‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…

எழுத்தாளர் தேவகாந்தன்வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?

 

எமது நேரடிப் பேச்சில் பலமுறையும் ‘வாசிப்புக்குப் போதுமான நேரம் இப்போது கிடைக்குதில்லையே’ என்று நான் வெளிப்படையாகச் சொல்லிவந்த என் ஆதங்கத்தினைக்கொண்டு இந்த முடிவிற்கு வந்தீர்களோ என என்னால் இப்போது ஓர் அனுமானத்தைக் கொள்ள முடிகிறது. இந்த இடத்தில் என் வாசிப்புப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். வாசிப்பு என்பது எனக்கு உணவுபோன்றதுதான், கிரிதரன். போன மாதம் முதலாம் திங்கள் கிழமை மதிய உணவாக என்ன கொண்டீர்கள் என யாராவது யாரையாவது கேட்டால், எப்படிப் பதிலிறுக்க முடியாது போகின்றதோ, அதுபோலத்தான் போன மாதம் நீங்கள் வாசித்த நாவலின், சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கத்தைக் கேட்டால் சிலவேளைகளில் – சிலவேளைகளில்தான் – என்னால் சொல்லமுடியாது போய்விடுகின்றது. ஏனெனில் அதன் இன்பமும் அதனால் விளையும் அனுபவமுமே என் குறிக்கோளகள்;;. வாசித்த நூல்கள் விடயத்திலேயே எனக்கு இந்தவிதமான இடர்ப்பாடு உண்டு.  மேலும், என் வாசிப்புக்கு உட்படும் இலக்கியப் பிரதியானது என்னைத் தன்னோடு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வல்லபம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிரதியின் இன்பம் என்பதை அணுஅணுவாக ரசிப்பவன் நான். நல்லது என்கிற மதிப்புரைகளுக்கு மேலாக, நண்பர்கள்மூலமான சிபார்சுகளுக்கு மேலாக ஒரு பிரதியின் அட்டைப்படத்திலிருந்து, அதன் அச்சாக்க முறை, அது எதுபற்றியது என்ற பதிப்பக பின்னோ-முன்னோவான அடையாள வரிகளிலிருந்தும், அப் படைப்பாளியின் முந்திய படைப்பின் தரத்திலிருந்தும் ஒரு நூலை நான் தேர்வுசெய்கிறேன். அவ்வாறு வாசிக்க நான் புகும் பிரதி தன் கருத்துச் சொல்லும் பாங்கால், மொழியால், நடையால், கட்டமைப்பால் என்னை ஈர்த்துச் செல்லவேண்டும். அல்லாவிடில் என் வாசிப்புப் பயணம் இடைநிற்பதைத் தவிர்கவே முடிவதில்லை என்னால். அது பிறகொருகால் தொடரலாம் அல்லது நின்றுபோக நேரலாம். எதுவும் உத்தரவாதமில்லை.
இன்னும் சொல்லப்போனால் வெகுஜன வாசிப்புத் தன்மையைக் கொண்டிருப்பதாக நினைக்கும் எந்த ஒரு நூலையும் அதன் உள்விடயங்கள் காத்திரமாக இருக்கலாமெனக் கருதினாலும் நான் சந்தேகத்தோடேயே அணுகுகிறேன். அது, நான் முன்னர் சொன்னதுபோல் என் கைப்பிடித்து நடத்திச் சென்றால், கூடச் செல்லவும் நான் என்றும் பிகு காட்டியது இல்லை. விடய காத்திரம்கொண்ட சில நூல்கள் கலைத்துவம் இல்லாத நிலையில் என்னால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இது என் இலக்கிய ரசனைசார் விடயம்.
மற்றும்படி எனக்கு இன்னொரு வகையான வாசிப்பும் இருக்கிறது. அது என் மனத்துள் தீவிர இலக்கிய தாகத்தை விதைத்த சிறுசஞ்சிகை சார்ந்த விடயங்கள். இவற்றையெல்லாம் ஒரு தேடலோடுதான் நான் வாசிப்புக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறேன். இவ்வகையான தேடல் இருந்தும் சிலபல படைப்புக்கள், கருத்துக்கள் எனக்கு அகப்படாது போகின்றன என்பதும் நிஜம்தான். ஆனால் கிடைக்கும் எந்த ஒரு என் தேடலிற்குட்பட்ட எழுத்தையும் அதன் தன்மையை அறிவதற்காகவேனும் நான் வாசித்தே வந்திருக்கிறேன். அதுபோல சிறுகதை, நாவல் என்ற மகுடங்களோடு வரும் பல ஈழத்து, புலம்பெயர்ந்த எழுத்துக்களையும் ஒரு கடப்பாட்டோடு என் வாசிப்பின் விருப்புத் தன்மைகள் இல்லாதவேளைகளிலும் நான் என் வாசிப்புக்கு உட்படுத்தத் தவறியதே இல்லை. தமிழகத்தில் அறுபதுகளில் கலைமகள், அமுதசுரபி, சரஸ்வதி, கணையாழிபோன்ற சஞ்சிகைகளில் வெளியான ஈழத்தவரின் எழுத்துக்களைக்கூட அவ்வாறான ஒரு மூர்த்தண்யத்தோடுதான் நான் வாசித்து வந்திருந்தேன். என் தேடலினதும், வாசிப்பினதும் புலம் அங்கிருந்து தொடங்குகிறது, கிரிதரன்.

