மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். ‘தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி’டாத கவிஞனவன்.  தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘பதிவுகள்’ அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.

 1. பாரத சமுதாயம் 
 
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய  (பாரத) 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
      முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
      உலகத் துக்கொரு புதுமை-வாழ்க  (பாரத) 
 
மனித ருணவை மனிதர் பறிக்கம்
      வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
      வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
      வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
      வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
      எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
      கணக்கின் றித்தரு நாடு-இது
      கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
      கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!  (பாரத) 

இனியொரு விதிசெய் வோம்-அதை
      எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
      ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!  (பாரத) 

“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
      இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
      இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
      இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க!  (பாரத) 

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
      எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க 


2 விடுதலை! விடுதலை!  விடுதலை!  

பறைய ருக்கும் இங்கு தீயர்
      புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
      மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
      தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
      வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை!  (விடுதலை) 

ஏழை யென்றும் அடிமை யென்றும்
      எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
      இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
      மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
      மான மாக வாழ்வமே!  (விடுதலை) 

மாதர் தம்மை இழிவு செய்யும்
      மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
      வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
      ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
      வாழ்வம் இந்த நாட்டிலே! 


3.  தமிழ் 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.  1 
 
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!  2 
 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3 
 
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார். 


4.  சுதந்திரப் பள்ளு

ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று 

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே  (ஆடுவோமே) 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே  (ஆடுவோமே) 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்  (ஆடுவோமே) 

நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். 


5. நடிப்புச் சுதேசிகள்
 
 நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி,
      வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
      வாய்ச் சொல்லில் வீர ரடீ  

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
      நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
      நாளில் மறப்பா ரடீ! 

சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
      அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
      அலிகளுக் கின்ப முண்டோ?   
 
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
      பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
      பேசிப் பயனென் னடீ!
 
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
      மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
      மாங்கனி வீழ்வதுண் டோ? 
 
உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
      செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
      செய் தறியா ரடீ! 

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
      நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
      நம்புத லற்றா ரடீ! 
 
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
      பேதைகள் போலுயி ரைக்-கிளியே
      பேணி யிரந்தா ரடீ!  
 
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
      ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
      அஞ்சிக் கிடந்தா ரடீ! 
 
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
      உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
      ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
      மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
      வாழத் தகுதி யுண்டோ?

மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
      ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
      இருக்க நிலைமை யுண்டோ? 

சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
      வந்தே மாதர மென்பார்!-கிளியே!
      மனதி லதனைக் கொள்ளார்   

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
      பழமை இருந்த நிலை!-கிளியே!
      பாமர ரேதறி வார்!   
 
நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
      தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
      சிறுமை யடைவா ரடீ! 
 
சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
      சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
      செம்மை மறந்தா ரடீ! 
 
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
      துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
      சோம்பிக் கிடப்பா ரடீ!
 
தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
      வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
      வந்தே மாதர மென்பார்


6. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,


7. சிட்டுக் குருவியைப் போலே
 
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு                              

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு                                            

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.    


8. மழை
  
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!


9. சுய சரிதை

கனவு
 
“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே”.  -பட்டினத்துப் பிள்ளை

முன்னுரை

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!

வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரநிலை யென்றவர்
பகரும் அநநிலை பாத்திலன் பார்மிசை
ஊழ்க டந்து வருவதும் ஒன்றுண்டோ?
உண்மை தன்னிலோர் பாதி யுணர்ந்திட்டேன்.

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கியி டர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்;இதனிடை
சிலதி னங்க்ள் உயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாகம யக்குமால்;
திலத வாணுத லார்தரு மையலாந்
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே.

ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னொ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்.
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.

பிள்ளைக் காதல்

அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்த மிழ்ச்சொலில் எவ்வணம் சொல்லுகேன்?
சொன்னந தீங்கன வங்குத் துயிலிடைத்
தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்;
மென்ன டைக்கனி யின்சொற் கருவிழி
மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்
கண்டு காதல் வெறியிற் கலந்தனன்.

‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
கோது காதைச சகுந்தலை யொத்தனள்’
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன்? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்ட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?

வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டுடைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேற்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மானணம்
நண்ணு பாலர் த்மக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே.

கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்;
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே.

நீரெ டுத்து வருதற் கவன்மணி
நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குக் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையுயிர்ச் சாரர்கள்
தேச பத்ர் வரனைக் காத்தல்போல்,

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழு புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழீத் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்.

புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெ றல் திண்ணம தாமென,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே.

சூழு மாய வுலகினிற் காணுறுந்
தோற்றம் யாவையும் மானத மாகுமால்;
ஆழு நெங்சகத் தாசையின் றுள்ளதேல்,
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்.
தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினக் கஞ்சுவோர்,
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே

விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்.

கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ?
என்ன டத்தவள் இங்கிதம் பூண்டதே!

காத லென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
கடலில் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தரப் பெற்றிடு மாந்தரே;

மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி
மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
காட்சி யற்ற கவினுறு நீள்விழி.
பொய்க்கி ளைத்து வருந்திய மெய்யரோ,
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துய்க்
காத லஃது கருதவுந் தீயதால்.

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோம்,
பண்டைத் தேவயுகத்து மனிதர்போல்,
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும்,அறிந்திலோம்.

கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும்,ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்,
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன கத்த மணிமொழி யாளொடு
தெவ் நாட்கள் சிலகழித் தேனரோ?

ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபந்த தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
கொற்க ளாடி யிருப்ப, மற் றங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
பங்க யக்கையில் மைகொணர்ந்தே,‘ஒரு
சேதி!‘நெற்றியில் பொட்டுவைப் பேன்’என்றாள்;
திலத மிட்டனள்; செய்கை யழிந்தனன்.

என்னை யின்றெனக் கைந்து பிராயத்தில்
ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன்,செந்தமிழ்ச் செய்யுளால்
மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்,
அன்ன வன்தவப் பூசனை தீர்ந்தபின்
அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்.

ஆங்கிலப் பயிற்சி

நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும்,எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை.

நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
நாயென னத்திரி யொற்றர் உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடி யர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்.
கலைப யில்கென என்னை விடுத்தனன்.
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ?

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார்.

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்.

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!

சூதி லாத வுளத்தினன் எந்தைதான்
சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லார்தருங் கல்விப் படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்

ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்
காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன் கேட்பிரேல்;
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளம்நொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென்
அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்.

செலவு தந்தைக் கோ ராயிரஞ் சென்றது;
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே!

மணம்

நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசும தன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்;
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்;
அம்ம! மாக்கள் மணமெனுஞ் செய்தியே.
வினைத்தொ டர்களில் மானனட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ!

வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்;
மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்;
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்,
கூடு மாயிற் பிரம சரியங்கொள்;
கூடு கின்றில தென்னிற் பிழைகள்செய்து
ஈட ழிந்து நரக வழிச்செல்வாய்;
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி னும்பெறல் சால வரிதுகாண்,
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்
புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்கலிர்,காளையீர்!
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்.

வேறு தேயத் தெவரெது செய்யினும்
வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்,
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செய்ல மட்டினம்
நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே.

பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடுகு லங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூடப் புலையர்தாம்,
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னு மோராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகெனத் தோன்றுமே!

ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்குந் திறனில் னாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்

மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின!

மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அரம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்.

சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்,
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்;
செய்து மற்றவை ஞான நெறியென்பர்;
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?

தந்தை வறுமையெய்திடல்

ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
எய்திய நின்றனன்,தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெருங்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்;
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்;
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்,
வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்;
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்;
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன்.

தீய மாய வுலகிடை யொன்றினில்
சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்;
நேய முற்றது வந்து மிகமிக
நித்த லும்மதற் காசை வளருமால்
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே.

‘ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
ஆழ்ந்த பின்னங் கமைதியுண்டாமென
மோசம் போகலிர்’என்றிடித் தோதிய
மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்
தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான்
திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்.

பொருட் பெருமை

“பொருளி லார்கிலை யிவ்வுல” கென் றநம்
பிலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்;
பொருளி லார்க்கின மில்லை துணையிலை,
பொழுதே லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்,
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்;
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்;
மாமகட் கிங்கொர் ஊன முரைத்திலன்.

அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்;
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடி!நினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.
தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம்;ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்

வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான்
மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ!சிறி துண்மை விளங்குமன்,
ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல்
பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்.

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்;
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
திறனு மில்லை;உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின் றதாம்
மடமைக் கல்வியில் மண்ணும்பயனிலை.
எந்த மாக்கமும் தோற்றில தென்செய்கேன்?
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?

முடிவுரை

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்;இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!

ஞான முந்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்தத துயரன்றிக் காண்கிலர்;
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்;
ஆன தாவ தனைத்தையுஞ் செய்வதோர்
அன்னை யே! இனி யேனும் அருள்வையால்.

வேறு

அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினது பே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!


10. பெண் விடுலை
 
விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.

உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?

திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.

விடியும் நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?

அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்விர்நந் தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே.
 
11. பெண்கள் விடுதலைக் கும்மி
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!                                                 

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.                                                        

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                   

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                 

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                            

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                       

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!       


11. புதுமைப் பெண்
 
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!


12. பொய்யோ?மெய்யோ?

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.


13. நான் 

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்


14. சென்றது மீளாது

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா