தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது.
இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை பல்வேறு கட்டுரைகளின் வாயிலாகவும், சில நேர்காணல் வாயிலாகவும், சில மொழியாக்கக் கட்டுரைகளின் வாயிலாகவும் பேசாமொழியின் இந்த இதழில் தொடங்கிவைக்க முயற்சித்துள்ளோம். எனினும் இதன் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளிவரும். தணிக்கை தொடர்பான இந்த சிறப்பிதழை சாத்தியப்படுத்ததில் பல்வேறு நண்பர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல பணிகளுக்கிடையில் பேசாமொழிக்காக கட்டுரைகளை எழுதியும், மற்றக் கட்டுரைகளை சரிப்பார்த்துக்கொண்டும் தொடர்ந்து இயங்கும் தினேஷ், தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே, பேசாமொழிக்காக நேரம் ஒதுக்கி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் யுகேந்தர், இந்த இதழில் ஐந்துக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளார். ஐந்துக் கட்டுரைகளை குறிப்பிட்ட தேதிக்குள் மொழியாக்கம் செய்துக் கொடுப்பது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நண்பர் யுகேந்திரனின் குறுந்தகவல் வரும், கட்டுரையை முடித்து மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று. அவரது எத்தனையோ நாட்களின் உறக்கத்தை இந்த மொழியாக்கக் கட்டுரைகள் தின்று செரித்திருக்கும். மேலும், பேசாமொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் யமுனா ராஜேந்திரன், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தணிக்கை தொடர்பான வரலாற்றையும், அதனையொட்டிய அரசியலையும் இந்த இதழில் விரிவாக அலசியுள்ளார். புதிதாக தீக்ஷன்யா இந்த இதழில் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். புதியவர் என்பதால், அவரது கட்டுரையை நண்பர் செகோ முகுந்தன் மேற்பார்வை செய்து, திருத்தி அனுப்பியுள்ளார். தியடோர் பாஸ்கரன் இந்த இதழுக்காக ஒரு முக்கியமான கட்டுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இல்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்காணல் கேட்டதும், மறுக்காமல் நீண்ட நேரம் ஒதுக்கி நேர்காணலை சாத்தியப்படுத்திய திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அதிகாரி பக்கிரிசாமி, இயக்குனர் லீனா மணிமேகலை, தணிக்கை வாரிய முன்னாள் தலைவர் லீலா சாம்சன் உள்ளிட்டோருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தவிர இந்த இதழில், டியர் சினிமா, செமினார், இந்தியா-செமினார் போன்ற இதழ்களில் இருந்து சிலக் கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இதழ்களின் நிர்வாகத்திற்கும் பேசாமொழியின் நன்றி உரித்தானது.
இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம்