நாம் வாழும் பூமியானது நானூற்றி ஐம்பத்து நாலு (454) கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. அதில் இருபது (20) இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காக் கண்டத்தில் தோன்றினான். அதிலும் இரண்டு (2) இலட்சம் ஆண்டுகளுக்குமுன்தான் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான நவ நாகரிகப் பண்பாடுடைய மனிதன் தோன்றினான். ‘மனிதன் தோன்றிdhd;’ என்பது ஆணும், பெண்ணும் தோன்றினர் என்பதுதான் பெருள். அவர்கள் தோன்றிய பொழுது பூமியில் ஓரறிவான புல்லும், மரமும், பிறவும், ஈரறிவான நந்தும், முரளும், பிறவும், மூவறிவான சிதலும், எறும்பும், பிறவும், நான்கறிவான நண்டும், தும்பியும், பிறவும், ஐயறிவான மாவும், புள்ளும், பிறவும், ஆகியவை வாழ்ந்து கொண்டிருந்தன. மனிதன்தான் உயிர்கள் வாழும் பூமிக்கோளை உலகம் என்று கணித்தான். அவனில் அமைந்த ஆறறிவு உலகத்தை நவீனமுறைப்படுத்தி, அறிவியல் முன்னிலை பெற்று, மக்கள் வாழ்வியலில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
உலகத்திலுள்ள உயிரினங்கள் அத்தனைகளிலும் ஆண் இனமும், பெண் இனமும் உள்ளன. இந்த ஆண், பெண் இனங்களின் இணைவும், உறவும்தான் அந்தந்த உயிரினங்கள் அழியாது காப்பாற்றப்படுகின்றன. ஆண், பெண் ஆகிய இரு இனங்களில் ஓர் இனந்தானும் இல்லையெனில் அந்த உயிரினம் அழிந்து போவது திண்ணமாகும். எனவேதான் ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் இயற்கை தந்துதவுகின்றது. ஆணில் ஆண்மையும், வீரமும் அமைந்துள்ளதுபோல், பெண்ணில் பெண்மையும், அழகும், சாந்தமும் அமைந்துள்ளன. ஆண் பெண்மையையும், பெண் ஆண்மையையும் விரும்பி ஒன்றுபட்டு வாழ்வியலில் இறங்குவர். ஆணின்பின் பெண்ணும், பெண்ணின்முன் ஆணும் சேர்ந்து ஓடுவதுதான் வாழ்க்கையாகும். ஆணும், பெண்ணும் இந்த ஓட்டத்தில் வெற்றிவாகை சூட ‘ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தாரகமந்திரத்தைக் கடைப்பிடிப்பர். அதில் நிச்சயம் வெற்றியும் காண்கின்றனர்.
இயற்கையில் பெண்கள் அழகுடையவர்கள். அவர்கள் உடலமைப்பு அவ்வாறமைந்துள்ளது. இதற்கு ஆணும் செயற்கைச் சாதனங்கள் கொடுத்துத் துணைநிற்பான். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’, ‘பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்’ என்பர். பெண்கள் அழகு பற்றிப் பாவலர், நாவலர், புலவர், கவிஞர், ஆசிரியர் ஆகியோர் பல பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் சங்ககாலப் புலவர்கள,; சங்ககாலப் பெண்ணின் தோற்றம், அவயவம் ஆகியவற்றை அடிமுதல் முடியீறாகப் புனைந்து பாடிய சங்கப் பாடல்கள் படிப்போர் மனதைத் தொட்டு நிற்கின்றன. இனிப் பெண் பெருமை பற்றித் தமிழ் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் பார்ப்போம்.
(1) தொல்காப்பியk;:- இடைச்சங்க காலத் தொல்காப்பியர் (கி.மு. 711) யாத்த மூத்த நூலான தொல்காப்பியம் பெண்கள் பற்றிக் கூறுவதையும் காண்போம். மனைவி (பொருள். 77-10,13, 163-1, 164-1, 170-2, 223-1) என்றும், கிழத்தி (பொருள். 90-3, 116-2, 140-2, 144-32, 153-2, 171-2, 178-2, 200-3, 490-2, 494-1, 495-1, 496-1, 499-2) என்றும், காமக் கிழத்தி (பொருள். 144-49, 145-18,36) என்றும், நல்லோள் (பொருள். 77-30) என்றும், காதலி (பொருள். 77-28) என்றும், கிழவி (பொருள். 111-5, 118-2, 121-3) என்றும், கிழவோள் (பொருள். (145-43, 230-1) என்றும், ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப’ (பொருள். 96) என்றும், ‘உயிரினும் நாணம் சிறந்தது; அதனினும் கற்புச் சிறந்தது’ (பொருள். 111) என்றும், ‘பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி’ (பொருள். 547) என்னும் பதின்மூன்றும் (13) பெண்பாற் பெயராகும் என்றும், ‘தோழி, செவிலி (பொருள். 490-1) என்றும், ‘விறலி, பரத்தை’ (பொருள். 491-1) என்றும், ‘ஒண்டொடி மாதர்’ (பொருள். 494-1) என்றும், தொல்காப்பியம் பெண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றது. மேலும் களவிற் கூற்று நிகழ்தற்குரியோராகj; ‘தோழி, செவிலி, கிழத்தி’ (பொருள்.490) ஆகியோரும், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோராக ‘விறலி, பரத்தை’ (பொருள்.491) ஆகிய பெண்களை நியமித்தமை பாராட்டுக்குரிய செயலெனலாம்.
