இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு – எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.
இலங்கையின் படைப்பாளிகளும் புலம்பெயர்ந்த மற்றும் அயல் படைப்பாளிகளும் தங்களது இணைவையும் உறவையும் பலப்படுத்தவும் தங்களது சிந்தனைகளையும் கருத்துகளையும் எழுத்துகளையும் பரிமாறிக்கொள்ளவுமான திறந்த சனநாயகக் களமாக இலங்கை இலக்கியச் சந்திப்பு அமைகின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் -பண்பாட்டுப் பரிமாணங்களை நேரடியாக அறிந்துகொள்வதற்குப் புலம்பெயர்ந்த – அயலகப் படைப்பாளிகளிற்கான சிறியதொரு வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைகின்றது. இலக்கியச் சந்திப்புத் தொடரின் சுதந்திர மரபையும் அது இவ்வளவு காலமும் பரந்த சமூகப் புலங்களில் தேடிச் சுவீகரித்த இலக்கிய – அரசியல் செல்நெறிகளையும் தாயகத்துப் படைப்பாளிகளோடு பகிர்ந்துகொள்ளும் எத்தனமாகவும் இச்சந்திப்பு அமைகின்றது.
இனம் -சாதி – பால்நிலை – வர்க்கம்- அரசு என எந்த வடிவிலான அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் இலக்கியம் தனக்கேயான அறம் சார்ந்த வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றோடு தன்னை இணைத்து நிற்பதே இலக்கியத்தின் பணி. கடந்தகால – நிகழ்கால வரலாற்றை இழந்த சமூகக் கூட்டத்திற்கு எதிர்காலமென ஒன்றிராது. இலக்கியம் வரலாற்றின் சாட்சியம். அந்த வகையில் இலக்கியம் சமூகத்தின் உப வரலாறு.
இலக்கியம் சமூக மாற்றத்திற்கான கூர்மையான நுண்கருவி என்பதில் எங்களுக்கு எப்போதுமே நன்நம்பிக்கையுண்டு. யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் இத்தொகுப்பு நூல் தன்னுள் கொண்டுள்ளது.
பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பனுவல்களைப் பெருந்தொகுப்பாக்கியிருக்கிறோம். பல்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்களையும் இலக்கியச் சந்திப்பின் மரபின்வழியே இணைத்திருக்கிறோம். பங்களித்த அனைவருக்கும் தோழமை நன்றிகளை உரித்தாக்குகின்றோம். தொகுப்புப் பணிகளை நிறைவு செய்கையில், தொகுப்பின் கடைசிப் பக்கத்தை எழுதியிருக்கும் இளைய கவிஞனின் வார்த்தை எங்களோடிருந்தது. வீடென்பது கிடைப்பதா பெறுவதா ? என் மகனே வீடென்பது பேறு.
– குவர்னிகா
20 ஜுலை 2013, யாழ்ப்பாணம்.
shobasakthi@hotmail.com