போலிச் செய்தி எனும் போர்க் கருவி!

எழுத்தாளர் க.நவம்‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .

போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது. 

முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.

மனதில் வன்மம் நிறைந்தோர், வக்கிரபுத்தி மிக்கோர், போட்டி-பொறாமை கொண்டோர் உட்பட, உள்ளடக்கத்தைப் பற்றிய அக்கறையின்றி, அதிக ‘க்ளிக்’ பெற்றுப் பணம்பண்ண ஆசைப்படுவோர், டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாகப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய மசெடோனியன் வளரிளம் பருவத்தினர் போல, தனிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்கும் விருப்புடையோர், ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புவோர், வாசகர்களைக் குதூகலப்படுத்தவென நக்கல் – நையாண்டி செய்வோர், தரமற்ற அல்லது பயிற்றப்படாத ஊடகவியலாளர், ஊடகத்துறைசார் அனுபவமற்றவர்கள், ஊடகவியல் நியமங்களை அல்லது அறநெறிகளைப் பின்பற்றாதோர், அரசியல் நம்பிக்கைகள், கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்த நினைக்கும் ஒருதலைப்பட்சமானோர் எனப் பலரும் போலிச் செய்திகளை உருவாக்கிப் பரவ விடுகின்றனர். 

இத்தகைய செய்திகள் பரவுவதற்கு, பிரதிபண்ணல், வெட்டி-ஒட்டுதல், ’கிளிக்’ செய்தல், இணையத்தளங்களில் பகிர்தல் போன்ற தொழில்நுட்ப வசதி வாய்ப்புக்கள் உதவுகின்றன. மனவெழுச்சியையும் கிளுகிளுப்பையும் தூண்டும் வகையில் சில செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் சில இணையத்தளங்களில் அவை பதிவிடப்பட்டு வாசகர்களை வசீகரித்து, அவர்களை மேலும் பகிரத் தூண்டுகின்றன. சில வேளைகளில் மனிதர் தகவல் பகிர்வது போலான அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறை மூலம், போலிச் செய்திகள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இம்முறையானது மிக விரைவானதாகவும் தானியங்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால், போலிச் செய்திகளின் பரம்பலைத் துரிதப்படுத்தி விடுகின்றது. உண்மைச் செய்திகளைப் பயன்படுத்தி, ஒரு போரினை வெல்லலாம்; தேர்தலில் வெற்றிபெறலாம். அவ்வாறான வெற்றிக்குப் போலிச் செய்திகளும் சுலபமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. காரணம், உண்மைச் செய்திகளைவிட போலிச் செய்திகள் எளிதில் போக்கிடம் போய்ச் சேரவல்லன. 

போலிச் செய்திகள் உருவாக்கம் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. இதற்குப் பக்கதுணையாக நின்று உதவுகின்ற தொழில்நுட்பம், பல நல்ல விஷயங்களுக்கு உதவி வருகின்ற போதிலும், சில சந்தர்ப்பங்களில் இது தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. தனிநபர்களுக்குத் தொல்லை, தொந்தரவு உண்டாக்கவோ அல்லது அரசியல், சமூக, பண்பாட்டு அடிப்படையில் தீங்கு விளைவிக்கவோ இது பயன்படுத்தப்படுகின்றது. தொழில்நுட்ப உதவியுடன் உண்மையான ஒரு செய்தி வெளிவந்தாலும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. மேலும் போலிச் செய்திகளுக்குக் கண்கவரும் வகையில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன. போலிச் செய்தி என்பது உண்மை இல்லாததை இதுதான் உண்மை என்று திணிக்கும் ஆரோக்கியமற்ற செயற்பாடு. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உண்மைச் செய்தி போல தெரியும் போலிச் செய்திகளை மி்கவும் ஒழுங்குபடுத்திப் பரப்புகிறார்கள். அவற்றின் தலைப்புகளை மட்டுமே பலரும் படிக்கிறார்கள். அவற்றையே நம்புகிறார்கள். நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் பகிரும் செய்தியை அதிகம் ஒப்புக்கொள்கிறார்கள். செய்திகளின் மூலம், உண்மை, உள்ளடக்கம் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. 

