‘மக்கள் எழுத்தாளர்’ விந்தன் நினைவாக ……

எழுத்தாளர் விந்தன்[எழுத்தாளர் விந்தன் (இயற்பெயர் : கோவிந்தன்) தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாதவர். அவரது ‘பாலும் பாவையும்’ நாவல் வெளிவந்த காலத்தில் முக்கிய கவனத்தினைப் பெற்றது. அவரது  ‘பாலும் பாவையும்’ நாவலினை நான் முதன் முதலில் வாசித்தது என் மாணவப் பருவத்தில். அப்பொழுதுதான் ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் ஆதித்தனாரின் தினத்தந்தி நிறுவனம் மாதமொரு நாவலென நாடறிந்த எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டு வந்தது. அவ்விதம் வெளியிட்டு வந்த முதல் பத்து அல்லது பன்னிரண்டு நாவல்களை அப்பா வாங்கியிருந்தார் – தமிழகத்திலிருந்து வெளிவரும் வார, மாத சஞ்சிகைகளான ‘விகடன்’, ‘கல்கி’, ‘கலைமகள்’, ‘அம்புலிமாமா’, ‘தினமணிக்கதிர்’, ‘மஞ்சரி’, ‘ராணி’ ஆகியவற்றுடன் ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற பத்திரிகைகளையும் அவர் வாங்கிக் கொண்டிருந்தார். ‘பொன்மலர்’ , ‘பால்கன்’ போன்ற காமிக்ஸ் சஞ்சிகைகள் அச்சமயத்தில் மாதாமாதம் மிகவும் அழகாக வெளிவந்து கொண்டிருந்தன. அத்துடன் ‘இந்திரஜால் காமிக்ஸ்’ வேறு.  அவற்றையும் எங்களுக்காக அவர் வாங்கித் தந்தார். இவற்றையெல்லாம் நாட்டுச் சூழல் பின்னர் அழித்துவிட்டது. இது தவிர அவர் ஆங்கில நூல்களைக் கொண்ட சிறியதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவற்றில் ‘கிரகாம் கிறீன்’, ‘பி.ஜி.வூட் ஹவுஸ்’, ‘ருட்யார்ட் கிப்ளிங்’, ‘டால்ஸ்டாய்’, ‘இர்விங் ஸ்டோன்’, ‘தோமஸ் ஹார்டி’, ‘சேக்ஸ்பியர்’, டி.எச்.லாரன்ஸ், ‘ஏர்னஸ்ட் ஹெமிங்வே’, ஆர்.கே.நாராயணன் …. எனப் பலரின் நாவல்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்த அவர் நன்கு எழுதும் ஆற்றல் மிக்கவராகவிருந்தும் வாசிப்புடன் நின்று விட்டார். அன்றைய காலகட்டத்தில் விகடன், தினமணிக்கதிரில் வெளிவந்த ஜெயகாந்தனின் எழுத்துகளை மிகவும் விரும்பிப் படிப்பார்.  – இவ்விதமாக ஆரம்பத்தில் வெளிவந்த ‘ராணிமுத்து’ நாவல்களிலொன்றுதான் விந்தனின் ‘பாலும் பாவையும்’. அப்பொழுதுதான் முதன் முறையாக விந்தனை நான் அறிந்து கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஆரம்பத்தில் வெளியான ராணிமுத்து நாவல்களில் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன: அறிஞர் அண்ணாவின் ‘பார்வது பி.ஏ’, ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, மாயாவியின் ‘வாடாமலர்’, கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’, அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’, சி.ஏ.பாலனின் ‘தூக்குமர நிழலில்’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார் கதைகள்’ …  இதனைத் தொடர்ந்து விந்தனை நான் அறிந்து கொண்டது தினமணிக்கதிர் வாயிலாக. தினமணிக் கதிரில் அவர் ‘பாகவதர் கதை’, ‘கிட்டப்பாவின் கதை’ மற்றும் ‘விக்கிரமாதித்தன் கதைகள்’ ஆகிவற்றைத் தொடராக எழுதியிருந்தார். தமிழ் சினிமாத் துறையிலும் கால்பதித்த எழுத்தாள முன்னோடிகளில் விந்தனும் முக்கியமான ஒருவர். விந்தனின் பிறந்த தினம் செப்டெம்பர் 22. இச்சமயத்தில் அவரை ‘பதிவுகள்’ நினைவு கொள்கிறது. அதன் விளைவாக அவ்வப்போது இணையத்தில் வெளியான எழுத்தாளர் விந்தன் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. –  ஆசிரியர், ‘பதிவுகள்’]

