ஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த ‘ஸ்கூட்ட’ரின் ‘டய’ரொன்றினைப் ‘பங்ச’ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக நேரங்கெட்ட நேரங்களில் ‘அண்டர்கிரவுண்ட்’ வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
‘டொரண்டோ’ நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் ‘கொண்டோ’வின் ‘அண்டர்கிறவுண்ட்’ வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.
1990இல் வெஸ்டேர்ன் யூனிவர்சிடியில் புலமைப்பரிசில் பெற்றுப் பொறியியல் படித்துக்கொண்டிருந்த , 21 வயதுடைய லிண்டா ஷா என்னும் மாணவி, ஓரிரவு 401 நெடுஞ்சாலையிலுள்ள உணவகமொன்றில் பேர்ஹர் வாங்கச் சென்ற சமயம், அவரது வாகனத்தின் ‘டயர்’ ஒன்றினைப் ‘பங்ச’ராக்கிய ஒருவன் , அதனை அறியாத லிண்டா ஷா வாகனத்தை எடுத்துச் சென்று , ‘டயர் ஃப்ளட்’டாகி நெடுஞ்சாலையில் தவித்துக்கொண்டிருக்கையில் , உதவுவதாகச் சென்று, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொலை செய்து, அவரை எரித்துள்ளான். அக்கொலையைப் புரிந்தவனை 15 வருடங்களுக்குப் பின்னர், அவன் லிண்டா ஷாவின் மேல் விட்டுச்சென்ற விந்து, தலைமயிர் ஆகியவற்றுக்கான ‘டி.என்,.ஏ’ மூலம் அடையாளம் கண்டபோது அவன் தன்னையே சுட்டுத்தற்கொலை செய்துகொண்டான். அவ்விதம் தற்கொலை செய்தவன் ஏற்கனவே 1975இல் இரட்டைக் கொலைகளுக்காகத் ( பொலிஸ் அதிகாரி ஒருவரையும் , கொலையைப் பார்த்த டாக்ஸி சாரதி ஓருவரையும் கொன்றதற்காக) தண்டனை பெற்று, பரோலில் வெளிவந்த கைதி அலென் கிறெய்க் மக்டானல்ட்.
இந்தியாவில் இது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை, விரைவாக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் போன்றவையிருந்தும் , தொடர்ந்தும் பெண்கள் இவ்விதம் சீரழிவுகளுக்குள்ளாக்குவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மிகவும் கடுமையான தண்டனைகளை வழங்குவதுடன், இவற்றுக்குக்கெதிராகக் கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும். ‘நள்ளிரவில் எப்பொழுது ஒரு பெண் எவ்வித அச்சமுமின்றி நடந்து செல்ல ஒரு பெண்ணால் முடிகின்றதோ அன்றே உண்மையில் இந்தியா சுதந்திரமடைந்த நாள்’ என்று மகாத்மா கூறியதாக எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது. பெண்மையைப் போற்றிப் பூசித்தால் மட்டும் போதாது. போற்றிப்பாதுகாக்கவும் வெண்டும்.
லிண்டா ஷா பற்றிய விபரங்களை உள்ளடக்கிய கட்டுரை: https://www.findagrave.com/memorial/12824672/lynda-shaw
கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் மரணம் பற்றிய காணொளி: https://www.youtube.com/watch?v=uQqleToxP7o