மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்!

தமிழச்சி தங்கபாண்டியனின் - வெங்கட் சாமிநாதன் -தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும்  வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் ஒருவரிடத்தில் காணும் முதல் அனுபவம். பேச்சுத் திறன் என்பது,  அனேகமாக மேடை ஏறும் எல்லாத் தமிழரிடமும் காணும் ஒன்றுதான் என்றாலும் இங்கு தமிழச்சியிடம் கொஞ்சம் அதிகமாக, நயத்துடனுன் அழகுடனும்  வாய்த்துள்ளது என்று எண்ணி மறந்து விட்டது இப்போது திரும்ப நினைவில் தலை தூக்கியது. இந்த குணங்களில் பெரும்பாலானவை நகரத்து, அதிலும் சென்னையின் விளைச்சல் அல்லவா? இது எப்படி ஒரு மல்லாங்கிணற்றுப் பயிரில் காண்கிறது என்று ஒரு கேள்வி,  தமிழச்சியின்  எஞ்சோட்டுப் பெண் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் எழுந்து நெற்றி சுருங்கியது. அதே சமயம் அது சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. பட்டம் பெற்ற ;பெண், கல்லூரியில் ஆங்கிலம் போதிக்கும் பெண், உலகம் சுற்றும் பெண் தான் சிறு பிராயத்தில் வாழ்ந்து அனுபவித்த தோழிகளையும், அப்பத்தாவையும்,  வரப்புச் சண்டையில் கால் வெட்டுப்பட்ட சித்தப்பாவையும், மெதுவடையை புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக்கொடுத்த முனியனூர்க் கிழவியையும், எள்ளுருண்டை கடித்துப் பகிர்ந்து கொண்ட எஞ்சோட்டுத் தோழியையுமா கவிதை எழுதுவார்கள்? எழுத எத்தனை இல்லை? பெண்ணீயம், முற்போக்கு, கண்ணகி, ஆணாதிக்கம், போஸ்ட் மாடர்னிஸம், ஸ்ட்ரக்சுரலிஸ்ம், தமிழ் எனது மூச்சு, படிமம் கல்தோன்றி…….இத்யாதி எத்தனையொ கொட்டிக்கிடக்கும் போது? கோவில் பட்டிக் காரர்கள் கூட மாந்த்ரீக யதார்த்தம், பேப்பரில் கை வைத்தால் தானே ப்ளாஞ்செட் மாதிரி எழுதிக்கொள்ளுமாமே. ஆனால், எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தனையும் தமிழச்சியின் இதயத்திலும் நினைவுகளிலும் இன்னமும் நிறைந்திருப்பது மல்லாங்கிணற்று கிராமத்தின் தன் இளம் பிராய அனுபவங்களும், அங்கு தன்னிடம் இயல்பான பாசம் காட்டிய மனிதர்களும் தான். அந்த வாழ்க்கை தான். நகரப் பூச்சு அற்ற சக மனித பாசம்  தான். இளம் பிராய அனுபவங்களும், வாழ்க்கையும் மல்லாங்கிணற்று கோடை வெயிலின் பொசுக்கலையும் மீறி இனிமையானவைதான்

நகரத்து கோடை மதியங்களில்
ஐஸ்கிரீம் ருசிப்பதற்காக
வரிசையில் நிற்கும் போது
வெயிலுக்கு உகந்த அம்மன் கோவில்
நீர் மோர்   பந்தல் நினைவிற்கு வருகிறது
மனதின் ருசி அறியுமா
மாநகர வெயில்?

இதில் ”ருசிப்பதற்காக, ”வெயிலுக்கு உகந்த,” சொற்கள் இல்லாமலிருந்து

வரிசையில் நிற்கும்  போது
நினைவுக்கு வரும் அம்மன் கோவில்
நீர் மோர் பந்தல்
மனதின் ருசி  அறியுமா
மாநகர வெயில்?