(2) குறுந்தொகை:- கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ‘மயிலியல் செறிஎயிற்று அரிவை கூந்தல்’ (2-3,4) என்றும், ‘மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல்’ (19-4,5) என்றும், ‘அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்நெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே’ (23-1,2) என்றும், ‘வாலிழை மகளிர்’ (45-2) என்றும், ‘தேமொழித் திரண்ட மென்றோள்’ (72-3) என்றும், ‘வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு’ (82-1) – நீட்சி பொருந்திய கடைகுழன்றுள்ள கூந்தலைக் கோதி முதுகிடத்தே சேர்ந்து – என்றும், ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (135-2) என்றும், ‘மனையோள் மடமையிற் புலக்கும்’ (164-5) என்றும், ‘குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்’ (208-3) என்றும், ‘பசுப்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்’ (287-4,5) என்றும், ‘ஓரை மகளிர்’ (316-5, 401-3) என்றும், ‘கடலாடு மகளிர்’ (326-2) என்றும் பெண் பெருமை பேசும் சீரினையும் காண்கின்றோம்.
(3) கலித்தொகை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை நூலின் பாலைக் கலியில் ‘நிலைஇய கற்பினாள்’ (1-13) என்றும், ‘எல்வளை’ (12-10) என்றும், ‘நலம்பெறு சுடர்நுதால்!’ (12-14) என்றும், ‘கிளிபுரை கிளவியாய்!’ (12-18) என்றும், ‘பணைத் தடமென்தோள், ஏந்துஎழில் மலர்உண்கண், நிரைவெண்பல், மணம்நாறு நறுநுதல், இருங்கூந்தல்’ (13-1,2,3,4) என்றும், ‘முளைநிரை முறுவலார்’ (14-25) என்றும், ‘புனையிழாய்!’ (15-9) என்றும், ‘ஒளியிழாய்!’ (15-13) என்றும், ‘ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்’ (19-11) என்றும், ‘மாண்எழில் வேய்வென்ற தோளாய்!’ (19-15) என்றும், குறிஞ்சிக்கலியில் ‘கயமலர் உண்கண்ணாய்!’ (1-1) என்றும், ‘நறுநுதால்’ (1-12) என்றும், ‘சுடர்த் தொடீஇ!’ (15-1) என்றும், ‘மான்நோக்கின் மடநல்லாய்’ (20-17) என்றும், ‘திருந்திழாய்!’ (29-1) என்றும், மருதக்கவியில் ‘அணைமென்தோள்’ (1-9) என்றும், ‘ஒளிபூத்த நுதலாரோடு’ (1-19) என்றும், முல்லைக்கலியில் ‘நறுநுதால், நெட்டிருங் கூந்தலாய்’ (5-53,57) என்றும், ‘தாதுசூழ் கூந்தள்’ (11-12) என்றும், நெய்தற்கலியில் ‘நன்னுதால்!’ (15-9) என்றும் பெண்ணைச் சிறப்பித்துப் பேசும் பாங்கினையும் காண்கின்றோம்.
(4) ஐங்குறுநூறு:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு பெண்ணழகைக் கூறும் சீர் இவை. ‘நன்நெடுங் கூந்தல்’ (153-5) என்றும், ‘பணைத்தோள், ஒண்தொடி அரிவை’ (171-3,4) என்றும், ‘ஒண்தொடி அரிவை கொண்டனள்’ (172-1) என்றும், ‘கொய்தளிர் மேனி’ (176-4) என்றும், ‘மகளிர் நீர்வார் கூந்தல்’ (186-2) என்றும், ‘இரும்பல் கூந்தல்’ (191-2) என்றும், ‘கொழும்பல் கூந்தல் ஆய்தொடி’ (196-1,2) என்றும், ‘வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை’ (198-1) என்றும், ‘வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின’ (200-1) என்றும், ‘குவளை உள்ளகங் கமழும் கூந்தல்’ (225-2,3) என்றும், ‘நின் மென்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்’ 230-2,3) என்றும், ‘சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறு நின்மார்பே’ (240-3,4) என்றும், ‘காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்நுதல் குறுமகள்’ (254-2,3) என்றும், ‘மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள்’ (256-1,2,3) என்றும், ‘திருந்திழை அரிவை!’ (355-1) என்றும், ‘அணிஇழை’ (359-4) என்றும், ‘தாழிருங் கூந்தல்’ (411-4) என்றும், ‘தாதார் பிரசம் மொய்ப்ப போதார் கூந்தல்’ (417-3,4) என்றும், ‘நன்னுதல்!’ (426-2) என்றும் ‘முல்லை நாறுங் கூந்தல்’ (446-1) என்றும் கூறும் செய்திகளை ஐங்குறுநூறு நூலில் நாம் நுகர்கின்றோம்.
