மேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி…

தமிழினி ஜெயக்குமாரன்தமிழினி ஜெயக்குமாரன் இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் ஆயுதம் தாங்கி இலங்கை இராணுவத்திற்கெதிராக யுத்தம் புரிந்தவரும் கூட. யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தன் இறுதிக்காலம் வரையில் அவர் கவனம் எழுத்துக்குத் திரும்பியது. அவரது சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழல்’ மற்றும் கவிதைத்தொகுப்பான  ‘போர்க்காலம் – தோழிகளின் உரையாடல்’ ஆகிய இரு நூல்களுமே உலகத்தமிழ் இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்புகளாகும். இவ்விரு நூல்களும் அவரது பெயரை வரலாற்றில் நிலைத்து நிற்க வைக்கும். இவற்றுடன் அவரது இலக்கியப்பங்களிப்பு நின்று விடவில்லை. றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் எண்ணப்பதிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  அப்படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது சிறுகதைகள் ‘எதுவரை’ இணைய இதழ் மற்றும் ‘அம்ருதா’ (தமிழகம்) சஞ்சிகை ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. அவையும் குறிப்பிடத்தக்கவை.

அவர் முகநூலில் ‘றொமிலா ஜெயன்’ என்னும் பெயரில் நட்புக்கான அழைப்பினை அனுப்பியபோது எனக்கு அவரை யாரென்று தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பெயர் சொல்ல வக்கற்ற முகமூடியாக அவரை எண்ணியதால், அந்த நட்பு அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர் தமிழினி என்னும் பெயரில் முகநூலில் அறிமுகமாகி, பதிவுகள் இணைய இதழில் அவரது படைப்புகள் வெளியாகிய காலகட்டத்திலேயே அவர்தான் றொமிலா ஜெயன் என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருப்பவர் என்னும் விடயமே எனக்குத் தெரிய வந்தது.

தமிழினியின் இலக்கியப்பங்களிப்பு றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய படைப்புகளையும் உள்ளடக்கியது. றொமிலா ஜெயன் என்னும் பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், பதிவுகள் போன்றவையும் தொகுக்கப்படுதல் அவசியம். றொமிலா ஜெயன் என்னும் பெயரில் முகநூலில் அவர் எழுதிய கவிதைகள் சில மற்றும் பதிவுகள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இத்தொகுப்பு ஓர் ஆவணத்தொகுப்பு.

முகநூலில் றொமிலா ஜெயனின் பதிவுகள் சில:

1. றொமிலா ஜெயன்  நவம்பர்  27, 2014 –

“என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர
நான் என்ன தவறு செய்தேன்…”

றொமிலா ஜெயன் – டிசமபர் 24, 2014

நான் வீழ்ந்து விட்டேன்
என்று எண்ணி மட்டும்
யாரும் சந்தோசம் கொள்ளாதீர்கள்..
நான் வீழ்ந்ததே முளைப்பதற்குத்தான்..

2.  கவிதை:  எனது அன்னை.

எனைக் கருச் சுமந்த
காரணத்தால்
காலமெலாம்
கவலைகளையே
சுமந்தலைந்தாய்
வறுமையும்
வசைகளும் தாங்கினாய் -உன்
கனவுகளை சிதைத்துப் போட்ட
பிரயோசனமில்லாப் பிள்ளையானேன்- என்
பிறப்புக்கு அர்த்தம் தேடியலையாமல்
அன்னையே
உன் முகத்திலொரு புன்னகையை
மலரச் செய்வேனாகில்
ஆன்மா நிறைவடைவேன்.

 

றொமிலா ஜெயன் மே 10, 2015 ·

3. கவிதை: காலத்தின் எழுத்தாணி.

திடுக்கிடும் திருப்பங்களுடன்
நீண்டு விரிந்த
கதையொன்றுக்கு
முற்றும் எழுதி
முற்றுப் புள்ளியிடும்
தருணத்தில்
இன்னும் தொடரும்
என்றெழுதி
மேலும் புனைந்து
கதையை
விரித்துச் செல்லும்
விருப்பம் கொண்ட
காலத்தின் எழுத்தாணி
புதிய திருப்பங்களோடு
அமைதியான நதியைப்போல
இனிதாகத் தொடர்ந்து
செல்லும் தருணத்தில்
அவசரமாக
முற்றுப்புள்ளி வைத்து
முடித்துக்கொள்ளத்
துடிக்கிறது.

