெளியும் மனித உடல்களும்! – நேசகுமார்- 

யமுனா ராஜேந்திரன் அவர்களின் சைபர் வெளியும் மனித உடல்களும் பற்றிய கட்டுரை படித்தேன். தமிழிலக்கிய உலகோடு பரிச்சியம் இல்லாததாலோ என்னவோ, அவரது கட்டுரையில் பாதிக்குமேல் புரியவில்லை. மையக் கருத்து என்னது என்பதும் விளங்கியும் விளங்காததாயுமே உள்ளது. என்னளவில் புரிந்து கொண்ட அளவில், கீழ்க்காணும் விளக்கங்களை முன்வைக்க விரும்புகிறேன் :

ஜெயமோகனும் நானும் :

ஐயா, ஜெயமோகன் எழுத்துக்கள் பலதை நான் படித்ததில்லை. விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். அதுகூட ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதே தவிர, மேலும் அவரது எழுத்துக்களையெல்லாம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஜெயமோகன் எனும் மகாவிருட்சத்தை, அது புரியும் மாயாஜாலங்களை நெருங்க பயப்படவே வைத்தது அவரது எழுத்து. ஆனால், அவரின் மீது ஏகப்பட்ட மரியாதையும் வந்து செர்ந்து கொண்டது. புத்தகத்தினால் ஈர்க்கப் பட்டு அல்ல, அதன் பின்னர் எனக்குப் புலப்பட்ட கடுமையான உழைப்பே எனக்கு அவர் மீது மரியாதையும், வியப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. ஏனெனில் உழைப்பின் மீது எப்போதுமே எனக்கு பெரும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது.

அதை விடுத்துப் பார்த்தால், நான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்திருக்கிறேனா என்று எனக்கு நினைவில் இல்லாத அளவுக்குத்தான் அவரது தாக்கம் என்மேல் இருந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல, பொதுவாகவே எனக்கு தமிழிலக்கிய உலகில் பரிச்சியம் கிடையாது.

அப்போது, இப்போது என்று எதாவது சில பெயர்கள் காதில் விழும், ஆங்காங்கே தட்டுப் படும். எனது வாழ்வோட்ட வேகத்தில், வெலை, குடும்பம், ஆன்மீகம், சுகங்கள் என்ற மிகக் குறுகிய நடைமுறை வாழ்க்கையில் இலக்கியம், அது தூண்டும் சிந்தனைகள், அறிவு பூர்வ சுகங்கள் ஆகியவற்றை அற்பமாகக் கருதி உதாசீனம் செய்து வந்த சாமான்ய மேல் நடுத்தர வர்க்க உலகின் அற்ப வாசியாகவே இருந்து வந்தவன் நான்.

இணையமும் இலக்கியமும் :

இவ்வாழ்வில் சிறிய மாற்றம் ஏற்பட்டது இணையம் மூலமாகத்தான். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்து, வாழ்ந்த்¢ருந்தும், தமிழை (மற்ற மொழிகளையும் கூடத்தான்) உருப்படியாக அறியாதவனாகவே இருந்து வந்த சாதாரணன் தான் நான். இதை பெருமையாகவோ அல்லது சிறுமைப் பட்டோ சொல்லவில்லை இங்கு. நிஜத்தைச் சொல்கிறேன், நடைமுறையைச் சொல்கிறேன்.

இணைய வசதியோடு கூடவே தமிழும் சேர்ந்து வந்தது. முரசு கண்டு புல்லரித்துப் போன நாட்கள் உண்டு. அதை இயக்கி, வலைத்தளங்கள் தமிழில் முதல் முறையாக தமிழில் இறங்கிய போதுதான் என் மொழியின் மீது எனது அடிமனதில் இருந்த அன்பை என்னாலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மதுரைத் திட்டத்தின் மூலம், நான் மனப்பாடச் செய்யுள்களாக மட்டுமே படித்திருந்த ஒரு சிறு வட்டத்தைத் தாண்டி, ஓங்கி உயர்ந்து நின்ற எம் பாட்டன்களின் சிந்தனைக் கவிகளை சற்றே காண முடிந்தது. பண்டைய இலக்கியம் மட்டுமல்ல, பழகிவரும் இலக்கியத்தையும் சிறிதே அறிந்து கொள்ள முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இன்றைய இலக்கிய உலகின் விவாதங்கள், வாதங்கள் அதைத் தொடர்ந்த சண்டைகள் சச்சரவுகள் என்று ஒரு மயக்க உலகத்தின் மீதும் ருசியேற்பட்டது இந்த இணையத்தாலேயே. இணையம் இல்லாவிட்டால், குமுதத்தை மட்டுமே படித்திருப்பேன், தீராநதியை பார்த்திருக்க மாட்டேன், அசோக மித்திரனை அறிந்திருக்க மாட்டேன், ஜெயமோகனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டேன்.

