பேச முடியாத காலத்தைப் பேச முயலும் நாவல் தெணியானின் ‘தவறிப்போனவன்’

தெணியானின் 'தவறிப் போனவன் கதை'‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும். ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம். ‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.  தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம். ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

எமது பக்கத்தில் பேச்சுவழக்குத் தமிழில் ‘தவறிப் போனான்’ என்று சொல்வது வழக்கம். அந்த அர்த்தத்தில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறிப் போனவன் கதை மட்டுமல்ல. தவறிப்போனவன்கள் பலர் பற்றிய கதையாகவும், தவறிப்போனவனாகக் கருதப்பட்டுத் தப்பியவன் கதையாகவும் இருக்கிறது. எதையும் வழமைபோலச் சொல்லக் கூடாது சற்று வித்தியாமாகச் சொல்ல வேண்டும் எனத் தெணியான் அடிக்கடி சொல்லுவார். அது அவரது படைப்பின் தலைப்பிலும்  வெளிப்படுகிறது. தவறிப்போனவன் கதை என்பது தெணியான் எழுதிய நாவலாகும். தினகரன் வாரமஞ்சரியில் 2005ம் ஆண்டில் ஆறு மாதங்களாகத் தொடராக வெளியான இந்நாவல் இப்பொழுது கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

தணிகாசலம் ஒரு ஆசிரியர். தனது பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றுகிறார். தனது பதவி பற்றி இவ்வாறு சொல்கிறார். “உபஅதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையுள்ள போலி ஆசனம். கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்…. சம்பளமில்லாத வேலை என்கிறார். இது நூலாசிரியர் தெணியானது ஆசிரியத் தொழில் பற்றிய ஒரு விமர்சனம் எனக் கொள்ளலாம். காலை மணி அடிப்பதற்கு முன் ஆரம்பித்து முடியும் வரை ஒரு பாடசாலையின் நாளந்த நடப்புகளில் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் நடவடிக்ககைளில் கதையாகவும் சுய விமர்சனமாகவும் வருவது சுவார்ஸமாக இருக்கிறது. அது முதல் அத்தியாயம்.

திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த மனிதனின் வாழ்வில் சிலநாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளாகக் கதை சுவார்சமாக விரிகிறது. நோயுற்ற அவன், வீடு தனியார் மருத்துவமனை ஆதார வைத்தியசாலை யாழ் பொது ஆஸ்பத்திரி என அலையும் நேரத்தில், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் ஊடாக சமூகத்தைப் பார்ப்பதாக அமைகிறது.

நோய்வாய்ப்பட்டவன் கதையான போதும் உயிர் பறிக்கும் நோயல்ல, ஆனால் பார்த்தவர்களைப் பயமுறுத்துகிற நோய். திடீர் திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வடியும். மண்டை ஓட்டிற்குள் ஏதோ வெடித்து மூக்கினால் குருதி வடிகிறது என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதனால் பயந்தடித்து மருத்துவமனை நோக்கி ஓடுவார்கள். இங்கும் ஓடுகிறார்கள். தனது உடலில் வேறு ஒரு நோய் உபாதியும் இல்லையே என எண்ணி அவன் பயப்படாதபோதும் குடும்பம் சுற்றத்தவர் நெருக்கடியால் ஓட நேர்கிறது. அங்கெல்லாம் பல்வேறு சுவார்ஸமான நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தின் கதை இது.

“யுத்த அனர்த்தத்தினால் சிதைந்துபோன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை”,
“கூலாகக் குடிக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை, ஒரு சோடா வாங்கேலாது”
“இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்”,

“பெற்றோலும் லாம்பெண்ணையும் கலந்து புக்குபுக்கென்று புகைகக்கிக் கொண்டுஅருந்தலாகச் சில கார்கள் அந்தரத்திற்கு ஓடுகின்றன, இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப்போவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி ஏதுமில்லை…. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டுப் போய் வண்டியைக் கொண்டு வருவார்கள்…. வண்டிக்குள் பாயை விரித்து அதன் மேல் படுக்கைச் சேலையை விரித்து.. கிடத்தினார்கள்…. வண்டி நகர்ந்து நூறு மீட்டர் தூரம் போயிருக்க மாட்டாது.. அந்த வண்டிக்குள்ளேயே அவள் உயிர் பிரிந்தது.”

அதே போல அரிக்கன் விளக்கு, சிக்கன விளக்கு, சிரட்டைக்கரி போட்ட ஸ்திரிக்கைப் பெட்டி அந்த நேரத்தில் யாழ் மக்கள் பட்ட துன்ப, துயர அவலங்கள் அநேகம் ஆங்காங்கே படைப்பில் சொல்லப்படுகின்றன. இவற்றை விடசொல்ல முடியாதவை பல. பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. சொல்ல முடியாத சூழ்நிலை. பெண்டாட்டிக்கும் சக்களத்திக்கும் இடையே மாட்டுப்பட்டவன் நிலையிலும் மோசமானதாக இருந்தது மனித வாழ்வு அக்காலகட்டத்தில்.

