மேலாடைப் போராட்டம்

புதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.குரு அரவிந்தன் புதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.
 
இதிலே வேடிக்கை என்னவென்றால் ஊர்வலம் போனவர்களைவிட அவர்களைப் படம் எடுப்பதற்கு வீதியோரங்களில் கூடி நின்றவர்களே அதிகமாக இருந்தார்கள். இப்படி இனிமேல் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ஏங்கிக் கிடந்தவர்கள்போல அங்கே குழுமி நின்ற பலர் வேண்டிய அளவு  வெவ் வேறு கோணங்களில் படம் பிடித்துக் கொண்டார்கள். இதை எல்லாம் மிஞ்சியது போல, சினிமாப் படங்களில் வரும் காட்சிபோல, றொபின்சன் வீதி வழியாகச் சென்ற அந்த ஊர்வலத்தை எதிர் கொண்ட இளம் பெண் ஒருவர் ஊர்வலத்தை நிறுத்தி தானும் அவர்களுடன் இணைந்து கொள்வதாக் கூறியவர், சட்டென்று தனது மேலாடையை வீதியில் வைத்தே களைந்து வீசி எறியவே அங்கே காத்திருந்த பார்வையாளர்கள் கோஷமிட்டுக் கைதட்டி வரவேற்றனர். இதைப்பற்றி அந்த அமைப்பின் தலைவியிடம் கேட்ட போது தங்களது போராட்டத்தின் உண்மையான நிலையைப் பொதுமக்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போலப் படம் எடுக்கிறார்கள். எப்பொழுது இதை நாளாந்தம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக எல்லோரும் எடுக்கிறார்களோ அன்றுதான் எங்கள் போராட்டத்தின் வெற்றி நாளாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பினர் பிரிட்டிஷ் கொலம்பியா வீதியில் நடத்திய ‘ரொப்லெஸ்டே’ நிகழ்வை பற்றி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா என்னும் நகரத்தின் மேயரான வால்டர் கிறே என்பவருடன் லோரி வெல்போர்ன என்ற பெண் நிரூபர் ஒருவரின் நேர்காணல் இடம் பெற்றது. அப்போது, நான் தெருவில் மேலாடையின்றி நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி. அதற்கு மேயர் வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது, திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த மேலாடையை அப்படியே கழற்றிக் கீழே வைத்தார். நேர்காணலில் ஈடுபட்ட பெண் நிருபர் திடீரென தனது மேலாடையைக் களைந்து விடவே எதிரே இருந்த மேயருக்குத் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. ஆனால் அவர் தனது முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டமால் நேர்காணலுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஏன் திடீரென மேலாடையைக் களைந்தீர்கள் என்று அவர் பெண் நிரூபரிடம் கேட்டபோது, வெக்கையாக இருக்கிறது, அதுதான் மேலாடையைக் களைந்தேன் என்று நிரூபர் பதிலளித்தார். சிறிது நேரத்தால், அவர் மேயரைப் பார்த்து நான் இப்படி திறந்த மார்புடன் உங்களில் முன்னிலையில் அமர்ந்திருப்பது உங்களுக்குப் பிரச்சனையில்லையா என்று கேட்டார். அதற்கு மேயர் இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று பதில் கூறினார். அதற்கு லோரி, அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த மேயரோ, நிச்சயமா போகலாமே நீங்கள் இப்படிச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்று பதிலளித்துள்ளார் திடீரென நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அந்த நிகழ்வின்போது, மேயர் மிகவும் புத்திசாலித் தனத்தோடு நடந்து கொண்டபடியால் பலரின் விமர்சனத்தில் இருந்தும் தப்பிக் கொண்டார்.
 
மூன்றாவது தடவையாக சர்வதேச மேலாடை அற்ற தினம் வான்கூவரில் கொண்டாடப்பட்டது. சில நகரங்களில் ஆறாவது வருடாந்த ஊர்வலமாக இந்த அமைப்பின் ஊர்வலமாக அமைந்திருந்தது. தொடக்கத்தில் பத்து நகரங்களில் இடம் பெற்ற இத்தகைய ஊர்வலங்கள் இம்முறை 45 நகரங்களாக மாறியிருக்கின்றன. இத்தகைய ஊர்வலம் நடைபெற்ற இடங்களில் குறிப்பாக கனடாவில் ரொறன்ரோ, வான்கூவர், அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயோர்க், நோர்த்கரோலினா போன்ற நகரங்களைக் குறிப்பிடலாம். இம்முறை அதிக நகரங்களில் நடந்த ஊர்வலங்களே இந்த அமைப்பினருக்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்திருக்கிறது. வடஅமெரிக்காவில் பொது இடங்களில் ஆண்கள் மேற்சடடை அணியாமல் நிற்கலாம் என்றால் ஏன் பெண்களும் அப்படி நிற்கமுடியாது என்பதே இந்த அமைப்பினரின் முக்கிய கேள்வியாக இருக்கின்றது. சில நகரங்களில் பெண்களும் மேலாடை இல்லாமல் நிற்கலாம் என்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது.
 
சில வாரங்களுக்கு முன் இந்த அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் நீச்சல் தடாகத்தில் நீந்திவிட்டு இருவரும் மேலாடை அணியாமல் வீதிக்கு வந்தபோது பொலிஸார் இந்தப் பெண்ணை மட்டும் தடுத்து வைத்திருந்தனர். பெண் என்றபடியால் தன்மீது பாகுபாடு காட்டியதாக அவர் இப்போது நீதிமன்றத்தில் மூறையீடு செய்திருக்கின்றார். சட்டப்படி ஆண்களைப்போல அவரும் மேலாடையின்றி நடமாடலாம் என்றாலும் அனேகமான பெண்கள் அப்படி நடமாடுவதை அசௌகரியமாக நினைக்கிறார்கள் என்ற கருத்தும் பலரால் முன் வைக்கப்படுகின்றது. இந்த ஊர்வலத்தின்போது, ‘Free Your breasts Free your mind’ என்ற கோஷம் பலமாக எழுப்பப்பட்டது. மேலாடையின்றிப் பெண்கள் நடமாடுவது தடைசெய்யப்பட்ட சில நகரங்களில் செயற்கை மார்பகங்ளை அணிந்தபடி பெண்கள் ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் வெகுவிரைவில் அதிக வருவாய் தேடித்தரும் பெண்களுக்கான மேலாடை உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படலாம் என நம்ப இடமுண்டு.
 
மேலாடையின்றிப் பொது இடங்களில் நடமாடப் பெண்களுக்குச் சட்டப்படி அனுமதி தரமுடியாவிட்டால் ஆண்களும் பொது இடங்களில் மேலாடையின்றி நடமாடுவது தடை செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வரப்போவதாக இந்த அமைப்பினர் மிரட்டியிருக்கின்றார்கள். அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டால் கோயில் திருவிழாக்களில் வேட்டிகட்டி திறந்த மார்போடு சுவாமியை வீதியில் ஊர்வலம் கொண்டு வரும் எம்மவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

kuruaravinthan@hotmail.com