விந்தன்

– கிருஷ்ணன் வெங்கடாசலம் –  

எழுத்தாளர் விந்தன்விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916ல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூட தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறிய சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக்கல்லூரியிலும், சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது. ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக்கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விகடன் வேலையை விட்டு விலகிச் சென்றவருக்கு, ‘கல்கி’ நிறுவனம் கை கொடுத்தது. ‘கல்கி’யில் அச்சுக்கோப்பாளராகச் சேர்ந்தார். ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. ‘கல்கி’யின் அறிவுரையின் பேரில் கோவிந்தன் என்கிற தன் பெயரை ‘விந்தன்’ என மாற்றிக் கொண்டார். ‘கல்கி’யின் ஆரம்பத்தில் சிறுவர்களுக்குக்கான பகுதியில் பல கதைகள் எழுதினார். விந்தனின் எழுத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி. விந்தனை ‘கல்கி’ பத்திரிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். துணை ஆசிரியராக இருந்தபொழுது விந்தன் எழுதிய எழுத்துக்கள் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றன.

1946ல் தமிழ்நாட்டில் அரசாங்கத்தாரால் தமிழ்வளர்ச்சிக் கழகம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்துக்கான விருதை, இந்தக் கழகம் இந்த ஆண்டிலிருந்து வழங்க ஆரம்பித்தது. இதே ஆண்டில் வெளிவந்த விந்தனின் முல்லைக்கொடியாள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு இந்தப் பரிசைப் பெற்றது.அக்காலத்தல் ‘பொன்னி’ என்றொரு இலக்கியப் பத்திரிகை புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ‘கண் திறக்குமா’? என்ற தொடர்கதையை எழுதினார். இதன்பிறகுதான், அப்போது வேலை பார்த்து வந்த ‘கல்கி’யில் விந்தனின் புகழ்பெற்ற நாவல் ‘பாலும் பாவையும்’ தொடராக வெளிவர ஆரம்பித்து மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது.

விந்தன் ஆக மொத்தம் ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.

1. கண் திறக்குமா?
2. பாலும் பாவையும்
3. மனிதன் மாறவில்லை
4. காதலும் கல்யாணமும்
5. அன்பு அலறுகிறது
6. சுயம்வரம்

இவைகள் தவிர, சுமார் 90 சிறுகதைகள். சில கட்டுரைகள் எம் கே தியாகராஜபாகவதர் கதை, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘சிறைச்சாலை சிந்தனைகள்’ என்கிற தலைப்பிலும் எழுதியுள்ளார். இவரது எழுத்துலக வாழ்க்கை எப்பொழுதுமே நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. பெரியகுடும்பம். முதல் மனைவி மூலம்இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மனைவியிடம் ஆறு குழந்தைகளும். வாழ்க்கையைப் போராட்டத்திலேயே கழித்திருக்கிறார். ஆனாலும் அந்த வறுமையை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டாற்போல்தான் தோன்றுகிறது.

வாழ்க்கை வளத்தை சற்றேனும் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இவரது பார்வை திரைப்படம் பக்கமும் திரும்பியிருக்கிறது. டி ஆர். ராமண்ணாவின் ஆர் ஆர் பிக்சர்சாரின் ‘வாழப்பிறந்தவன்’ என்னும் திரைப்படம் 1953ல் வெளி வந்தது. இப்படத்திற்கு விந்தன் வசனம் எழுதினார். ‘அன்பு’ என்கிற படம் இதன் கதை வசனம் மற்றும் பாடல். இப்படத்தில் சிவாஜி-பத்மினி ஜோடி. இப்படமும் 1953 லேயே வெளிவந்தது.

