இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம்.
மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது இசை வரலாறு என்பது தெளிவாகிறது. இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற இசை வடிவங்களை, அவை தொடர்பான இசை அறிவை, உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்வது சமூக ஆய்வுக்குத் துணை புரிவதாக அமையும்.
இந்தப்பின்னணியில் மேற்கத்திய இசையில் புகழும் செல்வாக்கும் பெற்ற ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. உலக அளவில் இன்றும் போற்றப்படுகிற இந்த இசை வடிவத்தின் சில இசைக்கூறுகள் இன்று தமிழ்நாட்டு இல்லங்களின் கதவு ஒலிகளில் (Door bells) சொகுசுக் கார் ஒலிகளில்(Car horns) வெளிப்படும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இத்தகைய புகழ் பெற்ற சிம்பொனியானது மேற்கத்திய செவ்விசையாக, (Western classical music) அடையாளம் பெற்றுள்ளது.கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பிரெஞ்சுப் புரட்சியும், சிம்பொனி இசையும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் குறிப்பிடத்தகும் சமூக மாற்றப்போக்குகளாக ஐரோப்பாவில் தேசிய உணர்வுகளின் எழுச்சிக்கு வித்திட்ட போக்குகளாக, கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் ’லத்தீன்’ என்ற மொழியின் ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. அரசர்களுக்கும் மேலான அதிகாரத்தை செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்தனர்.
கிறித்துவச் சமயச் செல்வாக்குப் பெற்ற லத்தீன் மொழியின் ஆதிக்கத்திற்கும். அன்று செல்வாக்குடன் இருந்த தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைகளில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) எனும் இசை அறிஞர் தமது தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் மதச்சார்பற்ற (Secular கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பல்லிசைக் கருவியிசையில் (Polyphonic) ‘சான்சன்’ (Chanson) என்ற இசை வடிவத்தில் புதுமையான தாள இசைக் கூறுகளை வளர்த்தெடுத்து மேற்கத்திய இசை வரலாற்றில் இடம் பெற்றார். மதச்சார்பற்ற இசை வடிவமாக சான்சன் அடையாளம் காணப்பட்டது.
அதே போல் இத்தாலியின் கண் பார்வையற்ற இசை அறிஞர் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) தமது தாய் மொழியான இத்தாலி மொழியில் மாத்ரிகல் (madrigal) இசைக் கூறினை மதச்சார்பற்ற இசையாக வளர்த்தெடுத்தார். மாத்ரிகல் என்பது நாட்டுப்புறப் (rustic) பாடல் இசைவடிவம் ஆகும். இதே இத்தாலியும், பிரான்சும் தான் சிம்பொனி இசைத் தோற்றத்தின் மூல இசைக் கூறுகளை வழங்கிய நாடுகளாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய இசையில் இத்தகைய மதச்சார்பற்ற (Secular) இசையின் வளர்ச்சியானது சமூக மேல் தட்டுப்பிரிவின் ஆதிக்கத்தை எதிர்த்ததோடு இடைநிலை மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது. அதாவது பிரெஞ்சுப் புரட்சிக்கான துவக்க அறிகுறிகளாக இவை வெளிப்பட்டன. இடைக்காலம் (Middle Ages) என்ற கட்டத்திலிருந்து மறுமலர்ச்சிக் காலம் (Renaissance) என்ற கட்டத்திற்கு மாறிய காலகட்டத்தில் இத்தகைய மாற்றங்கள் இசைத் துறையில் நடந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். ஒவியம் உள்ளிட்ட பிற பண்பாட்டுத் துறைகளிலும் இத்தகைய போக்கு வெளிப்பட்டது.