இணையமே என்னை சிறிதளவாவது படிக்கத் தூண்டியது. இணையமே என்னை தமிழில் எழுதத் தூண்டியது. இணையத்துக்கு வெளியே இருக்கும் தமிழிலக்கிய உலகை இன்றும் சரியாகத் தெரியாது. தெரிந்து கொள்ள நேரம் இல்லை . நாங்கள் தவறாயிருக்கலாம், ஆனால்

இன்றைய விரைவு வாழ்க்கையின் கோட்பாடுகள், தூண்டுதல்கள் அப்படி.  எழுதத்தூண்டிய இணையம் :

ஒரு ஓரமாக நான் வலைப்பதிவை தயங்கித் தயங்கி ஆரம்பித்தேன். கூட வேலைபார்க்கும் நன்பர்களுக்கும் காண்பிக்க தயக்கம். தப்பும் தவறுமாக எழுத ஆரம்பித்தேன் (இப்போதும் அப்படியே, கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன்).  பக்கத்திலிருப்பவர்கள் என் சிந்தனைகளை பார்த்து பரிகசிப்பார்களோ என்று ஐயுற்ற எனக்கு பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் யாரோ ஒருவர் கூகிளில் எதையோ தேடி, எனதைப் படித்து எழுதிவிட்டுச் சென்ற ஒற்றை வரி சாஹித்ய அகாதமியின் விருதானது. உற்சாகம் கொப்பளித்தது, அவ்வப் போது கிறுக்க ஆரம்பித்தேன்.

மரத்தடி என்றொரு இணையக் குழு,முதலில் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டுமிருந்தேன்.  எப்போவதாவது சென்று எதையாவது படித்துவிட்டு மகிழ்வுறுவது வழக்கம். பின் அதீத ஈர்ப்புற்று அதில் இணைந்தேன். அத்தனை பேர் கூடிய அவையில் எதையாவது உள்ளிட்டால் இகழ்வார்களோ என்ற கூச்ச உணர்வில், மூலையில் அமர்ந்து ஓடும் இணையக் குழுவை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் தான் நான். அப்போது அங்கே விழாக்காலம். விழாக்குழுவில் ஒருவர் எனக்கென ஒரு நாள் ஒதுக்கி எழுத அழைத்து மடலிட்ட போது நிறையத் தயங்கினேன்.

பின், ஆவது ஆகட்டும். எழுதித்தான் பார்ப்போமே என்று எனது பயனக் கதை, பிலிப்பஸ் பால்டஸ் 350 வருடங்களுக்கு முந்தி பார்த்து வியந்து எழுதிவிட்டுப் போன தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு (நல்லூர் பற்றி அதில் வருவதை கிரிதரனிடம் கூட விவாதிக்க ஆசையாயிருந்தது அப்போது), பாரதியாரைப் பற்றி வெங்கடாசலபதி வெந்து, நொந்து போய் எழுதியது என்று பழம்பாய்களையே படையலாக அளித்தேன் மரத்தடிக்கு. எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்த எளியோனுக்கு கரகோஷமும், கைத்தட்டலும் கிட்டவே களிப்புற்று எழுத்தின் மேல் காமுற்றேன். யமுனாராஜேந்திரன் என்னைப் பற்றிய ஐயம் ஏற்பட்ட போது எனது வலைப்பதிவில் சென்று பார்த்திருந்தால், இதெல்லாம் புலப்பட்டிருக்கும்.

