– 22 மார்ச், 2012 – இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பிரேரணை நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக 24 நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கின்றன.
யார் எதற்கு ஓட்டுப்போட்டனர்
மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை பிரேரணைக்கு ஆதரவான, எதிரான மற்றும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் என பரவலான நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஆனால், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் வாக்களித்திருக்கிறது. சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகள் இலங்கையை ஆதரித்திருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை கியூபாவும் ஈக்குவடோரும் பிரேரணையை எதிர்க்க மற்ற நாடுகள் எல்லாமே பிரேரணைக்கு ஆதரவாகத்தான் நின்றுள்ளன.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ரஷ்யா மட்டும்தான் இலங்கைக்கு ஆதரவளித்திருக்கிறது. மற்றபடி, மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே போர்க்காலச் சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தெரிவித்திருக்கின்றன.
பொதுவாக முஸ்லிம் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால், அண்மையில் கடாபிக்குப் பின்னர் ஆட்சி மாறிய லிபியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாமே ஒன்றில் அமெரிக்கப் பிரேரணையை எதிர்த்திருக்கின்றன, அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிகொண்டிருக்கின்றன.
இவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கின்ற சவூதி,கட்டார் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளும் பிரேரணையை ஆதரிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை ஈர்க்கும் முயற்சியில் இலங்கை தனது பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.
பின்னணி
இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஐநா நிபுணர்குழு அவற்றை ஆராயும் விதத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது. அதற்கு இலங்கைத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
அதன் பின்னர் இலங்கை அரசு தானாகவே அமைத்துக்கொண்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பல விடயங்களை ஆராய்ந்து தனது அறிக்கையை சமர்பித்திருந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கையிடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் கவுன்சில் ஊடாக முன்வைத்திருக்கிறது.
தீர்மானம் கூறுவது என்ன?
இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டும் என அமெரிக்கா தீர்மானத்தில் சுட்டிக்காட்டுகின்றது.
இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்கு இருந்த கால அவகாசத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது அமெரிக்காவின் வாதம். இதற்காக கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா பல முயற்சிகளை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டுகின்றது.
ஆனால், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ‘முறையான அமுலாக்கத் திட்டம்’ இலங்கை அரசிடம் இல்லை என்ற அடிப்படையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்காத ‘போர்க்காலச் சம்பவங்களுக்கான போறுப்பேற்கும் தன்மை’ குறித்த விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலுமே, தாங்கள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேநேரம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ‘ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஆணையரின் அலுவலகத்துடன் இணைந்து’ பணியாற்றும்படியும் இந்தத் தீர்மானம் மூலம் அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.
சமத்துவம், சுயமரியாதை, நீதியை வழங்கக்கூடிய நிலையான அமைதியை இலங்கையில் ஏற்படுத்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம் என்றும் அமெரிக்க பிரதிநிதி ஜெனீவாவில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வாதம்’தவறான புரிதலுடன் கூடிய, அடிப்படையற்ற ஒரு தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு எங்கள் நாடு தள்ளப்பட்டுள்ளது. முக்கிய கோட்பாடுகளை பாதிக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய இந்த தீர்மானம் எங்கள் நாட்டை மட்டுமன்றி மற்ற நாடுகளையும் எதிர்காலத்தில் பாதிக்கும்’ என்று தீர்மானத்துக்கு எதிராக ஜெனீவாவில் பேசிய இலங்கைப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
மனித உரிமைகள் பேரவையை ஸ்தாபித்த ‘எல்லாருக்கும் பொதுவான, பக்கச்சார்பற்ற ,பாரபட்சமற்ற கோட்பாடுகளுக்கு’ எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதலாக இந்தத் தீர்மானத்தைக் கருதுவதாகவும் சர்வதேச மட்டத்திலான திட்டங்களைக் கொண்டுவர முன்னதாக உள்நாட்டுத் தீர்வுகளில்தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற சர்வதேச சட்ட நியமங்களுக்கும் இது முரணானது என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க வாதிட்டார்.
இதேவேளை, ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்துக்கு இலங்கை கட்டாயம் அடிபணிந்துதான் ஆகவேண்டும் என்ற சட்ட ரீதியான கட்டாய நிர்ப்பந்தங்கள் எதுவும் இங்கு ஏற்படுத்தப்பட வில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியம்: இந்தத் தீர்மானம் இலங்கையை வற்புறுத்தக்கூடிய ஒரு நிலையில் இல்லை என்பது தான் இதன் அர்த்தம்.
ஆனால், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுப்பப்படும் கவலைகளுக்கு மத்தியில், இலங்கைக்கும் அதன் சர்வதேச ராஜதந்திர காய் நகர்த்தல்களுக்கும் ஏற்பட்டுள்ள சறுக்கலாகவே இதனைப் பலரும் பார்க்கிறார்கள்.
நன்றி: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/03/120322_lankaun.shtml