என்று இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எனக்குப் ;பட்டது . ஆனாலும், சொல்லக்  கொஞ்சம் தயக்கம். தமிழச்சி முகதாக்ஷண்யத்துக்காக, கொஞ்சம் முறுவலித்து பேசாமல் இருக்கக் கூடும். ஆனால், தமிழ்ப் புலவர் ;பெருமக்கள், தமிழ்க் கவிஞர் பெருமக்கள்,  “யொவ், பெரிசு, நீ கொஞ்சம் கிட்ட வா. நீ என்ன கவிஞரா? இல்லே தெரியாமத்தான் கேக்கறேன். நீ எத்தனை கவிதை எழுதியிருக்கே இது வரைக்கும் ? முதல்லே நீ ஒழுங்கா தமிழ் படிச்சிருக்கியா, சொல்லு பாப்பம். உனக்கு என்ன, எஸ்ரா பௌண்டோ என்னமோ ஒரு வெள்ளைக்காரன் இருந்தானாமே, நீ அப்படின்னு ஏதும்  நினைப்பா? இது தமிழ் நாடு அதை முதல்லே புரிஞ்சிக்க, என்று நக்கீர மிரட்டல் வரும் உதடுகளில் வெற்றிக் களிப்பு தாண்டவமாடும் சொல்ல வந்தது நகரத்து ஐஸ்கிரீமை விட கிராமத்து வெயிலில் நீர் மோர் தான் அதிகம் ருசிக்கிறது. தமிழச்சிக்கு.

இன்னொரு இடத்தில் மிக அழகான  ஒரு காட்சி. ஹைக்கு மாதிரியான ஒரு காட்சி அது முதல் மூன்று வரிகளுடன் நின்றிருந்தால். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

வேப்பம்பூ சிரிக்கிற
வெயில் காலம்
கசந்ததேயில்லை.
வேப்பம் பழங்கள் பிதுக்கி
காயவைத்த கொட்டைகளைக் காசாக்கி,
சீனி மிட்டாய் வாங்கித்
தின்ற உச்சிப் பொழுதுகளில்

இது போல் இன்னுமொன்று. சின்ன கவிதை தான்.

இருண்டிருக்கும் அரங்கமொன்றில்
ஒத்திகை முடிந்து அமர்ந்திருக்கிறது
தனிமை –

இத்தோடு முடிந்திருந்தாலே போதும். ஆனால் இன்னும் இரண்டு வரிகள் தொடர,

ஒப்பனையின் பூச்சற்ற  அதன்
அகோரம் அதி அழகு.

அதென்ன அதி அழகான அகோரம். மறுபடியும் இதுவும் எனக்கு சங்கடமான சமாசாரம்.

பத்து வருடங்களாயிற்று. தமிழச்சியின் முதல் தொகுப்பு எஞ்சோட்டுப் பெண் கவிதைகளைப்; படித்து. கிராமத்து இளம் நினைவுகளும் யோசித்துப் புனைந்த கவிதைகளாக இல்லை. அம்மனிதர்களோடு நடந்த உரையாடல்களாக. அல்லது அதை நினைவு கூறும் கதையாடல்களாகத் தான் வந்துள்ளன. உரையாடல்களுக்கே உரிய எளிய சொற்கள், இறுக்கமற்ற, இலகுவான நடை.

சாராயம் போட்டிருந்தால்
அப்பா அறியாமல்
பூனை நடை நடந்து
பின் பக்கமாய் வந்து
கோழிக்குழம்பு ருசிக்கும்
சேத்தூர் சித்தப்பா  எப்போதும்
எனக்கு கனகாம்பரமும்
கலர்ப் பூந்தியும் வாங்கி வருவார்.

இடையில் வந்த வனப் பேச்சி, கிராமத்து காவல் தெய்வம், எல்லையம்மன், மாதிரி. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. படிக்க எடுத்துச் சென்றவரிடமிருந்து திரும்பவில்லையோ என்னவோ. இப்போது கையிலிருப்பது மஞ்சணத்தி. மூன்றாவது தொகுப்பு. திரும்பவும் இத்தொகுப்பில் நிறைந்திருப்பது, மல்லாங்கிணறு நினைவுகள் தாம். மனிதர்கள் தாம். அனுபவங்கள் தான். நினைவுகளாக, நகர வாழ்க்கையின்  வெறுமையில் பிறக்கும் ஏக்கங்களாக. மல்லாங்கிணற்று மனிதர்களைத் திரும்பப் பார்க்கும் அனுபவமும் அதைச் சொல்லும் பாங்கும் மிக அழகு.

