பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.
லெவியின் எழுத்துக்கள் நவீனத்துவம் சார்ந்தவை என்ற போதிலும் Holocaust Literature எனப்படும் பேரழிவு இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அடங்குகிறது. பேரழிவு இலக்கியம் என்பது என்ன? அது உருவாகக் காரணங்கள் யாவை? இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை அடியோடு அழிக்கும் திட்டத்திற்காக ஜெர்மனியின் பல பகுதிகளில் சாவு முகாம்களை அமைத்தார் ஹிட்லர். நான்கு மில்லியன் யூதர்கள் ஹிட்லரால் விஷவாயுக் கிடங்குகளில் கொல்லப்பட்டனர். லெவி ஒரு யூதர் என்பதாலும், நாஜி எதிர்ப்பு இயக்கத் தலைமறைவுக் குழுவின் அங்கத்தினர் என்பதாலும் கைது செய்யப்பட்டு Auschwitz என்ற பிரபல சாவு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஒரு இரசாயன விஞ்ஞானி என்ற காரணத்தினால் அவரது திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததால் நாஜிகள் அவரை விஷவாயுக் கிடங்கிற்கு அனுப்பவில்லை. ஹிட்லரின் சாவு முகாம்களில் உடல் வலு உள்ளவர்கள் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருக்கலாம். வயதானவர்கள், குழந்தைகள், வலுவற்றவர்கள் ஆகியோர் விஷவாயுவில் சாக வேண்டும். கடினமான வேலை செய்ய வேண்டும். பட்டையான கோடுபோட்ட அங்கிகளில் பேன்கள் வந்து விடும். இந்தப் பேன்களை ஒழிக்க மாதத்திற்கு ஒரு முறை கைதிகளிடமிருந்து இந்த அங்கிகள் பிடுங்கப்படும். இதனால் நிர்வாணப்படுத்தப்பட்ட 28000 பெண்களைப் பற்றி Borowski This Way For the Gas, Ladies and Gentlemen என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார் Holocaust Fiction எனும் பேரழிவு நாவல் 1933-1945 ஆகிய கால இடைவெளியில் ஐரோப்பாவுக்கு நிகழ்ந்த சீரழிவுகளைப் பதிவு செய்தது. குறிப்பாக இந்த நாவல்கள் ஹிட்லர் யூதர்களுக்கு ஏற்படுத்திய ஹிம்சைகளை மையப்படுத்துகின்றன.
இந்த நாவல்களின் அடியோட்டமாக இருக்கும் அம்சம் தத்துவ விசாரம். மனிதப் பேரழிவினை, பேரழிவு இயக்கம் கூடச் சரியான வகையில் நியாயம் கற்பித்து சித்தரித்து விட முடியாது என்று கூறுபவர்கள் உண்டு. இதில் சம்பந்தப்படும் வினோத, விபரீத மனிதச் செயல்களைப் படம் பிடிப்பதற்கு மொழியும், நாவல் வடிவமும் சக்தியற்றுப் போய்விடுகின்றன என்ற கருத்து சொல்லப்படுகிறது. இத்தகைய அசாத்தியமான சூழ்நிலைகளில்தான் லெவி தன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். Elie Wiesel என்ற விமரிசகரின் கூற்றுப்படி,”ஆஷ்விட்சில் இறந்தது வெறும் மனிதன் மட்டுமல்ல, மனிதனைப் பற்றிய கருத்தாக்கமும்” ஆகும். எனவேதான் ஜெர்மானிய தத்துவவாதியும் கலாச்சார விமர்சகருமான Theodor Adorno ஆஷ்விட்சுக்குப் பிறகு இலக்கியத்துக்கான சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டார். பேரழிவு இலக்கிய எழுத்தாளன் எதிர்நோக்கும் பிரச்சனை சிக்கலானது. தவிர்க்க இயலாதபடி அவன் மனிதன் குறித்த கருத்தாக்கத்தின் இறப்பினை எழுது வேண்டி வருவது அதனை நிலைநிறுத்த வேண்டிய காரணத்தால்.
ஹிட்லரின் சாவுமுகாம் அனுபவங்களை எழுதுவதும் அதற்கு சாட்சியமாக இருப்பதுமான பளுவான பொறுப்பினை லெவி ஏற்றுக்கொண்டார். சுயசரிதை நூல்களான If this is a man, The Truce ஆகியவற்றில் முதல்நபர் பார்வையில் சாவு முகாம் அனுபவங்களை எழுதியிருக்கிறார். 1945 ஆம் ஆண்டு ரஷ்யர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆஷ்விட்சிலிருந்து ஜெர்மானியர்கள் தங்களுடன் ஆரோக்கியமான கைதிகளை மட்டும் கூட்டிக் கொண்டு தப்பித்தனர். அச்சமயம் லெவிக்கு ஏற்பட்டிருந்த தொற்றும் காய்ச்சல் காரணமாக முகாமிலேயே விடப்பட்டார். லெவி விரும்பியிருந்தால் If this is a manநூலை இன்னும் கோரமாகவும், கொடூரமான வகையிலும் விவரித்திருக்கலாம். லெவி அப்படிச் செய்யவில்லை. இந்நூல், அவருடன் இருந்த சக கைதிகளின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் தொனியைக் கொண்டுருக்கிறது. தாங்கள் காப்பாற்றப்படாத காரணத்தால் குற்றம் சாட்டும் மில்லியன் ஆவிகள் இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நடமாடுகின்றன.
The Truce (1963) நூல் வெளிச்சம் நிரம்பியதாக இருக்கிறது. லெவி முகாமிலிருந்து தன் சொந்த நகரான பன்ழ்ண்ய் க்குத் திரும்பிச் செல்லும் பயணத்தை விவரிக்கிறது. இந்த நூலில் சற்றே தயங்கிய நம்பிக்கை தலை தூக்குகிறது. வருடக்கணக்காக வெளி உலகத்தையே பார்த்திராதவனுக்கு திடீரென்று வாழ்வின் அபரிதமான காட்சிகள் கிடைக்கும் அனுபவத்தை லெவி வாசகனும் உணரும்படி செய்திருக்கிறார். ஆஷ்விட்சில் லெவி ஒரு புதிய தர்மத்தைக் கற்றுக் கொள்கிறார். மற்றவர்களின் தவறுகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்வது தான் அது. எனவே The Truce நூலில் நல்ல திருடர்கள் மோசமான திருடர்கள், நிஜமான பலசாலி மற்றும் குண்டு மிரட்டல் மிரட்டும் பேடி ஆகியவர்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துகிறார். வீடு, திரும்பும் பயணத்தில் அவருடன் கூட வருபவர்கள் வினோதமானவர்கள். இருபது வயதான Cesare ரோமனியச் சேரியிலிருந்து வருகிறான். ஊசியின் வழியாகத் தண்ணீரைச் செலுத்தி மீன்களைப் பருக்க வைத்து ரஷ்யர்களை ஏமாற்றுகிறான். Cesare வைப் பொறுத்த வரை சிக்கிவிடாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பது ஒரு கலை. கெட்டவார்த்தைகளின் மறு உருவமாக வருபவர் வெரோனாவைச் சேர்ந்த எழுபது வயதுக் கிழவர். அவர் பெயர் Avesani. சகல மனிதர்களின் மீதும், சகல பொருள்களின் மீதும், தன் மீதும், ஒவ்வொரு நாளின் மீதும், இரவின் மீதும் புத்திகெட்டத்தனமான கோபம் கொண்டவர் அவர். அவருடைய செங்கல் அறுக்கும் தொழில் மீது கூட அவருக்குக் கோபம்தான். யந்திரத்தனமாக அல்லாமல் இடைவிடாது கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். ஒரு வித முறைமையும், அக்கறையும் அவரது திட்டுதலில் இருக்கும். மிகச் சரியான வார்த்தைக்காகத் தன்னை நிதானித்து, பிறகு திருத்திக் கொள்வார். அவர் விரும்பித் தேடும் வார்த்தை கிடைக்காமல் போனால் அதற்கும் திட்டுவார். இந்த”வசவுபாடும் அவேசானியின் வயோதிகப் பைத்தியக்காரத்தனத்திலும் லெவியால் ஒரு உன்னதத்தைப் பார்க்க முடிகிறது. நாடகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு Dusk என்ற புனைப்பெயருடன் ஜெயிலுக்கும் நாடக மேடைக்கும் இடையே அலைந்து திரிந்து வருகிறான் மற்றொரு பாத்திரம். முகாமில் மாட்டிக் கொண்ட பிறகும் அவனுக்கு நாடக மேடை எது நிஜவாழ்க்கையை எது எனப் பிரித்தறிவதில் சிரமம் இருக்கிறது.
