ஈரலிப்பைச் சுமந்தபடி வானலையும் மென்முகில்கள் கறுத்தொடுங்கித் தூறலாகிப் பின் சாரலாகிப் பூமி குளிர்த்துமோர் மழைப் பொழுது. சில்லிடும் அம்மழைப் பொழுதினை இளஞ் சூட்டுக் குருதி வெப்பநிலையும் போர்வையாய் மெல்லியமயிர் பூத்த தோலுந் தாங்கிய ஓர் மனிதஉயிரி எங்கனம் எதிர்கொள்ளும்? தன்னுடலுக்கும் புறச்சுழலுக்கும் இடையேயான வெப்பச் சீராக்கத்திற்காய் உரோமங்களை நிமிர்த்தியபடி நடுநடுங்கிக் கொள்ளும். இதுதானே காலங்காலமாய் நாம் உணரும் உயிரியல் யதார்த்தம். ஆனாலும் இங்கே எதிர்மறையாய் ஒரு மழைப் பொழுது. அதில் சுற்றுச்சுழலை விடவும் அதிகரிக்கும் உடல்வெப்பநிலை குருதிக் கலங்களையெல்லாம் விரிவடையச் செய்தபடியும் வியர்வைச்சுரப்பிகளைத் தூண்டிவிட்ட படியுமாய் வியர்த்தொழுகுகிறது. இது சாத்தியமா? சிறுபான்மை மீதான நியாயப்படுத்த முடியாத வன்முறைகளும் வெறிகொண்ட பேரினவாதம் வளர்த்துவிட்ட போர்க்காலம் இழைத்துச் சென்ற துரோகங்களின் தீராக் காயங்களுமே மழைப் பொழுதிலுங்;கூடக் கவிஞரின் உணர்வுகளைக் கொதிநிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன போலும். வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற சகோதரர் சபருள்ளாவின் முரண்சுவையோடு கூடிய இத்தலைப்பே இத்தொகுதி மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்தியது எனலாம்.
சகோதரர் சபருள்ளா எமது மண்ணுக்குரியவர். இம்மண்ணின் எளிமையோடும் இயற்கைப் புழுதியோடும் கலாசாரத்தோடும் கண்டிப்போடும் ஒன்றித்தான் வளர்ந்திருக்கிறார். அவரின் பட்டம் பதவிகளையோ அல்லது இசையும் பாடலும் பேச்சுவன்மையும்இ ஊடகத்துறையும் இன்னும் பலவுமாய்…. அவருள் கிளைத்திருக்கும் இதரமுகங்களையோ பட்டியலிடுவது இப்பதிவின் நோக்கமன்று. அதற்கான அவசியமும் இங்கில்லை. மாறாக அவரின் இககவிதைத் தொகுதி பற்றியதும் இதை வெளிக்கொணர அவர் உணர்வுகளை ஓயாது வற்புறுத்தியபடியே துரத்திக் கொண்டிருந்த பின்புலம் பற்றியதுமே இப்பதிவு.
ஒவ்வொரு வரிகளும் எம்மண்ணின்இ எம்மக்களின் கண்ணீரிலும் குருதியிலும் ஊறவிட்டு வெளிக்கொணரப்பட்டிருப்பதனாலோ என்னவோ அவற்றை வெறும் கவிதை வரிகளாக என்னால் வாசிக்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் இவ்வின வன்முறையின் கோரச் சிதைவுகளின் நேரடி சாட்சியங்களாய் நாமும்கூட இருந்தோம் அல்லவா.
கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், நிலஆக்கிரமிப்புகள், கால்நடை அபகரிப்பு, கடல், காட்டுத் தொழில் இடையீடுகளும், நெருக்கடிகளும் என இருதரப்பாருமே மாறி மாறி இங்கு நிகழ்த்திய அட்டூழியங்களை யாரால்தான் சகித்துக் கொள்ள முடிந்தது. இவ்வன்முறைகளையெல்லாம் தகுந்தபடி தட்டிக் கேட்பார்கள் எனப் பெரிதும் நம்பிய தனித்துவத் தலைமைகள் கூட கண்டும் காணாதது போல இருந்ததுதான் பெரும் கொடுமை. இது சமூக அக்கறையுள்ள எவரினாலும் ஜீரணம் கொள்ள முடியாத விடயம்தானே. கவிஞர் மட்டும் விதிவிலக்கா என்ன?