கடுமையான வசவுடன்
கால் பொசுக்க
வாசல் கூட்டும் பொம்மக்காவைப் போய்
கால் சுற்றும் பூனையாக
கொஞ்சுகிறது இந்த வெய்யில்.

மஞ்சணத்தி மரமும் நான் பார்த்ததில்லை., தமிழச்சி கவிதை தொகுப்புகள் எல்லாமே பரிசுப் பதிப்புகள் போல ஆர்ட் பேப்பரில் வண்ணப்படங்களும் மஞ்சணத்தில் மரமும், அதன் இலைகளும் மொட்டும் புகைப்படங்களாக ஒவ்வொரு பக்கத்திலும் பதிவாகி. தமிழச்சி புன்னகையும் பூக்களுமாக பின் அட்டையில் காட்சி தர, எதுவும் சல்லிசான சமாசாரங்கள் இல்லை. எல்லாம் value added, enriched. அங்கும் அவர் கிராமத்துப் பெண் தான். அவருக்கு தங்க நகைகள் பிடிப்பதில்லை. பணத்துக்கும் செல்வாக்குக்கும் குறைவில்லை. ஆனால், சங்கு,சோழி, சிப்பி, பவளம் மரத்தாலான கைவினைப் பொருட்கள் தான் அவர் விரும்பும் அலங்கார அணிகலன்கள். கிராமத்து சந்தைகளில், ஆதிகுடி மக்களிடம் காணும் அலங்காரங்கள் தான். தான் போகும் இடமெல்லாம் இவை தான் அவர் தேடி வாங்கும் அணிகள். இரு கைகளிலும் நிறைய வளையல்கள். இப்படி காட்சி தருவது ஒரு உலகம் சுற்றும் பட்டம் பெற்ற ஆங்கிலம் போதிக்கும் பேராசிரியை, கவிஞர். கட்சித்தலைமைகள் விரும்பி அழைக்கும் பேச்சாளி.

மஞ்சணத்தி மரம் அழகாகத் தான் இருக்கிறது. சுற்றி எங்கும் கிளை பரப்பி அடர்த்தியான இலைகள் போர்த்தி,, அழகு தான். எந்த மரமும் அழகு தான் தன் வடிவைத் தானே தேர்ந்து கொள்ளும் அழகு. கவிதைத் தொகுப்பின் பக்கமெங்கும் மஞ்சணத்தியின் தரிசனம் தான், புகைப்படமாக. ஓவியங்கள் எனச் சொல்லப்பட்டவை தான் உறுத்தலாக இருக்கின்றன. இந்த ஓவியங்களுக்கு பதிலாக, மல்லாங்கிண்று மக்களும், தெருக்களும் புகைப் படங்களாக இடம் பெற்றிருக்கலாம். அதுவும் அழகு தான். சரி போகட்டும். 

மஞ்சணத்தி மரம் அதை மறக்கச் செய்யும். கூட ஒரு கவிதையும், தமிழ்ச்சியின் சிறுபிள்ளைப் பிராய அனுபவங்களை நினைவு கூர்ந்து.

முறுகேறிய உன் மரக் கிளையில்
சிராய்த்துக் கழிந்தது
என் சிறு பிராயம்
மூச்சிறைக்க ஓடி வந்து என்
முதல் ருதுவை
உன் இலையொன்றைக்
கிள்ளியபடியே பகிர்ந்த போது
தொடங்கிற்று என் பதின் ;பருவம்
கிடை ஆட்டு மந்தை ஒன்று
காலத்தை மென்றபடி உன்
காலடியில் இளைப்பாற,
அதன் குறுந்தாடி பார்த்துப்
பால் பிரிந்த பேதமையில்
போனது அப்புதிர்ப் பருவம்….
.          என்று நீண்டு செல்லும் அக்கவிதை