1954ல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ‘கூண்டுக்குளி’. இதில் எம்ஜியார். சிவாஜி இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்திற்கான வசனத்தை விந்தன் எழுதியிருந்தார். அத்துடன் அருமையான சில பாடல்களும் இயற்றியிருந்தார். சரியா, தப்பா? என்கிற பாடல் மிகவும் பிரபலமாயிற்று

‘கொஞ்சம் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கிவிட்டு,
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா, தப்பா?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமென்றால்
கண்ணைப்படைத்த கடவுள் செய்கை
சரியா, தப்பா?
என பற்பல சரியா, தப்பா கேள்விகள் போட்டு எழுதப்பட்ட இப்பாடலை டி எம் சௌந்திரராஜன் வெகு அருமையாகப் பாடியிருந்தார்.

‘குலேபகாவலி’ என்றொரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்தார்கள். ஆர் ஆர் பிக்சர்சார். இப்படம் 1955ல் வெளி வந்தது. இப்படத்திற்குச் சில பாடல்களை எழுதியிருந்தார் விந்தன். அதில் குறிப்பாக ஒரு பாடல் மாபெரும் வெற்றியடைந்து மிகவும் பிரபலமாயிற்று. இப்பாடல் இன்று வரையிலும் பல்வேறு மேடைகளில் பாடப்பட்டும் வருகிறது.

‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா…

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் பின்னாளில் இவர்களுக்குக் கிடைக்க ஆதாரமாக அமைந்த மிக அருமையான பாடல்.

இதற்கிடையில் 1954ல் சொந்தமான ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். ‘மனிதன்’ என்று பெயர். மிக அருமையான இதழ். இதை, வெளி வந்த காலத்திலேயே படிக்கும் வாய்ப்பு இக் கட்டுரையாளருக்குக் கிடைத்தது. இந்த மனிதன் இதழில் வெளிவந்த தெருவிளக்கு என்னும் தொடர் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

‘சினிமா’ ஆசை விடவில்லை. தொடர்ந்து சில படங்களுக்கு வசனம், பாடல் போன்றவை எழுதினார். இதில் மணமாலை, பார்த்தீபன் கனவு, குழந்தைகள் கண்ட குடியரசு போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஒரு சமயம் பதிப்பகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். ‘புத்தகப்பூங்கா’ என்று பெயர். சில நல்ல எழுத்தாளர்களின் கதைகளை நூல் வடிவில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நூல் ஜெயகாந்தனின் சில கதைகள் அடங்கிய ‘ஒரு பிடி சோறு’ என்னும் நூல்.

சில காலம் ‘தினமணி கதிரில்’ வேலை பார்த்தார். அந்த வேளையில்தான் எம் கே தியாகராஜபாகவதர், எம் ஆர். ராதா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

விந்தன் 1975 ஜுன் மாதம் காலமானார். எழுத்துலகில் ஒரு சாபக்கேடு உண்டு. தகுதியுடைய எழுத்தாளர்கள் பலர் போதிய கவனமோ, பாராட்டுதல்களோ இல்லாமல் புறக்கணிக்கப்படுவதும், தகுதி குறைந்தவர்கள், தகுதிக்கு மேலாகப் பாராட்டப்படுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இம்மாதிரி உரிய கவனமின்றி, தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்து வரும் எழுத்தாளர்கள் சிலரில் விந்தனும் ஒருவர், ‘அமுதசுரபி’ இதற்கு விதிவிலக்கு!

நன்றி : கூடு http://koodu.thamizhstudio.com/thodargal_8_16.php

 


 

“மக்கள் எழுத்தாளர்’ விந்தன்

– தமிழ்மணி –

எழுத்தாளர் விந்தன்எழுத்துலகில் “விந்தன்’ என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் “தமிழுக்கும் அமுதென்று பேர்’  என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

“தமிழரசு’க்குப் பிறகு “ஆனந்த விகடன்’ அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. அச்சகத்தின் நுணுக்கம் அறிந்த டி.எம்.ராஜாபாதர் என்பவர் கோவிந்தனுக்கு நண்பரானார். கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்த “விந்தன்’ என்ற கோவிந்தன் வாழ்க்கையோடு போரிடும் சமூகப் போராளிகளைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கவலைப்படுவதில் வியப்பில்லை.