வம்பும் விவாதமும் :

நாகூர் ரூமி அவர்கள் தாம் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலைப் பற்றி புகழ்ந்து வந்த கருத்துக்களை மரத்தடியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அவ்வளவு இட்ட அவருக்கு ஓர் வேண்டுகோள் வைத்தேன், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக உங்களைப் போன்ற அறிஞர்களாவது எதாவது செய்ய வேண்டுமென்று.  நான் அப்படிப் பட்ட வேண்டுகோள் இட்டதே தவறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி என் முன்முடிவுகளை, ஆதாரமில்லாமல் முன்வைத்துள்ளேன் என்று கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி என்னை எதிர் கொண்டார். எனக்கு நாகூர் ரூமி எழுதிய புத்தகத்தையும் இலவசமாய் அனுப்பி வைத்தார். புத்தகம் வருவதற்கு முன்பு, மரத்தடியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி நான் கூறியவற்றுக்கான ஆதாரங்களை வைத்து விவாதம் செய்து வந்த நான், புத்தகம் கிடைத்த பிறகு அதைப் படித்து, என்னளவில் சரியென நம்பிய விமர்சனத்தை திண்ணை இணைய இதழுக்கு அனுப்பினேன்.

திண்ணையில் வந்த விமர்சனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனோ தெரியவில்லை, எனக்கு முன்னர் எவரும் அப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை எழுத்தில் வெளிப்படுத்தவில்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவே சர்க்கரையாக ஆகியதைப் போல், வேறு யாரும் இது மாதிரி விமர்சனம் எழுதாததாலோ என்னவோ, திண்ணை அதைப் பிரசுரித்திருந்திருந்தது.

நானே எதிர்பார்க்காத வகையில் , பேராசிரியர் ரூமி அவர்கள் எனது தவறான புரிதல்களை தெரிவிக்க முன்வந்தார். முன்வந்த அவர் சில விமர்சனங்களையும் என்னை நோக்கி வீசிச் சென்றார். ஏற்கெனவே என்னை அவர் விமர்சனம் வந்ததால் ஓடிவிட்டார் என்று விமர்சித்திருந்ததால் (தவறான குற்றச் சாட்டு அது என்பதை திண்ணையிலேயே தெளிவாக விளக்கியிருந்தேன்), அமைதியாக இருந்தால், இக்குற்றச் சாட்டுகள் தொடரும் என்பதால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். விவாதத்துக்கும் அழைத்தேன் பேராசிரியர் ரூமியை.

விவாதங்களின் வளர்ச்சி :

தனியொருவனாய் நின்றிருந்த என்னை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டமே களம் இறங்கியது. எனக்கு எதிராக எழுதுவது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது என்று இஸ்லாமிய விவாத தளமொன்றில் அழைப்பு விடுக்கப் பட்டது. நிறைய இஸ்லாமியச் சகோதரர்கள் எனது கருத்துக்களை மறுத்து, அவர்களுக்குச் சரியெனப் பட்டதை முன்வைத்தார்கள், வலைப்பதிவுகளைத் துவக்கி இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களை தமிழ் இணைய அன்பர்களுக்கு வாசித்துக் காட்டினார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செய்கை தம் போன்றவர்களுக்கு ஒப்புமை இல்லை என்பதை அழகிய முறையில் எடுத்துச் சொன்னார்கள்.

பர்தா பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை பலத்த வரவேற்பைப் பெற்றது (என்னளவில் இதை பலத்த வரவேற்பாகக் கருதுகிறேன். இலக்கிய உலகில் உலாவுபவர்களுக்கு இது சாதாரண விஷயமாகவே படக்கூடும்). சார்பு, எதிர் கருத்துக்கள் என விவாதம் சூடு பிடித்தது.