‘இக் கவிதைகளினூடு ஒலிக்கின்ற இக்குரல் எனதான தனிநபர் குரல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த சமூகத்தின் ஒப்பாரியாகும்’ எனத் தனது நீண்ட முன்னுரையில் தனது வலிகளையும் ஆதங்கங்களையும் பொதுமைப் படுத்தியிருக்கிறார் கவிஞர்.
“வட்டத் தரணியிலே தன்னைச்
சட்டத் தரணியாக்கிக் கொண்டு- இளம்
மட்டத்தினரிடையே புகழ்
பெற்றுத் திகழும் கவிஞன்”
என கவிஞர் கலாபசூசணம் ஏ.எம்.எம். அலி அவர்களும்
“சட்டப்படி பார்க்கப் போனா நியாயமான தொகுதி இது.
கிழக்கு இங்கேதான் பல வழக்கு
இனி முழக்கு- நீதான் விளக்கு”
எனக் கவிஞர் கிண்ணியா அமீர்அலியும் கொஞ்சம் மிகையாகவே கவியாரஞ் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். இன்னமும்,
“சத்தியம் உரைக்கும் அவரது கவிதைகள் அடுத்து வரும் அவரது பரம்பரைக்கும் முன்னோரது துயரத்தை முதுசமாகச் சுமந்து செல்லும்” என்ற கவிஞர் நஸ்புள்ளாவின் பின்னட்டைக் குறிப்புகள் சத்தியம் நிறைந்தவை.
அக்கரைக்கான கடற்பயணமதில் ஆனந்தம்பாதி அவலம் மீதியென உப்புநீர்த்திவலைகளாய் மனசுக்குள் சில்லிடும் எமது மண்ணுக்கேயான தனித்தவங்களில் ஒன்று முன்னட்டையில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. நூல் வடிவமைப்பிலும் நேர்த்தி தெரிகிறது. ஆனாலும் எழுத்துப் பிழைகள் தொடர்பில் மேலும் கவனக்குவிப்பு செய்திருக்கலாம்.
உள்ளேயும் 46 கவிதைகள். அத்தனையும் படிமங்களும் குறியீடுகளும் பூடகமான சொல்லிணைவுகளும் செறிந்து கிடக்கும் நவீனத்தின் அந்திமகாலக் கவிதைகள். நம் சமூகத்தின் எங்கோ ஓர் மூலையில் அழுகின்ற ஒரு துயரம்இ சிரிப்பொலிஇ கதறல்இ ஓலக் குரல்கள் உள்ளே அமர்ந்து கொண்டு தூய வரலாற்றினை இனி வரப்போகும் பரம்பரைக்குமாய் சொல்லித் தரக் காத்திருப்பவை.
“வலி, ஏமாற்றம், ஆச்சரியம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாயிலாகவே மொழி தோன்றியது என்கிறது. பூ-பூ கோட்பாடு. (The Pooh- Pooh theory) மொழியின் தீவிர வெளிப்பாடுதானே கவிதை. இவ்வுணர்வுகளின் உச்சமாய் இக்கவிதைகள் வெளிப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லைதானே.
கிண்ணியா நடுஊற்றில் பயங்கரவாதிகளால் வெட்டிக் கொலை செய்யப் பட்ட எட்டுப்பேரின் நினைவாக எழுதப் பட்டிருக்கிறது. முதற் கவிதையான “ கிண்ணியாவில் கருத்தரித்த கப்றுக் குழிகள்.”
“ கபன்துணி கிழித்தே
கைகளுக்கு வெறுத்தது.” போன்ற வரிகள் குறித்தகாலத்தின் குரூரக்கணங்களை நடுக்கங்களோடு நினைவுகூரச் செய்கின்றன.
இதே போன்று மூதூர் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப் பட்டதன் சோகங்களைப் பதிவு செய்திருக்கிறது ‘வேலிகளற்ற இருப்பு’ எனும் கவிதை.
