[* பதிவுகளில் அக்டோபர் 2002இல் வெளியான கட்டுரையிது; ஒரு மீள்பதிவுக்காக மீள்பிரசுரமாக்கின்றது.- பதிவுகள்] ஏறக்குறைய மூன்றரை மாதங்களாகிவிட்டன மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு ஊட்டியில் நடைபெற்று. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு கட்டுரை அவசியமா என்று கூட ஒரு யோசனை என்னிடத்தில் தோன்றியதுதான். ஆனால் காலச்சுவடு- 43 இல் வெளியான நாஞ்சில்நாடனின் கட்டுரைக்கான ஆசிரியர் குறிப்பும் வாலாக நீண்ட செய்திகளும் இன்னும் விவாதத்துக்கும் ஆய்வுக்கும் இவ் விஷயம் இடமளிப்பதைத் தெரிவிப்பதால் இக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.முதலிலேயே நான் எழுதியிருக்கவேண்டும். தவறிப்போய்விட்டது. கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்தான் அங்கு நடைபெற்ற விசயங்கள் குறித்தான கட்டுரைகளும் கடிதங்களும் வெளிவரத் தொடங்கின என்பது ஒன்று. எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்ததே தவிர அதுபற்றி எழுத எனக்கு அவகாசமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இனொன்றாக என் கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த அவகாசத்தை நான் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவசியமானது. இது ஒருவகையில் ராஜநாயகத்துக்கானதுதான்.சும்மா கிடந்த சங்கை….என்று ஏதோ சொல்வார்களே, அதைச் செய்ததே ராஜநாயகம்தானே?
ராஜநாயகத்தை முதன்முதலாக ஊட்டியிலேயே அறிமுகமானபோதும் நிறைய தமாஷாகப் பேசக் கூடிய ,அவ்வப்போது இலக்கியவாதிகளைப் பற்றியும் இலக்கிய விவரங்களைப் பற்றியும் சொல்லக்கூடிய அவரின் குணவியல்பால் அவருடன் எனக்கு ஒரு அணுக்கமே ஏற்பட்டிருந்தது.அவரது கட்டுரை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அமர்விலிருந்த அத்தனைபேரிலும் ஒன்றில் அது சாட்டியது குற்றம்; இல்லையேல் அறிவு ஓர்மம் அற்றவர்களாய் செய்தது கேலி. அபாண்டங்களை வீசுவதற்காகவே அக் கட்டுரை பிரயத்தனத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிந்தும்கூட ,எனக்கு அவர் மீது பெரிதான கோபமேதும் அந்தக் கணத்தில் தோன்றிவிடவில்லை.அவர் சரியான காரணத்துக்காகவேனும் அடிபட்டிருந்தார் என்பது வெளிப்படை. அதனால் அத்தனை அபாண்டங்களையும் , குற்றச்சாட்டுக்களையும் , உண்மையைத் திரிபு படுத்திய தவறுகளையும் அக் கட்டுரையையே உதாசீனப்படுத்திவிடுவதன் மூலம் மறந்துவிடலாமென்பதே என் கருத்தாகவிருந்தது. நண்பர்கள் தவறுசெய்கிறபோதும் இப்படித்தான் நான் செய்வதுண்டு. ஆனால் காலச்சுவடு-42இலும் அக் கட்டுரை வெளியாகியிருப்பதை ஒரு நண்பர் காட்டியபோது, ஊட்டி கருத்தரங்கில் தனக்கு நிகழ்ந்ததாக அவர் கருதிய அநியாயத்தை இலக்கிய உலகுக்குப்பகிரங்கப்படுத்தவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்ததாய்க்கொள்ள என்னால் தொடர்ந்தும் முடியாது போயிற்று. மேலும் அந்த விவகாரமே வேறொரு பரிமாணம் எடுத்திருந்ததும் தெரிய எனக்கு விசனமாகிப் போயிற்று.ஊட்டியில் நிகழ்ந்தவற்றினது சரவணனது விளக்கம் , அக் கட்டுரையிலிருந்த ‘அவதூறு’ என்ற சொல் குறித்த மாலனது வியாகூலம்,அதற்கு திண்ணை ஆசிரியர் குழுவிலுள்ள கோபால் ராஜாராமின் விளக்கத்தையும் பார்த்தபின் ,செங்கள்ளுச் சித்தர் , டி.ஜே.தமிழன்,வ.ந.கிரிதரன் ஆகியோர் எழுதியபின் ,மேலே ‘கல்வெட்டுப் பேசுகிறது’ இதழில் தமிழ்மணவாளன் , திண்ணை . கொம்’மில் நாஞ்சில் நாடன், க.மோகனரங்கன் ஆகியோர் தலையிட்டபின்னர் அக் கருத்தரங்கில் மூன்று நாட்களும் முழுமையாகக் கலந்துகொண்டவன் என்கிற அடிப்படையில் அங்கு உண்மையில் நடைபெற்ற சம்பவங்களை இறுதியாக ஒரு முறை வெளிப்படுத்துவது என் கடமையென்பதை உணரலானேன்.இது எதையாவது சாதித்துவிடும் என்கிறமாதிரியான எண்ணமேதும் எனக்கில்லை.இது இந்தமாதிரியான உடும்புபிடி விமர்சனங்களுக்காவது முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்று பெரிதான விருப்பப்பட எனக்கு உரிமை இருக்கிறது.
