பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.
புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன. விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” -புறம்.103
என்னும் செய்யுள் கூறுகிறது. இச்செய்யுளில் மண்டை என்னும் சொல் “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடியிலும் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்னும் அடியிலும் இடம்பெற்றுள்ளது. உணவு இருந்தால் மண்டை மலர்தல் தன்மையுடையது; உணவு இல்லையெனில் அது மலர்தல் தன்மையற்றது. ஆகையால் மண்டையில் புரவலர்கள் உணவினை இட்டு, அதனை மலரச் செய்தல் தன்மை இன்மையால் அது கவிழ்ந்து காணப்பட்டது என்ற செய்தியை “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடி உணர்த்துகிறது. பொழுது இடைப்படாமையால் புலராத மண்டையைப் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்றார். இவ்விரண்டு இடங்களிலும் மண்டை இடம்பெற்ற சூழல் உண்கலம் என்னும் பொருள் விளங்க அமைந்துள்ளது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் உணவுப் பெற்ற உணவுப் பாத்திரம் எனத் தெளிவாகிறது. மேலும், மண்டை என்னும் உண்கலம் விறலியிடம் இருந்தது என்ற செய்தியையும் இச்செய்யுளால் உணர முடிகிறது.
அடுத்து வருகின்ற செய்யுளும் இச்செய்தியை உணர்த்தியுள்ளது. அதாவது, ‘இவ்வுலகில் வள்ளல்கள் இறந்தொழிந்தனர். இரப்போர் குறிப்பறிந்து ஈயும் வேந்தரும் இலராயினர். இந்நிலையில் ஏங்கி நிற்காது (வறுமையுற்று) கவிழ்ந்த என் இரவல் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் என இரவலர் வினவினர்’ என்னும் செய்தியை,
“ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தவென் னிரவல் மண்டை
மலர்ப்போர் யாரென வினவலின்” -புறம்.179:1-3
என்னும் செய்யுளடிகள் கூறுகின்றன. புரவலர் கொடுக்கும் பொருளை நிமிர்ந்து ஏந்திய மண்டை, அவர்கள் இன்மையால் அத்தன்மையை இழந்து, ஏலாது கவிழ்ந்தது என்னும் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. இரத்தலைப் பெற்ற மண்டையாதலால் “என் இரவல் மண்டை” என்றார் இரவலர். என் இரவல் மண்டை என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து மண்டை என்பது இரவல் பாத்திரம் என்பது தெளிவாகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், “மண்டை-உண்கலம். அடி குவிந்து வாய் விரிந்து இருப்பதனாலும் ஏற்கும் பொழுது அதன் வாய் தோன்ற ஏந்துவதும், ஏலாப்பொழுது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ‘ஏலாது கவிழ்ந்த மண்டை’ என்றும் இட்டு ‘மலர்ப்போர்’ என்றும் கூறினார்” (2009:599) என்பார். இக்கருத்திலிருந்து இரவலர்கள், வேந்தர்கள் ஈயும் பொருளை அல்லது உணவைப் பெற மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் இரந்துண்ணும் பிச்சைப் பாத்திரம் அல்லது உணவுப் பாத்திரம் என்பது இச்செய்யுள் அடிகளால் தெளிவாகிறது.
பாரி இறந்தது குறித்துப் பாடிய கபிலர், ‘பாரியின் குன்றம், இவர் இருந்த காலத்தில், தன்னிடம் வந்த பாணர்க்கு மண்டை நிறையத் தரும் பொருட்டு இனிய கள் வடிக்கப்பட்டது. இப்பொழுது அத்தன்மையை இழந்தது’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருசா ரருவி ஆர்ப்ப வொருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க வுக்க தேக்கள் தேறல்
கல்லலைத் தொழுகு மன்னே” -புறம்.115:1-4
என்னும் அடிகள் உணர்த்துகின்றன. கள்ளைப் பாணர்க்கு மண்டை நிறைய ஊற்றிக் கொடுப்பர் என்னும் கருத்திலிருந்து மண்டை உணவு வழங்கப்பட்ட உண்கலம் என்பது தெளிவாகிறது. “பாணர் மண்டை” என்றதற்குப் பாணருடைய மண்டை என்று விளக்கம் கூறுவர் உரையாசிரியர்கள். எனவே, பாணர்க்கு மண்டையில் கள் நிறைய கொடுத்துள்ளனர் என்னும் செய்தியின் மூலம் பாணரது உண்கலமாக மண்டை விளங்கியிருக்கிறது என அறிய முடிகிறது. மேலும், மண்டையில் கள் நிரம்பியிருந்தது என்னும் செய்தியை,
“தேஎங் கொண்ட வெண்மண்டையான்” -புறம்.352:1
என்னும் அடியால் அறியலாம். மண்டை என்னும் உண்கலத்தைப் பாணர் வைத்திருந்தனர் என இச்செய்யுளால் உணர முடிகிறது.
