1. பெண் பால் ஆலயம் .
வாடாத வரம்
பெறும்
அன்னை மீது
விழுந்த
பூ .
தாயின் நாவிடம்
கொண்டு சேர்க்கத்தான்
பூக்களில்
தேனும் தேனீயும் படைத்தாரோ
கடவுள்
பட்டு
மலர்
பஞ்சு
மெத்தைகள் சாய
ஆசைப்படும் இடம்
அன்னை மடி .
ஓர் ஆலயத்தை விட
புனிதமானது
அன்னை உடுத்த
சேலை .
அம்மா முகம்
பார்த்திடின்
எமனுக்கு
தோணவே தோணாது
அவள் உயிர்
பறிக்க .
தாய் தாலாட்டின்
பின்
கைகட்டி நிற்கும்
புகழ் பூத்த புலவர்
யாத்த
கவிதை .
தாய் வாழுகின்ற
வீட்டுக்குத் தேவையில்லை
விளக்கு .
உயிர்
ஊட்டப்படுகின்ற
புனித தலம்
தாய் கருவறை .
உலகம் என்ற
உருண்டை விருட்சம்
நிற்கிறது
அன்னை வேரில் .
மாதா கண்ணீர்
திரவத் தீ
அது
அழித்துவிடும்
பாறைகளையும் .
அன்னை புன்னகை
அரண்
அது
தடுத்துவிடும்
எந்தச் சுனாமிகளையும் .
அன்னை
பிசைந்தூட்டிய கூழ்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
அமுதத்தை
ஆக்கிவிடும்
வெறும் வைக்கோலாக .
அம்மா சமைப்பது
அரிசியல்ல
பாசம் .
விறகுகள் வென்று
அவள்
எரிகிறாள்
அடுப்பில் .
கடவுள்
அதிசயிக்கின்ற அதிசயம்
அன்னை பிரசவம் .
தன்
தாய்
மறந்த மகன்
இதயத்தால் இறந்த
பிணப் பிரஜை .
தாய்
இருமல் சத்தம்
ஒருதரம் கேட்டாலும்
மருத்துவம் செய்
வைத்தியனைக் கூட்டி வந்து .
ஒரு குயிலிடம்
கேள்
அது சொல்லும்
தன்
குக்கூ
அன்னைக்கான
வாழ்த்தென .
மழைத் துளிகளிடம்
விசாரி
அவை
மொழியும்
தாய் பாதம் தொடத்தான்
பொழிவதாக .
அன்னைக்கு
பணிவிடை செய்கின்ற
கைகளில் இருப்பவை
விரல்களல்ல
வெளிச்சங்கள் .
2. சர்க்கரை வாழ்க்கை .
ஏழைக்குச் சிரிப்புக் கிடைக்கும் வரை
நுரைத்துக் கொண்டே இருக்கும் அலை .
ஏழை உண்பது
வெறுஞ் சோற்றில் கண்ணீர் ஊற்றி .
மலர்ந்த பூ
உதிர்கிறது ஏழை முகத்தில் கவலை கண்டு .
விலையேற்றம்
எரிகின்ற ஏழையைச் சாம்பலாக்கி விடும்.
ஏழையோடு சேர்ந்தழத்தான்
பெய்கிறது மழை .
அடுத்த வேளைக்காகச் சுவாசிக்க
வியர்வையால் மூச்சு விடும் ஏழை .
ஏழை உழைப்புத் திருடும் நரிகளை
போடவேண்டும் சிறையில் .
வீதியோரத்துப் பிச்சைக்காரர் அழுகை வெள்ளத்தில்
மூழ்கித் திணறும் நாகரிகம் .
ஊனமுற்றவர் பசி தெரிந்தால்
காகங்கள் கூட
உணவு பரிமாறும் அவருக்கு. .
சிறுவர் தொழிலாளர் ஆகும்போது
உலகம் நகரும் பாவங்களை நோக்கி .
ஏழை மங்கை விதைவையாகிறாள்
திருமணம் ஆகாமலே .
ஏழை வானத்துச் சூரியனைக் களவாடுகிறது
பண உலகம் .
ஏழை மோட்டார் வாகனத்தில் செல்வது
கண்களால் மட்டும் .
ஓர் ஏழைக்குக் கல்வி இருப்பின்
அவருக்குச் சோறூட்டும் ஒளி இறங்கி வந்து .
ஏழை என்று சொல்லும்போது
கண்ணீர் வடிக்கிறது தமிழ் .
ஏழையின் கதவுகளை வந்து தட்டவேண்டும்
வசதி வாய்ப்புக்கள் .
ஏழைகளுக்கான ஓர் அரசு
இறையரசு மட்டுமே .
இறைவா
ஏழை வாழ்வினை
சர்க்கரை வாழ்க்கை
ஆக்கி விடு!
rajakavirahil@gmail.com