துளி – 02
கட்டளைகள் பறக்கின்றன.
காதோரம் பொருத்திய
சவுக்காரத்துண்டு
“ஹலோ ஹலோ
சொல்லுங்க ஒவர்”
வெலிக்கடைச் சுவர்களையும் கடந்து
விரிகிறது அவளது மனவெளி
இன்னமும் களத்திலேதான்
நிற்கிறாள்.
இடுங்கிப்போன கண்களில்
புகை படிந்த கனவுகள்
பேரரசியின்
மிதப்புடன் கைகளை வீசி
காற்றிலே நடக்கிறாள்
காலோடு வடிந்து போன
தீட்டின் நாற்றத்தோடு அலைகின்றன
கிழிசலாய்ப்போன ஆடைகள்
ஊரும் உறவும் சொந்த
பேரும் கூட
நீங்கிப்போயிருந்தன அவளின்
நினைவடுக்குகளில்
களமுனையில் காயத்தோடு
விழுந்த கணத்திலேயே
வருடங்கள் கழிந்தோடிக் கொண்டிருந்தன
சமூகத்தில் காலாவதியாகிப் போயிருந்தவளுக்கு
சட்டம் விடுதலையளித்திருந்தது கூட
எவருக்கும் தெரிந்திருக்கவில்லை
ஊருக்காக தேரிழுக்கப் போன மகளுக்கு
ஒரு கையெழுத்துப் போட நாதியுமில்லை
“ஹலோ…. ஹலோ
சொல்லுங்கோ.. சொல்லுங்கோ ஒவர்”
களத்திலேயே அவளின்
கனவுகள் எப்போதும் போலவே
“ இந்த சோத்தைச் சாப்பிடு பிள்ளை”
இது வசந்தியம்மா
“அனெ… மெ அந்தும டிக்க அந்தின்ன துவே”
(ஆ… இந்த உடுப்பை உடுத்திக் கொள்ளு மகளே)
இது அசோகா அம்மே
“வாடி புள்ளை குளிப்பாட்டி விடுறன்”
இது சித்தி உம்மா
கைதியான தாய்மையின்
கைகளில் மகளாகி
வெலிக்கடையின் பைத்தியக்கார
கொட்டுவ யில் காலத்தையும் மறந்து
களமாடிக்கொண்டிருக்கிறாள்
அசைவற்றுப் போன அவளின் விழிகளிலும்
அடிக்கடி வழிந்தோடும்
கனவுகளின் வலிகளை யாரும்
மொழி பெயர்த்தல் கூடுமோ?
*துளி -02 இல் குறிப்பிடப்படும் பெண் போராளி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவள் வெலிக்கடைச் சிறைக்கு 2009 இல்நான் கொண்டு செல்லப்பட்ட போது மனநிலை பாதிப்புற்ற நிலையில் அங்கிருந்தாள். அவளைப் பற்றிய விபரங்களை எவராலும் பெற முடியவில்லை தன்னிலை மறந்த நிலையில் எந்நேரமும் தொலை தொடர்பு சாதனத்தில் கதைத்துக் கொண்டிருக்கும் தோரணையில் இருப்பாள். இறுதிப்போரின் முன்னதாகவே களமுனையில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தாள். 2012 ம் ஆண்டளவில் மனித உரிமை சட்டத்தரணியின் உதவியுடன் அவளது வழக்கின் நிலைமைகளை ஆராய்ந்த போது அவளது வழக்கு ஏற்கனவே முடிவடைந்து அவள் விடுதலையாகியிருந்தது தெரிய வந்தது.. பொறுப்பெடுப்பதற்கு எவரும் இல்லாத காரணத்தால் தொடர்ந்தும் சிறையிலிருந்தாள். சட்டத்தரணியின் மனிதாபிமான முயற்சியால் அவளது தந்தையார் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் குடும்பத்தவரிடம் ஒப்படைக்கப்பட்டாள்
துளி – 01
காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை
இடைவிடாதுகொட்டிக் கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி
“சாகத்தானே போனதுகள்
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக் கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக் கனக்கிறது
போராடப் போன மனம்