மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) கவிதைகள் இரண்டு!

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !

– அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் –

கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !

காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !

 

அரசியலில் தூய்மைதனை
அவரிருத்த பாடுபட்டார்
அவர்பெயரால் பலரிப்போ
அழுக்கேற்ற முனைந்துவிட்டார்
காந்திசொன்ன தத்துவங்கள்
கதிகலங்கி நிற்கிறது
காந்திமகான் நாட்டிலிப்போ
கருமேகம் குவிகிறதே !

அகிம்சைக்கு இலக்கணத்தை
அண்ணல்காந்தி காட்டிநின்றார்
அகிம்சையின் இலக்கணத்தை
அரசியலார் தகர்த்துவிட்டார்
ஆனாலும் அண்ணல்காந்தி
எனும்பெயரை அரசியலார்
ஆயுதமாய் எடுத்தெடுத்து
ஆதாயம் தேடுகிறார்  !

கதியின்றி  இரத்தமின்றி
காரியங்கள் ஆற்றினார்
சட்டமதை மதித்துநின்று
சகலவற்றை நிலைநாட்டினார்
கத்திகொண்டு இரத்தமோட
காரியங்கள் ஆற்றுறார்
காந்திமகான் பிறந்தமண்ணில்
கயவர் கட்டிலேறுறார் !


- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -2. நிம்மதியே நின்பாதம் தாயே !

– நவராத்திரியை முன்னிட்டு இப்பாமாலை சமர்ப்பணம் –

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணைநீயே தாயே
உள்ளமதில் என்றும் உறுதிநிறை தாயே
உன்கமல பாதம் சரணடைந்தேன் தாயே

வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்
வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் பற்றுகிறேன் நாளும்

வாதமது செய்யும் மனமகல வேண்டும்
போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் உன்னைப் பாடிவிட வேண்டும்
கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிடு தாயே

ஆவேசம் கொள்ளுவதை அழித்துவிடு தாயே
ஆசையுடன் அலைவதைநீ அகற்றிவிடு தாயே
நீசரது சகவாசம் நீக்கிடுவிடு தாயே
நிம்மதியே எந்தனக்கு நின்பாதம் தாயே

jeyaramiyer@yahoo.com.au