பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத படமும் வெற்றி பெறும் என்பதற்கு உறவு நல்ல எடுத்துக்காட்டு

உறவு திரைப்படக் காட்சி...நக்கீரன் (தங்கவேல்)நேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது  நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும்  குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை.  தண்ணுமை  வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன. 

படத்தின் தொடக்கம் மிக நேர்த்தி. நடன அரங்கேற்றத்துக்கு ஏற்ற பாட்டின் பல்லவியை – துன்பம் இல்லாத நினைவே சக்தி, தூக்கம் இல்லாத கண்ணின் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனியே சக்தி – குளியறையில் மெல்ல வாய்விட்டுப் பாடுவது அதனை தகப்பனுக்கு பாடிக் காட்டுவது இயற்கையாக இருந்தது.   இயக்குநர் திவ்வியராசன் நல்ல இசைஞானி என்பதால் படம் முழுதும் இசைக்கு (அடுத்து ஆடலுக்கும்) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தாயகத்தில் ஒரு இளைஞன். திட்ட அதிகாரியாகப் பணி புரிகிறார். ஒரு நாள் இரண்டு இளைஞர்கள் வந்து விதவைகளின் மறுவாழ்வுத் திட்டத்துக்கு ஒதுக்கியிருந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை வேறு திட்டத்துக்கு ஒதுக்குமாறு மிரட்டல் தொனியில் கேட்கிறார்கள். அப்படிப் பணம் ஒதுக்காவிட்டால் நடக்கிறதே வேறு என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். இதனைத் தொடர்ந்து முரளியை  கனடாவில் உள்ள முரளியின் மாமியார் வீட்டுக்குப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மாமியார் இருந்தால் மச்சாள் இருக்கத்தானே வேண்டும்? பாதி காதல், பாதி பேச்சு முரளி – அபி (கதாநாயகி பெயர். அதென்ன அபி? அபிநயாவின் சுருக்கம்) திருமணத்தில் முடிவடைகிறது.

 கனடாவுக்கு வந்த முரளிக்கு கனடிய வேலை அனுபவம் இல்லாத காரணத்தால் வேலை கிடைக்கவில்லை. அலையோ அலையென்று விரக்தியில் அலைகிறார். அபி ஏதோவொரு ஆய்வு கூடத்தில் வேலை பார்க்கிறார். அதோடு பகுதி நேர ஆடல் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்கு ஆடல் கற்பித்துக் கொடுக்கிறார். இப்படி வேலை நாட்டியப் பள்ளி என மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் முரளி – அபி இருவருக்கும் இடையில் உராய்சல் தொடங்குகிறது. வேலை இல்லாத விரக்தியில் இருக்கும் முரளிக்கு அபியின் கலை ஈடுபாடு விரக்தியைப் போக்குவதற்குப் பதில் அதற்கு மேலும் தீனி போடுகிறது.  பிறகு என்ன? மனைவியோடு சண்டை. மாமன் மாமியோடு முறாய்ச்ல். முரளி மனைவியைக் கூட்டிக் கொண்டு நண்பன் வீட்டுக்குப் போய்விடுகிறான். அங்கு போனபின் சிக்கல் மேலும் இடியப்பச் சிக்கலாகிறது. முரளி சினத்தில் அபிக்கு முதுகில் அடிக்க (வழக்கமாக கதாநாயகன் கதாநாயகி கன்னத்தில் தான் அடிப்பார்) அவர் அழ, பக்கத்து வெள்ளைக்கார பெண்மணி கதவைத்தட்ட, முரளியை காவல்துறை வந்து பிடித்துக் கொண்டு போகிறது. முரளி அபிதான் 911 யை அழைத்து தன்னைச் சிறையில் அடைத்ததாக நினைக்கிறான். மீதிக் கதையதைத் திரையில் பாருங்கள். அதை நான் சொல்லிவிட்டால் படத்தைப் பார்க்காமல் விட்டாலும் விட்டு விடுவீர்கள்.

எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். முரளியாக வரும் சுதாகரன் அபியாக வரும் சங்கீதா  இருவருக்கும் நடிப்புக்கு நூறுக்கு 80 புள்ளிகள். அபியின் தாயாக வரும் சித்திரா பீலிக்ஸ், தந்தையாக வரும் நவம் ஆசிரியர் எல்லோரும் ஏதோ திரைப்படத்துறையில் பல ஆண்டு காலம்  இருந்து அனுபவப்பட்டவர்கள் மாதிரி இயல்பாகவும் இயற்கையாகவும்  நடித்திருக்கிறார்கள். நடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் என்று எனக்கு இதுநாள் வரை தெரியவில்லை!

கமரா,  பாத்திரங்களின் முகபாவத்தை அண்மைக் காட்சிகளில் (Close shot) காட்டத் தவறிவிட்டது.

இனி மறு பக்கத்தைப் பார்ப்போம். முரளி மிகக் குறுகிய காலத்தில் இசைவு சீட்டு எடுத்து கனடாவுக்கு வானூர்தியில் வந்து இறங்குவது நம்பக் கூடியதாக இல்லை.

ஊரில் உள்ள முரளியின் அப்பா, அம்மா வீட்டைப் படலையோடு காட்டினாலும் பின்னால் நிற்கும் மேப்பிள் மரங்கள் அந்த வீடு கனடா வீடு என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

திவ்வியராஜ்சோதிடப் பொருத்தம் பார்த்த சாத்திரியார் கையில் பெண் – ஆண் இரண்டு பேரது குறிப்புகளை வைத்துக் கொண்டு பெண்ணின் தாயாரிடம் அவர்களின் பெயர்களை ஏன் கேட்கிறார் என்பது புரியவில்லை. மேலும் மாப்பிள்ளையின் சாதகத்தில் செவ்வாய்க் குற்றம் இருப்பதாக தொடக்கத்திலேயே சொல்லியாகி விட்டது. அப்படியென்றால்  சோதிட சாத்திரத்தின் படி அபியின் சாதகத்திலும் செவ்வாய் தோசம் இருந்திருக்க வேண்டும்!  சாதகத்தில்  10 – 14 பத்துப் திருமணப் பொருத்தங்கள் உண்டு.  அதில் குறைந்தது 6 – 8 பொருத்தம் இருந்தால் சாத்திரியார் திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டிவிடுவார். இந்தச் சாத்திரியாருக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தது. கணினிதான் சோதிடரைக் காப்பாற்றி கரை சேர்த்தது! நல்ல பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால் சாத்திரியாரின் சாத்திரம் பொய்த்து விடுகிறது.  மாப்பிள்ளை – பெண்பிள்ளை இருவருக்கும் திருமணம் பொருந்தவில்லை. மகளுக்கு திருமணம் செய்து வைத்த கையோடு தனிக் குடித்தனம் நடத்த அபியின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் முரளி – அபி வாழ்க்கை மோதலாக மாற வாய்ப்பு இருந்திருக்காது.  அப்படி இருந்தாலும் குறைவாகவே இருந்திருக்கும்.

கனடாவில் படித்த அபி முரளியின் முன்கோபம் பற்றி உளவள ஆலோசகரை அண்டி ஆலோசனை கேட்டிருக்கலாமே?  ஏன் செய்யவில்லை?

அபி மேடையில் நடனம் ஆடும் போது பக்க வாத்தியக்காரர்கள் யாரையும் காணோம். அவையோரும் இல்லை. உண்மையான நடன அரங்கேற்றக் காட்சிகளை சொருகிக் காட்டியிருக்கலாம். வேறொன்றும் இல்லை. கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கும்.

படத்தில் மருந்துக்கும் எண்பாண் சுவையில் ஒரு சுவையான  நகைச்சுவை இல்லை. ஒரே இடத்தில் மட்டும் ஒருவர் தனது மனைவி “போய்விட்டா” என்று இரட்டைப் பொருளில் பேசும் கதாபத்திரம் (திவ்வியராசன்) வருகிறது.  அந்தக் காட்சி சற்று  விரசமாக இருந்தது. விதி விலக்கை விதியாகக் காட்டுவதை எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பது தெரியவில்லை.