If not now When (1982)என்ற நாவலின் தலைப்பு இரண்டாம் உலகப் போர்க்காலத்திய எதிர்ப்பு இயக்கப்பாடல் வரி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். முந்தைய இரண்டு நூல்களைப் போன்றே இதுவும் வலுவான தகவல்களின் அடிப்படையில் அமைந் திருக்கிறது. ஹிட்லருக்கு எதிரான கிழக்கு ஐரோப்பிய யூத எதிர்ப்புக் குழுவினரின் அனுபவங்களை இந்த நாவல் மறுகட்டுமானம் செய்கிறது. இந்தக் குழுவினரின் வரலாற்றுப் பின்னணிக்கு வேண்டிய அளவு தகவல் அளிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் வெறும் ஆவணங்களில் உலவும் பெயர்களுக்கு ரத்தமும் சதையும் அளித்திருப்பது லெவியின் எழுத்து மேதைமை.
போர் மற்றும் சாவு முகாம்கள் தொடர்பான இந்த நூல்களில் ஒருவித வலியின் தீவிரம் உணரத்தக்கதாய் இருக்கிறது. சில விவரணைகள் பீதியூட்டுவனவாகவும் மனதைக் கலங்கச் செய்யக் கூடியதாகவும் உள்ளன. ஆனால் இவற்றில் சுயசரிதைத் தன்மைகளையும், நாவலின் அம்சங்களையும் வேறுபடுத்த முடியாத அளவுக்கு லெவி கலந்திருக்கிறார். சில விமரிசகர்கள் இந்தக் கலப்பினை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். மனித தன்மையற்ற போர்கால அனுபவங் களைக் கவனத்தில் பதித்து வைத்து பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் நினைவுபடுத்தி இந்த நூல்களில் பதிவு செய்ததன் மூலம், லெவி வரலாற்றின் சாட்சியக்காரர்களில் ஒருவராக ஆகிறார். மேலும் இந்த அனுபவங்களை எழுதாமல் இருக்க முடியவில்லை-அவற்றை எழுத வேண்டிய கட்டாய உணர்வு தனக்குள் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சுயசரிதைக் குறிப்புகளை எழுதியபோது அந்த அனுபவத்தின் மூலம் அவருக்குப் பொருந்தக்கூடிய நாவல் வடிவத்தையும் கதை சொல்லும் முறையையும் கண்டுபிடித்துக் கொண்டார்.
லெவியின் நூல்களில் தனிப்பட்ட கவன ஈர்ப்பினைப் பெற்றது அவருடைய The Periodic Table (1975). இந்த நூல் அவரது நூல்களிலேயே மிகவும் அந்தரங்கமானது என்று கூறாலாம். நாவலுக்கான மூலப்பொருள் லெவியின் சுயசரிதை என்ற போதிலும், கதை சொல்பவர் லெவியாக இருப்பினும், புத்தகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் கவித்துவமானதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தினால் பிற நினைவுக்குறிப்பு நூல்களிலிருந்தும் அவற்றின் சம்பிரதாய வெளிப்பாட்டு முறைகளிலிருந்தும் The Periodic Table பெரிதும் வேறுபடுகிறது. நாவலின் நிகழ்ச்சிகள் பரந்து பட்ட அளவில் கால ஒழுங்கினை அனுசரிக்கின்றன. பிரதான விவரணையை மூன்று கனவுத் தன்மையான (Fantasy) விவரிப்புகள் அல்லது கதைகள் குறுக்கிடுகின்றன.
நாவல் 21 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு தனிமத்தின் (element)பெயர் தரப்பட்டுள்ளது. Argon என்ற தனிமம் முதல் அத்தியாய மாகவும், Carbonஎன்ற தனிமம் முடிவு அத்தியாயமாகவும் அமைந்திருக்கிறது. நாவல் முக்கியப்படுத்தும் காலம் 1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட வருடங்கள். இருப்பினும் முதல் அத்தியாயம் மிகவும் பின்னோக்கி வந்து லெவியின் 19நூற்றாண்டு முன்னோர்களைப் பற்றிக் கூறுகிறது. முன்னோக்கிச் சென்று 1970களின் நவீனத்துவத்தையும் தொடுகிறது. Argon எனும் வாயு, ரசாயன மாறுதலுக்கு உட்படாத, தன்பாட்டுக்கு இருக்கக் கூடிய தனிமம். வேறு எந்தத் தனிமத்துடனும் ரசாயனச் சேர்க்கைக்கு உட்படாதது. இறந்து போன தன் முன்னோர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் லெவி நினைவு கூர்கிறார். ஒரே நேரத்தில் இந்த அத்தியாயம் யூதக் கலாச்சாரத்திற்கு ஒரு முகவுரையாகவும், வழக்கில் இருக்கும் பல எபிரேயச் சொற்களுக்கான அர்த்த விளக்கம் கொண்ட அகராதியாகவும் அமைந்துள்ளது.
