புகலிட அன்னையே நீ வாழி! உன் குழந்தைகள் வாழ்க!

- ஜூலை 1, 2017 அன்று கனடாவுக்கு வயது 150. அதனையொட்டிய பதிவிது. -


– ஜூலை 1, 2017 அன்று கனடாவுக்கு வயது 150. அதனையொட்டிய பதிவிது. –


எம் தாய்நாடு இலங்கை.  இன்று எம் ‘குழந்தை நாடு’ கனடா. அதே சமயம் எம் புகலிட வளர்ப்புத்தாய் நாடும் கனடாவே. தாய் நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல் முரண்பாடுகளால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது புகலிடத்தாயாக எம்மை, எம்மைப்போல் இலட்சக்கணக்கில் எம்மின மற்றும் பல்லின மக்களை இரு கரம் நீட்டி, இருக்க இடம் கொடுத்து, எம் அனைவர்தம் வாழ்வைத் தொடர அனுமதித்த மண் இது. இந்தப் புகலிடத் தாய்க்கு இன்று வயது 150. பல்லின மக்களும் ஒன்றிணைந்து எவ்வித பகை முரண்பாடுகளுமற்று வாழும் மண் இது.


தமது நாடுகளில் முட்டி மோதிக்கொள்ளும் பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் இங்கு அடுத்தடுத்து நட்பு ரீதியிலான முரண்பாடுகளுடன வாழ முடிகின்றது. சிங்களவர்களும், தமிழர்களும் இது போல் ஏனைய பல நாடுகளில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் பல்லின மக்கள் யாவரும் இங்கு அமைதியாக வாழ முடிகின்றதென்றால் , சில இனங்களே வாழும் நாடுகளில் இவ்விதமேன் வாழ முடியாது? கனடாவிலிருந்து ஏனைய நாட்டு மக்கள் பாடங்கள் படிப்பதற்கு நிறையவே உள.


அண்மையில் உலகின் வலிமையான நாடான அமெரிக்காவின் அதிபர் சிறுபான்மை இனங்களுக்கெதிராக, குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கெதிராகச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது., மான்ரியலில் மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் இனவெறி பிடித்த ஒருவரால் படுகொலை செய்யப்பட்டபோது கனடா நாட்டு மக்கள் மற்றும் அரசியற் தலைவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக நின்றதை, குரல் கொடுத்ததை மறக்க முடியாது.


இன்று 150 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் கனடா அன்னை மற்றும் இவளது குழந்தைகள் அனைவரும் வாழ்வு வளமுடன், நலமுடன் திகழ்ந்திட, தொடர்ந்திட வாழ்த்துகின்றோம். அன்னையே நீ வாழி! உன் குழந்தைகள் வாழ்க!


கனடா நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து….


கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1][2][3] இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.


நினைவு விழா

பொதுவாக ஊடகங்களில் “கனடாவின் பிறந்த நாள்”[4] என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது[5].


நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி,[6] கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன[7]. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.