பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!

மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்…

வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்

கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு

ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்…

ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்…

நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்

மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்

சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.

கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்

ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை…

ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே

காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்…

வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.

காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்…

நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்

போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என…

ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.

 


வாழும் வழி

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

வாழும் வழியின் நுழைவாயில் விதி கேட்பீர்!

சாவைப் பற்றியே நினைவின்றி நடந்திடுவீர்!!

பயம் என்னும் பூதத்தை மனத்தை விட்டே விரட்டி

நயமான வழிகளிலே நாசூக்காய்ச்; சிந்தனையை

என்னேரமும் செலுத்தி எவரையுமே வருத்தாது

தன்னலத்தையும் பேணி தருமமும் செய்துகொண்டு

இரத்த இனத்தாரை எங்கு இருந்தும் துணையாக்கி

பரந்த நோக்குடனே, பிழை செய்வோரைப் பொறுத்து

பொய், களவு, வெறி, காமம், பழிவாங்கல், தவிர்த்து

மெய்வருந்தி உழைத்து மேலோர்களையும் மதித்து

வஞ்சகத்தை விடுத்து வாய்ப்புகளைக் கைப்பிடித்து

நெஞ்சினிலே நேர்மையுடன் நீள் நோக்கில் சிந்தித்து

மனையாரை மகிழ்வித்து மக்களையும் ஊக்குவித்து

தினைக்கணமும் சோம்பாமல் திரவியங்களைத் தேடி

உலகத்துடன் வாழ்ந்து ஊதாரிச் செலவு இன்றி

நலத்தினையே நாடி என்றும் நல்லவற்றையே செய்து

கல்வி கசடறக்கற்று கல்லாதாரையும் மதித்து

அல்லும்பகலும், என்றும், ஆண்டவரைத் துதித்து

உடம்பை அப்பியாசித்து உணவை அளவுடன் உண்டு

நடுநிசிக்கு முன்னரே தினம்தினம் நித்திரை செய்து

படபடென்று ஓடாமல் பாதையைப் பார்த்தே நடந்தால்

வாழாமல் வேறென்ன வழி இருக்கும் எவருக்கும்?

வீழாமல் வாழ்ந்துகொண்டு விதம்விதமாய் இன்புற்று

ஆயுள்முதிர்ந்த பின்னர் ஆண்டவனிடம் செல்வோம்…

மாயப் பிறப்பு அறுந்து, நாம்!

 

வாழும் வழியின் நுழைவாயில் விதி கேட்பீர்!

சாவைப் பற்றியே நினைவு இன்றி நடந்திடுவீர்!!

வீழாமல் வாழ்ந்துகொண்டு விதம்விதமாய் இன்புற்று

ஆயுள்முதிர்ந்த பின்னர் ஆண்டவனிடம் செல்வோம்…

மாயப் பிறப்பு அறுந்து, நாம்!

 

prof.kopanmahadeva@yahoo.co.uk