ஒரு உன்னதமான நாவலை உன்னதமற்ற காரணங்களுக்காகவும் படிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக Zinc (துத்தநாகம்) அத்தியாயத்தில் வருகிறாள் ரீட்டா என்ற பெண் பாத்திரம். லெவியின் வகுப்பிலேயே ரசாயனம் படிக்கும் அவளும் Thomas Mann இன் Magic Mountain நாவலை வைத்திருக்கிறாள். ஆனால் அந்த நாவலின் தத்துவார்த்த மனிதத் தேடல்கள், வாழ்வு பற்றிய விசாரங்கள் அடங்கிய விவாதப் பகுதியைப் படிக்காமல் அதில் வரும் பாத்திரங்கள் இருவரின் காதல் எவ்வளவு தூரம் போகிறது என்பதில் கவனம் செலுத்துகிறாள். துத்தநாகம் என்னும் தனிமம் கவர்ச்சியற்ற சாம்பல் நிறம் கொண்டது. அதன் உப்புகள் நிறமற்றவை. அது சலிப்பூட்டக்கூடிய உலோகம்.
Lead (காரீயம்), Mercury (பாதரசம்), Titanium(டைட்டானியம்) ஆகிய மூன்று அத்தியாயங்கள் தம்மளவில் நிறைவுபெற்ற Fantasy களாக, பிரதான நாவலின் ஓட்டத்தில் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகள் சாய்வான எழுத்துக்களில் அச்சிடப்பட்டிரு ப்பது விவரணைப் பகுதியில் அவற்றைப் பிரித்துக் காண உதவுகிறது. Sulphur (கந்தகம்), என்ற சிறிய அத்தியாயத்தில் வரும் கஹய்க்ஷ்ஹ என்ற பாத்திரத்திற்கு லெவி, கவனத்தை ஈர்க்கும் அளவு உயிரோட்டம் தந்திருக்கிறார். கந்தகச் சூளையில் இரவு ஷிப்ட் வேலை செய்யும் Lanza எல்லா இயந்திரங்களையும் இயக்கிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கும் நேரம் கந்தகச் சூளை வெடித்து விடும் என்ற அபாய அறிவிப்பை மீட்டர்கள் காட்டுகின்றன. தொழிற்சாலையில் வேறு எவருமே இல்லை. உதவிக்குத் தீயணைப்பவர்களைக் கூப்பிடுமுன் கந்தகம் வெடித்துத் தெறித்து விடும். Lanzaவும் உயிரோடு இருக்க மாட்டான். பேராபத்து நேரத்தில் சில சமயம் கிடைத்துவிடும் மனத் தெளிவினை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்து, சூளை வெடிப்பதை தவிர்த்து விடுகிறான். காலையில் தன் ஷிப்ட் முடிந்து கிளம்பும் போது தனது சாகசத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவன் சொல்வதில்லை.
