மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு, மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.
ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா? மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.
உலகத் தரமான கதையைப் படித்து முடிக்கும்போது ஏற்படக்கூடிய catharsis உணர்வு இந்தக் கதையைப் படித்தபோது கிடைக்கவில்லை.
நாலு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட போது இந்த எதிர்ப்பு எழவில்லையே, இது ‘இந்துத்வா’ சதி என்பதெல்லாம் பிரச்னையை திசைதிருப்பும் செயல். உண்மை யான ஊரின் பெயரும், குறிப்பிட்ட சாதியின் பெயரும் கதையில் இடம்பெறுவதுதான் உண்மையான பிரச்னை. இந்து நாளிதழுக்கும் இந்துமத எதிர்ப்பாளர்களுக்கும் இந்தப் படைப்புக்கான உள்ளூர் எதிர்ப்பு தங்களுடைய மோடி அரசு எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்புக்கான தக்கதோர் வாய்ப்பாகியிருக்கிறது.
பெண் கணவனைத் தவிர வேறொருவரோடு படுக்கிறாள் என்பதை செரித்துக்கொள்ள முடியாத ஆணின் மேலாதிக்க மனப்பான்மையைத்தான் இந்த கதைக்கான எதிர்ப்பு காட்டுவதாக டெக்கான் க்ரானிக்கிளில் கவிஞர் சல்மா கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது ஒருவித clicheத்தனமான வாதம். இதே வாதத்தை மனைவி திருவிழாவுக்குப் போய்விட்டாள் என்ற விஷயம் தெரிந்ததும் கதாநாயகன் காளி பரிதவித்துப்போவதாகச் சித்தரிக்கும் கதாசிரியர் மேலும் ஏற்றிவைக்க முடியும்.
கதை நாயகி பொன்னாவை வறடி என்னும்போது அவள் வலித்தழுகிறாள். ஆனால் அவள் ‘வெள்ளைச்சீலைக்காரி’ என்று சக-பெண்ணை ஆங்காரமாக ஏசுகிறாள். காளியின் சித்தப்பா பாத்திரம் – காளியால் மதிக்கப்படுபவரும், கதாசிரியரால் சமூகப் பொய்மைகளுக்கு எதிர் நிலையில் காண்பிக்கப்படுபவருமாகிய மனிதர்தான் கூட்டிக் கொண்டுவந்த வெள்ளைச் சீலைக்காரி தாலி கேட்கிறாள் என்பதை கேலிபேசி அவளைத் துரத்திவிட்டதாகக் காளியிடம் தெரிவிக்கிறார்.
அத்தனை அந்நியோன்யமான காளி-பொன்னா தம்பதி தாழ்த்தப்பட்டவர்களுடைய குழந்தையை தத்து எடுத்துக்கொள்வது குறித்து அவர்கள் சாதிவழக்கப்படியேதான் தயக்கங் காட்டுகிறார்கள்.
இது சரி, தவறு என்று ஆசிரியர் கூற்றாக எதுவுமே வருவதில்லை. கதையில் ஆசிரியர் தன்னைத் துருத்திக்கொண்டு வெளிப்படுத்தக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குழந்தையில்லாத பெண்ணைக் கேவலம் செய்யலாகாது என்பதைச்சொல்ல விழையும் ஆசிரியர் மற்ற தரப்பினரையும் காயப்படுத்தலாகாது என்பதைக் கதாபாத் திரங்கள் மூலமாவது, அல்லது ஆசிரியர் கூற்றாகவாவது புலப்படுத்தியிருக்க வேண்டாமா? கதை சொல்லப்பட்ட விதம் யதார்த்தபாணி நடையில்தான் என்பதால் வரியிடை வரிகளில் அது சொல்லப்பட்டிருக்க இடமில்லை.
’அந்த நாளில்’ எல்லோரும் சாமி என்று சொன்னாலும், அங்கே பெண் கிடைக்காதா என்று சுற்றுபவர்களும் உண்டு என்பதையும், பொன்னாவின் அண்ணனுமே அப்படிப் போனதுண்டு என்றும் கதை கூறுகிறது. அப்படியெனில் , அந்த சடங்கின் அனர்த்தம், போலித்தனம் முழுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஆனால் ஆசிரியர் பொன்னா தனக்கான சாமியைத் தேர்ந்தெடுத்துப் போவதாய் நயம்படக் கூறுகிறார்.
கதையில் நுட்பமாகச் சொல்லப்பட்ட இடமாக எனக்குப் புலப்படுவது, தனக்கான சாமியைத் தேடும் போக்கில் பொன்னா இளவயதில் தன் நேசத்திற்குரியவனாக இருந்தவனை நினைவு கூர்வதுதான்.
இன்று செய்தித்தாளில் சங்கரின் ‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தியிருப்பதாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி படித்தேன். இது அவர்களின் உரிமை தானல்லவா?
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்களும் விளிம்பு நிலை மனிதர்களும் எப்படியெல்லாம் மதிப்பழிக்கப்படுகிறார்கள் என்று நாம் நன்கறிவோம். வலியுணரா மனிதர்கள் செய்யும் அதே தவறை வலியுணரும் மனிதர்களும் செய்யலாமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
புத்தகக் கண்காட்சியில் சிற்றரங்கக் கூட்டத்தில் இந்தக் கதை குறித்த தனது எதிர்க்கருத்தை முன்வைத்தமைக்காக எழுத்தாளர் சாருநிவேதிதாவைத் தாக்கத் தயாராய் சில பேர் வந்ததும், அவரைக் கருத்துரைக்க விடாமல் தடுத்ததும் கண்டனத்திற்குரியது.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன் [24.01.2015]