(5) பதிற்றுப்பத்து:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் ‘ஒள் இழை மகளிரொடு’ (13-21) என்றும், ‘சுடர் நுதல், அசைநடை உள்ளளும் உரியள்’ (16-13) என்றும், ‘முகிழ் நகை, மடவரல், கூந்தல் விறலியர்’ (18-5,6) என்றும், ‘வாள் நுதல் அரிவை’ (19-14) என்றும், ‘கார் மலர் கமழும், தாழ் இருங் கூந்தல்’ (21-33) என்றும், ‘வளை மகள்’ (23-23) என்றும், ‘எல் வளை மகளிர்’ (27-7) என்றும், ‘வளைக் கை மகளிர்’ (29-2) என்றும், ‘ஒண் நுதல் மகளிர்’ (30-28) என்றும், ‘வண்டு பட ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின், ஒள் நுதல்’ (31-23,24,25) என்றும், ‘சில் வளை விறலி! மெல் இயல் மகளிர்’ (40-21,23) என்றும், ‘கார் விரி கூந்தல், சேயிழை மகளிர்’ (43-1,2) எனவும், ‘இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின், வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்’ (46-1,2,3,4) என்றும், ‘நல் நுதல் விறலியர்’ (47-7) என்றும், ‘ஒள் நுதல் விறலியர்’ (48-2) என்றும், ‘வரி மென் கூந்தல்’ (50-19) என்றும், ‘சில் வளை விறலி!’ (57-6) என்றும் பெண் பெருமை பேசுவதையும் காண்கின்றோம்.
(6) நற்றிணை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ‘மனைமாண் இனியோள்’ (3-8,9) என்றும், ‘சுணங்கனி வனமுலை’ (9-6) என்றும், ‘தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்’ (20-3) என்றும், ‘திருந்திழை மகளிர்’ (40-4) என்றும், ‘மாயக் குறுமகள்’ (66-11) என்றும், ‘சில்வளைக் குறுமகள்’ (90-9) என்றும், ‘நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்’ (93-8) என்றும், ‘குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர்’ (116-11) என்றும், ‘பிறைநுதல்’ (120-7) என்றும், ‘விரிஒலி கூந்தல்’ (141-12) என்றும், ‘அணிநுதற் குறுமகள்’ (147-1) என்றும், ‘ஒள்ளிழை மகளிர்’ (155-1) என்றும், ‘ஐம்பால் வகுத்த கூந்தல், செம்பொறித் திருநுதல்’ (160-6,7) என்றும், ‘மடக்கண் தகரக் கூந்தல், பணைத்தோள், வார்ந்த வால் எயிறு’ (170-1,2) என்றும், ‘குவளை யுண்கண், இவள் மாமைக் கவினே!’ (205-6,11) என்றும், ‘ஒழுகுநுண் நுசுப்பு, தெளிதீங் கிளவியாள்’ (245-5,6) என்றும், ‘பொற்றொடி மகளிர், நெருங்கேர் எல்வளை’ (258-5,11) என்றும், ‘மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல்’ (301) என்றும் பெண்களைப் பற்றிப் புகழ்ந்து, பாராட்டிப் பேசியுள்ள சீரினையும் காண்கின்றோம்.
(7) சிலப்பதிகாரம்:- ஐம்பெரும் காப்பியங்களில் தலைசிறந்து விளங்கும் நூலான இளங்கோவடிகள் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) யாத்த சிலப்பதிகாரத்தில் பெண்ணழகு பேசப்படும் பாங்கினையும் காண்போம். ‘போதிலார் திருவினாள் (கண்ணகி) புகழுடை வடிவினாள்’ (1-26) என்றும், ‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! கரும்பே! தேனே! ஆருயிர் மருந்தே! தாழிருங் கூந்தல் தையால்! (2-73,74,75,80) என்றும், ‘செம்பொற் கைவளை, பரியகம், வால்வளை, பவழப் பல்வகை அணிந்து’ (6-92,93) என்றும், ‘குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி’ (12-23) என்றும், ‘இணைமலர்ச் சீறடி’ (12-45) என்றும், ‘கொங்கைச் செல்வி! தென்தமிழ்ப் பாவை! செய்தவக் கொழுந்து!’ (12-47,48) என்றும், ‘பெருமனைக் கிழத்தி’ (13-57) என்றும், ‘பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!’ (16-89,90,91) என்றும் சிலம்பு பெண்ணழகைப் பேசுகின்றது.
