மரணம் மட்டுமே துயரம் அல்ல. மு.புஷ்பராஜன் எம்மிடமிருந்து விடைபெறும் போது—-

மு.புஷ்பராஜன்அசோகமித்திரன் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓவியர் கே.கிருஷ்ணராஜா  தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கவிஞர் மு.புஷ்பராஜன் இங்கு பிரித்தானியாவிலிருந்து விட்டு போய்  நிரந்தரமாக கனடாவில் வசிக்கப் போவதான செய்தியை அறிவித்த அவர் அதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். குடியுரிமை வதிவிடப் பிரச்சினை காரணாமாக, கனடாவில் வதியும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப்  பிரிந்து வாழும் புஷ்பராஜன்  எப்போதாவது ஒரு நாள் அவர்களிடம் போய் சேருவார் என்பதை நாம் எதிர்பார்த்திருந்தாலும் அந்நாள் இவ்வளவு சீக்கிரம் வந்து சேரும் என்பதினை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. இனி அவர் எம்மோடு இல்லை. எமது இலக்கிய சந்திப்புக்கள், அரசியல் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எமது ரெட்மூன் மாதாந்த திரைப்பட நிகழ்வுகள் எதிலுமே இனி இவரைப் பார்க்க முடியாது. மனதை ஏதோ ஒரு வெறுமை அப்பிக் கொண்டது. அசோகமித்திரன் மறைந்து மூன்றாவது நாள் 25.03.17 அன்று ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள  சிந்துமஹால் உணவு விடுதியின் கீழ்த்தளத்தில் ஒன்று கூடினோம். அன்றைய தினம் அங்கு மு.புஷ்பராஜன், பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கே.கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன் இவர்களுடன் தோழர்கள் வேலு, சேனன், எம்.பௌசர், கோகுலரூபன், சாந்தன், கஜன் காம்ப்ளர், செபஸ்டியன் என பத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆர்வலர்களும், அரசியல், சமூக  செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ஒரேயொரு பெண் பிரதிநிதியாக தோழர் பாரதி மட்டுமே கலந்து கொண்டார் என்பதினையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என கருதுகின்றேன். அசோகமித்திரன் மறைந்து மூன்று நாட்களும் பூர்த்தியாகாத நிலையில் அன்றைய உரையாடல்கள் ஆனது அசோகமித்திரன் மீதான போற்றுதல்களுடனும் தூற்றுதல்களுடனுமே ஆரம்பமாகியிருந்தது. திசை மாறிப் போன உரையாடல்கள் ஆனது பின்பு தனது சரியான தடத்திற்கு திரும்பி கலந்து கொண்ட அனைவரும் புஷ்பராஜனுடைய கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றியும் அவருடனான  தமது உறவுகள்  அனுபவங்கள் பற்றியும்  பகிர்ந்து கொண்டனர். அங்கு பரிமாறப் பட்ட விஸ்கியும் வைனும் கொஞ்சம் அதிகமாகவே உட்புகுந்த காரணத்தினால் அனைவரது அனுபவப் பகிர்வுகளும் கொஞ்சம் வெளிப்படையானவையாகவும்  உணர்ச்சிவசப் பட்டதாகவும் அமைந்திருந்ததினையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். 

கவிஞர் மு. புஷ்பராஜன் குறித்து நாம் இங்கு புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவுமில்லை. அவர் ஒரு தேசங்கள் கடந்த கலைஞர். கவிஞராகவும் விமர்சகராகவும் ஆய்வாளராகவும் கலை, இலக்கியம், சினிமா, அரசியல், வரலாறு என பல்வேறு தளங்களிலும் கால் பதித்துள்ள அவர் எழுதிக் குவித்துள்ள புத்தகங்களும் கட்டுரைகளும் அநேகம். அத்துடன் மிகவும் குறுகிய காலத்தில் மட்டுமே வெளி வந்து நின்று போயிருந்தாலும் ஈழ இலக்கிய பரப்பில் பலத்த அதிர்வினையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தவர். அன்று இவர் எழுதிய பல கட்டுரைகள் பேராசியர் க.கைலாசபதிக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் அதிக கலக்கத்தினையும் நடுக்கத்தினையும் கொடுத்தது என்பதினையும் இங்கு முக்கியமாக குறிப்பிட்டேயாக வேண்டும்.

