‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’

‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’‘ஆனைக்கோட்டைக்கு புகழ்பூத்த ஒரு இசைமரபும், இசைக்கலைஞர்களும் உள்ளனர். அந்த இசை மரபில் முற்போக்கு எழுத்தாளரும், மிருதங்கக் கலைஞருமான எஸ்.அகஸ்தியருக்கு தனித்த இடம் ஒன்று உண்டு. அந்த இலக்கியப் பெருமகனின் பேரனார் அகஸ்ரி ஜோகரட்னம் ஆனைக்கோட்டை இசைமரபின் இளம் வாரிசாக லண்டனில் மிருதங்க அரங்கேற்றம் நடத்தியிருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ என்று லண்டனில் நடைபெற்ற அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பிரபல மிருதங்க வாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்த சர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ‘அண்மைக் காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசை ஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும். தாளம் தவறாமல், சுருதி பிசகாமல் சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே. சாரங்கனின் வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அவர் வாசித்த மிருதங்கம் பரவசமூட்டுவதாகும். இந்த அபூர்வமான மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு உண்மையில் பூரணமான இசைக்கச்சேரி போல அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வன் அகஸ்ரி தனக்கு வாய்த்திருக்கும் இந்த இசைத் திறமையை தொடர்ந்தும் பேணி இத்துறையில் கீர்த்தி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த பிரபல விமர்சகர் மு.நித்தியானந்தன் பேசுகையில் ‘ஆனைக்கோட்டைக்கு இலக்கிய முகவரியைத் தேடித்தந்த முற்போக்கு இலக்கியத்தின் மிக மூத்த எழுத்தாளரான அகஸ்தியரின் பேரனான அகஸ்ரி ஜோகரட்னத்தின் ரத்த நாளங்களில் மிருதங்க இசை சேர்ந்திருப்பதில் வியப்படைய ஏதுமில்லை. லண்டனில் புகழ்மிக்க மிருதங்கக் குருவான கந்தையா ஆனந்தநடேசனிடம் ஒன்பது ஆண்டு காலம் முறையாக மிருதங்கத்தைப்பயின்று இன்றைய மிருதங்க அரங்கேற்றத்தில் அபாரமாக மிருதங்கத்தை மீட்டிய அகஸ்ரி ஜோகரட்னம் லண்டனில் வாழும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’
        
சிறந்த குருவும், சிறந்த சிஷ்யனும் ஒன்றுசேரக் கிடைப்பது மிக அபூர்வமானதாகும். தெய்வத் தமிழிசைத் செல்வரென பாராட்டப்படும் மணிபல்லவம் கே.சாரங்கனின் சிறப்பான வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அகஸ்ரி ஜோகரட்னம் தனது மிருதங்க வாசிப்பின் கோர்வையை இன்றைய இசை நிகழ்விலே வெளிக்காட்டியிருந்தார். அவருக்கு அனுசரணையாக வயலின் வாசித்த அளவெட்டி ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன், கடம் வாசித்த பங்கள_ர் ஆர்.என்.பிரகாஷ் இன்றைய இந்த நிகழ்ச்சிக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஸ்ரீ.ஆனந்தநடேசனின் மற்றுமொரு சிஷ்யனான மேவின் மகேந்திரன் மோர்சிங் இசைத்தும், அபிராம் சகாதேவன் கஞ்சிரா இசைத்தும் இன்றைய அரங்கேற்றத்திற்கு மெருகூட்டியிருக்கிறார்கள். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ பாபநாசம் சிவன்,  ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள், தண்டபாணி தேசிகர், ஸ்ரீஅருணகிரிநாதர் ஆகியோரின் புகழ்மிக்க கீர்த்தனைகளைப் பாடியதோடு அமையாது ஒரு வாக்கேயக்காரராக ராகம் தானம் பல்லவி என்ற கீர்த்தனையையும், பல்வேறு பாடல்களையும் ஆக்கிப் பாடிய மணிபல்லவம் கே. சாரங்கன் ஒரு முழுமையான இசைக்கச்சேரியை இன்று நிறைவு செய்திருக்கிறார்.

‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’
     
செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் இந்த மிருதங்க அரங்கேற்றத்தினை வெற்றிகரமாக அரங்கேற்றியதில் அவரது தந்தை சட்டத்தரணி யோகரட்னமும், அவரது தாய் கவிஞை, ஊடகவியலாளர் நவஜோதியும் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் பாராட்டுக்குரியனவாகும். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சியும், ஓவியத்திலும் வயலின், கடம், மிருதங்கம்; போன்ற இசைக்கருவிகளை மீட்டுவதிலும் திறமை மிக்க அகஸ்ரி ஜோகரட்னம் எதிர்காலத்தில் மிகச் சிறந்த இசைக்கலைஞராக சிறப்புறுவார் என்பதில் ஐயமில்லை என்பதை விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.
     
‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’

ஓவியர் கே.கே.ராஜா அவர்களின் தயாரிப்பில் வழங்கப்பட்ட மிருதங்க அரங்கேற்றக் கையேடு பாதுகாத்துப் பேணி வைக்கத் தக்கதாக அமைந்திருந்தது. ‘ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலை’ முதல் மாணவராக மிருதங்க அங்கேற்றம் கண்ட செல்வன் அகஸ்ரிக்கு திரு. எஸ்.பாலச்சந்திரன் பாராட்டுக் கவிதை வாசித்தார். அதிபர் திரு எம்.குமாரநாயகம் பாராட்டுக் கேடயம் வழங்கி கௌரவித்திருந்தார். திரு. நடாமோகன் சிறப்புற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த மிருதங்க அரங்க விழாவில் இசை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ரசிகர்கள் என மண்டபம் நிறைந்த கூட்டம் அரங்கேற்றத்திற்கு களை சேர்த்திருந்தது.

‘லண்டனில் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றம்’

3.10.2012.