மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார். உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.
கலியுகமல்ல என்ற கவிதை போர்க்காலத்தின் கோர நிலையை படம்; பிடித்துக்காட்டும் கவிதையாகும். (பக்கம் 31) கோயில் திருவிழாக்களின்போது பல கடைகள் முளைத்துவிடும். பல்வேறுவிதமான விளையாட்டுப் பொருட்கள், தீன் பண்டங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். அத்தகையதொரு நிகழ்வினிலே விளையாட்டுத் துப்பாக்கி கேட்டு அழும் பிள்ளையின் அடம்பிடிப்பினால் தவித்து எதிர்காலம் பற்றி மிரட்சியுற்றிருக்கும் ஒரு தாயின் புலம்பலிவை.
எங்கள் தெருக்களில் தோளில் துவக்கும் கையில் டோச்சும் கொண்டு இரவு பகலாய் அலையும் மனிதர்களையும் நட்ட நடு இரவில் அமைதியை அதிர்க்கும் வேட்டுச் சத்தங்களையும் வானிலிருந்து அதிர்ந்து விழும் நெருப்புத் துண்டங்களையும் வீட்டிற்குள் மூச்சுவிடவே பயந்து ஒதுங்கும் எம்மையும் கண்டுவிட்ட எம் குழந்தைகள் இப்போதெல்லாம் விளையாட்டுத் துவக்குகள் கேட்டு துளைத்தெடுப்பது அதிகமாகிவிட்டது. எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக் குறிகளில் என் பொழுதுகள் அமைதியின்றியே கழிகின்றன.
ஒரு குழந்தையின் மன உணர்வுகளாக எழுதப்பட்டிருக்கும் காற்றில் விடு என்ற கவிதை (பக்கம் 48) போலியான உலகம் பற்றியும், அதில் வாழும் ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றியும் விளக்குகிறது. அத்தகைய பேர்வழிகளை இனங்காண போலிகளை கற்றுத்தரச்சொல்லி கேட்டு நிற்கிறது குழந்தை. யதார்த்த உலகம் பற்றி சொல்லித் தரும்படியும், கற்பனை வர்ணனைகளை விட்டுத்தள்ளும் படியும் இறைஞ்சுகிறது அந்த மழலை மனம். அந்த வரிகள் பின்வருமாறு அமைகின்றது.
அம்மா எனக்குத் தொட்டில் வேண்டாம். தொட்டில் சட்டங்கள் என்னைக் குறுக்கிப் பார்க்கின்றன. … உன் விருப்பப்படி நறுக்கிவிடாதே என் சிறகுகளை. அன்பிருந்தால் உலகம் பற்றிச் சொல். போலி எது? பொய் எது? ஏமாற்றுவது எப்படி? கற்றுக் கொடு. நிஜங்களைக் காணவும் ஏமாறாதிருக்கவும்.
நாணலாய் நான் என்ற கவிதை (பக்கம் 63) காதலை உணர்த்துகிறது. உண்மையாக காதலிப்பவர்களின் இதயம் மென்மையாக இருக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய மனம் படைத்த தலைவனைப் பார்த்து கீழுள்ளவாறு கூறுகிறாள் தலைவி.
பூக்கள் பூக்கும் போது
பூக்களுக்கு வலிக்கும் என்றோ
தென்றல் வீசும் போது
எதிலாவது மோதி
நொந்து போகும் என்றோ
யாருமே கவலைப்பட்டதில்லை
உன்னைத்தவிர…
………………………….
எல்லாமும் முழுமையாய்
நான் எனும் நாணல்
இன்று
நீ எனும் விருட்சத்தினடியில்
உன் மார்ச் சூட்டில் நான் அடை கிடப்பேன் என்ற கவிதை காதல் ரசம் ததும்பியதாக காணப்படுகின்றது. (பக்கம் 79) பிரியத்தைப் போராடி புரிய வைக்கத் தேவையில்லை, மூச்சிரைத்து தழுவத் தேவையில்லை என அழகாக தொடங்கும் கவிதையின் இன்னும் சில வரிகள் இவ்வாறு அமைகின்றது.
பொருட்களாய் வாங்கி
வெறும் உயிரற்றவைகளை
என் முன் கிடத்துதலும் வேண்டாம்.
உன் இருப்புவிட்டு
என் காலடியே கதியென
வீழ்ந்திருக்கவும் வேண்டாம்.
அன்பே விடுதலையாய்
உனை நீ உணரும் பொழுதுகளில் மாத்திரம்
உன் மடியில் சிறிது எனை வளர்த்து..
தலை கோது.. விரல்கள் பிணை..
பின் கொஞ்சம் கண்ணயர்வேன் விடு.
டிசம்பர் 2004, 26ம் நாள் என்ற கவிதை (பக்கம் 93) சுனாமியின் தாக்கம் பற்றி இயம்பி நிற்கின்றது. சரித்திரத்தின் துயர் பக்கங்களை நிரப்பிப் போன சுனாமி மக்கள் மனதில் எத்தகைய துன்ப அலைகளை ஏற்படுத்தியது என்பது யாவருமறிந்ததே. நீலமாய், அழகாய் காட்சியளித்த கடல், திடீரென அரக்கனாய் மாறி மக்களைக் காவு கொண்டது. அதனால்
உன் இடம் விட்டு வானம் தொட
நீ முயல வானமே கடலாய் மாறியதோ?
உன் கடலில் மட்டுமல்ல
எங்கள் கண்கள் எங்கள் உள்ளங்கள்
எங்கள் கிணறுகளிலும்
இன்னமும் உப்புக் கரிக்கின்றது.. என்கிறார் கவிஞர்.
வாசகனைக் கட்டிப் போடுவதாய் அமையும் அகம் சார்ந்த கவிதைகள் பலவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளன. காத்திரமான கவிதைத் தொகுதியொன்றைத் தந்த நூலாசிரியர் மலராவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் – புதிய இலைகளால் ஆதல்
நூலின் வகை – கவிதைத் தொகுதி
நூலாசிரியர் – மலரா (புஷ்பலதா லோகநாதன்)
மின்னஞ்சல் – lpushpalatha@yahoo.com
விலை – 200 ரூபாய்
www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com
www.rimzavimarsanam.blogspot.com
www.bestqueen12.blogspot.com