வாரணமிசைத்து வரவேற்றிடும்
ஊர்விழிக்கும் அதிகாலைப்பொழுதொன்றில்,
மலரே நீ பூத்துச்சிரித்தாய்.
சிரித்தென் சிந்தையில் பதிந்தாய்.
காலம் கடந்துமின்னும்
அன்று பூத்த அதிகாலை மலராய்
மணம் வீசிச்சிறக்க வைக்கின்றாய்.
மலரே ! உன் வனப்பும், நகைப்பும்
என் பொழுதுகளை வனப்பாக்கின.
உனக்குத் தெரியாமலேயே நானுன்னை
இரசித்தது உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
உன் மலர்தலில் அன்று ஆனந்தித்ததுவும் உனக்குத்
தெரிந்திருக்கச் சாத்தியமில்லை.
இருந்தும் பொழுதொன்றின் வனப்பை
உன் மலர்தல் கூட்டியது.
பொழுதொன்றினை ஆனந்திக்க வைத்தது.
மலரே!
மலரே உன்னை யாருக்குச் சூட்டினர்?
உன்னை யாருக்குப் படைத்தனர்?
நான் நினைக்குமிடத்தில் நீயில்லை என்றபோதும்.
மலரே! நானுன்னிடத்தில் மயங்கினேன்,
ஒரு பொழுதில் நீ மலர்ந்தாய்.
ஒரு பொழுதில் நீ இதழ் விரித்தாய்.
ஒரு பொழுதில் நீ முறுவலித்தாய்.
அப்பொழுதில் மலரே
அகத்தை அள்ளிச்சென்றாய்
இகத்தில் இன்பம் பரப்பியே.