தற்போது இந்தியாவில் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்து விட்டதையடுத்து அவர்களுக்கான தூக்குத்தண்டனை நிறைவேற்றுப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மரணதண்டனை என்பது தர்க்கரீதியாகப் பார்த்தால் கேலிக்குரியது. கொலைகளுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்வென்றால் , கொலையாளிகளெனக் கருதப்படுபவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதும் இன்னுமொரு கொலையே. அரசினால் நடாத்தப்படும், சட்டரீதியிலான கொலை. கொலைஞர்களுக்குரிய தண்டனை மரணதண்டனை என்றால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் அனைவருக்குமுரிய தண்டனையும் மரணதண்டனைதான். ஏனெனில் சட்டத்தின்முன் கொலைகளுக்கு இருவேறு தண்டனைகளிருக்க முடியாது. ஆனாலும் நடைமுறையில் சட்டமென்பதும் கூட ஒருபக்கச் சார்பானதுதான். முதலாளித்துவ அரசென்றாலென்ன, இனத்துவேசம் மிக்க அரசென்றாலென்ன, அவ்வகையான அரசுகளால் நிறைவேற்றப்படும் நீதிமனற நடைமுறைகள், தீர்ப்புகளும் அவற்றுக்குச் சார்பானவையாகவே இருக்கும். மரண தண்டனை எல்லா நாடுகளிலும் கொலைக்குற்றங்களுக்குத்தான் விதிக்கப்படுமென்பதில்லை.
சீனாவில் அரசியல் கூட்டுத்தாபனங்களில் இலஞ்சம் புரிபவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுவது சாதாரண நிகழ்வு. அவ்விதம் இந்தியாவிலும் விதிக்கப்படுமானால் தற்போது இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளெல்லாரும் மரணதண்டனையை நோக்கி வரிசையில் நிற்கவேண்டிவரும்.
ஆட்சியிலிருக்கும் அரசுகளுக்கெதிராகச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியினைக் கைப்பற்றும் இராணுவம் ஆட்சியாளர்களுக்கெதிராக வழக்குகளைத் தொடுத்து மரணதண்டனை நிறைவேற்றுவதுமுண்டு. முன்னாள் பாகிஸ்தானிய பிரதமரான பூட்டோவுக்கெதிராக அவரால் இராணுவத்தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்ட சியாவூல் ஹக் , பூட்டோவுக்கெதிராகவே இராணுவ சதிப்புரட்சி நடாத்தி, ஆட்சியைக் கைப்பற்றி, பூட்டோவுக்கெதிராக வழக்கு நடாத்தி, மரணதண்டனை நிறைவேற்றிப் பின்னர் அதன் காரணமாகவே பின்னர் நடுவானில் விமானத்தில் வைக்கப்பட்ட குண்டொன்றின்மூலம் அரசியல்ரீதியிலான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அரசியல் காரணங்களுக்காக, விடுதலை அமைப்புகளினால் பலவேறு காரணங்களுக்காக பலருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது சர்வசாதாரணம். பெரும்பாலான அரசுகள், விடுதலை அமைப்புகள், மத அடிப்படைவாத விடுதலை அமைப்புகள் ஆகியன முறையே சட்டவிரோதமாகச் செயற்படும் இராணுவத் துணைக்குழுக்கள், உளவுப்பிரிவுகள், தமது அமைப்பினர் மூலம் முறையான விசாரணகளெதுவுமின்றி மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களை மிகவும் தந்திரமாக மரணதண்டனைக்குள்ளாக்குவது புதிரான விடயமொன்றல்ல. சில அமைப்புகள் மாற்றுக் கருத்துள்ளவர்களைத் துரோகிகளாக்கி, கழுத்தில் ‘டயர்க’ளை மாட்டி எரித்து மரணதண்டனையினை நிறைவேற்றுவதுண்டு; இன்னும் சிலரோ கழுத்தை வெட்டித் தண்டனையினை நிறைவேற்றுவார்கள்; சித்திரவதைகள் பல புரிந்து மரணதண்டனைக்குள்ளாக்குவார்கள்.