நாவலில் சற்றே இளைப்பாருதல் தருகிறது Nitrogen அத்தியாயம். மேலும் லெவியின் நகைச்சுவை உணர்வும் இதில் வெளிப்படுகிறது. லிப்ஸ்டிக் தயாரிக்க அவசியமான Alloxan எனும் ரசாயனப்பொருள் நைட்ரஜன் குடும்பத்தைச் சேர்ந்தது. மனிதனைப் பொருத்தவரை நைட்ரஜனை Uric அமிலமாக மூத்திரத்தில் வெளியேற்றுகிறான். Uricஅமிலத்தை ரசாயன முறையில் உடைப்பதன் மூலம் Alloxan ஐ அடையலாம். ஆனால் அது அவ்வளவு எளிய காரியமல்ல. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நைட்ரஜன் காற்றின் வழியாக வந்து சேர்கிறது. விலங்குகளையும் தாவரங்களையும் உண்ணுவதால் மனிதனின் உடலில் சேர்கிறது. மூத்திரத்தில் யூரிக் அமிலமாக வெளியேற்றப்படுகிறது. Alloxan ஐ மனித மூத்திரத்திலிருந்து பிரித்தெடுப்பது கடினம். மனிதனைப் போல கழிவு சுத்தம் செய்யும் காரியத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியாத பறவைகளும் பாம்புகளும் யூரிக் அமிலத்தை திண்மையான பொருளாக எச்சத்தில் வெளியேற்றுகின்றன. பெண்களின் உதடுகளை அழகாக்கக் கூடிய லிப்ஸ்டிக்கின் ஒட்டும் பொருள் மலைப்பாம்புகள் மற்றும் கோழிகளின் எச்சத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்கிற தகவல் சிரிப்பூட்டுவதாக இருக்கிறது. அசிங்கத்திலிருந்து அழகு-இதுதான் நைட்ரஜன் சொல்லித்தரும் பாடம். கடைசி அத்தியாயமாக Carbon வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கார்பனின் ஒற்றை அணுவினைப் பற்றிய தியானமாக, கவிதையாக அமைந்து நாவலுக்கு அழுத்தமான முடிவினைத் தருகிறது.
The Wrench (1978)நாவல் ஒரு கப்பல் தளவாட கட்டுமான என்ஜினீயரைப் பற்றியது. அவன் பெயர் Faussone. அவன் மூலமாகத்தான் கதை சொல்லப்படுகிறது. கதையைக் கேட்பவர் லெவி/ வாசகனாக இருக்கலாம். உலகத்தின் அனைத்துத் துறைமுகங்களையும் Faussoneபார்த்திருக்கிறான். அவற்றில் வேலை செய்திருக்கிறான். வேறுபட்ட பிரதேசங்களையும், மனிதர்களையும் மொழிகளையும் அறிந்தவன். எனவே Faussone ஐப் பொருத்தவரை பிறந்த இடத்திலேயே இருந்து விடுவதென்பது”இரும்பில் ஆன முலைக்காம்பினை உறுஞ்சுவது போன்றது” (The Wrench)ஆகும். கதையின் விவரணை Faussone இன் பேச்சு நடையை ஒட்டி எழுதப் பட்டிருப்பதால் வாசகன் விவரணைக் குரலுடன் நெருங்கி அனுபவம் கொள்ள முடிகிறது. அவனது கோர்வையற்ற கதை சொல்லலை, Faussone இடைவெட்ட அனுமதிப்பதில்லை. சில தெளிவுபடுத்தும் கேள்விகளை மாத்திரம் அனுமதிக்கிறான். கதையைக் கேட்கும் லெவிக்கு நீண்ட தனிமொழியை (Monologue) கேட்பது போல இருக்கிறது. அவன் ஒரு எழுத்தாளனோ அல்லது சிந்தைனயாளனோ இல்லை என்றாலும் Faussone க்கு தனது தனிமனித அருகதையைப் பற்றிய அடிப்படையான கேள்வியும் சந்தேகமும் வந்து விடுகிறது. இத்தகைய கேள்விகள் எழுத்தாளனுக்கு வருவது உண்டா என்று அவன் லெவியைக் கேட்கிறான். வேலை செய்யும் முறையிலும் அதன் சிரமங்களிலும் எழுத்தாளனையும் தொழில்நுட்பனையும் ஒப்புமைப்படுத்த இயலாது என்கிறார் லெவி. தொழில்நுட்பன் செய்யும் பிசகுகள் உடனடியாகவே அவனையும் அவனைச் சுற்றி உள்ளவர்களையும் விபத்து வடிவில் பாதிக்கும். எழுத்தாளனின் பிசகுகளை காகிதம் பொறுத்துக் கொள்ளும். ஆயினும் முடிவுப்பொருள் வாசகனிடம் சேரும்பொழுது வாசகன் மன்னிக்கமாட்டான். Faussone விவரிக்கும் அவனது இந்திய அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை விட நன்றாகவும் தெளிவாகவும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள், ஐரோப்பியர்கள் அளவுக்கே புத்திசாலிகள், இந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என்கிறான் Faussone.