16 – ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தேசியக் கூறுகளின் வளர்ச்சியும், கிறித்துவ மதத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவின் தோற்றமும் முக்கிய நிகழ்வுகளாகும். அச்சிடும் முறை வந்த பிறகு இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சிக்கு அது பெரும் துணைபுரிந்தது. 16 – ஆம் நூற்றாண்டில் தனிமனித வெளிப்பாடாகிய ’தனிக்குரல்’ (Solo Voice) இசையானது நரம்பிசைக் கருவியைத் (lute) துணையாகக் கொண்டு செல்வாக்குப் பெறத் தொடங்கியது. பாதிரிகள் பிரபுக்கள் நிலையிலிருந்து கீழ்த்தட்டு மக்களை, தனிமனிதனை முக்கியத்துவப்படுத்தும் போக்குகள் வெளிப்படத் தொடங்கின. குழலிசை, நரம்பிசை, தொடு விரலிசைக் (Keyboard) கருவிகள் இக்காலகட்டத்தில் வளர்ந்தன. இவற்றுள் லுட் (Lute) கருவி ஐரோப்பா முழுவதும் செல்வாக்கு பெற்ற இசைக் கருவியாக இருந்தது. இக்கால கட்டத்தில் தோன்றிய வயலின், வாய்ப்பாட்டு இசை அமைப்பில் துணையிசையாக மட்டுமின்றி, சில பகுதிகளில் தனித்து இசைக்கும் வகையில் கருவியிசையாகவும் செயல்பட்டது. கன்செர்ட்டோ (Concerto) என்று அடையாளப்படுத்தப்பட்ட இம்முறையே கன்செர்ட் (Concert) என்ற பின்னாளைய அரங்கிசை வடிவிற்கு முன்னோடியாக அமைந்தது.
17-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் நடந்த மதப்போர்களும், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போரும் (Civil war) இரண்டு நாடுகளையும் அரசியல், பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளிலும் பலவீனப்படுத்தின. இதே காலகட்டத்தில் மேற்கத்திய இசை பிரான்சிலும் இத்தாலியிலும் வளர்ச்சி பெற்றன. மறுமலர்ச்சிக்கு (Renaissance) எதிரான போக்கு இசை ஒவியம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டு, அமைதியற்ற (restless) உணர்வுகள் வெளிப்படத் தொடங்கின.
இதனால் பரோக் (baroque) என்ற கலை, இசையிலும் ஒவியத்திலும் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கியது. இசைக் கருவிகளைத் தனித்து ஒலிக்கச் செய்யும் போக்கு செல்வாக்கு பெற்றது. ”ஓபெரா” (opera) எனும் இசை நாடக வடிவம் தோன்றி வளர ஆரம்பித்தது. இத்தாலியில் தோன்றிய இந்த இசைவடிவம் ஐரோப்பா முழுவதும் செல்வாக்குப் பெற்றது. கூட்டிசை(Harmony)யும் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றது. பண்பு மாற்றம் (Modulation) என்ற இசைத்திறனும் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றது. சொனாட்டா (Sonata) என்ற முக்கிய இசை வடிவமும் இக்காலகட்டத்தில் தான் தோன்றி வளர்ந்தது. பிற்காலத்தில் தோன்றிய சிம்பொனி இசையில் இது முக்கியப் பங்கு ஆற்றியது.
18 ஆம் நூற்றாண்டு என்பது அறிவை (Reason) முதன்மைப்படுத்தி வடிவொழுங்கும் (Formalism) பகுத்தறிவும் (rationalism) செல்வாக்குப் பெற்ற காலமாகும். அப்போது வால்ட்டேர், ரூசோ, போன்றோர் அரசையும் மதத்தையும் கடுமையாக விமரிசித்தனர். செல்வாக்கும் வசதியும் பெற்ற ’பூர்ஷ்வா’ (bourgeoise) எனும் முதலாளி வர்க்கம், பொறுப்பற்ற திறமையற்ற அரசை வீழ்த்தி, தமது செல்வாக்கை நிலைநாட்டத் துடித்தது.
பூர்ஷ்வா வர்க்கத்தின் எழுச்சியும், செல்வமும் இசைகற்பித்தல், (advent of the musical amateur) தொழில் ரீதியிலின்றி இசையார்வத்தில் கச்சேரி வழங்கல் ஆகிய போக்குகளை உருவாக்கின.
பிரெஞ்சுப் புரட்சியின் நேரடித் தாக்கமாக மக்களுக்கான இசை உருவானது. புரட்சிக்காலத்தில் நடந்த கொடுமைகளும் விடுதலை முயற்சிகளும் இசையின் உள்ளடக்கத்தில் வெளிப்பட்டன. அரசர்கள் பிரபுக்கள் ஆதரவு நீங்கி பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதரவு இசைக்குக் கிட்டியது. அரசவை இசைக் கலைஞர்கள் அரசுப் பணியாளர்களானார்கள். காதல், நகைச்சுவை, பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய கட்டமைப்பினைக் (Small structure) கொண்ட ரொகோகோ (Rococo) என்ற இசை வடிவம் செவ்விசை சொனாட்டாவாக (Classic Sonata) ஜே.எஸ்.பாக் (J.S. Bach) சி.பி.இ.பாக் (C.P.E Bách) ஜே.சி.பாக் (J.C. Bach) போன்றோரால் வளர்க்கப் பெற்றது. சிம்பொனியின் படைப்பாளர்களான ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் தோன்றுவதற்கான சிம்பொனியின் காலம் துவங்கியது.