1938-ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

“கல்கி’யால் 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “கல்கி’ இதழ், விந்தன் வாழ்க்கையில் புது வெளிச்சமும் திருப்பமும் ஏற்படுத்தியது.  ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.ராஜாபாதர், விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார்.

தன் கையெழுத்தைப் பற்றி “எனக்கும் கடவுளுக்கும்தான் புரியும்’ என்று அடிக்கடி “கல்கி’ சொல்வார். கல்கியின் கையெழுத்தைப் புரிந்து கொண்ட விந்தன், பிழையே இல்லாமல் அச்சுக் கோத்தார். “காலி’ புரூப்பில் பிழைகளைத் திருத்துவதுடன் புதிதாகவே கதை எழுதும் அளவுக்கு வாக்கியங்களைச் சேர்க்கும் விந்தனின் திறமையைக் கண்டு கல்கிக்கு வியப்புத் தாங்கவில்லை. “வீணை பவானி’யை அச்சுக் கோப்பவர் யார் என்று ராஜாபாதரை கேட்க, ராஜாபாதர் நிஜமாகவே அச்சம் கொண்டார். கதையில் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று பயந்து விந்தனை “கல்கி’யின் முன் கொண்டு நிறுத்தினார்.

கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, விந்தன் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, “கல்கி’ இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) “விஜி’ என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை “விந்தன்’ என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் “கல்கி’ கிருஷ்ணமூர்த்திதான்.

1946-இல் விந்தன் எழுதிய “முல்லைக் கொடியாள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. சிறுகதை நூலுக்கு முதன் முதலாக வழங்கிய பரிசு அதுதான்.

விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு  ஏற்பட்டதால், “பொன்னி’ மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார். “கண் திறக்குமா?’ என்ற கதையை 1947-இல் “நக்கீரன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார்.

“பாலும் பாவையும்’ என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். “பாலும் பாவையும்’ விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், பாலும் பாவையும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த “வாழப் பிறந்தவள்’ படத்துக்கு வசனமும், “அன்பு’  படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், “கூண்டுக்கிளி’ என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

“குழந்தைகள் கண்ட குடியரசு’, “பார்த்திபன் கனவு’ திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

அவர் ஒருமுறை தன் வாழ்க்கையைப் பற்றி அமைதியாக சிந்தித்துக் கூறினார்.

“”என் வாழ்க்கையில் 1946-ஆம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசு முதன் முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான “பாலும் பாவையும்’ என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது. இந்த நிலையில், “பாலும் பாவையும்’ நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், சிறுகதைகள், பல கட்டுரைத் திரட்டுகள் வெளி வந்திருக்க வேண்டும். வரவில்லை ஏன்? காரணம் வேறு யாருமல்ல; நானே!”

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு “புத்தகப் பூங்கா’ என்ற பதிப்பகமும் “மனிதன்’ என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன்.

“பாலும் பாவையும்’ போன்ற புதுமைக் கருத்துடன் கூடிய நாவலையும் “வேலை நிறுத்தம் ஏன்?’ என்ற கட்டுரையும் மற்ற கட்டுரைகளும் எழுதிய விந்தன், “அன்பு அலறுகிறது’, “மனிதன் மாறவில்லை’ என்ற இரு நாவல்களை எழுதியதால், பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானேன்” என்று ஒரு சமயம் எழுதியது சுயமரியாதையை விரும்புபவர் அனைவரையும் கலங்க வைக்கிறது.

விந்தனின் இறுதிக் காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழில் ஏழை எளியவர்களை, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்துச் சிறுகதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர். தனது எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

பிரபல எழுத்தாளர் “சாவி’ ஆசிரியராக இருந்த “தினமணி கதிர்’ இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் விந்தனை உதவி ஆசிரியராக நியமித்து கதிர் பத்திரிகைக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தார்.

“”எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும் அல்லது திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நன்று” – அமரர் கல்கி, விந்தனுக்கு வழங்கிய அறிவுரை இது. விந்தன் எழுதி எழுதியே பாராட்டுகளை, திட்டுகளை அதிகம் பெற்றவர்.

மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி காலமானார். அவரின் 60வது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நண்பர்கள் குழுவினர் திட்டமிட்டது நிறைவேறவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அவர் வாழ்ந்த தெருவான ஹாரிங்டன் சாலையின் ஒரு பகுதிக்கு “மக்கள் எழுத்தாளர் விந்தன் சாலை’ எனப் பெயரிட வேண்டும் என்று எழுத்தாளர்கள் குரல் கொடுத்து ஓய்ந்து விட்டார்கள்.

கட்சித் தியாகிகள் பலரின் பெயரை இடும் அரசு, இந்த நற்பணியைச் செய்து உழைப்பால், ஊக்கத்தால் உயர்ந்த ஓர் எழுத்தாளனின் பெயரை என்றும் நினைவிருக்கச் செய்யுமா?

நன்றி: தினமணி http://www.dinamani.com/

 


 

“பாலும் பாவையும்”–விந்தன்

– ‘பூ வனம்’ ஜீவி –
 
எழுத்தாளர் விந்தன்தமிழ் எழுத்துலகில் எளிய சாதாரண மக்களை கதாப்பாத்திரங்களாக்கி சாதித்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால், புதுமைப்பித்தனிலிருந்து சரேலென்று நேரே ஜெயகாந்தனுக்கு வந்து விட முடியாது. நடுவில் ஒருவர் இருக்கிறார். விட்டுவிட முடியாத ஆசாமி. அவர் தான் விந்தன். விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். ‘விஜி’ என்று எழுதத் தொடங்கியவரை விந்தனாக்கியது அமரர் கல்கி. சாதாரண ஏழை எளிய மக்களை தம் கதைமாந்தராக்கி, அவர்களது ஆசை அபிலாஷைகளை அழகாக, அற்புதமாக, நெஞ்சில் தைக்கிறமாதிரிச் சொன்னவர் விந்தன். எழுத்தாளர்களில் எத்தனையோ விதம். விந்தனின் நிலைமை, எழுதினால் தான் அடுத்த வேளைக்கு வீட்டில் அடுப்புப்புகையும் என்கிற நிலை. அதனால் தான் பட்டதுயரை போலியாக அல்லாமல், யதார்த்தமாக அவரால் எழுதமுடிந்தது. சுருங்கச் சொன்னால் கதைக்காக யோசிக்க வேண்டியதில்லை; ‘கரு’கிடைக்கக் காத்திருக்க வேண்டியதில்லை; அனுபவித்து அல்லல் பட்ட வாழ்க்கையே கதைகளாயிற்று.

அதிகம் பள்ளிப்படிப்பு படித்தவரில்லை; வாழ்ந்த வாழ்க்கையே கல்வி கொடுத்த பள்ளிக்கூடமாயிற்று. உண்மையிலேயே சொல்லவேண்டுமானால், ‘கல்கி’ பத்திரிகையில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் கோவிந்தன். சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளி. கல்கியின் எழுத்துக்களைப் புரிந்துகொண்டு அச்சுக்கோர்த்தவர். கல்கி அவர்கள் லேசில் கதைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்துவிட மாட்டார். மனசில் புதுப்புனலாய்ப் பொங்கிப்பிரவாகிக்கும் கருத்துக்கள் எழுத்துக்களாய் காகிதத்தில் அசுரவேகத்தில் ஓடி பக்கம் பக்கமாகப் பதிந்து கொண்டிருக்கும். அவர் எழுத எழுத அச்சுக்குப் போய்க் கொண்டிருக்கும். ஒரு பக்க ப்ரூப் வந்தால், அதைப்படித்து அதில் சில திருத்தங்கள் செய்து, இன்னும் நாலு சேர்க்கைகளும் செய்வார் கல்கி. அது மீண்டும் ப்ரூப்பாக வரும் பொழுது இன்னும் சேர்க்கைகள். கடைசிவரை இந்த ‘இறுதிஷேப்’ கொடுக்கிற விஷயத்தில் கல்கிக்கு திருப்தியே வராது. கல்கியே இதுபற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டதைப் படித்ததாக நினைவு.

