ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள். நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,
வெற்றி எல்லா வலிகளையும் மறக்கடிக்க செய்துவிடக்கூடியது என்பது தானே உண்மை
பெரும்பான்மை எழுத்தாளர்கள் தனது நாவல்கள் குறித்து திருப்தியின்மையே கொண்டிருக்கிறார்கள், திரும்பிச் செல்ல முடியாத பால்யத்தைப் பற்றி நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டுக் கொள்வது போன்ற ஒரு ரகசியவேதனை. அல்லது ரகசிய சந்தோஷம் இரண்டும் ஒவ்வொரு நாவல் எழுதி முடித்த போதும் ஏற்படுகிறது
டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு (Resurrection) நாவல் வெளியானதன் பின்புலம் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், அவரது மற்ற நாவல்களை விட அது அதிக வாசகர்களின் கவனத்தை பெறவில்லை என்று அந்தக் கட்டுரை துவங்கியிருந்த்து, தமிழில் இந்த நாவலை ராதுகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது, எனக்கு புத்துயிர்ப்பு நாவலில் வரும் மாஸ்லாவை ரொம்பவும் பிடிக்கும், அவளை எனது ஊரில் நான் கண்ட மதினிகளில் ஒருத்தியைப் போலவே நினைக்கிறேன், அவ்வளவு அற்புதமான பெண் , மாஸ்லாவா என அந்தப் பெயரை சொல்வதிலே ஒரு கிளர்ச்சியிருக்கிறது, வேசைமை குறித்து டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறார், இவள் அதில் ஒரு புனிதை, ஒருவகையில் இவள் வழியாகவே தனது ஆன்ம மீட்சிக்கான தேடுதலை டால்ஸ்டாய் முன்வைக்கிறார்,
புத்துயிர்ப்பு நாவலின் மீது திடீரெனக் கவனம் கொள்ள காரணமாக இருந்த்து டால்ஸ்டாயின் மூத்த பையன் செர்ஜீ எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பான Sergei Tolstoy and the Doukhobors: A journey to Canada புத்தகம் வாசித்ததே
ஒரு நாவலை எழுதுவத்ற்கு எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு அக்க்காரணம் இருக்க்கூடும், ஆனால் இந்த நாவலை டால்ஸ்டாய் எழுதுவற்கு இருந்த காரணம் வியப்பானது,
1898ல் பனிரெண்டாயிரம் டுகோபார்ஸ் (Dukhobors) குடும்பங்கள் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வெளியேறி கனடாவில் தஞசம் புகும் நிலை ஏற்பட்டது, ரஷ்யாவில் இருந்து அந்தக்குடும்பங்கள் கப்பல் ஏறி ஆறாயிரம் மைல் தூரம் பயணம் செய்யத் தேவையான பணமும் பொருள்உதவியும் தேவைப்பட்டது, அந்த உதவியை செய்தவற்காகவே டால்ஸ்டாய் தனது ஐந்தாவது நாவலாக Resurrection எழுத முன்வந்தார், அந்நாவலுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை டுகோபார்ஸ் இயக்கத்திற்கும், அகதியாக செல்லும் மக்களின் வழிச்செலவிற்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பினார்
நாவல் எழுதத் துவங்கும் போது அவரது வயது 78, பத்தாண்டுகாலம் அவர் நாவல் எதையும் எழுதவும் இல்லை, முந்தைய நாவல்களான ANNA KARENINA , WAR AND PEACE, இரண்டும் மகத்தான வெற்றி பெற்றிருந்தன, ஆனால் புத்துயிர்ப்பு நாவலை எழுதும் காலத்தில் டால்ஸ்டாயின் மனது ஆன்மீக விசயங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்த்து, அவர் நேரடியான மக்கள் சேவையை பெரிதும் விரும்பினார்,
ஒரு முறை பிரான்சில் அவர் பிரபல எழுத்தாளர் விக்டர் க்யூகோவைச் சந்தித்தார் அவர் அடித்தட்டு மக்க்ளின் வாழக்கையை பற்றி கவலை கொள்வதே எழுத்தாளனின் வேலை என்று சொன்னது டால்ஸ்டாய் மனதிலே ஆழமாகப்பதிந்து போயிருந்த்து, அது போலவே பிரான்சில் இருந்த நாட்களில் ஏற்ப்டட அடிப்படை கல்வி சார்ந்த விவாதம் ஈடுபாடு காரணமாக தனது முக்கிய கவனமாக கல்வி மற்றும் அடிப்படை வசதி சார்ந்த சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தி வேலை செய்து கொண்டிருந்தார்.