March 22, 2015 ·

4. றொமிலா ஜெயன் டிசம்பர் 23, 2014

தோல்விகளால் அடிபட்டால் உடனே
எழுந்து விடு
இல்லையென்றால் இந்த உலகம்
உன்னை புதைத்து விடும்

5. றொமிலா ஜெயன் மார்ச் 10, 2015 ·

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்லுவதற்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலொருவர் சிறுமி விபுசிகாவின் தாயாரான ஜெயக்குமாரி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவான வழமையான வழக்கு இழுத்தடிப்பு நடவடிக்கைகளுக்கு விதிவிலக்காக அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் ஒரு நல்லெண்ண முயற்சியாகவே இவர்களுக்கான பிணை கிடைத்துள்ளது என அறிய முடிகிறது. படிப்படியாக இது போல ஏனைய அரசியல் கைதிகளுக்கான சட்ட நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் புதிய அரசின் இந்த நல்லெண்ண நடவடிக்கையானது பொது மன்னிப்பின் அடிப்படையில் சிறையிலிருக்கும் அனைவருக்கும் முழுமையான விடுதலையாக அமையும் போதுதான் உண்மையான நல்லிணக்கத்திற்கு சிறந்ததாக அமையும் . முன்னால் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மீது 1999 இல் புலிகளால் மேற் கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பதினாறு வருடங்களாக விசாரணைக் கைதியாக வெலிக்கடைச்சிறை அனுபவித்து வரும் பெண்ணான வசந்தி சர்மா உட்பட அவரது கணவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனையவர்களும், இப்படியாக பல் வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு உயர் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிணையுமின்றி வருடக்கணக்காக சிறையில் வாடுவோர் பல நுாற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் அனைவரும் புதிய அரசின் நல்லெண்ண நடவடிக்கையால் பயன் பெற வேண்டும். தேர்தல் கால பேசு பொருளாக மாத்திரமே இனியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அமைந்து விடக்கூடாது

6. றொமிலா ஜெயன் – மார்ச் 8, 2015 ·

மார்ச் 08 சர்வதேச பெண்கள் தினம். ஆண் பெண் பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெண்மை மதிக்கப்படும்போது சமூக மாற்றமும் மானுட மேம்பாடும் சாத்தியமாகும். தினங்களால் முடியாது மனங்களை மாற்றுவதற்கு.

7. றொமிலா ஜெயன் – வன்னிப்பெரு நிலப்பரப்பில் காணப்படும் எத்தனையோ சிறு குளங்கள் புனரமைப்பின்றிக் கிடக்கின்றன. மழைநீரைத் தேக்கிப் பாதுகாக்கும் திட்டங்கள் போதாமையால் மழைவெள்ளம் ஊர்மனைகளைத் துவம்சம் செய்தவாறு கடலை நோக்கிப்பாய்ந்து சென்று வீணாகிப் போகிறது. இதற்கான சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் வன்னியின் விவசாயம் மட்டுமல்ல யாழ்மண்ணின் நீர்த்தேவையையும் சீர்செய்துகொள்ள முடியும். இயற்கையின் கொடைகளைப்பாதுகாப்பதால் எல்லோருமே பயனடையலாம்.

8. றொமிலா ஜெயன் பெப்ருவரி 10, 2015 ·
தமிழ் கூட்டமைப்பின் கைகளில் கிடைத்த வடக்கு மாகாண சபை படும் பாடு பெரும்பாடு.. இது வரைக்கும் வட பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பு தொடர்பான தேவைப் பகுப்பாய்வோ திட்டமிடலோ எதுவுமே அவர்களால் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை.நாளாந்தம் வயிற்றுக்கு வழி தேடி அல்லல் படுவோர் எத்தனையோ ஆயிரமாய் இருக்க, செலவிடப் படாமல் கோடிகள் திரும்பிச் சென்றது வயிறு பற்றியெரியும் கதை. இவ்வருடமும் மாகாண சபை கூட்டங்க்களில் பேசப்படும் விஷயங்களை அவதானிக்கும் போது, அதே கதைதான் மீண்டும் அரங்கேறும் போல் உள்ளது. ஒரு மாகாண சபையைக் கூட சரியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் வந்து விட்டார்களா? தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே.. தமிழ் மக்கள் இவ்வளவு விலை கொடுத்த பின்னரும் இலவு காத்த கிளியின் நிலை தான்..

