– செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில், பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. –
இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க
கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்
சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள் எமது மகள்
தேயிலைச் சாயத்தால் மாத்திரம்
வயிறு நிரம்பும் நாட்கள் அநேகம்
ஒவ்வொரு ரூபாயாகச் சேமிப்பாள்
புத்தகங்களை வாங்கவென
சீருடையும் கூடக் கிழிந்து
கந்தலாகிக் கறை படிந்து கிடக்கையில்
பிளவுண்ட இதயத்தை நிரப்புவது இப்
பெருந் துயரம் மாத்திரமே
வாந்தியெடுக்கும் பட்டினி வயிறுகள்
முடிவற்றவை
பசியை அறியாதவர்களுக்கு அவை
தெளிவற்றவை
மனிதாபிமானமற்ற உயரதிகாரிகளுக்கு
போதுமானவையா பதவிகள் மாத்திரம்
எவரும் எதையும் கண்டுகொள்ளாமல்
வாய் கண் மூடிக் கிடப்பதுவும் விசித்திரம்தான்
இம் மகளே எமதுலகின் ராஜ கிரீடம்
சந்திர சூரியனாக ஒளிரும்
எமது ஆகாயத்தின் பெரு வெளிச்சம்
கலங்கிய நீர்க்குளத்தின் உச்சியில்
எப்போதும் பூத்திருக்கிறாள் எமது மகள்
செந்தாமரைகள் எழுவது சேற்றிலிருந்துதான்
இருக்கக் கூடும் இம் மகளைப் போலவே
அழுது புலம்பும் பல மகள்கள்
இப் பார் முழுதும்
யாருக்கெல்லாம் கேட்கின்றன
அந்த அழுகுரல்கள்?
அதிகாரத்துக்கே எவரும் தலைசாய்க்கும் நிலையில்
நூலிழையில் முடிந்து வைக்கவா
இருக்கிறது நீதி?
mrishansha@gmail.com