மீள்பிரசுரம்: ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

ஆய்வின் முன்னுரை
மகாகவி பாரதியார்மகாகவி தாகூர்நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 பாரதியும் தாகூரும்
விடுதலைப்போரில் பாரதி, தாகூர் ஆகிய இருவரின் எழுத்துக்களும் போர்வாட்களாய் திகழ்ந்தன.  இருவருக்கும் சமயப்பார்வைதான் அடிப்படை; இருவரும் தாய்மொழிப்பற்றிலும், தாய்மொழிக் கல்வியிலும் நாட்டம் கொண்டவர்கள்.  இருவருக்கும் இசைஞானம் உண்டு.  இருவரும் உலக இலக்கியங்களில் ஆழமான பார்வை உடையவர்கள்.  இருவரும் ஒரே நூற்றாண்டில் படைப்பிலக்கியம் படைத்த சமகாலப் படைப்பாளிகள் எனப் பல்வேறு கூறுகளில் ஒன்றுபட்டாலும் சில கூறுகளில் வேறுபாடுகின்றனர்.
   
தாகூர் வறுமையறியாத செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தவர்;  பாரதியோ வறுமையில் வாழ்ந்த சராசரி குடும்பத்தவன்.  பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் தாகூரின் மன்ம் அமைதியான ஆன்மீகத் தேடலைப் படைப்புகளில் நிகழ்த்தியது.  ஆனால் பாரதியோ வயிற்றுப்பிழைப்பிற்காகத் தேச விடுதலைக்காக நிம்மதியற்ற குழப்பமான மனநிலையில் சாவல்களுக்கிடையில் இதழ்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  தாகூர் வாழ்ந்ததோ 80 ஆண்டுகள்;  பாரதி வாழ்ந்ததோ 39 ஆண்டுகள்.  தாகூர் உலகம் சுற்றியவர்.  பாரதியோ இந்திய எல்லை தாண்டாதவர்.  தாகூரோ மனிதனைக் கீழ் நிலையாக்கி.  பரம்பொருளை உயர்நிலையாக்கிய மனத்தவர்.  பாரதியோ பாட்டுக்கலந்திடப் பத்தினிப் பெண்ணைப் பராசக்தியிடம் கேட்டதோடு மட்டுமல்லாமல் “அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன காவலுற வேண்டும் என்று நெருக்கமாய் நின்று உரிமையோடு பேசியவர்.  தாகூரின் கவிதைமொழி செவ்வியல் சார்ந்த உயர்மொழி; பாரதியின் கவிதைமொழியோ மக்கள்மொழி.  பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருவருக்கும் இருந்தாலும் இருவருமே மகாகவிகள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது. 

மகாகவி பாரதியின் கவிதைகள்
“எமக்குத் தொழில் கவிதை” என்று உறுதியாய்ச் சொன்னவர் பாரதி.  தேசமும் தெய்வமும் விலகி மக்களை மக்கள், கவிதையைத் தந்து தமிழில் புதுக்கவிதை வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்.  இந்திய தத்துவ மரபினைத் தமிழ்ப்படுத்தித் தந்த கவிஞர்.  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.  தரையில் நின்றுகொண்டு விரிவாகத்தன்னை முதன்மைப்படுத்தாமல் நிலைகெட்ட மனிதரை நோக்கி நெஞ்சு பொறுக்காது கவிதை பாடியவர்: வங்க மொழியிலமைந்த பங்கிம்சந்திரரின் வந்தே மாதரம் பாடலை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்தவர்.  மொத்தத்தில் பாரதியின் கவிதைகள் மக்கள் உயரக் கருதிய மனிதநேய உணர்ச்சிக் கவிதைகள்.

இரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்
தாகூரின் கவிதைமொழி அறிவுப்பூர்வமானது. வைணவ மரபு சார்ந்த வேதப்பிரிவுகளைச் சார்ந்தது.  உபநிடதங்கள்.  வங்க நாட்டுப்புற இலக்கிய வகைகள்.  திரு. விவிலியத்தின் சாலமோன் மன்னரின் சங்கீதச் சாயலை ஒத்தனவாய் அமைகின்றன அவரின் கவிதைகள். மக்களின் துன்பத்தை விடத் தாகூர் முக்கியத்துவம் தந்துதேடியது பிரபஞ்ச இரகசியத்தையும் இயற்கையின் பிரம்மாண்டத்தையுமே. மகாத்மாகாந்தியுடன் முரண்படுகிற அளவு அவரது ஆளுமை பரந்து விரிந்திருந்தது.  1907இல் அவரது 45 வயதில் இந்தியஅரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்.  நாடகங்களை எழுதித் தாகூர் பெரும்புகழ் பெற்றார்.  மனைவி, இரண்டாம் மகள், கடைசி மகன் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது. 