அவரது எண்ணங்களை பின்பற்றும் டால்ஸ்டாய்வாதிகளுடன் இணைந்து அறிவார்ந்த சபையை உருவாக்கி கொண்டு இயற்கையோடு கூடிய கூட்டுபண்ணையை நடத்திக் கொண்டிருந்தார், அத்தோடு தனது படைப்புகளை எவரும் இலவசமாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற அவரது அறிவிப்பின் காரணமாக அவரது புத்தகங்கள் பரவலாக வெளியிடப்பட்டன, அந்த நாட்களில் தனது மொத்த சொத்தையும் விவசாயிகளுக்கு பகிர்ந்து தந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்,
இந்த சூழலில் அவர் டுகோபர்ஸ் இயக்கத்திற்காக பணம் வசூல் செய்ய ஒரு நாவலை எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை உருவானது
டுகோபார்ஸ் இயக்கம் என்றால் என்ன- ஏன் அதில் டால்ஸ்டாய் இவ்வளவு காட்டினார் என்ற கேள்வி எழுவது இயல்பே
பதினேழாம் நூற்றாணடில இருந்து ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ், இவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் தேவாலயம். மதச்சடங்குகள் பாதிரிகளின் கட்டுபாடுகள் யாவற்றையும் எதிர்த்தனர், மனிதனின் மனதே ஆலயம், மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆத்மாவை பலமாகவும். எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாக்க் கொண்டிருக்க வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் வன்முறை. கொலை கூடாது, மனிதர்களில் எவரும் உயர்வும் தாழ்வும் கிடையாது, ஆகவே தங்களை ஆத்ம போராளிகள் என்று அழைத்துக் கொண்ட இவர்கள் எலிஸ்தவ்போல். டிப்லிவஸ் போன்ற பகுதிகளில் விவசாயப் பண்ணை அமைத்துக் கொண்டு சிறுசிறு கிராமங்களாக வாழ்ந்தனர்
காந்தி டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்ட பல விஷயங்கள் டுகோபார்ஸ் மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த வந்த பழக்கங்களே,
டால்ஸ்டாயின் படைப்புகள் எந்த அறத்தை வலியுறுத்தியதோ அதே விசயங்களை தங்களது வாழ்வில் கடைபிடித்தவர்கள் டுகோபார்ஸ், அதனால் டால்ஸ்டாய் அவர்களை தனது எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் முன்னோடிகளாகக் கருதினார், டுகோபார்ஸ்சின் வாழ்க்கை இயற்கையோடு இணந்த்து மகத்தானதாக உள்ளதை கண்டு டால்ஸ்டாய் வியந்து போற்றியிருக்கிறார்
டுகோபார்ஸ் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். தங்களது சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோட்பாடு, அதற்காக விவசாயம். ஆடு மாடுகளின் பண்ணை. வீட்டுஉபயோகப் பொருட்கள் தயாரித்தல். காய்கறிகள். பழங்கள். உற்பத்தி செய்வது. உடைகளை தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் மரசாமான்களை தாங்களே செய்து கொள்வது. மண்ணர்ல் வீடுகட்டுதல். பொது சமுதாயக்கூடம் அமைப்பது என்று அவர்களின் உலகம் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காதது,
அது போலவே இறைவழிபாட்டிலும் அவர்களுக்கான வழிபாட்டுமுறைகள். பாடல்கள். விழாக்களை அவர்களே உருவாக்கிக் கொண்டனர். பைபிள் வாசிப்பது கூட அவர்களிடம் கிடையாது,
அவர்கள் முழுமையாக சைவஉணவு பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். முட்டை சாப்பிடுவது கூட பாவம் என்று விலக்கப்பட்டிருந்த்து. அது போலவே பாலை அருந்தவும் அவர்கள் மறுத்தார்கள், அது முழுமையாக கன்றுகளுக்கு மட்டுமே உரியது என்று பாலை ஒதுக்கினார்கள், திருமணத்திலும் கூட பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது,
தங்களை எவராது தாக்க வந்தால் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக அந்த அடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நடைமுறை, எவ்வளவு வன்முறை பிரயோகப்படுத்தபட்டாலும் டுகோபார்ஸ் திரும்பி அடிக்க மாட்டார்கள், அடியை தங்களது ஆத்மாவின் பலத்தை சோதிப்பதற்கான பரிட்சையாக நினைத்தார்கள்
புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அவர்களிடம் கிடையாது, அது போலவே தங்களைத் தேடிவரும் விருந்தாளிகளுக்கு உணவு உறைவிடம் தருவதற்கு அவர்கள் ஒரு போதும் பணம் வாங்குவதில்லை, ரொட்டியை விலைக்கு விற்பது மிக்க் கொடிய பாவம் என்பது அவர்களின் எண்ணம்
கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில் தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக் கொள்ளக் கூடாது, பணத்தை ஒரு போதும் பெரிதாக நினைக்க்கூடாது, விலங்குகள் மற்றும் விவசாய உடைமைகள் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கட்டாயம் தங்களால் ஆன வேலையை செய்தே ஆக வேண்டும். வயதாகியவர்களை ஊரே பராமரிக்கும், ஊரின் நிர்வாகத்தை கவனிக்க அவர்களே குழு அமைத்து கொள்வார்கள், ஆகவே அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லாமல் அவர்களே தங்களுக்கான சாலைகள் அடிப்படை வசதிகளை அமைத்து கொண்டார்கள், குளியலுக்காக பொதுகுளியல் கூடம் அவர்களிடம் இருந்தது,
திருமணம் செய்து கொள்வது கடவுளின் விருப்பம் என்பதால் அதை அரசாங்கத்தில் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்க்ள
தொலைபேசி அறிமுகமான உடன் தங்களது கிராமங்களுக்குள் தொலைபேசி வசதியை தாங்களாகவே உருவாக்கி கொண்டது அவர்களின் முன்னோடி சாதனை, இது போலவே ஜாம் செய்வதிலும் தானியங்களைப் பாதுகாப்பதிலும். மாவு அரைப்பதிலும் அவர்கள் தனித்திறன் கொண்டிருந்தார்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கையால் வேலை செய்வதே அவர்களின் பாணி, எங்கே செல்லும் போது நடந்து போவதையே அவர்கள் விரும்பினார்கள்
இவை யாவையும் விட அவர்கள் ராணுவசேவையை வெறுத்தனர், ஒரு ஆண் கூட ராணுவத்தில் போய் பணியாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர், ராணுவம் என்பது ஒரு ஆயுதங்களால் மனிதனை அச்சுறுத்தி அடக்க்கூடியது, ஆகவே ராணுவசேவை எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது என்று தாங்கள் எதிர்ப்பை காட்ட தங்களது அத்தனை ஆயுதங்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள் டுகோபார்ஸ் மக்கள்
இன்னொரு பக்கம் தங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் அவர் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தாங்கள் ஒரு தனிராஜ்ஜியம் போலவே அமைதியாக வாழ்ந்தார்கள்
ஆனால் அரசு மக்கள் நிம்மதியாக ஒதுங்கி வாழ ஒரு போதும் அனுமதிக்காது தானே, ஆகவே கசாக்கியப்படையை அனுப்பி அவர்களை ராணுவத்தில் சேர்க்க முயன்றது, மறுத்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள், டுகோபார்ஸின் ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து அவர்களை அடிபணியும் படியாக அடித்தார்கள், அடியை தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டபோதும் ஒருவரும் அடிபணியவேயில்லை, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, கைகால்கள் ஒடிக்கப்பட்டு சைபீரிய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள், பல ஊர்கள் தீக்கிரையாகின, வீடுகள் நொறுக்கப்பட்டன, ஆனால் அவர்களின் ஆத்மபலம் குறையவேயில்லை,
ஒரு நாள் முழுவதும் முந்நூறு கசை அடிவாங்கிய ஒரு மனிதன் மறுநாள் தன்னை அடிக்கின்ற கசாக்கிய வீரனிட்ம் உனக்கு சரியான ஒய்வு இல்லை, தேவையான உணவும். பழங்களும் என் சேமிப்பில் இருக்கின்றன, அதை சாப்பிட்டு வந்து என்னை அடிக்கலாமே என்று சொல்லியிருக்கிறான்,. அது தான் டுகோபார்ஸின் இயல்பு
பெண்களும் குழந்தைகளும் கூட இந்த வெறியாட்டத்தில் இருந்து தப்பவில்லை, அப்போது தான் டால்ஸ்டாய் டுகோபார்ஸ் பிரிவினரைப் பற்றி கேள்விபட துவங்கினார், உடனே அவர்களுக்கு ஆதரவாக தனது அறிக்கையை வெளியிட்டதோடு அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார் தைரியமாக இருங்கள் என்று ஊக்கப்படுத்தினார், அன்றிலிருந்து டுகோபார்ஸ் மக்கள் டால்ஸ்டாயை தங்களது ரட்சகராகவே கருதினார்கள், அவர்களுக்காக அரசிட்ம் டால்ஸ்டாய் முறையிட்டார், உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார், இதற்காக மதவாதிகள் டால்ஸ்டாயைக் கடுமையாக எதிர்த்தனர், டுகோபார்ஸ் போன்ற இழிவான மக்களுக்காக போராடாதீர்கள் என்று டால்ஸ்டாய்க்கு எச்சரிக்கை விடுத்தனர் நிலபிரபுக்கள், ஆனால் அந்த எளிய மக்களின் பக்கமே டால்ஸ்டாய் நின்றார், அவர்கள் போராட்டத்திற்கு துணை செய்தார்
அரசாங்கத்தின் கண்களில் இருந்து தப்பியோடி வரும் டுகோபார்ஸ் இயக்கத்தவர்களுக்கு தனது வீட்டை புகலிடமாக்கினார், அவர்களது நியாயத்திற்காக வாதாடினார்.