இத்தகைய முயற்சிகளின் தொகுவிளைவாக ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் கனியும் காலம் நெருங்கியது.
சிம்பொனியின் தோற்றம் கலப்புருத் (mixed origins) தோற்றமாகும். இத்தாலிய ‘ஓபெரா’ (opera) இசை நாடகத்தில் சின்போனியா (Sinfania) என்ற இசைவடிவம் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இது இசைநாடகத்திலிருந்து விடுபட்டு கச்சேரி இசை (Concert) யானது. வேகம்-தாமதம்-வேகம் (fast-slow-tast) என்ற இசைப் பண்பு இதன் தனித்தன்மையாகும். பிரான்சில் கோசெக் (Gossec) போன்றோரும், இங்கிலாந்தில் ஜே.சி. பாக் மற்றும் பாய்ச்சி (Boyce) போன்றோரும் சிம்பொனியின் தோற்றத்திற்கு பங்களித்தவர்கள் ஆவர்.
ஆனால் சிம்பொனியின் தாயகம் என்ற பெருமை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவையே சாரும். ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் சிம்பொனி இசை உருவாக்கத்திற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பிரான்ஸ் ஜோசப் (1732 – 1809) உல்ப்காங் அமெதியூ (1756 – 1791) முக்கியமானவர்கள். ஆனால் ஹைடனும், மொசார்ட்டுமே சிம்பொனி இசைக்கு முதல் முதலாக முழுமை வடிவம் (first peak of perfection) கொடுத்தவர்கள் ஆவர்.
தனி இசைச் சுரங்கள் அல்லது இசை அளவீடுகள் (measures) ஆகியவை தாள மாறுபாடு அழுத்தத்திற்கு (rhythmic syncopation) உட்படுத்தப்பட்டன. தனிச்சுர இசை (Melody), கூட்டிசை (harmony), ஒன்றுக்கும் மேற்பட்ட தனிச்சுர இசைகள் ஒரே நேரத்தில் இசைத்தல் (Counter point) போன்ற நுட்பங்கள் சிம்பொனி இசையில் பயன்படுத்தப்பட்டன.
1750-க்குப் பின் உருவான பியானோ இசை சிம்பொனியில் நெறிமுறைக்குட்பட்ட பிரிவுகளில் வெளிப்பட்டது. செவ்வியல் செல்வாக்குப் பெற்ற காலத்தில் முன்னர் குறிப்பிட்ட சமூக வரலாற்றுப் பின்னணியில் அன்றைய சமூக இசைத் தொழில் நுட்பங்களை அகப்படுத்தி, மனித மன உணர்வுகளைப் பிரதிபலித்த சிம்பொனி இசை வடிவம் செல்வாக்குப் பெற்றது. பிரபுக்கள். அரசர்கள் ஆதரவு என்ற நிலையிலிருந்து, பிரெஞ்சப் புரட்சியால் வலிமை பெற்ற நடுத்தர பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதரவு இசைக்குக் கிட்டியது. முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் கட்டத்தில் மக்கள் நுகரும் சந்தைப்பொருள் (commodity) நிலையை இசை அடையும் காலம் அப்போது நெருங்கியது என்று கூறலாம்.
செவ்வியல் காலம் முடிந்து, 19 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் (Romantic) காலம் தொடங்கியது. இசைச் சந்தை அறிமுகம் ஆனது. இதனால் வியாபார இசை நாடகம் (Commercial opera) வளர ஆரம்பித்தது. அரசர்கள் மற்றும் பிரபுக்களைச் சார்ந்து பின் பூர்ஷ்வா- நடுத்தர வர்க்தைச் சார்ந்து வளர்ந்த இசை, காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் தகுதியுள்ள மக்களைச் சார்ந்து வளர ஆரம்பித்தது. இசைக் கல்வி பரவலானது. பாரம்பரிய வடிவங்களும், நெறிமுறைகளும் தமது முக்கியத்துவத்தை இழந்து, புதிய பரிசோதனைகளுக்கு உள்ளாயின. தனிமனிதன் தொடர்பான இயற்கை தொடர்பான அதீதக் கற்பனைகள் கலை இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்றன. சிம்பொனி இசையிலும் இந்த மாற்றம் பிரதிபலித்தது.