கருத்தரங்க முதல் நாளான மே 4ம் தேதி காலை அமர்வில் மு.த.வின் சிறுகதைகள் குறித்தான ‘சொல் புதிது’சிரியர் சரவணன் 1978இன் கட்டுரை வாசிப்பும்,அதனைத் தொடர்ந்து விவாதமும் நடைபெற்றன. தொழுகை,கோட்டை ,ஆகிய கதைகள் பலராலும் உயர்வாகச் சொல்லப்பட்டன. ஆனாலும் மு.த.வின் படைப்பிலக்கிய நூல்கள் கிடைப்பதிலுள்ள அரிது காரணமாய் பலரும் பல காலத்துக்கும் முன் தாம் வாசித்திருந்த நினைவுக் குறிப்புகளிலிருந்தே கருத்துக் கூறினார்களென்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வெங்கட் சாமிநாதனும் நானும்கூட அப்படியே செய்தோம். எப்படியோ ராஜநாயகத்தின் பிரச்னை துவங்கிய இரண்டாம் நாட் காலை அமர்வளவில் அங்கு , வேதசகாயகுமாரிடமிருந்து என நினைக்கிறேன் , கிடைக்கப்பெற்ற ‘புது யுகம் பிறக்கிறது’என்கிற மு.த.வின் சிறு கதைத் தொகுப்பு பலராலும் வாசிக்கப் பெற்றிருந்தது. மு.த.வின் இலக்கிய ஆளுமை குறித்தான ‘மு.தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை’ என்கிற கட்டுரை வாசிக்கப்பட்டபோது அவர் படைப்பாற்றல்பற்றிய ஒரு தெளிவில் சபை இருந்ததை நான் கவனித்தேன். மிக ஆழமாக இருந்தது வேதசகாயகுமாரின் கட்டுரை. அத்துடன் நீளமானதாகவும். அது முன் முடிவுகளைனோக்கிக்கூட நகர்த்தவில்லை.விவாதத்துக்கான , ஆய்வுக்கான வெளியையே உருவாக்கியிருந்தது. நேரத்தை மீதப்படுத்தி விவாதத்துக்கு இடம் விடுகிறவகையில் கட்டுரையை ஆங்காங்கே வாசித்தும், ஆங்காங்கே கருத்துக்களை சுருக்கமாக எடுத்துரைத்தும் தம் பங்கைச் சீராக நிறைவேற்றினார் அவர். ‘தொழுகை’ சிறுகதைபற்றி விளக்கி ,அதன் அடிநிலைச் செய்தியாகக் கொள்ளக்கூடிய பாலுறவுப் பிரச்னையை தமிழ்ச் சமூகமும் இலக்கியமும் எதிர்கொண்டமைபற்றிய பிரஸ்தாபம் வந்தபோதுதான் ராஜநாயகத்தின் தலையீடு அங்கே நிகழ்ந்தது. அம்மா வந்தாள்,மரப்பசு,இதயநாதம் நாவல்களின் சமூக பெண்ணிய நிலைப்பாடுகள்கூட ஒப்புமைக்காக சீர்தூக்கப்பட்டுக்கொண்டிருந்தன அந் நேரமளவில்.