இதில் சரிவு இல்லையா என்றால், இருந்திருக்கிறது. கடுமையும்,காட்டமான எதிர்தாக்குதல்களும், மிரட்டல்களும் வந்தன.இவையெல்லாம் ஓரிருவரிடமிருந்து மட்டும் தான், மற்றபடி பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் உட்பட நாகரிகமாய்த்தான் விவாதம் புரிகின்றனர். எனது கருத்துக்கள் , கட்டுரைகளின் விளைவாக இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்கள் மிகுந்துள்ள இந்தச் சூழலில், ஒரு விவாத வெளி இணையத்தில் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியச் சகோதரர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாம் பற்றி அறிந்தது மிகக் குறைவே, நீங்கள் ஏற்படுத்திய விவாதத்தினால் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது என்றனர் பலர். என் கருத்துக்களை எதிர் கொண்டு பல விஷயங்களைத் தெளிவு படுத்த முன்வந்தனர் பல இஸ்லாமியச் சகோதரர்கள்.

விவாதமும் மதவாதமும் :

இவ்விவாதம் மதவாதத்தை ஏற்படுத்துமா என்றால், உங்களது மனச் சாட்சியையே கேட்டுக் கொள்ளுங்கள், இஸ்லாமியர் யாரும் இல்லையென்றால் எத்தகைய விவாதங்கள், அவதூறுகள் நமது சமூக நிகழ்சிகளில் செய்யப் படுகின்றன என்பதை, மசூதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் நிகழ்த்தப்படும் உரைகளைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். தொடர்ந்து தமிழகத்தில் எத்தனை மதக் கலவரங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். 

கோவை குண்டு வெடிப்புக்களில் எழுபது இந்துக்கள் இறந்தனர் என்றால், உயிருடன் கொடூரமாக பல இஸ்லாமியர்கள் கொளுத்தப் பட்டதும் விவாதங்களே இல்லாத நம் சமூகத்தில்தான். பேராசிரியர் ரூமியின் பூர்வீக ஊரில் தான் பார்சல் பாம் அனுப்பி நாகூர் தங்கம் கொலை செய்யப் பட்டார், தங்களின் அரபி மூலத்தை ‘தேடிக் கண்டுபிடித்தவுடன்’ இஸ்லாமிய சகோதரர்களால் கீழக்கரையிலிருந்து குடும்பம் குடும்பமாக இந்துக்கள் விரட்டப் பட்டார்கள் என்றால், கொடுங்கையூரில் 30,000 ஜெலட்டின் குச்சிகளும், வெடி குண்டுகளும் கைப் பற்றப் பட்டதை அடுத்து அனைத்து முஸ்லீம்களும் அல் உம்மாக்காரர்கள் என  எண்ணிய போலீஸ் ரெய்டு மேல் ரெய்டாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் (கலைஞர் அவர்களின் நேரடி உத்தரவில்) நிகழ்த்தவே முஸ்லீம்கள் எல்லோரும் குடிபெயர்ந்து போன அவலமும் இத்தமிழகத்திலேதான் நிகழ்ந்தது.( இதெல்லாவற்றையும் விளக்கி தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய தெளிவானதொரு கட்டுரையை பதிவுகளுக்கே எழுதி அனுப்புகிறேன் விரைவில்). இதுதான் அய்யா இன்றைய நிலவரம். உள்ளுக்குள் ஒருவரையொருவர் சந்தேகித்துக் கொள்கிறோம், மறைவாக நெருப்பை நெஞ்சில் ஏற்றிக் கொண்டுள்ளோம். நமது சமுதாயம் வெந்து தணியாமலிருக்க வேண்டுமென்றால், இந்த அக்கினிக் குஞ்சை வெளியில் கொண்டு வருவோம், விவாதிப்போம், நமது ஆதங்கங்களை, குறைகளை அவர்களிடம் சொல்லுவோம். இங்கே உள்ள குறைகளை அவர்கள் சொல்லட்டும். விவாதித்து, மதவாதத்தையும், அப்பட்ட மத அடிப்படைவாதம் கிளறிவிடும் வன்முறை எண்ணங்களையும் வேரறுப்போம்.