லெவியின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் The Moments of Reprieve (1981) என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளில் பெரும்பாலானவை ஆஷ்விட்சின் அனுபவங்களை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் ஒரு வித இறுக்கமும், சோகமும் சாம்பல் வெளிர்தன்மையும் கொண்டிருக்கின்றன. லெவியின் கதை சொல்லும் திறனால் மிக ஈர்ப்புடையதாய் ஆகின்றன. ஆஷ்விட்ஸ் சாவு முகாமில் சந்தித்த தினுசான கைதிகள், வார்டர்கள் இதில் நுணுக்கமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். The Gypsy, The Cantor and the Barracks Chief, The Juggler ஆகிய கதைகள் குறிப்பிடப்படப்பட வேண்டியவை. Story of a Coin என்ற தலைப்பிலானது கதை மீறும் கதை (Metafiction) வகையைச் சேர்ந்தது.
The Sixth Day an Other Tales என்ற சிறுகதைத் தொகுப்பு 1920ஆம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டது. Stories Naturalis என்ற இதாலிய தலைப்பில் 1966லிருந்து 1977வரை எழுதப்பட்டவை. இதில் இடம்பெறும் கதைகள் Futuristic ஆனவை. 21ஆம் நூற்றாண்டு அனுபவங்களை முன் கூறுகின்றன. அறிவியல் பின்னணியும், லெவியின் ஆணித்தரமான தொழில்நுட்பத் தகவல்களும் கதைகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுகின்றன. வாசகன் ஏமாற்றப் படுவதில்லை. இந்தக் கதைகளை மாத்திரம் லெவி Damiano Malabailaஎன்ற புனைப்பெயரில் வெளியிட்டார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இன்று கம்ப்யூட்டர் உலகில் Virtual Realityஎன்று அழைக்கப்படும் விஷயத்தை அடிப்படையாக வைத்து 1970களிலேயே லெவி The Retirement Fund என்ற சிறுகதையை எழுதிவிட்டார். இக்கதைகளில் தெரிவது லெவியின் மறுபக்கம்.
லெவியின் கவிதைகளை Major Poetry என்று சொல்ல முடியாவிட்டாலும், இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கவிதையில் முக்கிய இடத்தைப் பெறத் தகுதி வாய்ந்தவை. சிறுகதையிலும், நாவலிலும் எழுதித் தெரிவித்துவிட இயலாது என லெவி நம்பிய உணர்வுகளும் உருவகங்களும் கவிதையாக வெளிப்பாடு காண்கின்றன. லெவி உயிருடன் இருந்தபோதே Shema என்ற கவிதைத் தொகுதி வெளி வந்தது. 1988இல் லெவியின் தொகுக்கப்பட்ட கவிதைகளை Faber&Faber என்ற வெளியீட்டு நிறுவனம் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டது. லெவியின் கவிதைகள் மிகவும் நுட்பமானவையாக வாசகனுக்குத் தெரிந்தாலும் தனக்குக் கவிதைத் தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாது என்று கூறியிருக்கிறார் லெவி. அவர் கவிதைகளை அவரது தர்க்கரீதியான நனவு மனம், விநோதம் எனக் கருதியிருப்பதாக எழுதுகிறார். எல்லாக் கவிதைகளும் முதல்நபர் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. தாவரங்கள் (கள்ளிச்செடி), பிராணிகள் (நத்தை), பறவைகள் (கடல் காக்கை), அசேதனப் பொருட்கள்(உடைந்து போன படகு) ஆகியவை இவற்றில் பிரதான சித்தரிப்பு பெறுவது மட்டுமின்றி, டப்ண்ய்ஹ் போன்ற வரலாற்று நாயகர்களும் இடம் பெறுகின்றனர். மனிதனின் பிடிவாதமான நம்பிக்கை, மனிதப் பொறுமை, வைராக்கியம் போன்ற தன்மைகள் இக்கவிதைகளின் ஊடாகச் சித்தரிக்கப்படுகின்றன. வெறும் புகைப்படத்தனமான பதிவாக்கல் முறையிலிருந்து வேறுபட்டு ஸ்தூலப் பொருட்களும் பிராணிகளும் மனிதத்துவம் பெறுகின்றன. ரொமாண்டிக் தன்மையை முற்றிலும் தவிர்த்து சற்றே உறுத்தக் கூடிய வகையில் கவிப் பொருளை பயன்படுத்தி இருக்கிறார். முத்துச் சிப்பி ((Pearl Oyster) (Collected Poems) பற்றிய கவிதையும் கள்ளிச் செடி (Agave)அதே நூல் பக். 59) பற்றிய கவிதையும் இதற்கான எடுத்துக்காட்டுகள்.
