தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக…ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய “மகேந்திர வர்மன்” என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் “மண்டகப்பட்டு” என்ற ஊரில் பாறைகளை குடைந்து “குடவரைக் கோயில்” ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது “மாடிபோல் அமைந்த கோயில்” என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள “வைகுண்டப் பெருமாள் கோயில்” மற்றொன்று உத்திரமேரூர் “சுந்தரவரதப் பெருமாள் கோயில்” இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.
‘பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும்.’’ – திருநாவுக்கரசர்.
சோழன் செங்கணான் என்ற அரசன் எழுபத்தெட்டு கோயில்களை கட்டியதாக திருநாவுக்கரசரின் பாடல் வடிகளில் தெரியவருகின்றது, இந்த எழுபத்தெட்டு கோயில்களும் செங்கற் கட்டடங்களே.
‘ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே, இவை கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்று உறுதிபட தெரிகின்றது. இன்றைக்கு இருக்கும் “வைகுண்டப் பெருமாள் கோயில்” மற்றும் “சுந்தரவரதப் பெருமாள் கோயில்” ஆகிய இரண்டும் மூன்று நிலை மாடிக் கோயில்களாகும், அதாவது முதல் தளத்தில் பெருமாள் நின்ற கோலத்திலும், இரண்டாம் தளத்தில் உட்கார்ந்திருக்கும் கோலத்திலும், மூன்றாம் தளத்தில் படுத்திருக்கும் கோலத்திலும் காணலாம், இந்த மூன்றையும் காண விமானத்திற்கு உள்ளயே இருக்கும் மாடிப் படி ஏறி ( படி வெளியே இல்லை) விமான உச்சியை அடையலாம்.
தமிழகத்தில் இருக்கும் எத்தனையோ கோயில்கலுக்கு சென்றிருந்தாலும், இந்த மாடிக் கோயில்களுக்கு ஒருமுறையேனும் சென்று காணுங்கள் அந்த காலத்தில் இயந்திரத் துணை இல்லாமல் இது போன்ற கட்டிட அமைப்பை அந்த நாளில் எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்று ஆச்சர்யம் கொள்ள வைக்கும்.