“தவமிருந்து பெற்ற தங்கக் குழந்தை
துரத்தியடிக்கப் பட்டவனின் காட்டில்
தவறிப் போய் விட்டது
தேடித் தாருங்கள் எனத் தேம்பியழுதே
மௌத்தாகிப் போன தாயின் துஆவுக்கு எவர் தப்புவார்?”
உண்மைதான் எவர்தான் தப்பினார்? அநீதி இழைக்கப்பட்டவன் பிரார்த்தனை அங்கீகரிக்கப் படாமல் போகாதுதானே.
இன்னமும்…. இனவன்முறையின் கோரப்பதிவுகளாய் “பிரேததினப் பிரகடனம்இ கடத்தப் பட்டவன்இ குருதி கொள்ளையடிக்கப் பட்ட வரலாறுஇ குருவியும் அதன் குஞ்சுகளும், தோழா…. என ஏராளமான கவிதைகள் கண்ணீரையும் வரிகளாய் சுமந்தபடி.
“ஊரில் பச்சை மட்டையுடையதோர்
தென்னை மரத்தைப்
பார்க்க முடிவதே இல்லை
இத்தா வேலிக்காய் அத்தனையும் வெட்டப் பட்டதால்”
“இன்னாலில்லாஹி சொல்லவும்
இயலாதிருப்பாயே….”
“என் மக்களின் மய்யித்தை
அடக்கும் இடங்களிலும் அடக்குமுறை”……
“கையிரண்டும் பின்னே கட்டப்பட்டு
எப்போதோ கதறக் கதற
குதறியெடுக்கப் பட்ட வாப்பாவுக்காக….” எனும் வரிகளும்
மு.பொவின் கவிதையில் துடிக்கும் காலத்தில் வருகிற
‘சிதைந்து சிதறிய இளைஞனின் ஓலம்’
நீர்வீழ்ச்சியாய் சொரிந்தது
முடிவிலாத் துயரை…..
காற்றில் எழுந்து
முகத்தில் அறைந்து இரத்தவாடை…
வருகிறார்கள்….
வேட்டை நாய்கள் மாதிரி….
மோப்பம் பிடித்து…. (அல்லைப்பிட்டி கொலைகள் நினைவாக)
எனும் வரிகளும்; உரைக்கின்ற வலி ஒன்றுதானே. இந்தப் போர்க்காலப் பொது மொழிக்கேது இன மத வேறுபாடுகளெல்லாம்?
மேலும் மட்டக்களப்புஇ அம்பாறை வடபுலக் கவிஞர்கள் பலரினதும் வரிகளோடும் இவை ஒன்றியிருப்பினும் கிண்ணியா மண்ணுக்குரிய நிஜநிகழ்வுகளைத் தாங்கியிருப்பதால் தனித்துத் தெரிகின்றன.
இந்த யுத்த காலம் இன்றில்லைதான். ஆனாலும் போரோய்ந்து போன நிலையிலும் நாடு அமைதிப் பூங்காவாக மாறி விட்டதா? இல்லைதானே. உண்மையில் இதை விடப் பெரும் அபாயம் இன்னொரு பெருயுத்தத்திற்கான இவ்வாறான காரணிகள் இன்னும் உயிர்ப்போடு உள்ளதுதான்.
மேலும்இ “ குரங்கும் பூமாலையும்”இ எச்சில் வெளிச்சத்திற்;காக ஏங்குதல்இ சீசீ.. இந்தப் பழம் புளிக்காதுஇ நெறி தவறல்… சொறனை கெட்டவன் செய்த சொர்க்கம் போன்ற கவிதைகள் பொய்த்துப்போன தனித்துவஅரசியல் பற்றி வெறுப்பும்இ எள்ளலும் ஏமாற்றமும் கலந்த குரலில் பேசுகின்றது.
