காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு | இடம்: வவுனியா நகரசபை மண்டபம்
கூட்டுப்படை பலம் – கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள்.
‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழதேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத பெருத்த துயர நிகழ்வாகும். ‘தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக’ இந்நாளை பிரகடனப்படுத்தி, ‘இனப்படுகொலை’ நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தின் பங்களிப்புடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் 18.05.2015 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மிகவும் நெருக்கடியான கடந்த ஐந்துவருட காலத்தில், மிகவும் மோசமான ‘அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு’ மத்தியில் போரில் உயிர் குடிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்ததைப்போலவே, இம்முறையும் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை அனுஸ்டிக்கின்றோம்.
கரடுமுரடான கடந்த ஐந்து வருட காலமும் எமது அழைப்பையேற்று, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைப்பில் கலந்து கரைந்து கசிந்துருகிப்போனவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே!
இம்முறையும் ஆறாவது வருடமாக அனுஸ்டிக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்ச்சியில், போரினாலும் ஆள்கடத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளும், பிறர் துன்பத்தையும் தன் துன்பம் என்று நோ(க்)கும் மனிதநேயம் கொண்டோரும், ‘எனது பிறப்பு: தமிழன், எனது மொழி: தமிழ்’ என்ற இனமான அடையாள உணர்வுடையோரும், மதத்தலைவர்கள், அருள்தந்தைகள் – அருள்சகோதரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – பிரதிநிதிகள், நாடாளுமன்ற – மாகாணசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மாணவர்கள், சமுகநலன்விரும்பிகளை கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
கூடவே வன்னி மண் மீதான நில ஆக்கிரமிப்புப்போரில் தாம் பட்டுணர்ந்த வலி, இரத்தம், இழப்பு, காயம், கவலை, கண்ணீர், துயரம் தோய்ந்த ‘முள்ளிவாய்க்கால் அநுபவக்கதைகளை’ பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களும், நினைவேந்தல் எழுச்சி கவிதைகள், பாடல்கள் மற்றும் இன்னபிற உணர்வுப்பகிர்வு நிகழ்ச்சிகளை ஒப்புவிக்க விரும்பும் கலைஞர்கள், படைப்பாளிகள், மாணவர்களும் 0094 77 277 4018, 0094 77 6699 093 எனும் அழைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முற்பதிவு செய்து நிகழ்ச்சி நேர ஒழுங்கமைப்புக்கு ஒத்துழைப்பு நல்குமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா கேட்டுள்ளார்.
தமிழ்மொழி பேசும் உலக உறவுகளுக்கு: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்! “முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்” நினைவேந்தல் படைப்பாக்க போட்டி – 2015க்கான காலஎல்லை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
பேரன்புக்குரியோரே!
இலங்கை பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மற்றும் தமிழக இளைஞர்கள், மாணவர்கள், பாசறைத்தோழர்கள், எழுத்தாளர்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கமைய, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின், ‘மொழி கலை கலாசார மரபுரிமை பாதுகாப்புத்துறை’யினர் (‘நிதர்சனம்’ ஆவணகாப்பகம்),
“முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்” நினைவேந்தல் படைப்பாக்க போட்டி – 2015க்கான படைப்பாக்கங்களை 10.05.2015க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு மட்டுப்படுத்தியிருந்த காலஎல்லையை 31.08.2015வரை நீடிப்பு செய்து காலஅவகாசம் வழங்கியுள்ளோம். உலகம் முழுக்கவும் பரந்து வாழும் தமிழ்மொழி பேசும் உலக உறவுகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
போட்டி முடிவுகள் ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு, ‘கார்த்திகை மாதம்’ நடைபெறவுள்ள மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்களும், நினைவுச்சின்னங்களும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு:
0094 776699 093 எனும் தொலைபேசி இலக்கத்துடனும், May18Memorial@Gmail.Com, VavuniyaCitizen@Gmail.Com எனும் மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
wetamizhar@gmail.com