(8) திருக்குறள்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருவள்ளுவர் (கி.மு.31) யாத்த திருக்குறளில் ‘மனத்தக்க மாண்புடையள்’ (51) என்றும், ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்’ (54) என்றும், ‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ (55) என்றும், ‘கனங்குழை மாதர்’ (1081) என்றும், ‘பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு’ (1089) என்றும், ‘இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது’ (1091) என்றும், ‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.’ (1101) என்றும், ‘அணியிழை’ (1102) என்றும், ‘இவள் நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்’ (1104) என்றும், ‘காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) என்றும், ‘நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்’ (1111) என்றும், ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு’ (1113) என்றும், ‘மலரன்ன கண்ணாள்’ (1119) என்றும், ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ (1120) என்றும் பெண்கள் பெருமை பேசப்படுகின்றது.
(9) நாலடியார்:– பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ‘அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட’ (1-1) என்றும், ‘மனையாள்’ (3-4) என்றும், ‘முல்லை முகைமுறுவல் முத்தென்றும்’ (45-1) என்றும், ‘நிரைதொடீஇ’ (111-3) என்றும், ‘இனியார் தோள்’ (338-3) என்றும், ‘பூங்குழையார்’ (370-1) என்றும், ‘கொய்தளிர்’ (373-3) என்றும், ‘அரும்பெறற் கற்பின்’ (381-1) என்றும், ‘நறுநுதலாள்’ (381-4) என்றும், ‘மாதர் மனைமாட்சியாள்’ (382-4) என்றும், ‘மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்’ (383-3,4) என்றும், ‘கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி இடன் அறிந்து ஊடி யினிதின் உணரும;, மடமொழி மாதராள் பெண்.’ (384) என்றும், ‘சுடர்த்தொடீஇ’ (398-2) என்றும் பெண்ணழகு பேசப்படும் சீர் இவையாம்.
(10) நான்மணிக்கடிகை:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் ‘பெண்மை நலத்துக்கு அணியென்ப நாணம்’ (11-2,3) என்றும், ‘நிலைநின்ற பெண் நன்று’ (15-1,2) என்றும், ‘மனைக்காக்கம் மாண்ட மகளிர்’ (20-1) என்றும், ‘மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை’ (22-1) என்றும், ‘தாயின் சிறந்த தமரில்லை’ (35-2) என்றும், ‘தாயென்பாள் முந்துதான் செய்த வினை’ (45-3,4) என்றும், ‘உருபோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப’ (55-2,3) என்றும், ‘கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர்’ (56-2,3) என்றும், ‘ஈன்றாளோடெண்ணக் கடவுளு மில்’ (57-3,4) என்றும், ‘பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்’ (90-2,3) என்றும், ‘பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை’ (101-3,4) என்றும், ‘மனைக்கு விளக்கம் மடவார்’ (105-1) என்றும் பெண் புகழ் பாடப்படுகின்றது.
முடிவுரை
இதுவரை தொல்காப்பியம;, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகிய பத்துச் (10) சங்க இலக்கிய நூல்களில் பெண் பெருமை பேசும் பாங்கினைப் பார்த்தோம். அவற்றில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், சுடர்த்தொடீஇ, திருந்திழாய், நெட்டிருங் கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர் மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளை விறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள், கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சொற்பதங்களை அடக்கிச் சங்க இலக்கிய நூல்களில் பாடல் சமைத்தமை சங்கப் புலவர்கள் மனித வாழ்வியலின் உச்ச நிலையை மனத்தில் பதித்துச் செயற்பட்டனர் என்பது தௌ;;ளத் தெளிவாகின்றது.
ஆண், பெண் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து செயற்படின் அவர்கள் வாழ்வியல் சிறந்தோங்கும் என்பதில் ஐயப்பாடேதும் இருக்காது. வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை யாவரும் ஏற்பர். அதை அன்றே சங்கப் புலவர்களும் அறிந்திருந்து பெண்கள் பெருமையும், சீரும், சிறப்பும் பேசிப் பாடல்கள் யாத்தனர் போலும். இப்பாடல்கள் இரண்டாயிரத்து ஐநூறு (2500) ஆண்டுகளாக மக்கள் மத்தியிற் பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம்.