அந்தத் தீவிரத்தினால்தான் தன் பிரதித்தனத்தால் என்னைக் கவராத எந்த எழுத்தையும் தூக்கிவீச நான் என்றும் தவறாமல் இருக்கிறேன். அதுபோல் ஆயிரம் மதிப்புரைகள் மோசம் என்று சொன்ன எழுத்தையும் என் சங்கப்பலகைபோன்ற வாசிப்புமனம் இடங்கொடுக்கச் சம்மதிப்பின் தூக்கிப்பேசவும் நான் தவறியதில்லை. என் விமர்சன மனத்தின் தன்மை இதுதான். இதற்குக் கீழே மேலே இல்லை.
இவ்வளவு வாசிப்பும் இவ்வெழுத்துக்கள் ஊடாகப் பிறந்த எந்தவொரு இலக்கியப் போக்கினையும் புரிந்துகொள்ள எனக்குப்போலவே எவருக்கும்தான் இடம் கொடுக்கும் என்பதே என் நிலைப்பாடு. எமக்கும் தொழிலார்த்தமான மதிப்புரையாளர்களதும், பட்டப்படிப்புக்கான ஆய்வாளர்களதும் எழுத்துத் தன்மையில் நிறைய வித்தியாசமிருக்கிறது, கிரிதரன். வாசிப்புச் செயற்பாட்டிலும் அதைக் காணமுடியும். இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் இன்னுமொன்றை நான் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். அவர்களின் பட்டியலிடும் வேலையில் கால்பங்கினைக்கூட எம்மால் செய்துவிட முடியாது. மேலும் ஆய்வொழுங்கு விவகாரத்திலும் அவர்களது ஒழுங்கில் நம்மால் செயற்பட முடியாதேதான் இருக்கிறது. அது, அவர்களாலும் ஒரேமாதிரியில்போலன்றி இன்னொரு மாதிரியில் செய்யமுடியாதிருக்கிறது என்பதன் இன்னொரு முகம். உதாரணங்கள் தரட்டுமா? என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது. அது தேவையில்லையென நினைக்கிறேன்.

இங்கிருந்து தொடங்குகிறபோது ஓர் உரைக்கட்டில் சிலவேளைகளில் பட்டியலும், உபரியான தரவுகளும் தகவல்களும் தவறிப்போக நிறையவே வாய்ப்பிருக்கிறது. எனது உரைக்கட்டிலுள்ள விடுபடல்களையும், போதாமையினது தன்மைகளையும் நான் இவ்வாறுதான் விளங்கிக்கொண்டது. தாயக இலக்கியத்தில் யோ.கர்ணன், நிலாந்தன் ஆகியோர் தவறியிருக்கிறார்கள். அது திட்டமிட்ட ஒதுக்குதலல்ல. இன்று பரவலாக இணைய தளங்களில் அவர்கள் இருவரும் பேசப்படினும், யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’ யென்ற அவரது முதல் தொகுப்பின்மூலம் பெரிய நம்பிக்கைக்குரியவராக எனக்கு அவர் தோன்றாத வரையிலும், அவரது இரண்டாம் தொகுப்பான ‘சேகுவேரா இருந்த வீடு’ தொகுப்பினை இன்றுவரை வாசிக்காத நிலையிலும், அவரது அதிர்ச்சி மதிப்பீடுகளதும் கலைத்துவ அம்சங்களதும் சேர்மான விகிதங்களைத்  துல்லியமாக மதிப்பிட முடியாததனாலேயே எனக்கு அவ்வாறு செய்ய நேர்ந்தது. இந்த விடுபடல்களையும் நானேதான் வெளிப்படுத்தினேன். என் உரைக்கட்டின் அந்த என் நேர்மையினையும் நீங்கள் என் வாசிப்பின் போதாமையாக நினைத்திருக்கிறீர்கள். போகட்டும்.