“அப்பு வெளியிலை திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையள் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள், சின்னவனையும் வெளியிலை விடாதையுங்கோ”. பிடித்துக் கொண்டு போவார்கள் யார் என்று சொல்ல முடியுமா?

மற்றொரு சம்பவம். ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

“யார் சுட்டது”
பதில் “தெரியாது”,
“ஏன்?’
“தெரியாது?”

‘அறிவுள்ள எந்த ஒரு மனிதன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது பதில் சொல்லுவான்?’ என்பது கேள்வியாக நாவலில் ஆசிரியர் கூற்றாக வருகிறது.
மகாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகள் போல கண் மூடி, வாய் பொத்தி, காது அடைத்து நின்ற வாழ்வு. தீயனவற்றை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தம் உயிர் காப்பதற்காக ஒண்டி ஒதுங்கிக் கிடந்த நரக வாழ்வு. ஒருவரல்ல! யார் யாரோவெல்லாம் எமது குழந்தைகளை கழுகுகள் போல கொத்திக் கொண்டு போனார்கள். உளவாளி என்றும், காட்டிக் கொடுப்பவன் என்றும், பயங்கரவாதி என்றும் வயது வேறுபாடின்றிச் சுட்டுக் கொன்றார்கள். தாம் நினைப்பவற்றை எம்மைப் பேசச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அல்லது ஊமைகள் போல வாய் மூடி இருக்கச் சொன்னார்கள்.
அந்த வாழ்வை அப்படியே வெளிப்படையாகச் சித்தரிந்திருந்தால் நூலாசிரியரும் அக்காலத்திலேயே தவறிப் போனவன் ஆயிருப்பார். “கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்.” என நூலாசிரியர் தனதுரையில் சொல்லிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நாவல் என்பது சிறுகதை போன்றதல்ல. அது ஒரு மையக் குறியை நோக்கி நகர வேண்டியதில்லை. பரந்த வாழ்வின் அகண்ட் சித்தரிப்பு. அதனால்தான் இந்த நாவலிலும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. யாழ் சமூகத்தின் போர்க்கால வாழ்வு, சாதீயம், சமூக சீர்கேடுகள் எனப் பலவும் பேசப்படுகின்றன. பருத்தித்துறையில் ஆதியில் சேவை புரிந்த செல்லப்பா, விசுவலிங்கம், தம்பிப்பிள்ளை போன்ற மருத்துவர்களின் ஒரு முகம் புலப்படுகிறது. சுமார் 40-50 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த மருத்துவ வசதிகளின் கோட்டு வரைவும் இருக்கிறது.
 
துறைமுகமும், சந்தை,கோடு(Magistrate and district Courts)  பொலீஸ் ஸ்டேசன், என எந்நேரமும் கலகலப்பாக இருந்த நகரம் அது. அந்த நகரின் நினைவுகளைக் கிளற வைக்கிறது இந் நூல். சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னான அக்கால வாழ்வு முறையில் காதல் உணர்வு எவ்வளவு அடக்கமானதாக இருந்ததையும், வெளிப்படுத்;த முடியாத சூழல் கொண்டதாகவும் உணரமுடிகிறது.

கதை முழுவதும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல தமிழாசியரின் அழகான வசன நடை. ஆங்காங்கே யாழ் மண்ணின் பேச்சுத் தமிழ் மென்முறுவல் காட்டி நயக்க வைக்கிறது. கட்டிளம் பருவத்தில் தோன்றுகின்ற முகப்பருக்களுக்கு ‘குமர்ப் பருக்கள்’என்றும், சத்திர சிகிச்சைக்கு “கொத்தித்தான் பார்க்க வேண்டும்” என டொக்டரே ஓரிடத்தில் சொல்வதும் நயக்கின்றன. தகப்பனை ‘அப்போய்’ என ஆசையோடு அழைப்பதில் உள்ள நேசம் மனதில் நிற்கிறது. அதே போல தந்தை மகனை ‘அப்பு’ என நேச நெருக்கத்தோடு விளிப்பதையும் காண முடிகிறது.

மற்றொரு சுவார்ஸமான விடயம் அந்தக் காலத்துப் பேதி குடித்தல் பற்றியதாகும். இன்றும் ஒரு சிலர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் பேதி குடிக்க மருந்து கேட்பதுண்டு. மருத்துவ ரீதியாகப் பேதி இப்பொழுது கொடுக்கப்படுவதேயில்லை. கொடுப்பது தீது என்பதே காரணம். சின்னப் பையனாக இருந்த காலத்தில் வயிற்று வலிக்காக சுதேசிய மருத்துவரால் தணிகாசலத்திற்கு கொடுக்கப்பட்டது. பேதி போவதற்குப் பதிலாக கடுமையாக வயிற்றை வலித்து வாந்திதான் போனது. அதற்குப் பிறகு யார் என்ன சொன்னபோதும் அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

சுவாரஸ்சமாக நாவல் நகருகிறது. ஒரே மூச்சில் படித்து முடிக்க வைப்பது அதன் சிறப்பு. சிறந்த ஆற்றொழுக்கான நடையும் வாழ்வோடு ஒன்றிய சுவார்ஸமான நிகழ்வுகளும், மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களை பூமாலை போலத் தொடுத்த நுணக்கமும் அதற்குக் காரணமாகும்.