இந்த நிலையில் ரஷ்ய அரசாங்கம் நாற்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட டுகோபார்ஸ் பிரிவினர் மொத்தமாக நாட்டை விட்டு வெளியேறிப் போவது என்றால் ஒத்துக் கொள்வதாகச் சொன்னது, அப்போது கூட அவர்கள் இனி ஒரு போதும் ரஷ்யாவிற்குத் திரும்பி வரக்கூடாது, தங்களது பயண செலவை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். சைபீரிய சிறையில் உள்ள கைதிகள் தண்ட்னைகாலம் முடிந்த பிறகே நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பார்கள் என்ற நிபந்தனைகளை விதித்த்து,
அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், அதன் முதற்கட்டமாக 7500 பேர் ரஷ்யாவை விட்டு கனடா புறப்பட முடிவு செய்தனர், கனடா அரசு அவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த்து, ஆனால் 6000 மைல் பயணம் செய்ய வேண்டும், அது பெரிய சவால்
ஆகவே டால்ஸ்டாய் தனது நாவலில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு அவர்களுக்கு உதவ திட்டமிட்டார், அதற்காக நாவலைத் தொடராக வெளியிட முன்வந்தார், ஒரே நேரம் ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட் மொழிகளில் அது வெளியாக வேண்டும் அப்போது தான் அதிக ராயல்டி கிடைக்கும் என்று முயற்சி செய்தார்
டால்ஸ்ட்ர்யின் விருப்ப்படி 1899ம் ஆண்டு தொட்ர்கதை நீவா என்ற இதழில் ஆரம்பிக்கப்பட்ட்து, அதற்காக பனிரெண்டாயிரம் ரூபிள் பணம் பெறப்பட்டு டுகோபார்ஸ் இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது
அகதிகளை ஏற்றிக் கொண்டு முதற்கப்பல் 1899 ஜனவரி 4ம் தேதி புறப்படுவதாக இருந்த்து, தனது மகன் செர்ஜியையும் அவனது நண்பர்களையும் டுகோபார்ஸ் மக்களுக்குத் துணையாக கனடா அனுப்பிவைத்தார் டால்ஸ்டாய், செர்ஜிக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட மொழிக்ள தெரியும், பல்கலைகழக்த்தில் படித்தவர் ஆகவே கனேடிய அரசுடன் பேசி மக்களை அங்கே தங்க வைக்க அவர் உதவி செய்வார் என டால்ஸ்டாய் நினைத்தார்
2300 டுகோபார்களை ஏற்றிக் கொண்டு முதல்கப்பல் புறப்பட்டது, கடலில் பயணமான சில நாட்களிலே ஒரு குழந்தைக்கு அம்மை வ்நது கப்பல் முழுவதும் தொற்றுநோய் பரவியது, ஆகவே எந்த துறைமுகத்திலும் கப்பல் நிற்க அனுமதி கிடைக்கவில்லை, 27 நாட்கள் கடலில் நின்றது அந்த கப்பல், பசி. நோய்மை என அவர்கள் கப்பலில் முடங்கி கிடந்தனர்
இன்னொரு பக்கம் தனது நாவலை எழுத்த் துவங்கும் முன்பாக டால்ஸ்டாய் அதன் மையமாக ரட்சிப்பும் ஆத்மவிசாரணையும் இருக்க வேண்டும் என்று விரும்பினார், அந்த நாவலின் மையக்கதை அவரது நண்பர் வழக்கறிஞர் கோனி சொன்ன ஒரு நிஜசம்பவத்திலிருந்து உருவானது, அதே போலவே ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி கைவிட்ட சம்பவம் டால்ஸ்டாய் வாழ்விலும் நடைபெற்றிருக்கிறது, ஆகவே அதை தனது தவறுக்காக மனம் வருந்தும் ஒருவனின் வாக்குமூலம் போலவே டால்ஸ்டாய் எழுத ஆரம்பித்தார்,
ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தொடர்ந்து எழுதினார், உடல்நலக்கோளாறு ஏற்பட்டது, வேளைவேளைக்கு உணவு சாப்பிட மறந்து போய் எழுதிக் கொண்டேயிருந்தார், பாதி உறக்கத்தில் எழுந்து மெழுகுவர்த்தி உதவியால் எழுதியதும் நடந்தேறியது, தன்னைக் காண வந்த மகள்களை கூட அவர் பார்க்க் அனுமதிக்கவில்லை, உறக்கத்தில் நாவலைப்பற்றியே புலம்பியதைக் கண்டு மனைவி பயந்து போனார், எங்கே ஒருவேளை இந்த நாவலை முடிக்காமல் இறந்து போய்விடுமோ என்ற பயம் அவருக்கும் உருவானது,
அவர் நினைத்த்து போல வேகமாக எழுத இயலவில்லை, எழுதிய அத்யாயங்களை திரும்பத் திரும்ப அடித்துத் திருத்தி எழுதினார், இதனால் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவானது, நாவலின் ஒரு அத்யாயத்தை அச்சிற்கு அனுப்பிவிட்டு அதில் மாற்றம் செய்ய வேண்டியதை தந்தி அனுப்புவார். அது போலவே இதற்க்கான மொழிபெயர்ப்பு உரிமையைத் தவறுதலாக இரண்டு பேருக்கு தந்துவிடவே அதிலும் குழப்பம். சட்டசிக்கல் உருவானது
டுகோபார்ஸ் மக்கள் அவர் தங்களுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக அவருக்காக மனதாரப் பிரார்த்தனை செய்தனர், ரஷ்ய மக்களோ வாரவாரம் அவரது அத்யாயங்களுக்காக கர்த்திருந்து வாசித்தனர், நாவல் பாதி எழுதும் போது டால்ஸ்டாய் கடுமையாக நோய்வாய்பட்டார், நாவலை அப்படியே முடித்துவிடும்படியாக மனைவி வற்புறுத்தினார் ஆனால் டால்ஸ்டாய் கேட்கவேயில்லை, அவர் நோய்நீங்கியதும் நாவலைத் தொடர ஆரம்பித்தார்
டால்ஸ்டாயோடு உதவி செய்த அவரது நண்பர்களை அரசு நாடுகடத்தியது, அவர் தனித்து விடப்பட்டார், தனது புத்தக விற்பனை. ராயல்டி. சொந்த வருமானம் என தன்னால் முடிந்த அளவு 17 ஆயிரம் ரூபிள் பணம் திரட்டி டுகோபார்ஸ் மக்கள் இடம் பெயர்ந்து போக உதவி செய்து கொண்டேயிருந்தார்
ஆறுமாத காலம் கடுமையான கஷ்டங்களை தாங்கி கொண்டு டுகோபார்ஸ் மக்களை ஏற்றிக் கொண்ட கப்பல் கனடா போய் சேர்ந்த்து, பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் அவர்கள் தங்க வைக்கபட்டார்கள், புதிய நிலம். புதிய சூழல் ஆனாலும் கடுமையாக உழைத்து தங்களது வசிப்பிடங்களை அவர்கள் சிறப்பாக உருவாக்கி கொண்டார்கள், ஆறுமாதகாலத்தின் பின்பு செர்ஜீ நாடு திரும்பினார்,
டால்ஸ்டாயின் நாவல் 1899 டிசம்பர் 18 அன்று முடிவு பெற்றது, அதை எழுதி முடித்த கையோடு தனது நாட்குறிப்பில் இப்படி தான் எழுதியிருக்கிறார்
Completed Resurrection. Not good, uncorrected, hurried, but it is done with and I’m no longer interested.
