முனைவர் நா.சுப்ரமணியத்தின் கடிதமொன்று..:

கலாநிதி நா. சுப்பிரமணியன்

ஈழத்தமிழ் இலக்கியத்தை (புகலிட / புலம்பெயர் இலக்கியத்தையும் உள்ளடக்கி) ஆவணப்படுத்திவருபவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள். இவரது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல் அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நூல். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் அவ்வப்போது எழுதி வருவதுடன், ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர். அண்மையில் முகநூலிலும் , ‘பதிவுகள்’ இணைய இதழிலும் ‘தாயகம்’ இதழ் பற்றி எழுதிய எனது குறிப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் அவர் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவற்றை உங்களுடன் நானிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.


அன்ப!

பதிவுகள் தளத்தை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் குறிப்பாக வாசிப்பும் யோசிப்பும்   என்ற தலைப்பிலமையும்  பகுதியிலே இடம்பெறும்   தங்களுடைய  வாசிப்பநுபவப் பதிவுகளில் தனிக்கவனம் செலுத்திவருகிறேன். அவற்றில் குறிப்பாகக் கனடாவின் தமிழிலக்கிய வரலாறு சார்ந்த  பதிவுகளில் முக்கியமானவை என நான்  கருதுபவற்றைச் சேமித்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வகையில்  ஏப்ரல் 7 திகதியிட்ட  தங்களுடைய     வாசிப்பும் யோசிப்பும் -229  என்ற பதிவிலே எழுத்தாளர் ஜோர்ஜ் இ. குருஷேவ் அவர்களின் தாயகம்   இதழ்பற்றிய  தகவல்களைக் கண்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.-சேமித்துங்கொண்டேன்.

.  புலம்பெயர் தமிழிலக்கியம் மற்றும் கனடியத்தமிழிலக்கியம்  ஆகிய துறைகளில் தேடல்கள் மேற்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயன்படக்கூடிய தகவல்களை அக்கட்டுரை கொண்டுள்ளது. .அவ்விதழ் பற்றிய தங்களுடைய  பார்வைகளைப்பதிவுசெய்ததோடமையாமல் அதன் முதல் ஐம்பது   இதழ்களை வாசிப்பதற்கான இணையதளம் தொடர்பான தகவலையும்( http://padippakam .com/)  தந்துள்ளீர்கள்.  மிக்க நன்றி.

கடந்த 25-03-2017 அன்று ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்திலே    ‘தமிழ் இதழியல் முன்னெடுப்புகள்   -கனடியச் சூழலை மையப்படுத்திய அநுபவப்பதிவுகள்  ’ என்ற தலைப்பில்  காலம் மற்றும் தாய்வீடு  ஆகிய இதழ்களை மையப்படுத்தி  நிகழ்ந்த கலந்துரையாடலிலே   மேற்படி தாயகம்  இதழ்  பற்றியும் அதுபோல கனடாவில் ஏற்கனவே வெளிவந்து  பல்வேறு காரணிகளால் நின்று விட்ட  ஏனைய  தமிழ்  இதழ்கள் பற்றியும்   குறிப்பிட்டிருந்தேன். அவை பற்றிய  தகவல்கள் முழுமையாகவெளிக்கொணரப்படவேண்டும்  எனக்குறிப்பிட்டதோடு  அவற்றை மையப்படுத்தி விரிவான நிலையில்  ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்  என்ற கருத்தையும்  முன்வைத்திருந்தேன்.  இந்நிலையில்   தாங்கள் இப்போது  தாயகம் இதழ் பற்றித்தந்துள்ள  மேற்படி  தகவல்கள்   எனக்கு  மிக்க   மனநிறைவைத் தந்துள்ளன என்பதோடு  இத்தொடர்பில் மேலும் ஊக்கமுடன்  செயற்படத் தூண்டுவனவாகவும் உள்ளன என்பதையும் நன்றியுடன் குறிப்பிட விழைகிறேன்.

அன்புடன்
நா. சுப்பிரமணியன்