9. றொமிலா ஜெயன் – மார்ச் 6, 2015 ·

இந்த ஆவணப்படத்தில் வரும் மரணதண்டனைக் கைதி கூறுகிறார் “அந்தப் பெண் அமைதியாக தமது பாலியல் வன்புணர்வுக்கு ஒத்துழைத்திருந்தால் உயிரிழந்து போக வேண்டியேற்பட்டிருக்காது” என இது பெண்களின் தன்மானத்தை மிகவும் கீழ்த்தரமாகக் கணிப்பிடும் ஆண் மேலாதிக்க மனோபாவத்தின் உச்ச வெளிப்பாடு. ஆனால் இதற்காக அந்த ஆணின் மீது மட்டுமே என்னால் கோபப்பட முடியவில்லை. பெண் பற்றியதான சமூகக்கூட்டு மனப்பாங்கு இப்படித்தான் விரிந்து போயிருக்கிறது. இதிகாச புராண காலம் தொடங்கி இன்றைய நவீன வியாபார உலகத்திலும் பெண்ணுடல் பாலியல் பண்டமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக சினிமா துறையில் பெண்ணுடல் பெரும் மூலதனமாகவே பயன்படுத்தப்படுகிறது. அறிவை வெளிப்படுத்தும் பெண்னை விட அழகை வெளிப்படுத்தும் பெண்ணே கூடுதலான கவனத்தைப் பெறுகிறாள். இப்படியாக சீரழிந்து போயிருக்கும் சமூகச்சூழலில் வளரக்கப்பட்டதே அந்த ஆணின் மனோபாவம். அதற்காக அவனை மட்டுமே நோவதில் பயனெதுமில்லை. ஆண்களும் பெண்களும் இணைந்ததே சமூகம் இந்த சமூகத்தின் மனப்பாங்கில் மாற்றம் வர வேண்டும். பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் மதிக்கப்பட வேண்டும்.

10. றொமிலா ஜெயன் ஜனவரி 1, 2015 ·

காலத்திற்குப் பொருத்தமான ஆய்வு. குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை யோட்டும் வெறும் உணர்ச்சிக்கூப்பாடுகளுக்கு அப்பால், சிந்திக்கத்தெரிந்த சமூகத்தின் பிரதிநிதியாக நவீன உலகத்தின் வளர்ச்சியை நோக்கிப்பயணிக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு அ. பாண்டியன் போன்றோரின் இத்தகைய ஆய்வுப்பார்வைகள் மிகவும் அவசியமானவை. 2015 ஜனவரி வல்லினத்திற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். [ வல்லினம் இணைய இதழில் வெளியான ‘கட்டுரை மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? by அ.பாண்டியன் ‘ பற்றிய கருத்து.]

இந்தக்கவிதை ஒரு மீள்பதிவு, எத்தனையோ புதிய ஆண்டுகளை பெருங்கனவுகளோடு கடந்து வந்த நினைவுகள் நெஞ்சிலே அலைமோதியபோது மீண்டும் இந்தக்கவிதையை பதிவிலிட வேண்டும் போல மனம் ஆவலுற்றது.

11. றொமிலா ஜெயன் ஜனவரி  30, 2014

காலம்.

காலத்தின் கால்களில்
ஒட்டி உதிரும்
தூசி போல
வாழ்வு,
தொடுவானத்தில்
கொடி நாட்டப் பாயும்
கனவுக் குதிரைகளோ
நுரை கக்கிச்சாய்கின்றன,
எதனையும் கணக்குப்பண்ணாமல்
தன் கணக்கில் நடக்கிறது
காலம்.

ஜெசி 01/30/2014

12. றொமிலா ஜெயன்  January 1, 2015: ‘எதுவரை’ சிறுகதை கவுரவக் கவசம் – எதுவரை இணைய இதழ் 16 (பெப்ரவரி- மார்ச் )

13. றொமிலா ஜெயன் December 23, 2014 ·

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பித்துவிட்டது. தமிழ் கூட்டமைப்பால் இன்னமும் தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கவோ, அல்லது தமது திரைமறைவு தீர்மானத்தை வெளியே சொல்லவோ கூட முடியவில்லை. ஜனவரி எட்டுக்கு முன்பாக என்றாலும், இந்தத் திண்டாட்டமான நிலைமைக்கு ஒரு முடிவு வருமா எனவும் தெரியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீர்மானங்களுக்குப் பின்னால் நின்ற காலம்போய் இப்போது புலத்திலிருந்துவரும் தீர்மானங்களிலே தொங்கிக்கொண்டு நிற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கூட்டமைப்பு.

அதுபோக, தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்கின்றனர் கஜன் பொன்னம்பலம் தரப்பினர். மக்களின் வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமையை தடுத்து நிறுத்துவதானது ஒரு புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறையல்ல என்பது கஜனுக்கு நன்றாகவே தெரியும், அத்துடன் அதற்கான உரிமை அவருக்கு மட்டுமல்ல வேறு எவருக்குமே கிடையாது. கடந்த முப்பது வருடங்களுக்கும்மேலான ஆயுதப்போராட்ட வழிமுறையின் தோல்விக்குப்பின்பு, தமிழ் மக்கள் அரசியல் ஜனநாயக போராட்ட வழிகளுக்கு திரும்புவதை தடுத்து நிறுத்தும் தேக்கநிலை அரசியல் சிந்தனை தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் முன்னேற்றங்கள் எல்லாவற்றையுமே பாதிக்கும் அபத்தமான முடிவாகும்.

