– முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. – பதிவுகள்.காம் –
அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.
தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம் தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.
நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்….இவை தி ஜாவின் தனிமுத்திரை.
கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும், அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்……எவ்வளவு பெரிய படைப்பாளி தி ஜா?!
ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.
தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.
கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.
தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.
அந்த பதில்…. ‘அது அப்படித் தான்!’
கதை சுருக்கம்:
செம்பருத்தியின் நாயகன் சட்டநாதன். அறத்தின் மாண்பை இயல்பாகக் கொண்டு, அதை வாழ்க்கையின் பிரவாகம் அடித்துச் சென்றுவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் இயல்பான மனிதன்.
சட்டநாதனின் இளமைக் காலம், சட்டநாதனின் நடுவயது, முதுமையின் வாசலில் சட்டநாதன் என்று மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது கதை. சட்டநாதனின் வாழ்க்கையில் மோதுகின்றார்கள் மூன்று பெண்கள். பெரிய அண்ணி, சின்னஅண்ணி குஞ்சம்மாள் , மனைவி புவனா என்ற மூவரும் அவன்பால் கொள்ளும் ஈர்ப்பு, அவனை அலைக்கழிக்கும் அவர்களின் குணமாறுபாடுகள், அவற்றினூடே தன் சீர்மையை விட்டு அகலாது சட்டநாதன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் விவரிப்பே கதை.தஞ்சையின் ஒரு சிறு கிராமத்துச் சூழலில் வளரும் கதையின் துணை மாந்தர்களும் தன் இருப்பை நம் மனத்தில் ஆழப் பதிக்கிறார்கள் .
இளம்பிராயத்தில் சட்டநாதன் காதல்வயப்பட்ட குஞ்சம்மாளை அவனுடைய சின்ன அண்ணன் மணக்க நேர்கிறது. சட்டநாதனும் அவன் அம்மாவும் அந்த சின்ன அண்ணன் ஆதரவில்தான் வாழ்கிறார்கள். சட்டநாதனின் கண்டிப்புமிக்க, அதேசமயம் பேரன்பை மனதில் பூட்டிவைத்திருந்த சின்னஅண்ணன் முத்துசாமி சடுதியில் இறந்துபோகிறான். இளம்விதவையான குஞ்சம்மாள் தன் கைக்குழந்தையுடன் புகுந்த வீட்டிலேயே வாழத் துணிகிறாள்.
இந்த கட்டத்தில் பஞ்சாய் சட்டநாதனும், நெருப்பாக குஞ்சம்மாளும் அருகருகே இருக்க, சட்டநாதனோ சின்ன அண்ணன் மேல்கொண்ட நன்றியில் ‘நனைந்த பஞ்சாகவே’ காலம் கடத்துகிறான். சட்டநாதன்மேல் தனக்கான பிரியத்தை வெளிப்படுத்தும் குஞ்சம்மாளின் வேட்கையை சட்டநாதன் மறுதலிக்கிறான். பலவந்தமாய் அவனை ஒருமுறை இறுக அணைத்துவிட்டு, ‘வாழ்நாளுக்கு இதுவே போதும்’ என்பதாய் குஞ்சம்மாள் ஒதுங்குகிறாள்.
சின்னஅண்ணன் தன் மரணத்தருவாயிலும் சட்டநாதனுக்கு சிவநெறிச் செல்வரான சண்பகவனம் பிள்ளையின் மகள் புவனாவை நிச்சயித்து விட்டே இறக்கிறான். செம்பருத்தி மலரைக் கூந்தலில் எப்போதும் சூடும் புவனா அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு பொறுமைசாலியாய், ஒரு ஆதர்ச மனைவியாகவே வருகிறாள். சட்டநாதன் ஒளிவுமறைவின்றி அத்தனை நடப்புகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறான், சின்ன அண்ணியோடு தனக்கிருந்த காதல் உட்பட. சின்னசின்ன சம்பவங்களினூடே அந்த தம்பதிகளின் அன்னியோன்னியதிற்கு வண்ணம் சேர்க்கிறார் தி.ஜா.
