இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
அந்த காலப்பகுதியில் அந்தப் பிராந்தியம் இலங்கை இராணுவத்தின் 59 வது டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது குறித்து தமது அமைப்பு சில ஆதாரங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
கிறிஸ்தவ மதகுரு
ஆனந்தி என்ற ஒரு பெண்- இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது- இது குறித்துக் கூறுகையில் அந்தப் பகுதிக்கான கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் அவர்களுடன் தனது கணவரும் இராணுவத்தினாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இராணுவத்தினர் அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார். ஆனாலும் அதன் பிறகு பல இடங்களில் தான் விசாரித்தும் அவர்களது தகவல்கள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கூட அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யோகி குறித்தும் தகவல் இல்லை
அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட யோகரத்தினம் யோகி குறித்து கூறிய இலங்கையின் புனர்வாழ்வு தலைமை ஆணையர், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11,600 விடுதலைப்புலிகளில் அவர் இல்லை என்று கூறியுள்ளார். அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட மேலும் பலர் குறித்தும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறுகிறது.
கேர்ணல் ரமேஸ் வீடியோ
மற்றுமொரு காணாமல் போன சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் கேர்ணல் ரமேஸ் விடயத்தில் இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ரமேஸை அடையாளம் காண இராணுவத்தினருக்கு உதவியதாக சாட்சிகள் கூறியுள்ளன. அவரும் மேலும் மூவரும் அருகில் உள்ள ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் ரமேஸின் குடும்பத்தினருக்கு அவரைப்பற்றி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் உலக தமிழர் பேரவையால் வழங்கப்பட்ட ஒரு வீடியோவில் ரமேஸை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது போன்ற மேலும் சில வீடியோக்களையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது இந்த அறிக்கையில் இணைத்துள்ளது.
இலங்கை இராணுவப் பேச்சாளர் இந்த வீடியோவை நிராகரித்துள்ளதுடன் ரமேஸ் மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். காணாமல் போன கோகுலகிருஷ்ணன் என்பவரது மனைவி ஹியூமன் ரைட்ஸ் வாட்சுக்கு சாட்சியமளிக்கையில், தனது கணவர் பார்வையிழந்த நிலையில் இருந்த போதிலும், அவருடன் செல்ல தன்னை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும், அதன் பின்னர் அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இன்னுமொருவர் சாட்சியமளிக்கையில், மே 17 இல் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வைத்து ஏனையவர்களிடம் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட 5 பேர் பின்னர் காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.
அவ்வாறு காணமல் போனவர்களில் ஒருவர் சுதர்சனி கிருஷ்ணகுமார். அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள், ஆனால் தகவல் எதுவும் கிடையாது.
பல காணாமல் போன சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர்களத்தை விட்டு தப்பியோடிய தருணத்தில் தான் நடந்தது.
இந்த காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அரசாங்கம் இந்த ஆட்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதுடன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அடம்ஸ் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இறுதி கட்ட மோதலில் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதியப்பட்டிருந்தால் அவர்கள் இருப்பார்கள் என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.
நன்றி: http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110408_hrwreonlanka.shtml (ஏப்ரல் 8, 2011)