தன் எழுத்து வேகத்திற்கும்,திருத்தல்களுக்கும் ஈடுகொடுத்து, சலித்துக்கொள்ளாமல் அச்சுக்கோர்த்த கோவிந்தனை மிகவும் பிடித்துப்போய்விட்டது கல்கிக்கு. கோவிந்தனின் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து வந்த எழுத்தாற்றலையும், எழுதத் தோன்றிய ஆசைகளையும் மிகச்சரியாகப் புரிந்து கொண்ட கல்கி, அவரை ‘கல்கி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக்கி தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

இந்த அரிய வாய்ப்பு விந்தனுக்கும் அவரது எழுத்தாற்றலுக்கும் கிடைத்த நல்ல வடிகாலாக அமைந்தது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள்–இத்தனை பேரின் அவல வாழ்க்கை நிலைகள், படும் அவஸ்த்தைகள் எல்லாம் விந்தனின் பேனா வழி விஸ்வரூபம் எடுத்து வார்த்தெடுக்கப்பட்டது. அந்த நாளைய தமிழகப் பிரசுரங்களில் ஒரு நட்சத்திர பதிப்பகமாய் இருந்த ஸ்டார் பிரசுரம், இந்த நேரத்தில் விந்தனின் இருப்பத்தைந்து கதைகளை ‘முல்லைக்கொடியாள்” என்னும் தலைப்பில் நூலாகத் தொகுத்து வெளியிட்டது.

கல்கி இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில், ‘விந்தனின் கதைமாந்தர்கள் படுகின்ற கஷ்டங்களுக்கெல்லாம் நாம் தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாது தவிக்க நேரிடும்’ என்று குறிப்பிடும் அளவுக்கு படிப்பவரை வசப்படுத்தும் எழுத்து விந்தனது. இந்த “முல்லைக்கொடியாள்” தொகுப்பிற்கு தமிழ்வளர்ச்சிக்கழகம் முதல் பரிசு கொடுத்தது மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கழகம் தொடங்கி, முதல்பரிசைப் பெற்ற முதல் புத்தகமும், “முல்லைக்கொடியாள்” தான்!

ஒரு செய்தியைக் குறிப்பிடவேண்டும்: ஆரம்பத்தில் விந்தன் “தமிழரசு” என்னும் பத்திரிகையில் அச்சுக்கோப்பாளாராகப் பணியாற்றினார். ஒருநாள், அந்தப் பத்திரிகையில் பிரசுரமாக, கவிதை ஒன்று அச்சுக்கோப்பதற்காக விந்தனிடம் பணிக்கப்பட்டது. அந்தக் கவிதையை எழுதியவர்: பாரதிதாசன். கவிதை?.. “தமிழுக்கு அமுதென்று பேர்..” என்று தொடங்குவது! அதிர்ஷ்டக்கார விந்தன் தான், புரட்சிக்கவிஞரின் பெயர் பெற்ற இந்தக் கவிதையை முதன் முதல் அச்சுக்கோர்த்தவர்! ‘மனிதன்’ என்னும் பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தியிருக்கிறார் விந்தன்.

விந்தனின் மறக்கமுடியாத நாவல், “பாலும் பாவையும்”. கல்கியில் தொடராக வந்த இந்நாவலுக்கு, மணியம் சித்திரங்கள் வரைந்திருந்தார். இத்தொடர் கல்கியில் வெளிவந்த காலத்து, கல்கி வாசகர்கள் இக்கதை நாயகன் – நாயகி மீது அளப்பரிய அன்பு கொண்டனர். ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு கதை மாஸ்டர்பீஸாக அமையும் என்றால், விந்தனுக்கு அமைந்தது: “பாலும் பாவையும்”.. விந்தன் என்று குறிப்பிடாமல், தமிழ் எழுத்துலகம், அந்த நாவலுக்குப் பிறகு, “பாலும் பாவையும்–விந்தன்” என்று குறிப்பிடத் தொடங்கியது.

தமிழ்த் திரைப்பட உலகமும் விந்தனை விட்டு வைக்கவில்லை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான “கூண்டுக்கிளி”க்கு திரைக்கதை-வசனம் எழுதியது விந்தன் தான்!. அதைத்தவிர, “அன்பு”, “குழந்தைகள் கண்ட குடியரசு” படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்.. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த “குலேபகாவலி” திரைப்படத்தில் இடம்பெறும், காலத்தால் அழியாத, “மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ — இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா” என்னும் பாடலை எழுதியது விந்தன் தான்!.. இன்னொரு பாடல். இது எந்தப் படத்தில் என்று நினைவில்லை. “இதயவானில் உதய நிலவே! எங்கே போகிறாய் — நீ, எங்கே போகிறாய்?” என்கின்ற திரைப்பாடலும் விந்தன் எழுதியது தான்!