கவுதம புத்தரைப் போன்ற சுயதேடலோடு அவர் அமைதியைத் தேடி சாந்திநிகேதனை உருவாக்கி அதில் தம்மைத் தொலைத்தார். 1912இல் வங்கமொழியில் உருவான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

தாகூரின் கீதாஞ்சலியின் கையெழுத்துப்பிரதி மேலைநாட்டுப் புகழ்மிக்க கவிஞரான டபிள்யூ. யேட்ஸை மலைக்க வைத்தது.  “நான் தாகூரின் கவிதைப் பிரதிகளை எல்லாப் பொழுதுகளிலும் படித்து மலைத்தேன்.  நான் உணர்ச்சி வசப்படுவதை யாரேனும் பார்த்துவிடும்வரை அதில் மூழ்கி இருப்பேன்.” என்றார்.  யேட். ஆங்கில மொழியில் கீதாஞ்சரி வெளியானபோது அதற்கு முன்னுரை தந்திருந்தார்.  ரமணருக்கு ஒரு பால் பிராண்டன் கிடைத்தது  மாதிரி தாகூருக்கு யேட் கிடைத்தார்.  1913ல் உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உலகின் உன்னத பரிசானநோபல் பரிசு கிடைத்தது.  இந்திய இலக்கியத்தைத் தாகூர் உலக இலக்கியமாக்கினார்.

பாரதி-தாகூர் கவிதைகள் ஒப்பீடு
பாரதி தாகூரைப் பற்றி ஒப்பிட்டு ஆய்வு நூல் வெளியிட்டுள்ள இலங்கைப் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி தமது “இரு மகாகவிகள்“ எனும் நூலில் சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டுகிறார்.  நோபல் பரிசு பெற்ற தாகூரோடு பாரதி கவிதைப் போட்டியிட விரும்பியதாகவும் அதைத் தம் சீடனோடு விவாதித்ததாகவும் காட்டுகிறார்.  பாரதி பேசியதாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.  பாரதி! ஓய் ஓய் நாம் தாகூருக்கு ஒன்று சொல்லுவோம் நீர் வங்கக்கவி?  நாம் தமிழ்க்கவி; விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம்.  உமது நோபல் பரிசைச் சபை முன் வைப்போம். நாமும் பாடுவோம். நீரும் பாடும். சபையோர் மெச்சுவார்கள்.  உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்லவேண்டியது என்போம்“ (இரு மகாகவிகள். பக்.17).

பாரதியார் கவிதைகளில் உள்ள “காட்சி“ என்ற கவிதையைத் தமிழின் முதல் வசனகவிதை முயற்சி எனக்குறிப்பிடும் வல்லிக்கண்ணன் (புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். பக்.12) வால்ட் விட்மனின்.  “புல்லின் இதழ்கள்“ எனும் பாடலை அடியொற்றித் தமிழில் பாரதி தந்தார் எனக் குறிப்பிடுகிறார்.

மகாகவிபாரதியின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவன், “பாரதி இரவீந்தரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார். தாகூரின் கீதாஞ்சலி மாதிரி அவரும் இதை எழுதினார்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வால்ட் விட்மனின் தாக்கத்தில் பாரதி வசன கவிதை படைத்தது கீதாஞ்சலியின் வரவுக்குப் பின்தான் என்பதை மறுக்க இயலவில்லை.  கீதாஞ்சலியையும் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில இடங்களில் ஒற்றுமை தென்படுகிறது.

பாரதியின் காட்சிகளின் கருவோடு தாகூரின் கீதாஞ்சலியின் கவிதைக் கரு ஒத்துப் போகிறது.  இயற்கை அதாவது ஒளி.  நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், கடல், மலை, நதி, யாவும் ஏகாந்தமானது. 

இனிமையானது என்பதையே தாகூரும், பாரதியும் வெவ்வேறு சொற்களால் வெளிப்படுத்தி உள்ளனர். கீதாஞ்சலியும் பாரதியின் காட்சிகளிலும் ஒளிதான் கவிதைக்கரு.