இதற்காகத்தான் இந்த விவாதம் நடைபெறுவது நல்லது என்று எண்ணினேன், எண்ணுகிறேன். இதை எனது வலைப் பதிவில் விளக்கியும் உள்ளேன்.( பார்க்க : http://islaamicinfo.blogspot.com  மற்றும் முந்தைய விவாதங்களை அறிய : http://islaam.blogdrive.com)

ஒளிந்து விளையாடும் நரிவிளையாட்டு :

இதில் எனது முழு முகவரியையும், போட்டோவையும், சிவியையும் முன்வைக்காதது உண்மைதான். அப்படி வைக்கும் அரவிந்தனுடன் என்னை ஒப்பிட்டுள்ளார் யமுனாராஜேந்திரன். அய்யா, அரவிந்தன் ஓர்  அமைப்பு சார்ந்து செயல்பட்டு , எழுதி வருபவர். அமைப்பின் பின்புலம் அளிக்கும் பாதுகாப்புணர்வோடு செயல்படும் அவரை, தனியாய் மனதிற்கு சரியெனப் பட்டதை இருபக்க மதவாதமும் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கி விவாதத்திற்குள் நுழைந்த என்னுடன் ஒப்பிட முடியாது. 

அரவிந்தனைவிட ஆக்ரோஷமாக செயல்பட்டு வருபவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்றால், அவர்களில் யாராவது அமைப்பு சாராமல் செயல் பட்டு வருகின்றனரா, அப்படியெல்லாம் எழுதி வருகின்றனரா என்பதை யமுனா ராஜேந்திரன் அவர்கள் தாம் தெரிவுபடுத்த வேண்டும். என்னளவில், நான் கண்டிருக்கும் வரையில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்படி தைரியமுள்ளவர்கள் இருக்கலாம். நான் அதிகமாகக் கூட பயந்து போயிருக்கும் கோழையாய்க் கூட தென்படலாம். ஆனால், இணையத்தில் இப்படி ஒரு வசதி இருக்கும் போது நான் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற நடுத்தரவர்க்கத்து சிந்தனையால் உந்தப் பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக எழுப்பும் மிகச் சிறிய குரலைக் கூட அக்கம் பக்கம் பார்த்து எழுப்பும் பயமுள்ளவாதியே நான். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, மறுக்க வில்லை. சொந்த நாட்டில், சரியெனப் பட்டதை மென்மையான முறையில் நாகரிகமாய் சொல்வதற்குக் கூட அஞ்சும் ஒரு சீஜ் மெண்டாலிட்டி நிலவும் சூழலிலே வசித்து வருபவன் நான்.

என்னளவிற்குக் கூட குரலெழுப்பாமல், முணுமுணுப்புக் கூட எழுப்பாமல், ஆனால் நெஞ்சில் நஞ்சைத் தேக்கிவைத்துக் கொண்டிருக்கும் நிறையப் பேரை நான் இங்கு பார்த்திருக்கிறேன். அம்மாதிரியானவர்களைப் பார்த்து நானாவது எதோ மெல்லிய குரலை எழுப்புகிறேனே என்ற சிறு நிறைவே எனக்கு ஏற்படுகிறது.

எனது புகைப்படம் இல்லை, முகவரியைத் தெரிவிக்கவில்லை என்பதால் தரம் கெட்டு யாரையும் நான் திட்டவோ, காழ்ப்புற்று வெறுப்பை அள்ளி வீசவோ செய்ததில்லை நான். இனியும் செய்ய மாட்டேன். முழுமையாக மதச்சார்பின்மை நம்பும் நான், மதச் சார்பற்ற ஜனநாயகத்தின் சுதந்திரக் காற்றே காலத்தால் எல்லா வேற்பாடுகளையும் களைந்து நம் சமுதாயத்தில் அன்பும், பரிவும் பரிணமிக்க வைக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளேன்.

இதிலெல்லாம் யமுனாராஜேந்திரனுக்கு நம்பிக்கை இல்லை என்றால், இன்னமும் நானும் ஜெயமோகனும் ஒன்றே என நெஞ்சார நம்புகிறார் என்றால், எனக்கு மடலிடலாம் தாராளமாக. அவர் கேட்கும் எல்லா விவரங்களையும் அவரிடமே அளிக்க நான் தயாராகவே உள்ளேன். ஆனால், இம்மாதிரியான வாதங்களைக் கிளரி, விவாதங்களை நிறுத்தும் பாசிசச் சிந்தனைக்கு அவர் பலியாகிவிடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.

– நேசகுமார் –

http://islaam.blogdrive.com
http://islaamicinfo.blogspot.com
nesa_kumar2003@yahoo.com