தளத்திலே நிஜமான வாழ்க்கைப் பிரச்சனைகளோடு நின்று போராடும் தமிழ் மக்களின் ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாக, எந்தத்தமிழ் தலைமைகளும் முடிவெடுக்கப்போவதில்லை என்பதுதான் உண்மையானது. கொழும்பில் சமரசம் செய்து கொண்டு, மேடைகளில் மக்களிடம் போர்ப்பிரகடனம் செய்வது ஒன்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு புதியது அல்லவே. கடந்த கால வரலாற்றை விட்ட இடத்திலிருந்து தொடருவது போன்றதொரு மாயைக்குள் மக்களை சிக்கவைப்பதன் மூலம் தமது பிழைப்புகளைத்தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்களே தவிர, கடந்த கால இரத்தம் தோய்ந்த வரலாற்றுப்பாடங்களிலிருந்து கற்றறிந்து கொண்ட அனுபவங்களின் மூலம், புதியதொரு தொடக்கத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல முனைப்புக்காட்டும் வழியெதையும் அறியாதுள்ளனர்.
எது எப்படியிருந்தாலும் மக்களின் மனங்கள் சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கான இடைவெளியொன்று கிடைத்தது நன்மையேயாகும் . மாரி மழை பொழிந்து தேசமெங்கும் கரை புரண்டோடுகிறது புது வெள்ளம். எல்லாமே கழுவப்படுகிறது. இனியாவது எமது சந்ததி இரத்த வெள்ளம் காணாத புதிய வாழ்வை அனுபவிக்கட்டும். புதிய சிந்தனைகள் மலரட்டும். புதிய ஆண்டின் தொடக்கத்தில் எமது மக்களும் இந்த நாட்டின் அதிகாரமுள்ள குடிமக்களாக தமது தீர்ப்பை அறிவிக்கட்டும்.

14. றொமிலா ஜெயன் December 17, 2014 ·

உலகத்தில் மானுட நேயம் கொண்ட உள்ளங்களை உலுப்பிய கொடுமை, இத்தனை கேடான உலகம் இருந்தாலென்ன அழிந்தாலென்ன, அந்த அன்னையரின் கதறல் ஆண்டவனுக்கும் கேட்குமோ? [பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்த தீவிரவாதிகளின் கொடூர செயல் பற்றிய கருத்து]

15. றொமிலா ஜெயன் December 12, 2014 ·

போரின் பயங்கரமான முகத்தைப்பார்த்தவர்களுக்குத்தான் உண்மையான சமாதானத்தின் அர்த்தம் புரியும், ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவுகளைப்போல போரின்செய்திகளை ருசித்தவர்களுக்கு, சமாதானம் அலுப்படையச்செய்யும் வெற்றுச்சொற்பதம் மட்டுமே.

16. றொமிலா ஜெயன் December 11, 2014 ·

தமிழின அழிவுக்கு யார் காரணம் என்ற பட்டிமன்றம் கிளிநொச்சி அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நடைபெறுகிறது., இந்த சபையில் அத்துமீறிச்சத்தம் போடுபவர்களை கட்டுப்படுத்தி சபையை தனது ஆளுமையால் தலைமைதாங்க முடியாத வடமாகாண முதலமைச்சர் எழுந்து வெளியேறுகிறார். ஏனைய அதிகாரிகள் சுவாரசியமாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் இப்படித்தான் நடைபெறுகிறது தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல், உணர்சிவசப்பட்ட அரசியல் தலைவர்களின் பிரகடனங்கள்தான் தமிழ் இளையோரை ஆயுதாரிகளாக்கி ஒரு தலைமுறையே அழிந்து போவதற்கு காரணமாகியது என்பதை யார்தான் உணர்த்துவரோ?

[ கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் டக்ளஸ் – சிறீதரன் கடும் சண்டை என்னும் ஜேவிபிநியூஸ்.காம் செய்தி பற்றி]

17. றொமிலா ஜெயன் நவம்பர்  24, 2014 ·

தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்டு மரணித்த அனைத்து அமைப்புப் போராளிகளுக்குமான அஞ்சலியையும் இந்த மாவீரர் நாளில் இணைத்துச் செலுத்துவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை ஈழத்தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவிக்க முடியாதா ?

18. றொமிலா ஜெயன்  October 24, 2014 ·

போராட்டம் புரட்சி என்பது, தன்னின அழிவு, வன்முறை, சாவு, புறஉலகு போன்றவற்றோடு சதா தொடர்புடையது. இந்த அகத் தனிமைக்கும் புறநடவடிக்கைக்குமான பதட்டம் ரோஸாவுக்குள் அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வந்தது. [ பெண்ணியம் தளத்தில் வெளியான யமுனா ராஜேந்திரனின் ரோஸா லக்ஸம்பர்க் கட்டுரை பற்றி]

ngiri2704@rogers.com