மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

நாட்டுக்காக  நான்
கொடுக்கின்றேன் :  உயிர் !
வீட்டுக்காக  நாடு
கொடுக்கிறது  சம்பளம் !

கூலிக்கு  மாரடிக்கும்
கூட்டம்  என்றுகூட ,
குறை  சொல்வோர் வாழும்
குவலயத்தில்  நாங்கள்….

கூலியைப்  பெற்று
வேலியைக்  காக்க…. எங்களின்,
வாலிபத்  துடிப்பை
வழங்கிக்  கொண்டிருக்கின்றோம் !

அடிக்கடி  உன்னை
வாட்டி  வதைக்கின்ற  நோய்…. !
நடக்க  முடியாமல்
படுத்துக் கிடக்கும்  அப்பா….!!
பற்றாக்  குறைகாட்டும்
அவரது  பென்சன்  பணம்…. !!!
திருமண  வயதை  எட்டி
தினமும்  பெருமூச்சுடன்
சீர்குலைந்த  பதுமைகளாகத்
தங்கைகள்  இருவரும்….!!!!
சேவல்  கூவி  எழுப்புகின்றதோ
இல்லையோ :  தினசரி
பூபாளம்  இசைத்திடும்
கடன்காரர்  வரிசை….!!!!!    

கேட்டுக்  கேட்டுக்
காது   புளித்ததால்  தான்
கேளாத  தூரத்துக்குப்
போய்விட்டேன்  என்று
எண்ணிவிடாதே  அம்மா !

இவையெல்லாம் : எங்களை
வளர்ப்பதற்காக  நீங்கள்
பட்டுக்கொண்ட  வடுக்களின்
வலிகள்  அல்லவா !

அறிவேன்  அம்மா !
நாளை  திருமணச்  சந்தையில்
விற்பனையாகப்  போகின்ற
என் உடன்   பிறப்புகள்…..

அவர்கள்  வாழப்போகின்ற
இல்லங்கள் : அனைத்திலேயும்
இந்தக்  கடன்  சாக்கடை
நாற்றம்  வேண்டாம் : நல்ல
சந்தன  வாடை  வீசட்டும்!

தன்னைத்  தேய்த்து
பிறருக்கு  வாசனை  கொடுக்கும்
சந்தனக்  கட்டையாய் நான்
சமர்ப்பணம்  ஆகுகின்றேன் ! 

படித்தவன் : பட்டம்  பெற்றவன்
பார்வையானவன் : ஆனாலும்,
பயனற்றவனாக  அன்று நான்
தெரு சுற்றும்  வேளையில்,
கிட்டப் போனாலும்  எட்டிச் சென்ற
சுற்றங்கள் : பேசக்கூசிய
நண்பர்  கூட்டங்கள்……

அனைவரும்  இன்று,
தொட்டுத்  தொட்டு உறவு சொல்லி
ஒட்டி  ஒட்டி  வருவதை,
உந்தன்  கடிதந்தான்
உரைத்ததே  அம்மா !

வரவேற்போம் : ஆனால்
வளைக்கரம்  கொடுக்க வேண்டாம் !
புன்னகைப்போம் : ஆனால்
போற்றித்  துதிக்க  வேண்டாம் !

நாட்டுக்காக  உயிரைவிடும்
எங்களை : நாளை  இங்கு
நாய்களும்  நரிகளும்
அடக்கம்  செய்தாலும்,
உங்கள்  தேவைக்கேனும்
நாலுபேர்  இருக்கட்டும் !

யுத்தமுனையில்  கேட்கின்ற
பேரிகையின்  முழக்கங்கள்
ரத்த  நாளங்களை
உடைப்பெடுக்க  வைத்தாலும்,
என்  சித்தத்தைக்  குளிர்விப்பது….
என் தங்கைகளுக்காக  ஒலிக்கின்ற
கெட்டி மேளங்கள்  தானம்மா !

நான்  திரும்பவும் : வருகின்றேனோ
இல்லையோ : தங்கைகளிடம்
சொல்லி   வையம்மா…..
பிறக்கப் போகின்ற : மருமக்கள்
ஒவ்வொருவரை : இந்திய
மண்ணுக்காகத்  தரும்படி !

ஆலமரத்தின்  நிழலில்
ஆயிரம்  ஜீவன்கள்
இளைப்பாறினாலும் : அதனின்
அடியினில்,  ஆணிவேர் ஒன்று
ஆதாரம்  தருகிறதல்லவா!

யுத்தங்கள்  வேண்டாம் என்று,
யோகிகள்  சொல்லக் கூடும் !
ஆனால் …. சுட்டுச்  சுட்டு
வந்து ஆறும் : காயத்தின்
அடையாளங்கள்  தான்
சுதந்திரத்தின்  பெருமையினைச்
சொல்லாமல்  நினைக்க வைக்கும்….

மரம்  இருக்கும்  காலம்வரை
அதற்கு : உரமும் இருக்க
வேண்டும்  என்பது,
உனக்குத்  தெரியாததல்ல!

நன்றியுள்ள  ஜீவன்
நாய்கூட : தனக்கு
இரண்டு  குட்டிகளே பிறந்தாலும்,
முதல் குட்டியைத்  தனக்கு
பத்திய  உணவாக்குவதில்லையா ?
அதுபோல  இந்நாட்டின்,
நன்றியுள்ள  தாய்க்குலங்கள்
நாடுவாழத்  தம்குட்டி…. ஒன்றைத்
தருதல் : தவறல்லவே !

இத்துடன்  முடிக்கின்றேன் !
அதோ  எதிரிகளின்,
பீரங்கி  முழக்கங்கள் : எங்களை
உக்கிர மாக்குகின்றன !
தாய், தந்தை, தங்கை  உறவுகள்,
அவுட்-அப்  போக்கஸாய்
எடுத்த புகைப்படம் போல,
கண்ணை விட்டுப்  போகிறதே !

சா(ர்)ப்  போக்கஸில் : நமது
துருப்புக்களின்  வரிசையே
தெரிகின்றது !

வாழ்ந்தாலும்  சரி,
மார்பில்  துளைபட்டு,
வீழ்ந்தாலும்  சரி,
உன்   மகனை,
நாளை  இம்மண்….
சான்றோன்  என்றே
சாற்றுகின்ற  மொழிகேட்டு,
ஈன்ற  பொழுதைவிட,
பெரிதுவக்கப்  போறவளே….!
பரந்து  விரிந்த
பாரத  மாதா
இரந்து  என்னை
அழைப்பதன்  முன் : நான்
விரைந்து  செல்கின்றேன்  அம்மா !

வந்தே  மாதரம்….!
வந்தே  மாதரம்….!

bairaabaarath@gmail.com