சமகால நிகழ்வுகளில் கூட பேரினவாதிகளால் சிறுபான்மையினரின் அரசியல் கலாசாரம் சமயம் என இயல்பு வாழ்வின் அனைத்து உரிமைகளும் மிகக் கேவலமாய் நசுக்கப்படுவதை எதிர் கொள்ளவும்இ தடுத்து நிறுத்தவும் போதுமான பலத்தை எமது தனித்துவத் தலைமைகள் கொண்டுள்ளதா என்பதும் கேள்விக் குறிதானே.
“துருப் பிடித்த அமானுஷ்யம் மீண்டும்…
என்பது இந்நிலைக்குப் பொருத்தமான படிவம்
இன்னும்
“நிறங்களைப் பறிகொடுத்து விட்டு
தனியே வெயிலில் நிற்கின்ற வானவில்” மனதில் பதிகிற வரிகள்.
மேலும்இ
“ரொம்ப நல்லவன் என்று
ஊர் மெச்சும் ஒரு முட்டாளின்
கலப்புப் புன்னகையில்
நாமெல்லாம் அடிமட்ட முட்டாள்”எனும் வரிகளை எந்த அரசியல்வாதியை நினைவில் கொண்டு எழுதினாரோ தெரியவில்லை.
ஆனாலும்…………….
அவரவர் அனுபவங்களுக்கேற்ப எவருக்கும் பொருத்திப் பார்க்கக்கூடிய அருமையானவரிகள். எவருக்கும் பொருந்திப் போகிறதுமான வரிகள்.
இதை விடவும்
முடக் கொசியின் தொல்லை…இ
ஈரற் குலை நடு நடுங்க….
புடைத்து வீங்கி…
வாயுளறிக் கத்த நினைத்து
சப்பியுமிழ்ந்த துப்பனி போன்ற வழக்கிலுள்ள புழங்கு மொழிகளும் கவிதைப் படுத்தப் பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.
சகோதரர்சபருள்ளா ஆங்கிலக்கவிதைகளிலும் நன்கு தேர்ச்சியுள்ளவர் போலும்.
‘எல்லாத் திசைகளிலும்
இருள் நாய் அத்தனை பேரையும்
தன் நுரைகொண்ட வாயினால் கவ்விக் கொண்டு…’ எனும் வரிகளை வாசிக்கையில் அமெரிக்க கவிஞர் John Milton Reeves இன்
‘‘’The Sea is a hungry Dog
Giant and grey
He rolls on the beach all day
With Clashing teeth and Shaggy Jaws’’
எனும் வரிகளே சட்டென நினைவின் முன் நிழலாடுகின்றன. வியர்த்தொழுகும் மழைப்பொழுதின் மொத்தக் கவிதைகளுமே வலி தருபவை. முட்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் வாசகரைப் பயணப்படச் செய்பவை.
வடிவங்களை மாற்றியும்இ இறுக்கங்களைத் தளர்த்தியும் அழகியல் முதன்மைப் படுத்தப்பட்டுமஇ; தொன்மங்களை மீள்கட்டமைப்பு செய்தபடியுமாய் தமிழ்க் கவிதையுலகில் புதிய வரவுகள் உலா வரும் இக்கால கட்டத்தில் புதிய மொழியும் புதிய வடிவமுமாய் சகோதரின் அடுத்த கட்டக் கவிதைகளின் நகர்வுகள் ஆரம்பிக்கப் படலாம். எனினும் ஈழத்தின் போரியல் கவிதைகள் பற்றியோ அல்லது முஸ்லிம் தேச இலக்கியம் தொடர்பிலோ ஆய்வு செய்கிற எவரும் சகோதரர் சபருள்ளாவின் வியர்த்தொழுகும் மழைப் பொழுதை இனியும் புறம் தள்ளிவிட முடியாது. சகோதரரின் நல்ல முயற்சிகள் யாவும் இனிதே நிறைவேற என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
நூலின் பெயர்:- வியர்த்தொழுகும் மழைப் பொழுது
ஆசிரியர்:- கிண்ணியா சபருள்ளா
முகவரி:- பெருந்தெரு
கிண்ணியா- 06
தொலைபேசி:- 0772260676
மின்னஞசல்:- akkumanal@yahoo.com
விலை:- ரூபா 250
sfmali@kinniyans.net