பிற்காலத்தில், ‘தினமணி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணீயாற்றிய பொழுது, ஏழிசைமன்னர் தியாகராஜபாகவதரின் வாழ்க்கை வரலாற்றை “எம்.கே.டி.பாகவதர் கதை’ என்ற பெயரில் எழுதினார். ‘தினமணிகதிர்’ ஏட்டில் ஓவியர் கோபுலு அவர்களின் அழியாத சித்திரங்களுடன் இவர் எழுதிய ‘பாட்டினில் பாரதம்’ என்னும் கவிதைத்தொடர் என்றும் விந்தனின் எழுத்துக்களுக்குப் புகழ் சேர்ப்பது.

விந்தனைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், அவரின் அணுக்கத் தோழர், அன்பர் மு.பரமசிவம் அவர்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. விந்தனோடு நெருங்கிப் பழகிய இவர், விந்தனின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வடித்துத் தந்திருக்கிறார். இந்த நூல் மட்டும் இல்லையென்றால், விந்தனின் சிறப்பியல்புகள் பல தெரியாமலேயே போயிருக்கும்.

தமிழில் கதைகள் எழுதத் தொடங்கும் ஆசை வயப்பட்டவர்க்கு, விந்தனின் எழுத்துக்கள் வழிகாட்டும் என்பது என் அபிப்ராயம்.

நன்றி : பூவனம் http://jeeveesblog.blogspot.com/2007/12/blog-post_5808.html

 


 

“மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ –விந்தன் 

– அஜயன் பாலா சித்தார்த் –

எழுத்தாளர் விந்தன்தமிழ் சிறுகதை உலகில் ஜெயகாந்தனுக்கு முன்னோடி,புதுமைப்பித்தனுக்கு பிறகு எளிய மக்களை கதாபாத்திரங்களாக தன் கதைக்குள் உலவவிட்டவர். எழுத்தாளர் கல்கியால் கண்டெடுக்க பட்டவர். இவரது கதைகளில் வரும் பாத்திரங்கள் படும் சிரமத்துக்கெல்லாம் தானும் ஒரு காரணமோ என கல்கியை தன் கதைகள் மூலம் புலம்ப வைத்தவர். நாவல் நாடகம் திரைப்படம் வாழ்க்கை வரலாறு என எழுத்தின் பல்வேறு பரிணாமங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் எனும் சிற்றூரை சேர்ந்தவர்.தந்தை வேதாசலம்,தாயார் ஜானகியம்மாள்.பெற்றோர் இவருக்கு இட்டபெயர் கோவிந்தன்.எழுத்துக்காக தன் பெயரிலிருந்த கோ வை நீக்கிவிட்டு வெறும் விந்தன் ஆனார்.வறுமை காரணமாக எட்டாம் வகுப்பை தாண்டி படிக்க இயலாத சூழல்.தந்தையோடு கருமான் பட்டறைக்கு சென்றார்.அங்கு சம்மட்டியை துக்கி அடிக்க இவரது பூஞ்சை உடம்பு ஒத்துழைக்கவில்லை.பின் இரவுபள்ளியில் படித்து கல்வி அறிவை பெருக்கிக்கொண்டார்.உடன் ஓவிய கல்லூரியில் பயிலும் எண்ணம் இருந்தாலும் குடும்ப சூழல் இவரது கனவுகளை கலைத்தது.

பின் டி இராஜாபாதர் எனும் நண்பர் மூலம் மாநில அரசின் தமிழரசு அச்சகத்தில் அச்சுகோர்ப்பவராக சேர்ந்தார்.அப்போது அவருடன் அங்கு பணீயாற்றியவர்கள் பிற்காலத்தில் அமைச்சர் என்.வி.என் நடராசன் என்றும்,ம.பொ.சி,என்றும், நாட்டிய கலைஞர் நட்ராஜ் என்றும் அழைக்கப்பட்டனர்.ஆனால் அந்தசமயத்தில் அவர்களோ அல்லது தானோ சமூகத்தின் முக்கிய நபர்களாக மாறபோகிறோம் என்பது விந்தனுக்கு தெரியவில்லை..