ராஜநாயகத்தின் தலையீட்டை ஒரு விவாதத்துக்குரியதாகவே எண்ணினேன்தானால் அவரின் கருத்து வெளிப்பாடுகள் ‘தொழுகை’ சம்பந்தப்படாத வெறும் பாலுறவு சம்பந்தமாகிப்போனது. முட்டள் தாசுவும், குருவி மண்டையனும்,வாட்ச் மென் பேபியும்,அவன் மனைவி வெரோணிக்காவும்பற்றி முதல் நாட் காலையில் நாங்கள் அமர்வுகுத் தயாராகிக்கொண்டு இருந்தபோதுகூட ஒருமுறை ராஜநாயகம் விளக்கமாகச் சொல்லியிருந்தார். ஒரு ப்ளே போய் ஜோக் மாதிரியில் சிலர் அதைச் சிரித்து ரசித்தது உண்மை.அதிலொன்றும் பெரிதான தப்பில்லைத்தான். ஆனால் அமர்வில் அவரது பேச்சு அசிங்கமாக உணரப்பட்டது. அது நாகரிகத்தின் எல்லையைக் கடந்திருந்தது. கழுதையை தாசு புணர முனைந்திருக்கிறபோது , அவ்வாண்கழுதையின் குறி ஒன்று / ஒன்றரை அடி நீளத்துக்கு நீட்டி நின்றிருந்ததைப் பார்த்துவிட்டு ,’இது கல்யாணி இல்லையடா, தாசு; கல்யாணசுந்தரம்டா’என்று மண்டையன் கூறியதையெல்லாம் அங்க அசைவுகளுடன் அவர் சொன்னபோது சபையே உறைந்துபோனது. வேதசகாயகுமாரும் இன்னும் சிலரும் அவரதுபேச்சை திசைதிருப்ப முயற்சியெடுத்தபோதும் ராஜனாயகம் முட்டாள் தாசுவின் வேசத்தை விவரிப்பதிலேயே முனைப்பாயிருந்தார்.அதற்குமேலே அமர்வை நடத்திக்கொண்டிருந்த ஜெயமோகனுக்கு அவரை வெளியேறச் சொல்ல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ராஜனாயகம் எழுதியிருக்கிறார் , அது கவுரவர் சபையாக இருந்ததென்று. சபை வாய் இழந்து மவுனம் பூண்டிருந்த்தென்ற புறணி வேறு. அப்படிச் செய்திருந்தால் முட்டாள் தாசுவுக்கு வக்காலத்து வாங்கியதுமாதிரிழா ஆகியிருக்காதா, ராஜநாயகம்? மட்டுமில்லை. சபை , அவரை ஜெயமோகன் வெளியேறச் சொன்ன பின்னரும் உறைந்திருந்ததின் காரணம் , அவரது முட்டாள் தாசு பற்றிய விளக்கமும், கணவனோடு புணரும்போதுகூட உணர்ச்சிகளின் உச்ச வேளையில் ,’யேசுவே, என்னை ரட்சியும்….யேசுவே என்னை ரட்சியும்’ என்று பரவசப்பட்டுக்கொண்டிருந்த வெரோணிக்காவின் நிலைமையையும் ஒரு அரங்கத்திலே சொல்லக் கேட்ட அதிர்ச்சியில்தான் என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும்.
அவரது பரவசத்தை நிறுத்துமளவுக்கே ஜெயமோகனின் தலையீட்டை சபை விரும்பியிருந்தது.அதனால்தான் அவர் வெளியேறாது தொடர்ந்தும் சபையில் இருந்தபோதும் யாரும் எதுவும் சொல்லாதிருந்தனர். ஜெயமோகன்கூட பிறகு அவரை வெளியேறச்சொல்லி வற்புறுத்தவில்லையே. சபைதிருப்திகொண்டது. விவாதம் / விளக்கம் வேறு திசையில் மேலே விரிந்தது. அதற்கு மேலேயும் வெகு நேரம் கழித்தே அவர் வெளியே சென்றார். யுவன் சந்திரசேகர் போல் , நிர்மால்யா போல் ஏதோ ஒரு காரணம்பற்றி அவர் வெளியே செல்வதாகவே நான் நினைத்தேன். பின்னர் உணவு வேளையில் பயணப் பை சகிதம் அவர் வந்தபோதுதான் , ஊருக்குப் புறப்பட தயாராகிவிட்டார் என்பது தெரிந்தது. ராஜநாயகம் நம்பமாட்டார், அக் காட்சி எனக்கு மிகவும் மனவருத்தமாக இருந்தது.அவர்மீது எனக்கு கோபமோ மனஷ்தாபமோ இல்லை. நடந்தது ஒரு தவறு என்பதைத் தவிர பிரமாண்டமான வேறு எதை நான் நினைக்கவேண்டும்?அவர் சபையை விட்டு வெளி வந்த பிறகு , ஜெயமோகன் அவரை வேண்டுமானால் பேசவிடாது தடுத்திருக்கலாமே தவிர வெளியேற்றியிருக்க வேண்டியதில்லையென நாங்கள் சொன்னதைத் தெரிய அவருக்கு வாய்ப்பே இருக்கவில்லை.
