லண்டன் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழாவில் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் மிருதங்கத்தில் டிப்ளோமா பரீட்சையை மேற்கொண்டு தேர்ச்சி பெற்று ‘சங்கீத கலாஜோதி’ பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இசை நடனம், மிருதங்கம், வயலின், வீணை போன்ற நுண்கலைகளுக்கு ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவம் மிக்க அமைப்பாக லண்டன் கீழைத்தேய பரீட்சைச்சபை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் இந்த அமைப்பினை நிர்வகித்து வருகின்றார். கலையார்வம் கொண்ட அகஸ்ரி ஜோகரட்னம் தற்போது லண்டனில் வசித்து வரும் ‘மிருதங்க மேதை’ காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்ந்தும் மேலதிக பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றார். ‘அண்மைக்காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசைஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும்’ என்று பிரபல மிருதங்கவாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்தசர்மா அவர்கள் பாராட்டியிருந்தார்.
‘ஆனைக்கோட்டைக்கு இலக்கிய முகவரியை தேடித்தந்த முற்போக்கு இலக்கியத்தின் மிக மூத்த எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் பேரனான அகஸ்ரி ஜோகரட்னத்தின் ரத்த நாளங்களில் மிருதங்க இசை சேர்ந்திருப்பதில் வியப்படைய ஏதுமில்லை. லண்டனில் புகழ்மிக்க மிருதங்கக் குருவான கந்தையா ஆனந்த நடேசனிடம் ஒன்பது ஆண்டுகாலம் முறையாக மிருதங்கத்தைப் பயின்று அபாரமாக மிருதங்கத்தை மீட்டி வரும் அகஸ்ரி ஜோகரட்னம் லண்டனில் வாழும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்’ என்று பிரபல விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் வாழ்த்தியிருந்தார்.
9.2.2014
அனுப்பியவர்: navajothybaylon@hotmail.co.uk