1. கன்னிக் கூறை
வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன
நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா…
என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?
ஆயுதமேந்தி
தீவிரமாய் வந்தவனால்
கொல்லப்பட்டு
சிதறிக் கிடக்கும் உங்கள் உடலைத்
தொட்டுத் தொட்டு
அழுகின்றேன் தாயே
நான்
ஏங்கி வடிக்கும் கண்ணீரை
நீங்கள்
மடித்துவைத்த தாவணியால்
மாறி மாறித் துடைத்துக் கொள்கின்றேன் உம்மா…
இந்தக் கன்னி மனசு
படுகின்ற வேதனையை
இனி நான்
எந்த உம்மாவிடம்
சொல்லிச் சொல்லி அழுவேன்
தலை சாய்த்து
ஆறுதல் அடைந்துகொள்ள
இனி நான் யாருடைய மடியைத்
தேடிக்கொண்டு செல்வேன்
வாப்பா வாங்கித்தந்த
வளையல்கள்
போடப்படமலே
இன்னும்
மேசையில் இருக்கின்றன
ஆளாகி
ஆடைகள் உடுத்தி
என்னை
அழகு பார்க்காமலே
இந்த படுத்த பாயில்
படுத்தபடியே
நானும்
மௌத்தாகிப் போகின்றேன்
உம்மா….
என்னுடைய
கடைசி மூச்சின் சத்தம்
உங்களுடைய காதுகளுக்குள்
கேட்டுக்கொண்டே இருக்கும்.
2.
முத்துக்கள் கொட்டிக்கிடக்கும்
என்னுடைய
முற்றத்து வாசலில்
செந்தாமரைப் பூப்போல
புத்தகங்கள்தாம்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன
என்னோடு
3. தான மண்டபம்
வெள்ளித்தட்டில் எடுத்து வைத்த
தாலிக்காசுபோல
பெறுமதியான நாள்கள்
சில்லறை சில்லறைகளாக
காணாமல் போயின
ஒன்றிற்கும் மேற்பட்ட
அனுபவங்களை
பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு
தான மண்டபத்தில்
அமர்ந்திருக்கின்றேன்
நாற்சந்தியில் நிற்பாட்டி
தபுதாரன் என்ற சொல்லால்
என்னைக்
காயப்படுத்திவிட்டுப் போனவள்
முன்னால் வந்து
அமர்ந்திருக்கின்றாள்
நோவினை தரும்
வேதனைகளைச் சுமக்கும்படி
அதே தபுதாரன் என்ற சொல்லால்
மறுபடியும் என்னைக்
காயப்படுத்திவிட்டுப் போனவள்
முன்னால் வந்து அமர்ந்திருக்கின்றாள்
எதிர்கொண்ட அவமானங்களையும்
குமுறிச் சிதறிய தருணங்களையும்
என்னால் எப்படி
எடுத்துச் சொல்ல முடியும்
ஆனதால்
கையிலிருந்த பாத்திரத்தை வைத்துவிட்டு
வெளியேறிப் போகின்றேன் நான்
4.
கூடு ஒன்று முடியுமுன்னே
குருவி பறந்து போனதடா
குருவி பறந்து போனதனால்
கூடும் சிதைந்து போனதடா
மாறாத நினைவுகளோடு
5. கொள்ளிக் குடம்
பெரிய பெரிய பாதங்களில் மிதிபட்டு
காயமாகி
நொந்துபோய்க் கிடக்கின்றது
உயிர்
இந்த உயிரைத் தூக்கிக் கொண்டு
நடக்க இயலாதவனாய்
இருந்து கொண்டிருக்கின்றேன் நான்
முன்னால்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
திசைகளில்
எந்தத் திசையில் நடந்து
எங்குதான் நான் செல்வது
குற்றேவல் புரிந்து
காலங்களித்த உயிருக்கு
நெடுந்தூரம் பயணிக்க
அருகதையற்றுப் போகின்றது
கருக்கல் நேரமொன்றில்
வேறு ஒரு திசையிலிருந்து
மரணச் செய்தி அறிவிக்கப்படுகின்றது
இன்னேரம் மனசு என்னிடம்
மாறி மாறிக்
கேட்டுக்கொண்டிருக்கின்றது
இந்த உயிரின் பெயரையும்
அந்தச் செய்தி
சத்தம்போட்டு
அறிவிக்கமாட்டாதா……?
6. பொற்கரை
கனவுகளைப் போலவும்
நிழல்களைப் போலவும்
பூமிக்குமேல்
வாழ்ந்தது போதுமென்று
உள்மனசு சொல்கின்றது
ஈரம் உட்கார்ந்து கொண்டிருக்கும்
இமைகளை
மெதுவாக
மூடிக்கொள்கின்றேன்
நல்லடக்கம் செய்யப்பட்ட
உடலொன்றின் ஆத்மா
காதோரம் வந்து
பசிக்கிறதாவென்று கேட்கிறது
தாகித்துக் கொண்டிருக்கும்படியும்
பசித்துக் கொண்டிருக்கும்படியும்
என்னைத் தனிமைப் படுத்திவிட்டு
எங்கு போய்விட்டீர்கள்?
மடித்து வைத்த காகிதமொன்றை
கையில் தந்துவிட்டுப் போகினறார்
வேறு ஒருவர்
சில நேரம்
நாளைக்கு
விடுதலை கிடைத்ததுவிடலாம்
எனக்கு
அப்படியானால்
என்னை இங்கிருந்து
வளியனுப்பி வைக்க
வாசனைச் செம்புகளோடும்
பிரார்த்தனைகளோடும்
நீங்களெல்லாம் வருவீர்களா?
7. செந்நெல்லு
பறவைகள் தேடிவராதபடியும்
உயிரினங்கள் விரும்பாதபடியும்
வற்றிப்போன குளமாகிவிட்டேன் நான்
இருந்தாலும்
இந்தச் சிறிய முகவரியை எடுத்துக்கொண்டு
இன்னும் நன்
உங்களைத் தேடி
அலைந்துகொண்டிருக்கின்றேன்
காலமாகி
கண்மறைந்துபோன உங்கள்
உம்மாவின் நினைவுகளோடு
நானும்
உயிரற்றுப் போனவனாய்
இங்கும் அங்குமாக
அலைந்து கொண்டிருக்கின்றேன்
ஜன்னல் கதவு நிலைகளில்
உங்கள் உம்மாவின் புன்னகை
பூத்துக் குலுங்கிய
பொற்காலமொன்று இருந்தது
அப்போது
வீடு நிறையப் பாடிக்கொண்டிருந்த
இந்த வீணையின் நரம்புகள்
இன்று
அறுந்து கிடக்கின்றன மகளே
ஆற்றாமையினாலும்
மனம் நொந்து போனதாலும்
உங்கள் தாயின்
கைகள் தழுவிய
இந்த மாமரத்தைப் பார்த்துக்
கேட்கின்றேன்
எனது ரசாத்தி இங்கு வருவாளா?
மாறாத மனச் சலிப்புடன்
இந்த ஜன்னல் கதவின்
நிலைகளைப் பார்த்துக் கேட்கின்றேன்
என் ராசாத்தி
என்னைத்தேடி வருவாளா?
தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டு
யாரைப்பார்த்து
நான் சொல்ல முடியும்
கடந்துபோன
அந்த வசந்த காலங்கள்
இனியும்
திரும்பி வரமாட்டாது என்று.