தான் நேசித்த மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு எழுத்தாளன் எழுதிய ஒரே நாவல் இதுவே, இது போல உலகில் வேறு எங்கும் நடைபெறவேயில்லை, எழுத்தாளனாக தான் எதை அறமாக கொண்டிருந்தாரோ அதை நடைமுறை வாழ்வில் டால்ஸ்டாய் சாதித்துக் காட்டியிருக்கிறார்
ரஷ்ய இலக்கிய உலகம் இந்த நாவலை டால்ஸ்டாயின் மகத்தான தோல்வி என்று விமர்சனம் செய்தது, குளறுபடியான மொழியாக்கத்தால் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியிலும் நாவல் பெரிதாக வெற்றி பெறவில்லை, ஆங்கிலத்தில் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்தது,
இரண்டு மிகமுக்கிய நாவல்களை எழுதி அடைந்த வெற்றியை டால்ஸ்டாயால் தாண்ட முடியவில்லை, ஆனால் அவர் தனது இந்த நாவல் மற்ற நாவல்களை விட பயனுள்ளது, அதனால் அதன் வெற்றி தோல்விகளை விட அது மகத்தானது என்று அறிவித்தார், அது உண்மையும் கூட
இந்த நாவலில் வரும் மாஸ்லாவோ அவரது முந்தைய நாவல்களை விட வலிமையான பாத்திரம், அன்னகரீனினாவை விடவும் பலமடங்கு சிறப்பானவள். அவளை நெக்லதுப் சந்திக்கும் இடமும் நீதிமன்ற் விசாரணையும் அவனது மனக்குழப்பங்க்ளும் டால்ஸ்டாய் என்ற மேதையின் எழுத்து மேன்மைக்குச் சான்றாக உள்ளது,
இன்றும் அகிம்சை. சமாதானம். சைவஉணவு பழக்கம். சுயதேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வது, எளிமை, நல்லசிந்தனை நல்ல செயல். நல்ல் மனது என்று டுகோபார்ஸ் வம்சாவழிகள் வாழ்கிறார்கள், காலமாற்றத்தில் பலர் தங்களது பூர்வ அடையாளங்களை மறைத்து கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் கனேடிய அரசு தங்களைப் பலவந்தப்படுத்தி மாற்ற முயற்சித்த போது தங்கள் எதிர்ப்பை காட்ட டுகோபார்ஸ் உலகிலே முதன்முறையாக நிர்வாணமாக ஊர்வலம் போனார்கள், அது தான் அவர்கள் காட்டும் அமைதியின் வழி,
டால்ஸ்டாயின் மகன் செர்ஜி தான் டுகோபார்ஸ்களுட்ன் மேற்கொண்ட பயணம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார், அந்த நூலில் தனது அப்பாவை பற்றி அவர் குறிப்பிடுவது நெகிழ்ச்சியடைய செய்கிறது
புத்துயிர்ப்பு நாவலின் காரணமாக உருவான வழக்குகள். தடைகள். எதிர்ப்புகுரல்கள் என பிரச்சனைகள் அத்தனையும் ஒருங்கே சந்தித்தார் டால்ஸ்டாய், அதைப் பற்றி வாசிக்கையில் அது புத்துயிர்ப்பு நாவலை விடவும் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது
புத்துயிர்ப்பு நாவல் ஆன்மாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது, புறக்கணிக்க்படும் நீதியைப் பற்றி பேசுகிறது, குற்றமனப்பாங்கின் துயரத்தைப் பற்றி பேசுகிறது, காதலுக்காக ஒரு பெண் எதிர் கொள்ளும் அவமானங்களைப் பேசுகிறது, அவ்வித்த்தில் மனிதன் தனது செயல்களுக்கு தானே பொறுப்பாளி என்பதையே வலியுறுத்துகிறது,
இன்றும் கனடாவில் இருபதாயிரத்திற்கும் அதிகமாக டுகோபார்ஸ் பிரிவினர் வசிக்கிறார்கள், உலகெங்கும் அவர்கள் தாங்கள் வாழும் இடமெல்லாம் டால்ஸ்டாய்க்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள், தங்களின் வேதப்புத்தகம் போல புத்துயிர்ப்பு நாவலை தினசரி வாசிக்கிறார்கள்,
தான் வாழும் சமூகத்திற்கு எழுத்தாளன் ஆற்ற வேண்டிய பங்களிப்பு என்ன, என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டியிருக்கிறது.