தனிமனித வெளிப்பாட்டு உணர்வுகள் தூண்டப்பட்டதால் வழக்கத்திற்கு மாறான (unusual) அதீத கற்பனைகளை உந்தியது. தனிச்சுர இசை இயக்கத்தன்மையில் புதிய இசை வண்ணங்களைப் பெற்று வளர்ந்தது. சிறந்த, புதிய கூட்டிசை உருவானது. தனியாக கருவியிசை (Solo) ஒலிப்பதும் சிறப்பு இடம் பெற்றது. கருவிகளில் இசையெழுப்புவதிலும் புதுமை ஏற்பட்டது.
செவ்வியல் கால சிம்பொனி இசை வளர்ச்சியில் மொசார்ட் பங்காற்றியது போல், சிம்பொனி இசையை கற்பனைக் காலக்கட்டத்தில் லுட்விக் வான் பீத்தோவன் வளர்த்தெடுத்தார். புதிய சமூகச்சூழலுக்கு ஏற்ற மன தைரியத்தை இவர் கொண்டிருந்ததால், மனித உரிமைகள் பற்றிய புதிய கருத்துக்களை, கலைஞரின் உயர்ந்த நிலை தொடர்பான புரட்சிகர சிந்தனையும் இவருக்கு இருந்தன. கடவுளை இவர் தனக்குச் சமமாக நினைத்ததாக இவரைப் பற்றிய ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
ஆரம்பத்தில் மொசார்ட்டைப் பின் பற்றி இசையமைத்த இவர் பின்னர் தனக்கென புதிய சமூகச் சூழலுக்கு ஏற்ற புதிய பாணியை உருவாக்கினார். கூட்டிசை வேறுபாட்டிற்கும் (Harmonic contrast) ஆழமான உணர்வை வெளிப்படுத்தவும் கூர்மையான பகைச்சுர ஒலிகளை (Sharper dissonances) இவர் பயன்படுத்தினார். பண்பு மாற்றத்தில் (modulation) புதுமையான நுட்பங்களை உருவாக்கினார். மினுவட்டின் (Minuet) பழைய வடிவத்தை நீக்கிப் புதுமையைப் புகுத்தினார். தாள இசையிலும் இவர் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். சிம்பொனி இசைக்கான இசைக் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
பீத்தோவன் உருவாக்கிய சிம்பொனி இசை வடிவத்தில் 4 வெவ்வேறான இசையோட்டங்கள் (Movements) இருந்தன. இதில் முதலாவது இசையோட்டம் சொனாடா (Sonata) என்னும் இசைவகையில் அமைந்தது; இரண்டாவது இசையோட்டம், வேகம் குறைவான இசையோட்டம் உடையதாக இருந்தது. இதற்கான இசை வடிவம் இசையமைப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சொனாடாவகையிலோ அல்லது வேறு வகையிலோ இருக்கும்.
மூன்றாவது இசையோட்டத்திற்கான இசை வடிவம் மினுவட் (Minuet) என்ற இசை வடிவத்தில் அமைந்து இருந்தது; நான்காவது இசையோட்டம் பெரும்பாலும் ரோண்டோ (Rondo) என்ற இசை வடிவில் வேகமாக ஒலிக்குமாறு இருந்தது. இந்த சிம்பொனி இசையில் தொடு இசை (key board), நரம்பிசை, குழலிசை, தாள இசை உள்ளிட்ட இசைக்கருவிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிம்பொனி இசை முழுவதும் எல்லா நேரத்திலும் எல்லா இசைக் கருவிகளும் ஒலிப்பதில்லை. மாறாக ஒரு சில கால இடைவெளிகளில் ஒரு சில இசைக்கருவிகளும், வெவ்வேறு சிலகால இடைவெளிகளில் அதிக எண்ணிக்கையுள்ள இசைக் கருவிகளும் ஒலிக்கும். ஒரு சிம்பொனி இசையில் இசையோட்டமானது ஒரே சீராக இல்லாமல், மெதுவாகவும், வேகமாகவும் மாறி வருவது மற்றொரு முக்கிய அம்சமாகும். ஒரே நேரத்தில் நிறைய இசைக்கருவிகள் ஒலிப்பதன் காரணமாக ஏற்படும் தொகுவிளைவு புதுமையான இசை இன்பத்தை அளிக்கும். அதேபோல் ஒரு சிம்பொனி இசையில் வெவ்வேறான இசையோட்டங்கள். அந்த இசையோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் இசை இன்பத்தில் புதிய அனுபவத்தைத் தரும்.