போலிச் செய்தியை ஒரு போராயுதமாகப் பயன்படுத்தும் போக்கு காணப்படுவதால், அதை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகை துறையில் பணியாற்ற அடிப்படை பயிற்சி அவசியம். சேகரிக்கும் தகவல்களைச் சரிபார்க்கும் நுட்பத்தை புரிந்து கொண்டு, சமூகத்துக்கு உண்மையான தகவல்களை மட்டுமே தரவேண்டும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் தவறான தகவல்களைச் சரி பார்க்காமல் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. போலிச் செய்திகளைத் தடுக்க சகலரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் அப்பாற்பட்டவர்களல்ல. ஊடகத்திற்கும் முழுப்பொறுப்பு உண்டு. எழுதுகிற ஒவ்வொரு செய்திக்கும் எழுதுகிறவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ஊடகத்தில் செய்திகள் சட்டவிதிகள் இருப்பதுபோல, சமூக ஊடகத்திலும் செய்திகளைப் பகிரும் போதும் அவற்றைக் கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கேலிகள் அல்லது கிண்டல்கள் குறித்து, உடனடியாக முறைப்பாடு செய்தல் வேண்டும். சில சமயம் சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே அவ்வாறு சிலர் கேலிசெய்து சேறுபூசி, அவமதிப்பதையே திட்டமிட்ட தொழிலாகக் கொண்டுள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உரிய சட்டத்தை கொண்டுவருதல் மூலம், இப்போலிச் செய்திகளைத் தடுக்க முடியும். இதேவேளை, புனைவுகளைப் பொய் என்று வகைப்படுத்த முடியாது; அங்கதமும், கிண்டலும், கேலியும் உண்மையல்ல. இலக்கியக் கற்பனை, நகைச்சுவை, கேலி ஆகியவற்றுக்காகப் பொய் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் பொய்களைப் பரப்ப எவருக்கும் உரிமையில்லை. எனவே இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வெளியாகும் செய்திகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் சட்டம் வரையப்படுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே கூறவேண்டும்! 

எந்த செய்தியையும் இருமுறை யோசித்து, விமர்சனப்பாங்குடன் அவதானித்தல், கேலிக்காக அனுப்பப்பட்ட செய்தியா என உறுதிசெய்தல், தகவலின் துல்லியத் தன்மையைக் கண்டறியும் மூலோபாயங்களைப் பயன்படுத்துதல், சந்தேகமிருப்பின் பகிராது, ஆதாரம் என்ன? எப்போது செய்தி வந்துதது? யார் எழுதியது? பக்கசார்பானதா? எனப் பார்த்தல், நிபுணர்களிடம் கேட்டறிதல், உண்மை சரிபார்க்கும் Snopes.com, Factcheck.org போன்ற இணையதளங்களைப் பயன்படுத்துதல் மூலம், படிக்கும் செய்தி உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிதல் வேண்டும். 

ஆதிகாலம் முதற்கொண்டு போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன; போரில்கூட, உண்மையே முதலில் படுகொலை செய்யப்படுகிறது; மஹாபாரதப் போரிலும் போலிச் செய்தி கையாளப்பட்டுள்ளது. துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக, கண்ணன் பரப்பிய போலிச் செய்தியால்தான் துயருற்ற துரோணரைப் பாண்டவர்கள் கொன்று, பாரதப் போரை வென்றனர்; ’பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என வள்ளுவரும் கூறுகின்றார்; எனவே போலிச் செய்தியை அழிப்பது கடினம் எனச் சிலர் வாதிடுவர். ஆனால், போலிச் செய்திகள் எப்போதும் ‘குற்றமில்லா நன்மை’ பயக்கின்ற தன்மை கொண்டயவையல்லவே! அதனால்தான் அதே வள்ளுவர் ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என இன்னோரிடத்தில் சொன்னார் என்பது மனங்கொள்ளத்தக்கது!

ஆதாரங்கள் –
James Carson, ‘Fake news: What exactly is it…?’ –  The Telegraph
Dara Lind, ‘President Donald Trump finally admits…’ – Vox
https://www.bbc.com/tamil/global-46177670 
https://guides.lib.umich.edu/fakenews

Navam K Navaratnam <nknavam@gmail.com>