இதுவரை சட்டநாதன்குடும்பத்தில் ஒட்டாது, வசதியான வணிகராய் சட்ட நாதனின் பெரியண்ணன் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். பெரும் வாழ்வு வாழ்ந்து ஓரிரவில் அத்தனையும் இழந்து, சட்டநாதனின் ஆதரவில் அண்டிவாழும் நிலைமைக்கு ஆளாகிறார். பெரிய அண்ணனின் மனைவி தான் கதையின் சிக்கலான வார்ப்பான ‘பெரிய அண்ணி’. தி. ஜாவின் விவரிப்பில் பெரிய அண்ணியின் மேல் கோபமும், அசூசையும், அனுதாபமும் மாறிமாறி நம்மை ஆட்கொள்கின்றன. படாடோபமும், எடுத்தெறிந்து பேசுவதும், மாளா காம இச்சையும், குயுக்தியும், குதர்க்கமும் கலந்த ஒரு பாத்திரமாய் இருப்பவள் பெரிய அண்ணி. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிக்கொள்ளும் பெரியண்ணனின் தொடுப்பாய் ஆண்டாள் எனும் ஒரு தாசி. தாசியேயானாலும் அவரை உளமார நேசிக்கும் குணவதி.
பெரியண்ணன் குடும்பமும் கிராமத்திற்கு வந்து சேர, சச்சரவுகள் மிகுந்து இருப்பை நரகமாக்குகின்றன. துர்க்குணமே உருவாக பெரிய அண்ணியும் குஞ்சம்மாளையும் சட்டநாதனையும் தொடர்பு படுத்தி புரணி பேசுகிறாள்.
காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சட்டநாதன் பொருளாதார மேம்பாடும் மன முதிர்ச்சியும் அடைகிறார். பிள்ளைகள் பெரியவர்களாகிறார்கள். சின்ன அண்ணனின் மகளுக்கும்,மற்றும் பெரியண்ணன் வாரிசுகளுக்கும் திருமணம் செய்விக்கிறார் சட்டநாதன். முன்பு பெரியண்ணன் பட்டகடனை அடைக்க விற்ற நிலத்தில் கிடைத்த புதையல் மூலமான பணம், வாங்கியவரின் மகன் மூலம் கிடைக்கிறது. அதில் சின்ன அண்ணன் பங்கு என சின்ன அண்ணிக்கு சட்டநாதன் கொடுக்க எத்தனிக்க, சின்ன அண்ணிக்கு அவர்பேரில் பெரும் கசப்பு மூள்கிறது.
தன்னுடனான உறவையும்கூட புவனாவுக்கு சட்டநாதன் தெரிவித்து இருந்ததை அவன் மூலமே அறிந்து வெறுப்புற்று தன் மகள்வீட்டோடு போகிறாள் குஞ்சம்மாள். மனதுக்குள் சட்டநாதன் மேல் நேசம்வளர்த்து, அதை போஷித்து ஆராதித்து வந்தவளின் அன்பே துவேஷமாக மாறி நிரந்தரமாய்ப் பிரிகிறாள். பெண்ணோடு வாழ சென்னைக்கு போய்விடுகிறாள்.
கடைசிவரை தேளாய் கொட்டிக்கொண்டிருந்த பெரிய அண்ணி, தன் மேல் தானே கொண்ட வெறுப்பில் உணவையும் மறுத்து ஆரோக்கியம் கெட்டு காலமாகிறாள். பெரிய அண்ணனுக்கும் மரணம் நேர்கிறது. சட்டநாதனின் பிள்ளைகளும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு சென்று விடுகிறார்கள்.
இதுகாறும் சட்டநாதன் வாழ்வில் பூவாய் வாசம் வீசிய புவனா, ஒரு கேள்விக்குறியாய் மாறிப்போகிறாள். சட்டநாதனை சந்தேகத்தாலும் நம்பிக்கையின்மையாலும் வாட்டி எடுக்கிறாள். சின்ன அண்ணியுடனான சட்டநாதனின் உறவை மீண்டும் தோண்டியெடுத்து சந்தேகச்சாட்டை வீசுகிறாள்.
தான் ஏமாற்றப் பட்டதாயும் இடையூறாய் இருந்து விட்டதாயும் சிடுசிடுத்தபடி சட்டநாதன் வாழ்க்கையை நரகமாக்குகிறாள். புவனாவின் இந்த குணபேதத்தை சட்டநாதன் பொறுமையாகக் கையாள்கிறார். PMT( Pre Menstural Tension) எனும் மெனோபாஸ் பருவத்து உளச்சிக்கலை புவனாவின் இந்த பிறழ்நிலைக்கு காரணமாக்கி புவனாவுக்கு தி ஜா வக்காலத்தும் வாங்குகிறார்.
மீண்டும் புவனா ஆச்சர்யக் குறியாய் மீள்கிறாள். பழைய புவனாவாகி அன்பு செலுத்துகிறாள். கதையும் முடிகிறது.