1989இல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த லெவியின் Other People’s Trades என்ற கட்டுரைத் தொகுதியை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இக்கட்டுரைகளின் வழியாக லெவி, இலக்கிய கலாச் சாரத்தையும், அறிவியல் கலாச்சாரத்தையும் இணைக்கிறார். பிறமனிதர்களின் தொழில்கள் என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கிறது. ரசாயன விஞ்ஞானியான லெவி பட்டாம் பூச்சிகளைப் பற்றி எழுதும் போது Lepidopterist எனும் பட்டாம் பூச்சிஆய்வானனின் எல்லைகளிலும், The Scribeஎன்ற கட்டுரையில் Word Processorபற்றிய தன் அனுபவங்களை எழுதும் போது கம்ப்யூட்டர் நிபுணர்களின் எல்லைகளிலும், The Skull and the Orchid இல், மனோவியல் பகுப்பாய்வாளனின் (Psychoanalyst) எல்லைகளிலும் பிரவேசம் செய்கிறார். இவை வெறும் அறிவியல்வாதி எழுதிய கட்டுரை இல்லை என்பதற்கு கட்டுரைகளை இடைவெட்டும் இலக்கிய மேற்கோள்கள் சான்றாகின்றன. பெரும்பாளான கட்டுரைகளில் பெயர்ச் சொற்களின் ஆதியாகமத்தை அடியொட்டிக் கண்டு பிடிப்பதால் மொழியியல் வல்லுனனின் (Philologist) எல்லைகளிலும் நுழைகிறார் லெவி. வானவியல் மனிதனின் பறத்தல் குறித்த ஆவல், கலைஞர்கள் ஏன் எழுதுகிறார்கள் போன்ற விஷயங்களும் இவற்றில் விவாதிக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் விஷய கனம் மிகுந்து காணப்படினும், லெவியின் மொழிநடை தெள்ளியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளன் பழக்கத்தின் காரணமாக எழுதும்போது எவ்வாறு அவன் தன்னைத் தானே பிரதி எடுத்து வீணாய்ப் போகிறான் என்பதைக் குறிப்பிடுகிறார். கடன் அடைப்பதற்காகப் பணம் பெற்று பால்ஸாக் எழுதியதை லெவி கண்டிக்கவில்லை. ஆனால் பணத்தை மட்டுமே குறியாக வைத்து எழுதுவது ஒரு எழுத்தாளனை நீர்த்துப் போகச் செய்யும் என்கிறார். எஸ்ரா பவுண்டின் (Ezra Pound) கவிதைகளின் புரியாத் தன்மையைக் கண்டிக்கிறார். Paul Celan (1920-1970)எனும் நவீன ஜெர்மானியக் கவிஞரின் புரியாதத்தன்மையையும் அலசுகிறார். காரணங்கள் ஏற்றுக் கோள்ளும்படி இருக்கின்றன. Aldous Huxleyஎன்ற நவீன ஆங்கில நாவலாசிரியரிடம் ஒரு இளைஞன் “எழுத்தாளன் ஆவது எப்படி” என்று கேட்டபோது, இரண்டு பூனைக் குட்டிகளை வாங்கி வந்து அவற்றின் இயக்கங்களை உற்று கவனித்து பிறகு விவரித்து எழுதச் சொன்னார். லெவியோ இலக்கியவாதிகள் Nature மற்றும் Scientific American போன்ற உயர்தர அறிவியல் சஞ்சிகைகளைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறார். இப்பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகளில் “ஒரு புதிய விதமான எழுத்து முறையின் கவிதைகள்” எழுத்தாளனுக்குக் கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதுதான் அவர் தரும் காரணம். The Irritable Chess Players என்ற கட்டுரையில் சதுரங்க ஆட்டக்காரனையும் கவிஞனையும் ஒப்புமைப்படுத்தி, இருவருமே பாதுகாப்பற்றவர்கள். ஒவ்வொரு நகர்வினையும் கவனமாக நகர்த்த வேண்டியவர்கள் என்கிறார். எல்லா இலக்கியவாதிகளும் இப்படிச் சிந்திக்க முடிகிறவர்களா என்பது சந்தேகம்தான்