மன்னனிடம் பரிசில் பெறச் சென்ற பெருஞ்சித்தரனார், ‘நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய, நெய்யினால் வறுத்தெடுத்த கொழுவிய ஊனையும் கள்ளையும் மண்டையோடு பெற்று மாறிமாறி உண்வோமாக, உன்னைக் காண வந்தேன் என்னுடைய தலைவா’ எனக் கூறியுள்ளார். இதனை,
“நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே” -புறம்.125:2-4
என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகளில் இடம்பெற்ற மண்டை, ஊனும் கள்ளும் உணவும் பெறப் பயன்படுத்திய பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. அரசனது அரசவையில் ஊனும் கள்ளும் மண்டையோடு சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசர்கள் அரண்மனைக்கு வரும் இரவலர்க்கு உணவு வழங்க மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், பரூஉக்கண் மண்டை என்பதற்குக் “கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை” (2009:416) எனக் கூறியுள்ளார். எனவே, மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் உரிய ஒன்றாக திகழ்ந்துள்ளது என இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது. அடுத்து வருகின்ற செய்யுள் அடிகளும் இக்கருத்தைக் கூறியுள்ளன.
தன் தலைவன் இறந்ததால் வருத்தமுற்ற ஆவூர் மூலங்கிழார், ‘வண்டுகள் வந்து படியும் மதுவினால் ஒழியாத மண்டையொடு மிக்க சோற்றினை யாவர்க்கும் குறையாமல் வழங்கும் பெரிய இல்லமாக விளங்கியது. மன்னன் இறந்ததனால் அம்முற்றம் நீரற்ற ஆற்றின் ஓடம் போல பொலிவையிழந்தது’ எனக் கூறியுள்ளார். இச்செய்தியை,
“அந்தோ வெந்தை யடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
கண்டனென் மன்ற” -புறம்.261:1-5
என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகள் இரவலரது மண்டையில் உணவு வழங்கியதைக் கூறி நிற்கவில்லை. மாறாக அரசர்கள் அரசவையில் இரவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக வைத்திருந்த மண்டையில் உணவு கொடுத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளன. அதாவது இரவலர்களுக்கு மண்டையோடு சேர்த்தே சோற்றினை வழங்கியுள்ளனர். தற்பொழுது அன்னதானம் செய்பவர்கள் உணவினை ஒரு தட்டில் வழங்குவது போன்று சங்கக்காலத்தில் மண்டையில் வழங்கியுள்ளனர். இச்செய்தியை இரண்டு செய்யுட்களும் கூறியுள்ளன. எனவே, அரசர் மண்டையை இரவலர்களுக்கான உணவுப்பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை ஏவிச் சிறப்பித்தான். அதனை வியந்து நோக்கிய பாணனைக் கழாத்தலையார் அழைத்து, ‘பாணனே! தன்பாலுள்ள அன்பால் தனக்காக கள் முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையை, உனக்கு நல்குவாயாக எனச் சொல்லிச் செய்யும் அச்சிறப்பை வியந்து நோக்குதலை ஒழிக’ என்றார். இதனைக்,
“காதலின்
தனக்குமுகந் தேந்திய பசும் பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண” -புறம்.289:5-8
என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அரசவையில் இரவலர்களுக்கென்று இருக்கும் மண்டையில் கள் வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்பாடல் அடிகளும் உணர்த்தியுள்ளன. தலைச்சிறந்தவர்களாயின் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதனை ஒளவை.சு.து. அவர்களும் “சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாது என்றதற்குப் ‘பசும் பொன் மண்டை’ எனக் கூறினார்” (2010:313) என்று கூறுவார். எனவே, சங்கக்காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட மண்டை உண்கலம் இருந்துள்ளது என்றும் சிறப்பானவர்களுக்கே அதில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகிறது.