ஆணும் பெண்ணும் ஈருடல் ஒருயிராய் எக்காலமும் மாற இயலாது என்று முத்தாய்ப்பு வைக்கிறாரோ தி ஜா? முடிவில் சட்டநாதன் புவனாவை அணைத்துக் கொள்கிறார். அவளும் அவருக்குள் புகுந்து கொள்வதுபோல் தான் ஒட்டிக் கொள்கிறாள். ‘ஒன்றாக முடியவில்லை போல் தான் இருந்தது.அவருக்கு.அணைப்பு விட்டதும் மீண்டும் தனியாகத்தான் இருந்தது. ஈஸ்வரனால் தான் முடியும் போலிருக்கிறது என்று அவருக்குத் தோன்றிற்று. ஈஸ்வரனுக்கும் முடியாது.ஒரு முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை.மறைந்துவிடவில்லை.’
இளம்விதவையான சின்ன அண்ணி தன்பால் கொண்டுள்ள ஈர்ப்பை அறிந்தும், தன்னை பார்த்துக் கொண்டாவது இருப்பதே போதும் எனும் அவளின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்டும் கூட, புது தம்பதிகளாய் அவளையும் உடன்வைத்துக் கொண்டு வாழ்வது சரியா சட்டநாதன்? என்று கேட்கத் தோன்றுகிறது. கதையின் விவரிப்பில் குஞ்சம்மாள் விரகத்தில் எரிந்து கொண்டிருப்பதை உள்ளூர வெறித்துக் கொண்டிருக்கும் ‘ஆண்மை’ மிக்கவனோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு புத்திசாலியாக வாழும் புவனா கூட இந்த சேர்ந்து வாழ்தலை யோசிக்கவில்லையோ? அதுவும் புருஷன்-ஓரகத்தி பூர்வோத்திரம் அறிந்த பின்புமா? இளம்விதவைகளை வதைப்பதே வேலையாய் போய் விட்டது தி ஜாவுக்கு!
அப்போ அம்மா வந்தாள் இந்து…. இப்போ குஞ்சம்மாள்….
‘பெரியண்ணி’யை புளியமரம் என்று உருவகிக்கிறார். அடுத்தவர் சுவாசக் காற்றை மாசேற்றும் புளியமரம்.. பேய் வாழும் புளியமரம்… அவளுடைய காமத்தை வெளிச்சம் போடும் படைப்பாளி, கைப்பிடித்தவன் தொடுப்பை நியாயம் செய்வது போன்று மெழுகுவதும், தாசி ஆண்டாளம்மாவை அம்பிகையாக தோற்றுவிப்பதும் ஒருவேளை பெரியண்ணி பாத்திர வார்ப்பை மேலும் குரூரமாகத் தோன்றச் செய்யத்தானோ?
புவனாவுக்கு வருவோம். மாதர்குல மாணிக்கமாய் நிறுத்தப்படும் புவனா, சட்டநாதனிடம் கொடூரமாய் நடந்து கொள்வது எதிர்பாராதது. புவனாவின் இந்த சறுக்கல்,சின்ன அதிர்ச்சி மதிப்பையன்றி கதைக்கு எந்த பரிமாணமும் ஏற்படுத்தாத திணிப்பாகத் தோன்றுகிறது. மாறாக, ‘ச்சே! பொம்பளைங்களே இப்படித்தான்’ எனும் நினைப்பை வரவழைக்கிறதோ? இந்த ‘திருப்பத்தேவை’ வாராந்திர தொடர்கதைக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.
இடையிடையே சுதந்திரப் போராட்ட செய்திகள் கதையின் காலத்தை நினைவுறுத்துகின்றன. ஆனாலும் இது பழைய கதை என்று ஒதுக்கவியலாமல் நம்மையும் எல்லா கதாபாத்திரங்களும் ஆகர்ஷித்துக் கொள்கின்றன.
வரப்பில் முளைத்த குறும்பூக்கள், வீடுதோறும் மாக்கோலம் துலங்கும் தெருவின் காட்சிகள், வயல்,வரப்பு, கடை,மூங்கில் மரக்கூட்டம், பட்சிஜாலம், என அனைத்தையும் விவரிக்கும் அழகு.. இயல்பான உரையாடல்களில் தெறிக்கும் கூர்மையும், தஞ்சை வழக்கும்… அடடா!
பிரசுரம் :ஐந்திணைப்பதிப்பகம் செம்பதிப்பு 2003
(சில வருடங்களுக்கு முன் எனது வானவில் மனிதன் பிளாகில் வெளியான நூல் விமரிசனம் இது)