உங்கள் எதிர்வினையில் நான் தவறவிட்டதாக நீங்கள் சொன்ன சில விடயங்களில் குறிப்பாக மொழிபெயர்ப்பு இலக்கியம், இணையங்கள், பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவை தவறியதான தகவலினை நான் மறுக்கப்போவதில்லை. ஆனாலும் உரைக்கட்டின் விரிவஞ்சி பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற இரண்டாந்தர முக்கியத்துவமுடையனவற்றைத் தவிர்ப்பதாக என் உரைக்கட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேனே, கிரிதரன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா? அதையும் விட்டுவிடலாம். ஆனால் இங்கே நீங்கள் சொல்லாதுவிட்ட சில ஆகக்கூடிய முக்கியத்துவங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கனடாவைப் பொறுத்தவரை பத்திரிகைகளை நான் குறிப்பிட்டிருந்தால்  ‘வைகறை’யைத் தவிர்த்திருக்கவே முடியாது. அது அப்போது வெளிவந்துகொண்டிருந்த அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்தும் தன்மையால், போக்கால் வேறுபட்டிருந்தது. அது ஓர் எதிர்க்கதையாடலின் களமாக இருந்தது. ‘தாயக’த்தையும், ‘கால’த்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள். மறுப்பில்லை. அவை வரலாற்றுக்கு முக்கியமானவை. ஆனால் ‘தேட’லையும், ‘மற்ற’தையும், ‘அறிதுயி’லையும், ‘உரைவீச்’சையும், ‘அற்ற’த்தையும், ‘ழ’வையும் தவறவிட்டிருக்கிறீர்களே. ஆம், நான் இப்படித்தான் கருதிக்கொள்கிறேன். உங்களுக்கு தகவல்கள் தேவையாயிருக்கின்றன. எனக்கு தகமைகள் தேவையாயிருக்கின்றன. நீங்கள் ‘சிரித்திரன்’ பதிவு பெறாது போய்விடுமோ என ஆதங்கப்படுகிறீர்கள், நானோ ‘அலை’யும், ‘சம’ரும், ‘மூன்றாம் மனிதஷனும், ‘சரிநிக’ரும் தவறிவிடக்கூடாதேயெனக் கவலைப்படுகிறேன். ‘சிரித்திர’னும், ‘அலை’யும் எனக்கு ஒன்றல்ல என்பது முக்கியம்.

இன்னுமொன்று. ‘பனியும் பனையும்’ தொகுப்பிற்கு ஏறக்குறைய நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற பிரான்ஸ் நாட்டு அமைப்பிலிருந்து மூன்று கதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இக் கதைத் தொகுப்புகள்பற்றிய தகவல் உங்களுக்கு முக்கியமென்பதற்காக இதைச் சொன்னேன். மேலும் மித்ர பதிப்பகத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆனால் காத்திரமான நூல்களைப் பதிப்பித்துவரும் வடலியை விட்டுவிட்டீர்களே.

தொகுப்புகள்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனக்கு மறுப்பில்லை. ஆனால் தமிழகப் படைப்பாளிகளதும், தாயகப் படைப்பாளிகளதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளதும் ஆக்கங்களோடு வெளிவந்த அவற்றை எந்தவகைமைக்குள் போட்டு கணிக்கமுடியும் எம்மால்? சொல்லுங்கள், கிரிதரன்.  தொகுப்பினை வெளிக்கொண்டுவந்தவர்கள்; வாழும் நாடு மேலைநாடுகளாக இருப்பதைக்கொண்டு அவற்றைப் புலம்பெயர்ந்தோர் தொகுப்புகள் எனலாமா? ஏன், அவை அச்சடிக்கப்பெற்ற இடத்தைக்கொண்டு தமிழகத் தொகுப்புகள் என்றால் என்ன? எனக்கு அவசரமாக விடை தெரியவேண்டுமென்பதில்லை.

அத்தோடு நவீன, மரபு சார்ந்த நாடகங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்களே, அவற்றை இந்த இலக்கிய விசாரணையில் எங்கே, எப்படிப் பொருத்திக் காண்பது என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். தமிழ் கற்பிப்பதை இலக்கிய வகைமைக்குட் சேர்க்கலாமா என்பதும் எனக்குத் தெரிந்தாகவேண்டும்.

‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என வள்ளலார் சொன்னதுபோல், ‘அச்சில் வந்ததெல்லாம் இலக்கியம் என்ற எண்ணங்கள் மண்மூடிப் போக’ எனவே என்னால் நினைக்க முடிகிறது. நீங்கள் தொகையினை வைத்து புலம்பெயர்ந்த இலக்கியம் வளர்ந்திருக்கிறது என்கிறீர்கள். நானோ அச்சில் வந்தவற்றின் தகைமைகளை வைத்து அது வளரவேயில்லை என்கிறேன்.

இறுதியாக இன்னுமொன்றுபற்றி உங்களுக்கு எழுதவேண்டும். புகலிட இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பன பற்றியது அது. யோசித்துப் பார்க்கையில் இவையிரண்டும் வெவ்வேறான கருதுபொருள்களைக் கொண்டிருக்கின்றனவென்பது தெரியவே செய்கிறது. ஆனாலும் இந்தவகைக் கருதுபொருள் வேறுபாடின்றி இரண்டும் ஒருபொருள் குறித்த வெவ்வேறான சொற்களாகவே இதுவரை காலமும் பாவனையில் இருந்து வருகின்றன. ஒருபொருள் குறித்தனவாகவே இதுவரையான என் எழுத்துக்களில் நானும் இவற்றைப் பாவித்து வருகிறேன்.

2010இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் புலம்பெயரியம் என்ற ஒரு சொல்லை இக் கருதுகோளினை விளக்க தமிழவன் உபயோகித்திருக்கிறார். ‘தாயகம் கடந்த தமிழிலக்கியம்’ என்பதே கருத்தரங்கின் தலைப்பாகவும் இருந்திருக்கிறது. புலம்பெயரியத்தின் ஒரு பகுதியாகவே தாயகம் கடந்த தமிழிலக்கியத்தையும் கருதுகிறார் அவர். இதற்கு ஆதாரமாக சிகாகோ பல்கலைக்கழகத்திலிருந்து சென்றிருந்த சாசா எபெலிங் என்பவர் வாசித்த உரைக்கட்டின் கருத்தமைவையும் சுட்டிக்காட்டுகிறார். சாசா எபெலிங்கின் உரைக்கட்டு இவ்விடயத்தை சற்று விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிகிறது. புலம்பெயர் இலக்கியமென்பது எதுவென அதில் ஒரு கோட்பாட்டு விளக்கம் அளிக்கப்படுகிறதாய் தமிழவன் கருதுகிறார். குடியேறிய புலத்தினதும், குடிபெயர்ந்த புலத்தினதும் கலாசாரங்கள் இணையும் கணத்தினது உட்பொருளாகக் கூடியது இந்த புலம்பெயர் இலக்கியம் என்பது சாசாவினது கருத்து.
இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய கருத்தாக்கமே புலம்பெயர் விடயமென்பது விளங்குகிறது. புகலிடத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியமென்ற சொல்லாக்கங்கள் இக்கருதுகோள்களினை விளக்கப் போதுமானவையென நாம் அறுதியாகச் சென்று அடையும்வரை காத்திருக்கவே வேண்டும். அதாவது சொற்களுக்கான காத்திருப்பே இது. மற்றும்படி கருதுகோள்கள் உருவாகிவிட்டன. அதனால்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் இரண்டு பகுதிகளாகக் கூடியதான அவதானிப்பை புலம்பெயர்ந்த ஆங்கில இலக்கியப் பகுப்புகளினையொட்டி நான் என் உரைக்கட்டில் எழுதியது.
இவ்வாறான தெளிவான சொல் வரையறை ஏற்படுகிறபட்சத்தில் ஈழத்தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாக புகலிடத் தமிழிலக்கியமே இருத்தல் முடியும், புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியம் அல்ல என்பதாக என் உரைக்கட்டின் அர்த்தமும் மாற்றம் பெற்றுவிடும்.
புகலிட  (உயிருக்கு அபயமாகக் கொண்ட இடத்தினது) வதிவு என்பதை அரசியல் தஞ்சம் கேட்டு வந்தவர்களினதாகக் கொண்டால், புலம்பெயர்ந்தோர் வதிவு என்பதை குடியேறிகளது வதிவாகக் கொள்ளமுடியும். இதை ஏறக்குறைய எக்ஸைல் (நுஒடைந) என்ற அந்தஸ்துக்கும், மிக்கிறன்ற் (ஆபைசயவெ) என்ற அந்தஸ்துக்கும் இணையானதாகக் கொள்வதில் தவறிருக்காது எனவே நினைக்கிறேன். இதனால் உங்கள் சொற்தேர்வில் என்னால் உடன்பட முடிகிறது.