பாணனைச் சிறப்பு செய்வதற்காகப் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பசும்பொன் மண்டை பாணருடையது அல்ல. இது அரண்மனைக்குரியது. தண்ணீர் குடிக்கும் குவளை (Tumbler) தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமினியம் போன்ற வகைகளில் இருப்பது போலப் பொன்னால் செய்யப்பட்ட மண்டையும் சங்காகலத்தில் இருந்திருக்கலாம். எனவே, மண்டை பாணர்க்கே உரியதல்ல என்பதை இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது.
மண்டை என்னும் உண்கலம் விறலி, பாணர், இரவலர் ஆகியோர்க்குரியது என மேற்காட்டப்பட்ட செய்யுட்கள் கூறின. உழவர்க்குரிய உண்கலமாகவும் மண்டை விளங்கியது என்பதைப் புறநானூற்றுச் செய்யுள் கூறியுள்ளது. அதாவது, ஊரில் விழா ஒன்றும் இல்லையாயினும், உழவரது மண்டையில் பெரிய கெடிற்று மீன் உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் நிறைந்திருக்கும் என்னும் செய்தியை,
“விழவின்று ஆயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து” -புறம்.384:8-9
என்னும் அடிகள் கூறுகின்றன. உழவர் தங்களுடைய மண்டையில் மீனுடன் கள்ளும் வைத்து உண்டுள்ளனர் என்னும் கருத்தின் மூலம் உழவர் உண்கலமாகவும் மண்டை விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
மண்டை என்னும் உண்கலம் கிணைவரிடத்திலும் இருந்துள்ளது. தடாரியை இசைத்து நின்ற இரவலன், ‘வெப்பம் கப்பிய என் மண்டை உண்கலத்தில் தெளிந்த மதுவை நிரம்பப் பெய்து, உண்ணத் தந்ததும் அல்லாமல் தன் கலத்தில் தான் உண்ணுதற்குரிய மான் இறைச்சிப் பொரியலையும் கொக்கின் நகம் போலும் அரிசிச் சோற்றையும் என் சுற்றத்தாரும் உண்க என்று வழங்கினான் என் தலைவன்’ எனக் கூறினான். இதனை,
“மதியத் தன்னவென் னரிக்குரற் தடாரி
இரவரை நெடுவா ரரிப்ப வட்டித்
துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
………………………………………………………….
அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
நிழல்காண் டேற னிறைய வாக்கி
யானுண வருள லன்றியுந் தானுண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குகிர் நிமிர லொக்க லார
வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரைவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
ஊரைசெல வருளியோனே” -புறம்.398:12-29
என்னும் செய்யுள் அடிகள் கூறுகின்றன. மண்டையைக் காணும்தோறும் உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை எழுப்பி வெதுப்புதலின், “அழல்கான் றன்ன மண்டை” என்றார். இவ்வாறு உணவின்றி வெப்பமிகுந்திருந்த என் வயிற்றிற்கு மண்டையில் உணவு வழங்கிக் குளிரச் செய்தான் தலைவன் என்று தடாரியை இசைத்து நின்ற இரவலன் உணர்த்தியுள்ளான். தடாரியை இசைத்து நிற்பவன் கிணைவன் எனப் பல பாடல்கள் கூறியுள்ளன. இப்பாடலும் மண்டை என்பதை உணவு உண்ணும் கலமாக வெளிப்படுத்தி உள்ளது. எனவே, மண்டை என்பது இங்குக் கிணைவர்க்குரிய உண்கலமாகக் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
மண்டை என்பது உணவு பெறும் அல்லது உணவு பெற்றுண்ணும் உண்கலம் (உணவுப் பாத்திரம்) என மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்கள் நமக்கு உணர்த்தின. இம்மண்டை பணர் என்பவருடன் மட்டும் இணைத்துக் கூறப்படவில்லை. இரவலர், உழவர், கிணைவர், விறலி ஆகியோருடன் இணைத்தும் கூறப்பட்டுள்ளன. மேலும், அரண்மனைக்கு வரும் இரவலர்களுக்கு உணவு வழங்கவும் இம்மண்டை பயன்பட்டுள்ளது. இம்மண்டையில் கள் வழங்கப்பட்டதைப் பல பாடல்களும் சோறு வழங்கப்பட்டதைச் சிலப்பாடல்களும் கூறியுள்ளன. எனவே, மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய உண்கலம் எனவும் இம்மண்டை அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானது எனவும் தெளிவாக அறிய முடிகிறது.