வாழ்க்கையில் விதி, விதிவிலக்கு என்று இரண்டு இருக்கிறது.  இடதுசாரி மனப் போக்குடைய படைப்பாளிகள் விதிவிலக்கைத்தான் காட்ட முனைகிறார்கள். நூறில் 99 விழுக்காடு திருமணங்கள் பேரளவு இல்லாவிட்டாலும் ஓரளவு நன்றாகத்தான் இருக்கின்றன. பின் எதற்காக அந்த ஒரு விழுக்காட்டை மட்டும் தூக்கிப் பிடித்துக் காட்ட வேண்டும்?  திருமணம் என்றால் அது மணமுறிவில்தான் போய் முடியும் என்பது யதார்த்தமா?  எதிர்மறைக்குப் பதில் நேர்மறையாக வாழ்க்கைப் போராட்டத்தில்  எதிர் நீச்சல் அடித்து வெற்றி பெற்ற ஒரு குடும்பத்தின் கதையைப் படமாக்கினால் என்ன?

முரளியை எடுத்துக் கொள்ளுங்கள். அவனைப் போலவே  அதிகம் படியாத, ஆங்கில அறிவு அறவே இல்லாத இளைஞர்கள் தன்னந்தனியே கனடாவுக்கு வந்து கயிட்டப்பட்டுப் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய தொழில் பார்க்கவில்லையா?  எனக்குத் தெரிந்த ஒருவர் கனடாவுக்கு வந்து கள்ளமாக இன்னொருவர் பெயரில் முதல் முதலாகப் பார்த்த வேலை உணவகத்தில் சமையல் வேலை. அந்த உணவகம் எதிர்பாராமல் மூடப்படுகிறது. அதுதான் தருணம் என்று சொல்லி சென்ரீனியல் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் டிப்லோமா படிப்புப் படித்து இன்று ஆண்டொன்றுக்கு 90,000 வெள்ளிப் பணம் சம்பளமாகக் பெறுகிறார். வீடுவாசல், கார் என்று மாலோகமாக இருக்கிறார். இப்படி வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர்களைப் பற்றி ஏன் படம் எடுக்கக் கூடாது? நெல்லை விட்டு விட்டு அதற்குள் தப்பித்தவறி இருக்கும் பதர் பற்றித்தான் கவலைப் படுவீர்களா?

உறவு படத்தில்  இப்படியொரு குடும்பத்தின் கதையை சமாந்திரமாக நுழைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் திரைப்படத்தில்  சமன்பாடு இருந்திருக்கும்.

படம் முழுவதும் யாழ்ப்பாண பாணியில் எழுதப்பட்ட உரையாடல் இயல்பாகவும் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.  படத்தின் வெற்றிக்கு நடிப்பு, உரையாடல், இசை,  பாடல்கள், காட்சி அமைப்பு முக்கிய காரணிகள்.  

திவ்வியராசன் ஒரு விதி விலக்கான கதையை மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு நல்லதொரு கலைப் படமாகத் தயாரித்து, நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளார். அவருக்கு மட்டும் கோடம்பாக்கில் உள்ள வசதிகளில் நூறில் ஒரு பங்கு வசதி கிடைத்திருந்தால் ஆளைப் பிடித்திருக்க முடியாது!

முடிவாக மனதில் ஒரு நெருடல். இந்தக் கதையின் மூலம் கதாசிரியர் – உரையாசிரியர் – இயக்குநர் – என்ன சொல்ல வருகிறார்? ஒரு உயிரைக் காப்பாற்ற உறவுக்குள் பேசிச் செய்யும் திருமணம் வெற்றிபெறாது?   படித்தவனுக்கு கலை இரசனை வராது?  கனடா சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாது? 

படத்தில் பங்கெடுத்துக் கொண்ட எல்லா நடிகர்கள், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் எல்லோருக்கும் பாராட்டுதல்கள்!

athangav@sympatico.ca