என் ஆதித் தாயே மஞ்சணத்தி
முகவாயில் நரை முளைத்து
பெருங்கிழவி ஆன பின்னும்
உன் அடிமடி தேடி நான் வருவேன்
அப்போது,
என்
தோல் நொய்ந்த பழம் பருவத்தை
உன்
தோல் மரத்துச் சருகொன்றில்
பத்திரமாய்ப் பொதிந்து வை
உள்ளிருக்கும் உயிர்ப் பூவை
என்றாவது
நின்று எடுத்துப் போவாள்
நிறை சூல் கொண்ட இடைச்சி ஒருத்தி

 என்று முடிகிறது.

கிராமத்து நினைவுகளும், நினைவில் திரும்பத் திரும்ப எழும் இனிய மனிதர்களும், நிறைந்த கவிதைகள் தான்  தமிழச்சியின் ஆளுமையே போல சாட்சியப் படுத்துகின்றன. இது அவரது தனித்துவம் போலும்.  வார்த்தைகள் வலிந்து தேடப்பட்டவை அல்ல. அவை மிரட்டுவதில்லை.  பாவனைகள் இல்லை. தானும் தன் நினைவுகளும் கிராமத்து மணத்தில் தோய்ந்த மொழியும். கவிதையாகின்றன. இன்னொரு தமிழச்சி இல்லை இங்கு. அனேகமாக நாமெல்லாருமே கிராமத்தில் வாழ்ந்தவர்கள் தான்.  இருந்தாலும்,

வார்த்தைகளை விட அதிகம் பேசுகின்ற
முகங்களுடனான என் முதல் அறிமுகம்
முழுதுமாய் வெண் தாடி வைத்திருந்த
முல்லைக் கனி நாடாருடன் தான்
தொடங்கிற்று,
அத்தாடி நுனி பிடித்தேறும்
எறும்பு போய் மீசை சேர
அம்மாடி எத்தனை நேரமாகும்.
என் நகம் கடித்த
என் பிள்ளைப் பிராய பிரமிப்பு

என்று எழுதும் தமிழச்சிக்கு கிடைத்த முல்லைக் கனி நாடாரைப் போல நம் கவிஞர்கள் ஒவ்வொருக்கும் ஏதோ ஒரு முல்லைக் கனி நாடார் இருந்திருப்பார் தானே. அந்த முல்லைக் கனிகள் எங்கும் காணோமே.

கடைசியில் மாதிரிக்கு வேறு ஒரு கவிதை. எங்கும் நடப்பது தான். நந்திக் கிராமத்தில் இல்லையெனில் முள்ளி வாய்க்கால் (அதுவும் உண்டு இத்தொகுப்பில். .இப்படி எத்தனையோ. உலகமெங்கும் பரவிக் கிடக்கும். நைஜீரியப் பள்ளிக்கூடங்களில், பக்தூன் ஹவா தெருக்களில், முச்சந்திகளில் இப்போது நந்திகிராமம்.

பின்  மாலையின் வியர்வையுடன்
சுருண்டிருந்த சும்மாடுகளையும்,
ஓநாய்த் தீண்டலுடன் முகர்ந்தன
பசித்திருக்கும்
துப்பாக்கிகளின் பின்புறங்கள்
உலுக்கிச் சிதறிய விதை நெல்லை
முன்னிரவில் மூர்க்கமுடன்
“காயடித்தன” கனத்த காலணிகள்
ஓடுகளுக்குள் ஒளிந்தபடி
நடுக்கமுடன் நுழைந்த பின்னிரவு
முற்றத்துக் குருதியில்
கைபிசைந்து அமர்ந்திருக்க
பெருஞ்சத்தமுடன் அந்த நாள்
இடம் பெயர்கின்றது –
இன்னுமொரு
“நிலமெனும்
நல்லாளை”
இச்சிக்க


மஞ்சணத்தி (கவிதைத் தொகுப்பு) தமிழச்சி தங்கபாண்டியன். உயிர்மை பதிப்பகம் அபிராமபுரம், சென்னை-8 விலை ரூ 250

21.5.2014
vswaminathan.venkat@gmail.com