எனக்கும் புஷ்பராஜனுக்குமான உறவானது அதிக நெருக்கமானதாக இல்லாது இருந்த போதிலும் கடந்த பல வருடங்களாக அவருடன் மணிக்கணக்காக உரையாட பல சந்தர்பங்கள் எனக்குக் கிடைத்திருந்து. ஒரு காலப்பகுதியில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புத்தகங்கள் வாங்குவதற்காக தோழர் பௌசர் அவர்களின் அலுவலகத்திற்கு நான் செல்வது வழக்கம். அந்த அநேகமான வியாழன்களில் அவரும் அங்கிருந்ததை நான் எதேச்சையானதாக கருதவில்லை. அங்குதான் அவருடனாக அதிகம் உரையாடி இருக்கின்றேன். உண்மையில் இந்த உரையாடல்கள் மூலமாக நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களும் தகவல்களும் நான் எந்த நூல்களை வாசித்தும் பெற்றுக் கொள்ள முடியாதவை. இவ்வகையில் அவர் எனக்கு ஒரு நடமாடும் நூலகமாகவே தோன்றினார் என்பது மிகைப் படுத்தப் பட்ட கருத்து அல்ல.

அன்று அந்நிகழ்வில் பேசிய யமுனா ராஜேந்திரன் அவர்கள் புஷ்பராஜனின் வியத்தகு ஆளுமைகள் குறித்தும் சர்வதேச இலக்கியங்களில் அவருக்குண்டான அளவு கடந்த அறிவினையும் பரிச்சியத்தினையும் குறிப்பிட்டார். கடந்த பல வருடங்களாக தனக்கும் அவருக்குமிடையிலான நெருங்கிய நட்பு குறித்தும் விளக்கினார். ஒரு கலைஞன் ஆனவன் மனித மனங்களின் நுட்பங்களை ஆழமாக புரிந்து கொண்டவனாக இருப்பான், அவனால் மற்றைய மனங்களை புண்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர் புஷ்பராஜனும் அவ்வகையில் ஒரு பண்பட்ட கலைஞனாக மற்றவர் மனங்களை புண்படுத்தாத மற்றவர்களின் பலவீனங்களையும் vulnerability  இணையும் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான மனிதர் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தோழர் பௌசர் அவர்கள் இத்தகைய புஷ்பராஜன் போன்ற ஆளுமைகளை புரிந்து கொள்ளாத இச்சமூகத்தினை கோபாவேசத்துடன் கடுமையாக சாடி இவருக்கும் தனக்குமான நட்பு குறித்தும் அது தரும் துயரம் குறித்தும் பேசி “மரணத்தை மட்டுமே நாம் துயரமாக கருதுகின்றோம். ஆனால் இது போன்ற நட்பின் பிரிவுகள் ஆனது எனக்கு ஒரு மரணம் தருகின்ற துயரிலும் அதிகமாக உள்ளது” என  குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மு.நித்தியானந்தன் அவர்கள் ஈழத்திலிருந்தே பல தசாப்த காலங்களாக  தொடரும் புஷ்பராஜனுடனான நட்பு குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் பேசி ‘அலை’ இன் ஸ்தாபகர்களில் ஒருவரான புஷ்பராஜன் எம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் போதே இங்கு இலண்டனில் சிலர் தாம்தான் அலையை உருவாக்கியவர்கள் என்று கூறித் திரிவது தனக்கு சிரிப்பை மூட்டுவதாக தெரிவித்தார். எவ்வளவு கூட்டிக் கழித்துப் பார்த்தும் இவர் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்று இன்று வரை எனக்குப் புரிபடவேயில்லை.

தோழர் சேனன் தனதுரையில் புஷ்பராஜனுடன் தனக்கு எந்தவிதமான பழக்கமோ உறவோ இருந்ததில்லை என்றும் அது குறித்து மிகவும் மனம் வருந்துவதாக குறிப்பிட்டு அதற்கான காரணத்தை அங்குள்ள மற்றவர்கள் மீது சுமத்தினார். இதனை வெறும் நகைச்சுவையாகவே மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது. அப்படியே இருக்குமென்றும் நினைக்கின்றேன்.

தொடர்ந்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். வேறு பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம். இரவு உணவினை உட்கொண்டோம். போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.  விடை பெரும் தருணத்தில் அவரது ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத் தொகுதியில் அவரது அழகான கையெழுத்தினைப் பெற்றுக் கொண்டேன்.

விடை பெற்று திரும்பும் போது மனம் இலேசாக் கனத்தது. வீடு கூப்பிடு தூரத்திலேயே இருந்த படியால் நடையிலேயே திரும்பினேன். ஈஸ்ட்ஹாம் நகரசபை மண்டபத்தின் மணிக்க்கூண்டுக் கோபுரத்தில் அமைந்துள்ள அந்த பிரமாண்டமான கடிகாரம் மணி ஒன்பதாகி விட்டதை தெரிவித்தது. இனி வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் இந்த மனிதரைச் சந்திப்போமா என்று என் மனம் என்னையே கேட்டுக் கொண்டது. ‘மரணம் மட்டுமே துயரம் அல்ல’ என்று பௌசர் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை எதனையுமே சட்டை செய்யாமல் ஈஸ்ட்ஹாம் பெருந்தெருவானது சனிக்கிழமை மாலைக்கே உரிய பொலிவுடன் ஆரவாரமாக இயங்கிக் கொண்டிருந்தது.\

vasan456@hotmail.com