உண்கலமாக விளங்கிய ஒன்று ஏன் மண்டை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது? என்னும் வினா எழலாம். மண்டை என்பதற்கு விளக்கம் கூறிய ஒளவை.சு.து. அவர்கள், “மண்டை, கள் முதலியன உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறியுள்ளார். இவரது விளக்கம் மண்டை என்பது மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதாக அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்டதனால் மண்டை என அழைக்கப்பட்டதா? என்னும் ஐயம் எழலாம். சங்கக்கால மக்கள் பயன்படுத்திய பெரும்பாலானப் பொருட்கள் மண்ணால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், மண்டையானது பொன்னால் செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது எனப் பாடல் கூறியுள்ளது. எனவே, மண்ணால் செய்யப்பட்டதனால் இப்பெயர் பெற்றிருக்காது என்பது தெளிவாகிறது. தமிழ் உள்ள சில சொற்களுக்கு விளக்கம் கூறுவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். இன்னும் சில சொற்களுக்கு விளக்கமே கூற முடியாது. இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். அவ்வகையில் மண்டை என்னும் சொல் அமைந்துள்ளது. எனவே, மண்டை என்னும் உண்கலம் நம் மண்டையின் ஓடு போன்று இருந்திருக்கலாம். ஆதலால் மண்டை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.
மண்டைப்பாணர் குறித்த விளக்கமும் விவாதமும்
“இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்” (கணேசையர், 2007:318) எனப் பாணர் மூன்று வகையினர் என்று நச்சினார்க்கினியர் முதல் தற்கால அறிஞர் பெருமக்கள் வரை கூறி வருகின்றனர். இவற்றுள் மண்டைப்பாணர் என்பதற்கு “மண்டை என்னும் உண்கலத்தை உடையவர் மண்டைப் பாணர் ஆவர்” (செம்மூதாய் சதாசிவம், 2015:73) என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
உண்கலம் என்பது ஒவ்வொரு இரவலர்களிடத்திலும் இருக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் அரசர் குலத்திற்கு இரக்கச் செல்லும் இரவலர்கள் அக்குலத்தார் இட்டு வழங்குகின்ற உணவுகளை அவ்வுண்கலத்தில்தான் பெற்றிருப்பர். அரசர் குலப் பெண்டிரும் இரவலர்களுக்கு உணவுகளை இட்டு வழங்கியதைப் பாடல்கள் எடுத்துக் கூறியுள்ளன. அவ்வகையில் இரந்துண்டு வாழும் ஒவ்வொரு இரவலரிடத்தும் ஓர் உண்கலம் இருந்திருக்கிறது. அவ்வுண்கலம் மண்டை என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்பட்டுள்ளது எனப் பாடல்கள் கூறுகின்றன. இரவலர்களுள் ஒருவரானப் பாணர்களிடத்தும் இம்மண்டை என்னும் உண்கலம் இருந்துள்ளது. இவர்களும் அம்மண்டையில் உணவுகளைப் பெற்று, உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அறிஞர்கள் கூறுவது போன்று மண்டை என்பது பாணர்களுக்கும் உண்கலமாக இருந்துள்ளது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் மண்டை என்பது உண்கலம் எனக் கூறிய அறிஞர்கள், ஏன் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறினர்? மண்டை அனைவருக்குமுரிய ஒன்று என இவர்கள் அறியவில்லையா? மண்டை என்னும் உண்கலத்தைப் பெற்றிருந்திருந்ததால் இவர்களை மண்டைப் பாணர் எனக் கூறலாமா? போன்ற வினாக்கள் எழுகின்றன.