பலவகையான மனித உணர்வுகளை வெளிப்படுத்த இந்த இசைவடிவில் அதிக வாய்ப்பு இருந்தது. எனவே இது செல்வாக்கு பெற்றதில் வியப்பில்லை. மேலும் இந்த சிம்பொனி இசை வடிவமானது. கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுக்கக் துணை போனது. இத்தகைய முயற்சியில் உருவானதே சிம்பொனிக் கவிதை (Symphonic poem) ஆகும்.
இதனை முதன் முதலில் உருவாக்கியவர் பிரான்ஸ் நாட்டு பியானோ இசைக் கலைஞர் பிரான்ஸ் லிஸிட் (கி.பி. 1811 – 1886) ஆவார். நெப்போலியன் உருவாக்கிய அரசியல் தேசிய உணர்வால் (Political nationalism) ஆட்கொள்ளப்பட்ட இவர் மனிதனை அல்லது கருத்தை (idea) இசையின் மையக் கருத்தாகக் (musical theme) கொண்டு சிம்பொனிக் கவிதை என்ற புதிய இசை வடிவத்தை உருவாக்கினார்.
தேசிய உணர்வுகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்து தோன்றி வளர்தது சிம்பொனி இசை. இந்தக் காலகட்டத்தில் சேம்பர் இசை (Chamber Music), இசை நாடகம் (Opera), நையாண்டி இசை (Comic opera) போன்ற பல இசை வடிவங்களும் வளர்ந்தன. அமெரிக்காவில், ராக் (Rock), ஜாஸ் (Jazz), பாப் (Pop) போன்ற இசை வடிவங்கள் தோன்றி வளர்ந்தன.
தனி மனிதன், சமூகம், இயற்கை ஆகியவையே இசையின் ஊற்றுக் கண்களாகும். உழைக்கும் மக்கள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவர்கள் ஆவர். எனவே இசையின் ஊற்றுக் கண்களோடு நேரடித் தொடர்பு கொண்டவை நாட்டுப்புற இசையாகும். அழகியல் செறிவுமிக்க நாட்டுப்புற இசையானது செவ்விசை (Classical Music) உள்ளிட்ட மற்ற இசைகளின் அடிப்படையாக மட்டும் இல்லாமல், அவற்றில் ஏற்படும் புதிய இசை வகைகளின் தோற்றத்திற்கும். வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை புரிந்து வருவது ஐரோப்பிய இசை வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பொனி இசையின் தோற்றமும் வளர்ச்சியும் இதனை உறுதி செய்கிறது.
இதுதொடர்பான கூடுதலாக சில சான்றுகளை இங்கு பார்ப்போம். அங்கேரி தேசிய உணர்வினை வளர்த்த இசையறிஞர்கள் பெலா பார்டோக் (Bela Bartok கி.பி. 1881 – 1945) மற்றும் சொல்டான் கொடாலி (Zoltan Kodaly கி.பி 1882 1967) நாட்டுப்புற இசைகளைப் பெருமளவில் சேகரித்து அகப்படுத்தி, தமது இசையில் பயன்படுத்தியவர்கள் ஆவர். எனவே தேசிய உணர்வுகளின் வளர்ச்சிக்கு ஏற்ற இசை தொடர்ந்து அடித்தளமாக இருப்பது தெளிவாகிறது. பொதுவாகச் சமூகச் சூழலுடன் தொடர்புடைய இசையைப் பற்றிய ஆய்வில் நாட்டுப்புற இசையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எனவே இன்று தமிழ்நாட்டில் உள்ள சமூகத்தைப் புரிந்து கொள்ள, எந்தெந்த பிரிவு மக்களிடையே எந்தெந்த இசை வடிவங்கள் செல்வாக்குடன் உள்ளன என்பதும், அந்த இசை வடிவங்களில் உள்ள இசை அறிவும். உள்ளடக்கமும் என்னென்ன என்பதும். இவற்றின் வரலாற்றுப் பின்னணியும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேற்குறித்த சிம்பொனியின் சமூகச் சூழல் பற்றிய ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்:
“சோழர் வளர்த்த வேதக் கல்வி முதலிய கட்டுரைகள்”
வெளியீடு: ஆய்வு வட்டம், சென்னை.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லிக சாலை, சென்னை – 600 002.
தொ.பே 044 – 2841 2367
– புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000
நன்றி: https://www.vinavu.com/2016/07/28/history-of-symphony/