இலங்கையை எடுத்துக்கொண்டால் ஆட்சிக்கட்டில்களிலிருந்த அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட மாற்று அரசியல் கருத்துடைய மக்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கட்சியினர், மற்றும் பொதுவான சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களெனப் பலர் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை காலத்தில் எத்தனை ஈழத்தமிழர்கள் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்? மருத்துவரும், விரிவுரையாளரும், மானுட உரிமைப் போராளியுமான இராஜினி திரணகம், கவிஞர் செல்வி, ‘புதியதோர் உலகம்’ எழுதிய கேசவன், விடுதலைப் புலிகளின் பிரதித்தலைவராகவிருந்த மாத்தையா, பல்வேறு தமிழ் விடுதலை அமைப்புகளின் தலைவர்கள், போராளிகள், இலங்கை அரசுகளுக்குச் சார்பாக இயங்கிய அரசியல் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் , தலைவர்கள், இறுதிப் போரில் தந்திரமாகச் சரணடைய வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள், தென்னிலங்கையில் வெடித்த சிங்கள இளைஞர்களின் புரட்சிகளின் போது ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் எனப் பலர் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ‘ஜேவிபி’ போன்ற அமைப்புகளினால் அரசியல் காரணங்களுக்காகப் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம். முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதென்னவென்றால் … இவ்விதம் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் எந்தவித முறையான நீதி மன்ற விசாரணைகளுமின்றி, தேசிய விடுதலை, தேசபக்தி போன்ற பலவேறு அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்கள்.
இக்கட்டுரையாளனும் ஒரு காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு மரணதண்டனையினை ஒரு சில குற்றங்களுக்கு ஆதரித்தவன் தான்; உணர்ச்சிக் கண்ணாடியினூடு நிகழ்வுகளைப் பார்த்துத் தர்க்கித்தவன்தான். ஆயினும் காலத்தினூடு நிகழ்ந்த அறிவுப் பரிணாமத்தின் விளைவாக இவனது மரணதண்டனை பற்றிய கருதுகோள்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாபெரும் பிரபஞ்ச வெளிக்குள் மிகுந்த தனிமைக்குள் பயணிக்கும் மானுடரின் தனிமையை எண்ணி வருந்துமளவுக்கு, அதன் பின்னணியில் மானுட இருப்பினைப் பார்க்குமளவுக்கு இவனது அறிவு மாற்றம் கண்டுள்ளது.
மரண தண்டனை உண்மையில் நாகரிக மனிதர் நாணும்படியானதொரு தண்டனை. மரண தண்டனைக்குப் பதில், குற்றவாளிகளைத் திருத்தும்வகையில் தண்டனைகளை வழங்குதலே நாகரிக மனிதரின் செயலாக இருக்க முடியும். மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமே தர்க்கரீதியில் அது சரியாகவிருக்கும். தாம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள், அரசுகள் இவ்விதமான தண்டனைகளை வழங்கும்போது மெளனமாக இருந்த, இருக்கும் நபர்கள், அமைப்புகள் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைக்கெதிராகக் குரல் கொடுப்பது ஒரு பக்கச்சார்பானது; சுயநலமிக்கது. தற்போது இராஜிவ் காந்திக் கொலை வழக்கில் மரணதண்டனைக்குள்ளாக்கப் படவிருக்கும் தமிழர்களுக்கெதிரான மரணதண்டனையினை மரணதண்டனை நாகரிகமடைந்த மானுட இனத்தின் அநாகரிகமென்ற அடிப்படையிலேயே பதிவுகள் எதிர்க்கிறது. அந்த அடிப்படையில் இதுவரையில், பலவேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கையில், மற்றும் உலகமெங்கும் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பதிவுகள் நினைவு கூர்ந்துகொள்கிறது. அவ்விதம் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் , அவர்களது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் முறையான நீதி கிடைக்கவேண்டுமென்றும் (குறைந்தது நடந்து முடிந்த தவறுகளுக்காக மக்களை நோக்கிய மன்னிப்பு மட்டுமாவது) பதிவுகள் விரும்புகிறது.
– நந்திவர்மன்