பிறகு ஆனந்த போதினி,தாருல் இஸ்லாம், மற்றூம் ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் பணிபுரிந்து வந்தவருக்கு கலகி இதழில் சேர்ந்ததும் வாழ்க்கை சற்று மாற துவங்கியது. அங்கு அவர் சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளி. அச்சு கோர்த்தபின் பலமுறை மாற்றி எழுதும் பழக்கமுள்ள கல்கியின் கதைகளை விந்தனும் சலிப்பே இல்லாமல் மீண்டும் மீண்டும் அச்சு கோர்த்து தருவார்.

ஒவ்வொருமுறையும் சலிக்காமல் தன் எழத்துக்களை அச்சுகோர்க்கும் அந்த இளைஞன் மீது கல்கிக்கு கிட்டதட்ட காதலே வந்தது. யார் அப்படிப்பட்ட ஆர்வம் கொண்ட உழைப்பாளி அவனி நான் பார்க்க வேண்டுமே என நிர்வாகிகளிடம் கூற விந்தன் அழைத்து வரப்பட்டார் கலகி முன் . இனி நீ என்னோடு உதவி ஆசிரியராக இரு என கல்கி கூற அன்றே விந்தன் வாழ்வில் மாறுதல் உண்டானது அதுவரை அச்சு மையால் ஈரமான அவரது விரல்கள் பேனா மையால் நனைய துவங்கியது.

அதன் பிறகு சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலைகள், அவர்கள் படும் சிரமங்கள் துயரங்கள் விந்தனின் பேனாவுக்குள் இறங்கி அவை நல்ல சிறுகதைகளாக மாற்றம் கொண்டன.தொடர்ந்து விந்தனின் இருப்பத்தைந்து கதைகள் ‘முல்லைக்கொடியாள்” எனும் தலைப்பில் முதல் நூலாக வெளியாகியது.

இந்த “முல்லைக்கொடியாள்” தொகுப்பிற்கு தமிழ்வளர்ச்சிக்கழகம் முதல் பரிசு கொடுத்தது. விந்தனின் முதல் நாவல், “பாலும் பாவையும்”. இந்நாவல் கல்கியில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கண் திறக்குமா,அன்பு அலறுகிறது ,காதலும் கல்யாணமும்,மனிதன் மாறவில்லை,சுயம் வரம் போன்ற நாவல்களை எழுதினார்.மட்டுமல்லாமல் எம்.கே.டி பாகவதர்,எம்.ஆர் ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை பின்னாளில் தினமணீயில் தொடராக எழுதினார்.

இக்காலங்களில் அவரது நெருங்கிய சகாக்களாக கவிஞர் தமிழ் ஒளியும் ,எழுத்தாளர் ஜெயகாந்தனும் இருந்த்னர். பொழுது போகாத நேரங்களில் மூவரும் சென்னை நகர வீதிகளில் உலகை வெல்லும் கனவுகளுடன் இலக்கியம் பேசிதிரிந்தனர்.மூவருக்குள்ளும் கடும் பகையும் கடும் நேசமும் ஒன்றுடன் ஒன்றாக பிரிக்க முடியாமல் பின்னிக்கிடந்த்ன.

கல்கி வேலைக்கு பிறகு விந்தன் பத்தாண்டுகள் திரைப்படத்துறையிலும் பங்கேற்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான “கூண்டுக்கிளி”க்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் விந்தனே . இதைத்தவிர, “அன்பு”, “குழந்தைகள் கண்ட குடியரசு” மணமாலை,பார்த்திபன் கனவு போன்ற படங்களிலும் கதை திரைக்கதை வசனம் என பலவாறாக பங்களித்துள்ளார். . “மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ — இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா” மற்றும் “இதயவானில் உதய நிலவே! எங்கே போகிறாய் — நீ, எங்கே போகிறாய்?” போன்ற காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் விந்தன் எழுதியவை.

நன்றி: http://www.ajayanbala.in/2010_06_01_archive.html