சில எழுத்துப் பிழைகளும், சொற்கள் பிரிந்து கிடப்பதும் மனத்தை அருட்டினாலும் சிறந்த வகையில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல் வெளியீட்டுத்துறைக்கு கொடகே நிறுவனம் பங்களிக்க முன்வந்தமை பாராட்டத்தக்கது. ஆயினும் பரந்த வளமும் அனுபவ விஸ்தாரமும் கொண்ட அவர்கள் இன்னமும் செம்மையாகச் செய்யலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாவல் எனக்கு  பிடித்ததற்கான காரணங்கள் பலவான போதும், தனிப்பட்ட காரணமும் உண்டு. ஏனெனில் இது எனது பிரதேசத்தின் கதை. கதை மாந்தர்கள் பெரும்பாலானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தவறிப் போனவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். தவறிப்போனவனாகக் கருதப்படும் தணிகாசலம் ஆசிரியர் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் வேறு யாருமல்ல. நூலாசிரியர் தெணியான் அவர்களே. எனவே இது தெணியானின் சொந்த அனுபவம்.

“தவறிப் போனவன் கதை” என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாக வைத்துக் கொண்டே இந்த நாவல் நகருகிறது” என வாக்குமூலம் தருகிறார். அதற்கு மேலாக நானும் அந்த நாவலில் பாத்திரமாக வருகிறேன். டொக்டர் ஆனந்தன், ஆனந்தன் வைத்தியசாலை யாவும் நானும் என்னைச் சுற்றியவையுமே. அந்தச் செய்தி எட்டியபோது நானும் எனது நண்பர்களும் பட்ட மனஅவஸ்தை சொல்லி மாளாது. நண்பர் குலசிங்கம் உடனடியாகவே தகவல் தந்தார். நேற்றுப் பார்த்த நண்பனை இவ்வளவு விரைவாக இழப்போம் எனக் கனவும் கண்டதில்லை. ஆனால் இழப்பது அன்றைய போர்ச் மூழலில் ஆச்சரியமானதல்ல. இரவு 7 மணிக்கு சந்தித்த நண்பன் நெல்லை.க.பேரனை காலையில் கண்விழ்த்தபோது இழந்ததாகச் செய்தி கேட்ட போது பட்ட துயரத்திற்கு மேலானது தெணியான் பற்றிய செய்தி. நோயாளிகள் காத்திருந்ததால் என்னால் விட்டகல முடியவில்லை. என்ன நடந்தது என அறிய நண்பர்கள் குலசிங்கமும், ரகுவரனும் தெணியானது வீடு நோக்கி சைக்கிளில் விரைந்தனர். நான் மனப்பதற்றத்துடன் பணியில் ஈடுபட நேர்ந்தது. எதிர்பாராதது! ஆனால் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தனர். “தெணியான் சுகமே உள்ளார். காலமானது வேறொரு ஆசிரியர்.” என்றார்கள். மகிழ்ந்தோம். மற்றொருவர் இறப்பில் நாம் மனமகிழ்ச்சியடைய நேர்ந்தது வாழ்க்கையில் அந்த ஒரே தடவையாகத்தான் இருக்கும். நண்பர் தப்பிவிட்ட நிம்மதியானது வேறு சிலர் துன்பத்தைக் கணக்கெடுக்காது மகிழ வைத்த முரண் அனுபவம் அது.

பன்முக ஆற்றல் கொண்ட தெணியானின் எழுத்தாள முகத்தின் ஒரு பக்கம்தான் நாவல். நாவல் படைப்புத்துறையில் பஞ்சம் மிக்க எமது நாட்டில் நாவல், குறுநாவல் என ஏற்கவே எட்டு நூல்களை தெணியான் எழுதி வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் வெளியான ‘கழுகுகுள்’ என்ற நாவலும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் சுற்றிப் படர்ந்திருந்தாலும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட முடியாத மிக வித்தியாசமான படைப்பு ‘தவறிப்போனவன்’ ஆகும்.

அவர் எழுதிய சிறுகதைகளில் பெரும்பாலானவை நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சிறுகதை, கட்டுரை, கவர்ச்சியான பேச்சாற்றல், ஆசிரியத்துவம் என கைவைத்த ஒவ்வொரு துறையிலும் தன் ஆளுமையைப் பதித்துள்ளார். சுமார் 5 தசாப்தங்களாகப் படைப்புலகில் இருந்தாலும் அவரது படைப்பாற்றல் இன்னும் வற்றாத சுனையாகப் பிரகாவித்து, வித்தியாசமான புனைவுகளுடன் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் பல பொக்கிஸங்கள் அவரது பேனாவிலிருந்து சுரந்து கொண்டே இருக்கும் என நம்பலாம்.

Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com