கட்டுரையைப் பார்த்தபோது அவர் நொந்திருந்தது தெரிந்தது.சரி. அதற்காக அவர் ஏன் அபாண்டங்களைச் சுமத்தவேண்டும்? ஜெயமோகன் மட்டுமே ,கூட வேதசகாயகுமாரும், அமர்விளே பேசிக்கொண்டிருந்ததாகவெல்லாம் எழுதியிருக்கிறார்.பாதி கருத்தரங்கைப் பார்த்துவிட்டு இப்படியெல்லாம் எழுத்லாமா, ராஜநாயகம்? இறுதி அமர்வில் மு.த.வினிலக்கியக் கோட்பாடான மெய்யுளை சமகால இலக்கிய உலகுக்குப் பொருத்தக் கூடிய சாத்தியங்களை /அசாத்தியங்களையெல்லாம் ஈழம் / தமிழ் நாடு / புகலிடத் தளங்களில் முன் வைத்து நான் பேசியது அவருக்குத் தெரியுமா? வெ.சா., அந்த இறுதி அமர்வு சீரான சீதோஷ்ண நிலையில்குருகுலத்தின் திறந்த வெளியில் நடைபெற்றபோதுதான் மு.த.வுக்கும் தனக்கும் இடையிலிருந்த கடிதம், இலக்கிய வெளியீடுகள் குறித்த தொடர்புகள்பற்றி விரிவாகப் பேசிநார். ஜெயமோகன் நெடுகவும் பேசிக்கொண்டிருக்கிறார் , அவர் மனனிலைப் பிளவு பட்டிருந்தவர் என்கிறார். உண்மையில் தான் வெளியேற்றப்பட்டதை – அதற்கான எதிர்ப்பை – பகிரங்கப்படுத்துவது ஒன்றே அவரது நோக்கமாக இருந்ததா?அப்படியானால் இதெல்லாம் என்ன அவசியங்கருதி எழுதப்பட்டன? ஜெயமோகன் அவரைப்பற்றிப் பேசினார், இவரைப்பற்றிப் பேசினார் என்பது குறித்த அவரது பதிவு மகா மோசமானது.மட்டுமில்லை. பொயானதும். நீங்கள் குறிப்பிட்ட சில விசயங்களை அவர் பேசினார்தான். அதுவும் அமர்வுக்கு வெளியே. நண்பர்களுக்கிடையில். ராஜநாயகமும் நண்பராக இருந்து கேட்டுவிட்டுத்தான் இப்படி எழுதியிருக்கிறார். அதுபற்றி இங்கே பிரச்னை இல்லை. ஆனால் ‘ராமசாமியின் பொயிஷன்’என்று எப்போதும் அவர் சொல்லியதில்லையே.ராமசாமியென்றே சு.ரா.வை சில இடங்களிலே குறிப்பிட்டிருந்தாலும் மு.த. விஷயத்தில் சு.ரா.வின் அணுகாலி பல நிலைகளிலும் பூர்வாங்க முயற்சியாகவும், வழிகாட்டு நிலைகளையுடையதாகவும் உயர்வாகத்தானே பேசினார்? ராஜனாயகத்தின் முப்பது வருஷ இலக்கியப் பரிச்சயம் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட்டுவிட்டமை கொடுமை.
காலச் சுவடு-42 இன் கட்டுரை திருச்சி தமிழிலக்கியக் கழகத்தில் வாசிக்கப்பட்டதென்ற குறிப்புக் கொண்டது. திண்ணை.கொம்’மில் வந்த கட்டுரையை இதன் நகலெனக் கொள்ளலாம். இரண்டு கட்டுரைகளும் தணிக்கை அல்லது சுருக்கம் செய்யப்பட்டன என்பது வெளிப்படை. ஆனால் இரண்டும் வெவ்வேறு தளங்களில் செயற்பட்டிருக்கின்றன. திண்ணை.கொம்’முக்கு இலக்கியவாதிகளிடையே சிண்டு முடிந்துவிடுகிற விஷமம் இருக்கவில்லை.கழுதை + மனிதன் புணர்ச்சி விவகாரத்தைக் கூட அது வெளியிட்டது. தனிமனித அபவாதங்களையே அது நீக்கியது. காலச் சுவடு இங்கே நியாயமாகவும் , நிதானமாகவும் நடக்கவில்லையென்பதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை.இச் சர்ச்சை தமிழிலக்கியக் கழகத்தில் அரங்கேறியிருப்பது துரதிர்ஷ்டமானது. என் சுயத்தை வெளியிடும் ‘சுய’மான கட்டுரை இது.
பதிவுகள் அக்டோபர் 2002; இதழ் 34