கீதாஞ்சலி
ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் தூண்டிச் சுடர்விடச் செய்.  மேகத்திரள்கள் வாளை மறைந்தன; அடாத மழைவிடாது கொட்டுகிறது என்னுள் தோன்றும் கிளர்வின் காரணம் புரியவில்லை; வானில் கணநேரத்தில் மின்னல் ஆழம் நோக்கி என் கவனம் விரைகின்றது.  இரவின் பாடல் அழைக்க இருப்பிடம் தெரியாமல் பாதை தடுமாறுகிறது ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் துண்டிச் சுடர்விடச் செய்

காட்சி
ஒளியே நீ யார்? ஞாயிற்றின் மகளா விளக்குத் திரி? காற்றாகிச் சுடர் தருகின்றது இடியும்.  மின்னலும் நினது வேடிக்கை புலவர்களே மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.  மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக; நமது நெஞ்சில் மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.  என்ற பாடல் அடிகளால் உணரமுடிகிறது.

தாகூர் கீதாஞ்சலியிலே ஒரு பாடலில் கூறிய செய்தியைப் பற்றி அணுகி ஆராய்ச்சி செய்து தத்துவ ரீதியாக வேத வரிகளோடு அழகியல் சேர்த்து 46 பாடல்களில் வேறுபட்ட வடிவத்தில் தந்து மலைக்க வைக்கிறார்.  இப்பாடல்கள் கீதாஞ்சலியை விட ஆழமானதாகச் செறிவு மிகுந்ததாக பொருள் பொதிந்ததாக உள்ளதைக் காண முடிகிறது.

இறை வேண்டல்

1.    உலகத்தின் எந்திரவாழ்க்கைக்குள் சின்னாபின்னப்பட்ட மனிதன் இறைஞ்சும் இறை வேண்டலே கீதாஞ்சலி.  பாரதியின் போக்கும் அப்படித்தான்.

    நல்லதோர் வீணை செய்தே அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி எனைச்
    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ இந்த மாநிலம்
    பயனுற வாழ்வதற்கே

எனும் பாரதியின் குரலை,

என் இறைவனே

    உன்னுடன் இயைந்து பாட என் இதயம் ஆசைப்படுகின்றது.
    ஆனால் ஒரு நல்ல குரலுக்காய்
    அது பயனற்றுப் போராடிக் கோண்டுள்ளது.
    என்னால் பேச இயலும்? ஆனாலும் பேச்சு கீதமாகாதே
    அதனால் திகைத்து நான் அழுகிறேன்.

என்று தாகூரின் சொற்கள் மெய்ப்பிக்கின்றன.

ஆய்வு முடிவுரை
பாரதியின் காட்சிகளில் இன்னும் ஆழ்ந்த பொருள் பொதிந்துள்ளது.  தாகூரின் கீதாஞ்சலியோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.  தாகூரின் கங்கையாறும், பாரதியின் தாமிரபரணியும் கலப்பது கவிதை எனும் கடலில்தான்.  பிரித்துப் பார்க்க முடியவில்லை.  தாகூர் தம் கவிதைகளைத் தாமே மொழிபெயர்த்து மேலைநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதால் நோபல் பரிசு கிடைத்தது.  பாரதிக்கு அதைவிட முக்கியமான செயல்கள் இருந்திருக்கலாம்.  பரிசுகளை வைத்து நாம் பாரதியை மதிப்பிட்டு விட முடியாது.  “அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதை விட ஆலயங்களை அடுக்கடுக்காய் கட்டுவதை விட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உன்னதம்” என்றார் பாரதி.  தாகூர் அதை தம் வாழ்வில் சாந்தி நிகேதனாய்ப் உருவாக்கிக் காட்டினார்.  தாகூரின் சிறுகதைகளைப் பாரதி மொழிபெயர்த்தார்;  தாகூரை மிக மதித்தார்.

“கீர்த்தியடைந்தால் மகான் இரவீந்தரைப் போலே அடையவேண்டும்” என்று புகழ்ந்தார் பாரதி.  அவரை அடியொற்றிப் பாரதி கவிதை வடிவத்தையும் மாற்றினார்.  காட்சிகளில் பாரதி சொல்வதைப்போல் “பழைய தலையணை அதிலுள்ள பஞ்சை எடுத்துப் புதிய மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி.  அந்த வடிவம் அழிந்துவிட்டது”.  என்றான்.  பழைய வடிவம் அழிந்து பாரதியால் புதுக்கவிதை எனும் புதிய வடிவம் தமிழுக்கு வந்தது.  எல்லாம் அறிந்தும் பணிவோடு

    “ நல்லது தீயது நாமறிவோம் அன்னை
    நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக ”

எனக் கூறும் பாரதி தாகூரை விட உன்னதக் கவிஞன்தான்.   

நன்றி: http://mahatamilresearch.blogspot.com/2011/07/blog-post_3680.html