பாடுதல் தொழிலைச் செய்தவர் பாடுநர் என்றும் ஆடுதல் தொழிலைச் செய்தவர் ஆடுநர், கூத்தர் என்றும் யாழில் பண்ணிசைத்தவரைப் பாணர் என்றும் பறையிசைத்தவரைப் பறையர் என்றும் துடி இசைத்தவரைத் துடியர் என்றும் கிணை இசைத்தவரைக் கிணையர் என்றும் கூறியுள்ளனர்; அவர்களும் தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். இப்பெயர் ஒவ்வொருவரிடமும் உள்ள இசைக்கருவியை வைத்தும், அவர்களிடம் காணப்படும் கலைத்திறனில் உள்ள வேறுபாடு வைத்தும், தொழில் அடிப்படையிலும் அழைக்கப்பட்டதாகும். இவர்கள் அனைவரிடமும் மண்டை இருந்துள்ளது; மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. மண்டை அனைவருக்கும் பொதுவானதாக விளங்கியுள்ளது. இம்மண்டை என்னும் உண்கலம் ஓர் இசைக்கருவி போலவும் அதனை இசைத்துப் பாணர்கள் வாழ்ந்தது போலவும் பாணர்க்கே இது உரியது போலவும் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறுகின்றார்கள் அறிஞர்கள். இரவலர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மண்டையைப் (உண்கலம்), பாணர்க்குரியதாகக் கருதி மண்டைப் பாணர் என்றொரு வகையினர் இருந்தனர் எனப் பிரித்துக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இம்மண்டையை உழவரும், கிணைவரும், விறலியும் வைத்திருந்தனர் எனவும் உணவும் உண்டுள்ளனர் எனவும் பாக்கள் கூறியுள்ளன. இச்செய்தியினால் மண்டை விறலி, மண்டை உழவர், மண்டைக் கிணைவர் என்னும் வகைகளைக் நாம் கூற முடியுமா? கூற முடியாது. கூறினாலும் அதனை ஏற்கயியலாது. ஏனெனில் மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானதாகும். எனவே, சங்கக்காலத்தில் வாழ்ந்த நடுத்தர மக்கள் யாவரும் உணவு உண்ணப் பயன்படுத்திய பாத்திரமாகவும் மண்டை இருந்திருக்கலாம் என்பதும் மண்டைப் பாணர் என்றொரு வகை இல்லை என்பதும் புறநானூற்றுச் செய்யுட்கள் மூலம் தெளிவாகிறது.
முடிவுரை
“மண்டைப்பாணர் என்றொரு வகையினர் சங்கக்காலத்தில் இல்லை” என்பது இக்கட்டுரையின் முடிவாக அமைகிறது. மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய ஒன்றாக விளங்கியுள்ளது. இம்மண்டையில் விறலி, பாணர், உழவர், கிணையர் போன்றோரும் உணவு பெற்று உண்டுள்ளனர். ஆதலால் இம்மண்டை அனைத்து இரவலர்க்குமுரிய பொதுவான உண்கலம் என்பது உணர்த்தப்பட்டது. இதனைப் பாணர்க்கு மட்டும் உரியது எனக் கருதுவதும் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனர் என்று கூறுவதும் தவறாகும். மேலும், பாணர்க்கு மட்டும் உரியதாகக் கருதுவதற்கும் அவற்றினால் ஒரு வகையைக் கூறுவதற்கும் இது(மண்டை) இசைக்கருவியும் அன்று. எனவே, மண்டை என்பது இரவலர்களுக்குரிய பொதுவான உண்கலம் என்னும் கருத்தின் மூலம் மண்டைப் பாணர் என்றொரு பாணர் வகையினர் இல்லை என்பது இக்கட்டுரையின் முடிவாகக் கூறப்படுகிறது. மேலும், நாம் மண்டைப்பாணர் என்றொரு வகையைத் தனியாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்பதும் இக்கட்டுரை முடிவின் மூலம் உணர்த்தப்படுகிறது.
துணை நூற்பட்டியல்
01. கணேசையர் (பதி.ஆ.), தொல்காப்பியம் பொளதிகார மூலம் முன்னைந்தியல்களும் நச்சினார்க்கினியருரையும் முதல் பாகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, இரண்டாம் பதிப்பு -2007.
02. செம்மூதாய் சதாசிவம்(பதி.ஆ.கள்), தமிழர் வாழ்வியல் மரபும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை-89, டிசம்பர்-2015.
03. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு முதல் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. ஜூலை-2009.
04. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு இரண்டாம் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. மார்ச்-2010.
jayaganesh.official@gmail.com
* கட்டுரையாளர் : -ஆ.ஜெயகணேஷ், முனைவர்பட்ட ஆய்வாளர், நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014.