முதலில் குறிப்பிடப்பட்டவர்கள் முந்தி வந்தவர்களாகவும் இருக்கிற வகையில், ஐரோப்பிய வடஅமெரிக்க வாழ் இலங்கைத் தமிழரிடையே எழுந்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியமாகக் கொள்ளலாம். பின்னால் வந்தவர்கள் விருப்பக் குடியேறிகளாவர். அவர்கள் காலத்தில் வரும் படைப்புகளே புலம்பெயர்ந்தோர் இலக்கியம்.

இன்னுமொன்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது தனியே இலங்கைத் தமிழருடைய படைப்புக்களை மட்டும் கொண்டிருந்துவிட முடியாது. மேலும் புகலிட, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு படைப்பாளியிடமிருந்துமே உருவாக முடியும். அப்படி உருவாகியிருக்கிறது. இந்தப் பகுப்புக்கூட சிரமங்களோடு காலவாரியாகப் பகுக்கப்பட வேண்டியதாகும்.

முழுமையின் தன்மை பகுதிக்கும் உண்டென்பது விஞ்ஞானமெனில், ஈழத்து தமிழ் இலக்கியத்தின் தன்மை புகலிடத் தமிழ்இலக்கியத்திலும் இருக்க முடியும். முதலில் நான் ஒரு பிரச்சினையைத் தெளிவுபடுத்தவேண்டும். அதாவது, தமிழகத்திலிருந்து எழுதிய (நான் உட்பட) செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் போன்றோரின் படைப்புக்களை புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அடக்கலாமா என்ற பிரச்சினைதான் அது. இதுவரை காலத்தில் இப்படியான வரைவுள் அவர்களது படைப்புக்கள் வந்திருக்கின்றனவா? இதற்கான பதில் கொஞ்சம் கட;டமானதுதான். ஆனால், எனக்குத் தெரியும், உண்மையான புகலிட எழுத்தாளர் (எக்ஸைல்) என்ற வகைமைக்கு இன்றைக்கும் அவர்களேதான் உதாரணமாய் இருக்கிறார்கள் என்பது. இந்த ஐந்து தசாப்த காலத்திலும் முதல் தசாப்த காலத்தில் தவிர வேறெப்போதுமே புகலிடகாரர் ஐரோப்பாவிலோ, வடஅமெரிக்காவிலோ இருந்திருக்கவேயில்லை. இந்தக் கண்டங்களிலே இருப்பனவெல்லாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள்தாம். அதாவது விருப்பக் குடியேறிகளின் இலக்கியங்கள். அவை புகலிட இலக்கியங்களிலிருந்து தன்மையில் மாறுபட்டன. அப்படியான தன்மை மாற்றம் நிகழ்ந்திருப்பின் அது பாய்ச்சலாகவே இருந்திருக்கும். அப்படி ஒரு பாய்ச்சல் நிகழவேயில்லை. புறநடை எழுத்துக்கள் உண்டு. அவற்றினால் பொதுவிதியை நிர்ணயித்துவிட முடியாது. சுமதி ரூபனும், வி.கந்தவனமும், மனுவல் யேசுதாசனும் அவர்களது எழுத்தின் களத் தன்மைகளுக்காகவே எனது உரைக்கட்டில் எடுத்துப் பேசப்பட்டிருந்தார்கள். ஆனாலும் கலைத்துவம் சிலரின் சில படைப்புக்களில் இருக்கவே செய்கிறதுதான். ஆனால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இவற்றினால் எல்லாம்கூட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்ந்திருப்பதாக என்னை எண்ணவைத்துவிட முடியாது. அந்தவகையான நம்பிக்கைக்குக்கூட இந்த நிமிடத்தில் என்னிடத்தில் ஆதாரமில்லாமலே இருக்கிறது. என் உரைக்கட்டினது தீர்மானங்களின் தளம் இங்கேதான் ஆதாரம்கொண்டிருக்கிறது, கிரிதரன். நட்புடன், – தேவகாந்தன்

bdevakanthan@yahoo.com