பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் நிரந்தரமானவை. அவற்றுக்கு அழிவேயில்லை. தனது பாடல்களின் மூலம் அவரது அந்த மதுரக்குரல் நிலைத்து நிற்கப் போகின்றது. பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் இந்தியத் திரையுலகு மிகவும் பெருமைப்படத்தக்க பாடகர்களிலொருவர். இந்தியாவின் பல் மொழிகளிலும் அவர் பாடியிருக்கின்றார். மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளார். அவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பென்றாலும், அவர் தனது பாடல்களினூடு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். தனக்கென்று மென்மையான குரல் வாய்க்கப்பெற்றவர். இவரது அந்த மென்குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு அற்புதமாகப் பொருந்தியது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற பல நடிகர்களுக்கு இவர் பாடியிருந்தாலும் இவரது அந்த மென்குரல் காரணமாக இவர் ஜெமினி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பினைப்பெற்றன.
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படப் பாடல்களில் நிச்சயமாக பி.பி.ஸ்ரீநிவாஸின் ‘மயக்கமா, தயக்கமா’ , ‘நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?, ‘ ‘நிலவே என்னிடம் மயங்காதே’, ‘ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘காலங்களில் அவர் வசந்தம்’ (இந்தப் பாடல் என் சகோதரிகளிலொருவருக்கும் மிகவும் பிடித்ததொரு பாடல்) மற்றும் ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ போன்ற பாடல்களை நிச்சயம் குறிப்பிடலாம்.
எப்பொழுது கேட்டாலும் மனதில் அமைதியினை இன்பத்தினை அள்ளித் தருவன இவரது பாடல்கள். குறிப்பாக ‘ சுமை தாங்கி’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘மயக்கமா தயக்கமா’ பாடலும் , பாடல் வரிகளும் அந்த இனிய குரல் காரணமாக எம்மைக் கவர்ந்து விடுகின்றன. அதற்கும் மேலாக அந்தப் பாடலினை இயற்றிய கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகளுக்குப் பாடகர் .ஸ்ரீநிவாஸின் குரல் உயிர் கொடுத்து விடுகின்றது. வாழ்வின் போராட்டங்களில் சிக்கித் தத்தளிக்கும் சமயங்களில் மேற்படி பாடல்களின் வரிகள் பாடகரின் குரலில் மிகுந்த நம்பிக்கையினையும், வாழ்வினை எதிர்த்துப் போராடும் உறுதியினையும் அளித்து விடுகின்றன.
‘மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரையில் அமைதி இருக்கும்.’
தினமணி.காம்: பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு!
ஏப்ரில் 15, 2013 – பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் (83) சென்னையில் நேற்று காலமானார். சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள தனது இல்லத்தில் மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்விகமாகக் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ் இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்தவராக இருந்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவரை, குடும்ப நண்பரான ஈமனி சங்கர சாஸ்திரி என்ற வீணைக் கலைஞர் சென்னைக்கு அழைத்து வந்தார். 1952ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் சம்பத்’ என்ற படத்தில் இரண்டு, மூன்று வரிகள் கொண்ட பாடல்களை முதன்முதலாகப் பாடினார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரான “ஜாதகம்’ என்ற படத்தில் பாடிய “”சிந்தனை ஏன் செல்வமே….” என்ற பாடல் அவருக்கு பரவலான பாராட்டுக்களைப் பெற்று தந்தது. பின்னர் “விடுதலை’ படத்தில் இடம் பெற்ற “”உன்னாலே நான் என்னாலே…”, “பிரேம பாசம்’ படத்துக்காக “அவனல்லால் புவியின் மீது…”, “அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் இடம் பெற்ற “”கண்ணாலே பேசி பேசி கொல்லாதே…” ஆகிய பாடல்கள் சினிமா துறையில் பி.பி.ஸ்ரீநிவாஸýக்கு தனித்துவமான இடத்தை உருவாக்கி தந்தன. “”காலங்களில் அவள் வசந்தம்…”, “”பால்வண்ணம் பருவம் கண்டு…”, “”என்னருகே நீ இருந்தால்…”, பொன் ஒன்று கண்டேன்…”, “”மயக்கமா கலக்கமா…”, “”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…” ஆகிய பாடல்கள் பி.பி.ஸ்ரீநிவாஸýக்கு பெரும் புகழைத் தேடி தந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், காந்தாராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்கு பின்னணி குரல் பாடியுள்ளார். குறிப்பாக ஜெமினி கணேசனுக்கு பெரும்பான்மையான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகராக விளங்கிய பி.பி.எஸ். கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.
2010இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பாடிய “”பெம்மானே….” பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இறுதிச் சடங்கு: சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாடகிகள் எஸ்.ஜானகி, பி.சுசீலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட திரையுலகத்தினர் பி.பி.எஸ். உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பி.பி.ஸ்ரீநிவாஸுக்கு மனைவி ஜானகி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் கண்ணம்மாபேட்டை மயானத்தில் திங்கள்கிழமை நடக்கிறது.
ஆளுநர் கே. ரோசய்யா: ஆளுநர் கே. ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
பி.பி. ஸ்ரீநிவாஸ் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனிய குரலுக்குச் சொந்தக்காரரான அவர், பின்னணி பாடகராக பல்வேறு மொழித் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், சாரதா புஜங்க ஸ்தோத்திரம், புரந்தரதாசர் கீர்த்தனை உள்ளிட்ட அவருடைய ஆன்மிக பாடல்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.
இத்தகைய சிறந்த பாடகரின் மறைவு, திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் இரங்கல்: முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில், பி.பி.ஸ்ரீநிவாஸ் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஆயிரக்கணக்கணக்கான பாடல்களை 12 இந்திய மொழிகளில் பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை. மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர். பி.பி.எஸ். மறைவு திரை மற்றும் இசைத்துறையினருக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.
வாலிக்கு வாழ்வு தந்த பி.பி.எஸ்.
நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று நானும்…இந்த நூற்றாண்டும்…என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.
இதோ அவரது வரிகளில்… “”சிரம நாள்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார். நான் வறுமைக்கடலில் மூழ்கியபோதெல்லாம், என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.
இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸýக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
தந்தை மறைந்துபோனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுதுகொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை. இந்த லட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்துகொண்டேன்.
கைவசம் இருந்த நீலப்பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கிக்கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.
அப்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார். அவரிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்றேன். அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும் “சுமைதாங்கி’ என்னும் படத்தில் கண்ணதாசன் எழுதிய, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுமையாகப் பாடிக்காட்டினார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்துச் செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன்.
ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது.
“சுமைதாங்கி’ படத்தில் பின்னாளில் இடம்பெற்று மிக மிகப் பிரபலமான அந்தப் பாடல் மயக்கமா? கலக்கமா? கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது”.
நன்றி: http://dinamani.com/