1.
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.
2.
இன்று என்னை
கனவு சுமந்து சென்றது.
இடது வலது என நடந்தும்,
பறந்தும்,
கிழக்கு மேற்காக,
முன்னர் பேசிய இலக்கியமேடை,
குந்தியிருந்து
நண்பர்களுடன் பேசிய பூங்கா,
புதுமனை புகுவிழா மடலுடன்,
திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற
எங்கள்
பழைய வீடு..
தூரப் பயணக் களைப்புடன் வந்து இறங்கிய
பத்மா டீச்சர்,
பாரதி கவிதைகளுடன்
தோழமையாகி,பின்பொரு நாளில்
உடல் சிதைந்து இறந்து கிடந்த
அம்மன்கோயில் சந்தி..
கிழக்கு வெளிக்கும்
என்று சொன்ன கல்லூரி நண்பன்
காணாமலே போனதாய்
நம்பி கண்டிபிடித்த
அவனது மிதிவண்டி கிடந்த அப்பண்ணை கடையடி..
கூவில் கள்ளடித்து
வீடு திரும்பும் வழியில்
வாத்தியாரைக் கண்டு ஒளித்த
மதகு…சைக்கிள் பழகப்போய்
யாரோ அவளின் வீட்டு வேலிக்குள்
விழுந்து
வெட்கப்பட்ட அதே வேலி..
எல்லாம்..எல்லாம்
கடந்து,
குளிர் எனினும்,
வந்து இறக்கியது
முன்னே
நீண்ட நேரமாக எரிந்துக்கிண்டிருந்தது
என் கவிதைகள் பிணமாக…
mullaiamuthan16@gmail.com