முகநூற் கவிதை: யாழ் நூலகம்

இஸ்மாயில் ஏ.முகமட் (Ismail A. Mohamed) -

\அறிவின் கருவை
அக்கினி தின்ற
அகவை முப்பத்து எட்டே
நூல்
செறிவில் வஞ்சம்
சேர்த்தன நெஞ்சம்
அழித்தன கண்கள் பட்டே

ஆசிய மண்ணின்
அதிசயமாக அமைந்ததில்
வந்தது இடையூறா
மதி
வீசிய தேசம்
வெந்தழல் மீது
வீழ்ந்திடக் காரணம் கண்ணூறா

 

சரித்திரமானது
சாம்பல் நிறத்தில்
சரிந்தது ஆயிரம் வருடங்கள்
இதை
விரித்திடும் போது
விம்மிப் புடைக்கும்
விழிகள் தாங்கிய புருவங்கள்

யாரும் சுவாசக்
காற்றில்லாமல்
யாத்திரை உலகில் இருப்பீரா?
புலன்
தோறும் அறிவைத்
தெளிக்கும் நூற்கள்
தேவை யின்றிக் கிடப்பீரா?

கருகிப்போன
நூலின் நிறத்தில்
காய்ந்தது சிலரது உள்ளங்கள்
அன்று
உருகிப்போனது
நூற்கள் அல்ல
உள்ளொளி வாய்ந்த செல்வங்கள்

தாயகப் பெருமையைத்
தரணியிற் கொன்று
தகனம் செய்தவர் யாரு?
எங்கள்
வாயகம் ஒலித்த
வாசிக சாலையை
விழுங்கிய தீயே கூறு?